புல்லாங்குழலே! பூங்குழலே! ~ குழலிசை 23.1

குழலிசை 23

      காளி கோவிலில் இருந்து அரண்மனைக்கு மகிழுந்தில் சென்று கொண்டிருந்த போது பூங்குழலி, “முழு அர்த்தமும் கண்டு பிடிச்சிட்டீங்களா?என்று கேட்டாள்.

மாறவர்மசிம்மன், “நீ என்ன கண்டு பிடித்தாய்? என்று கேட்டான்.

நானெல்லாம் தமிழ் அகராதியில் தேடிப் பிடித்துத் தான் கண்டறிய வேண்டும்.. எதற்கு வீண் சிரமம் என்று தான், தமிழ் அகராதியான உங்களிடம் கேட்கிறேன்”

அப்படி இல்லை.. நேற்றுப் போல் நீ வேறு அர்த்தம் கண்டறியலாமே!”

முதலில் நீங்கள் சொல்லுங்கள்.. அதை வைத்துக் கண்டறிய முடியவில்லை என்றால், நான் யோசிக்கிறேன்”

சோம்பேறி”

செல்ல முறைப்புடன், “காலவிரயம் வேண்டாமே என்று நினைத்தேன்.” என்றவள், “இப்போ சொல்ல முடியுமா, முடியாதா? என்று சிறு மிரட்டலுடன் முடித்தாள்.

அவன் மென்னகையுடன், “சரி கூறுகிறேன்.” என்று கூறி, இரண்டாவது புதிரின் அர்த்தத்தை கூற ஆரம்பித்தான்.

மாயோன் என்றால் திருமால், விஷ்ணு என்று பொருள்..

அட்டாணி என்றால் கோட்டை மதில்மேல் இருக்கும் மண்டபம்

அடுத்து மச்சபுள்ளி.. மச்சம் என்றால் உடம்பில் உள்ள புள்ளி அல்லது மீனைக் குறிக்கலாம்..

ராஜவந்தம் என்பது அணிவகை. இங்கே ராஜ முத்திரை கொண்ட மோதிரம் அல்லது ராஜ முத்திரை இருக்கும் பதக்கத்தைக் கொண்ட கழுத்துச் சங்கலியாக இருக்கலாம்..

சீரியங்கு என்பது சீராக இயங்குதல்

கருவூலம் என்பது அரசரின் செல்வம் இருக்கும் இடம்.. இங்கே பொக்கிஷ அறை அல்லது பொக்கிஷம் என்று எடுத்துக் கொள்ளலாம். 

அது என்ன சிறப்பு மச்சம்?

பொதுவாக உடம்பில் இருக்கும் மச்சம் வட்டமாகவோ நீள்வட்டமாகவோ(Oval)தான் இருக்கும்.. வெகு அபூர்வமாக வேறு வடிவத்தில் இருக்கும்..

ரணசிம்ம ராஜாவின் நெஞ்சில் சிகப்பு நிறத்தில் நட்சத்திர வடிவில் மச்சம் உண்டு என்றும்அதனால் தான் அவர் அனைத்து கலைகளிலும் சிறந்து விளங்கினார் என்றும் கேள்விப்பட்டு இருக்கிறேன்.”  

நட்சத்திர மச்சம் இருக்கும் ஆளுக்கு, நாம எங்கே போக!” என்றவள் சட்டென்று பேச்சை நிறுத்தி அவனைப் பார்த்தாள்.

அவளது பார்வையை புரிந்தார் போல், அவன் ‘ஆம்’ என்பது போல் தலையை அசைத்து,“எனக்கும் நெஞ்சில் சிகப்பு நிற நட்சத்திர மச்சம் இருக்கிறது.” என்றான்.

சில நொடிகள் உறைந்த நிலையில் இருந்தவள் அவனது தொடுகையில், “ஒருவேளை ரணசிம்ம ராஜாவோட மறுபிறப்போ, நீங்கள்!” என்றாள் பிரம்மிப்பு நீங்காத நிலையில்.

மென்னகையுடன், “அதிகமாக யோசிக்காதே! தேவி.”  என்றான்.

இல்லை.. நான் நிஜமாகத் தான் சொல்கிறேன்.. ரணசிம்ம ராஜாவை போல் உங்கள் திறமைகள் அபாரமானது.. இத்தனை ஆண்டுகள் எத்தனையோ அரசர்கள் கண்டறியாத பொக்கிஷத்தை, நீங்கள் தானே சரியாகத் தேடுகிறீர்கள்!”

இது தேவை இல்லாத ஆராய்ச்சி தேவி.. பொக்கிஷத்தை பற்றி ஆராய்வோம்.”

இது தேவை இல்லாத ஆராய்ச்சியா?

ஆம்”

ஒருவேளை நான் நறுமுகை தேவியின் அம்சம் என்று யாராவது சொன்னால், அதை கண்டு கொள்ள மாட்டீர்களா?

நிச்சயம் ஆராய மாட்டேன்.. உன்னை பூங்குழலியாக மட்டும் தான் பார்ப்பேன்.. என் தேவியை நான் ஏன் வேறு ஒருவருடன் ஒப்பிட வேண்டும்? நறுமுகை தேவி மிக மிக சிறப்பு வாய்ந்தவராகவே இருக்கட்டுமே! என் தேவி தனித்துவம் கொண்டவள், அவளை யாருடனும் நான் ஒப்பிட மாட்டேன்.”

அவனை பிரம்மிப்புடன் பார்த்தவள், மகிழுந்தில் அமர்ந்துக் கொண்டு, அவனை அணைக்க முடியாத காரணத்தால், அவனது கையை இறுக்கமாக பற்றிக் கொண்டு காதலுடன் நோக்கினாள்.

சுதிரை ஓரப்பார்வை பார்த்தவன், அவளை பார்த்து உதட்டசைவில் சத்தமின்றி முத்தம் கொடுக்க, அவள் நாணத்துடன் அவனது கையைப் பற்றியபடி அவன் தோளில் சாய்ந்தாள்.

அப்பொழுது அவர்களின் வண்டி அரண்மனை உள்ளே நுழையவும், சற்று விலகி நிமிர்ந்து அமர்ந்தாள்.

ரோஜாவனம் சென்று கலந்துரையாடலைத் தொடர்ந்தனர்.

அடுத்து என்ன செய்றது? என்று அவள் வினவ,

முதல் வரியே   இடிக்கிறது. திருமால்  உருவத்திற்கு நாம் எங்கே செல்ல? எந்த இடத்தில் இருக்கும் திருமால் உருவத்தை குறிக்கிறது என்று தெரிய வில்லையே!” என்றான்.

காளி  கோவிலில்,   திருமால் உருவம்  சிற்பம் ஆகவோ ஓவியமாகவோ இல்லையா?

இல்லை.”

நம் அரண்மனையில்?

இல்லை”

சரி அட்டாணி என்றால் கோட்டை மதில்மேல் மண்டபம் என்று சொன்னீர்களே.. அங்கே சென்று பார்ப்போம்.”

இங்கே குறிப்பிட்டு இருக்கும் கோட்டை, நான் உருவாக்கிய அரண்மனை கோட்டை அல்ல.. ரணசிம்ம ராஜா உருவாக்கிய எழில்புரக் கோட்டை”

ஓ!”

அதுவும் கோட்டை மதில் மேல், பல மண்டபங்கள் இருக்கும்.. அதில் எதைப் போய் தேடுவது? இப்போது தேடுவது கூட சாத்தியம் இல்லை, ஏனெனில் எழில்புர அக்கால கோட்டை சிதைந்து விட்டது.. அதில் ஒரு பகுதி மட்டுமே எஞ்சி இருக்கிறது.. அழிந்த கோட்டையில் அதன் மேல் இருந்த மண்டபங்களும் அடக்கம்.. ஆக திசை அறிந்தால் மட்டுமே, நாம் பொக்கிஷம் இருக்கும் இடத்தை ஓரளவிற்கு கணிக்க முடியும்.”

கோட்டை அழிந்ததில் யாரேனும் பொக்கிஷத்தை எடுத்திருக்க வாய்ப்பு இருக்கிறதா?

அதற்கு வாய்ப்பு இல்லை.. பொக்கிஷத்தை எடுத்து இருந்தால், அதைப் பற்றி சிறு குறிப்பு கூட இல்லாமல் இருக்காது.”

ஒரு வேளை ராஜவம்சத்தை சேராத யாரேனும் எடுத்து இருந்து, விஷயம் தெரியாமலேயே போய் இருந்தால்?

அவ்வளவு சுலபமாக எடுக்கும் அளவிற்கு வைத்திருக்க வாய்ப்பு இல்லை. சாமானியன் ராஜவந்தத்திற்கு என்ன செய்து இருப்பான்?

அதுவும் சரி தான்.. நேர்மறையாகவே யோசிப்போம்.. இப்போ என்ன செய்ய?

அதைத் தான் யோசிக்கிறேன்.”

ஹ்ம்ம்” என்றபடி சிறிது யோசித்தவள், “கன்னி மாடத்தில் ராமாயணம், மகாபாரதம் கதைகளை வரைந்து இருந்தாங்க தானே! ராமர், கிருஷ்ணர் இருவரும் விஷ்ணு அவதாரம் தானே!” என்றாள்.

கண்கள் ஒளிர, “அருமை தேவி.. மாயோன் என்றதை நாம் விஷ்ணுவின் அவதாரமாக எடுத்துக் கொள்ளனும்.. அதில் பாண்டியர்களின் சின்னமான மச்ச அவதாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.” என்றவனின் பேச்சை இடையிட்டவள்,

இங்கே நம் ரோஜாவனத்தில், உட்கூரையில் மீன் ஓவியம் ஒன்று இருக்கிறதே!” என்றபடி எழ,

அவனும் புன்னகையுடன் எழுந்தபடி, “நானும் அதைத் தான் சொல்ல வந்தேன்.” என்றான்.

இருவரும் சற்று வித்யாசமான அந்த மீன் ஓவியத்தை சென்று பார்த்தனர்.

அந்த ஓவியத்தை சில நொடிகள் பார்த்தவன், “இந்த மீனின் வால் கிழக்குத் திசையை நோக்கி இருக்கிறது.” என்றான்.

உடனே அவள், “மீதம் இருக்கும் கோட்டை கிழக்கு திசையில் தானே இருக்கிறது! நான் முதல் நாள் இங்கே வந்த போது தானியின்(auto) ஓட்டுநர் கூறினார்.” என்றாள்.

ஆம் தேவி.. கிழக்கு திசையில் தான் எஞ்சி இருக்கும் கோட்டை இருக்கிறது.” என்றான்.

நாளையே கிளம்புவோமா?

error: Content is protected !!