குழலிசை 22
மாலையில் ரோஜாவனத்தில் மாறவர்மசிம்மனை சந்தித்த பூங்குழலி, “பொக்கிஷத் தேடலை என்னைக்கு ஆரம்பிக்கப் போகிறோம்?” என்று கேட்டாள்.
“முதலில் ராஜமாதாவிடம் என்ன பேசினாய் என்று கூறு.” என்றான்.
அவள் மென்னகையுடன் மதியம் ராஜமாதாவிடம் பேசியதை கூறிவிட்டு, “இப்போ நீங்க சொல்லுங்க” என்றாள்.
“முதலில் கிடைத்த துப்பில் மறைந்து இருக்கும் பொருளை கண்டறிய வேண்டும்.”
“உங்களுக்கே தெரியலையா?”
“நீ என்ன கண்டுபிடித்தாய்?”
“வெய்யோன் என்றால் சூரியன்.. சூரியனின் திசை என்றால் பொதுவாக சூரியன் உதிக்கும் திசையைத் தானே கூறுவோம்.. சகதாத்திரி என்றால் துர்க்கை.. ஆக, கிழக்கு திசையில் இருக்கும் துர்க்கை அம்மன் வழி காட்டுவார் என்று அர்த்தம் சரியா?”
“மேலோட்டமாகப் பார்த்தால், அது தான் அர்த்தம்”
“அப்போ, இது அர்த்தம் இல்லையா?”
“அதைத் தான் நானும் யோசித்துக் கொண்டு இருக்கிறேன்.”
“ஏன் இப்படி சொல்றீங்க? எனக்குப் புரியலை”
“கோவில்களில் துர்க்கை அம்மன் வடக்கு திசையில் தான் இருக்கும்.. ஆனால், நமக்கு கிடைத்து இருக்கும் துப்பில் கிழக்கு திசையை கூறி இருக்கிறார்கள்.. சூரியன் மறையும் திசை என்று பார்த்தாலும் மேற்கு தான் வரும்.”
“ஹ்ம்ம்.. என்னடா இவ்வளவு சுலபமா கண்டு பிடிக்கிற மாதிரி இருக்குதே என்று நினைத்தேன்”
“எழில்புரத்தில் நம் அரண்மனையில் மட்டும் தான் துர்க்கை கோவில் இருக்கிறது.. இங்கேயும் வடக்கு திசையில் தான் இருக்கிறது.”
“இங்கே, நம் அரண்மனை கோட்டை உள்ளேயே இருக்கும் கோவிலை சொல்றீங்களா?”
“ஹ்ம்ம்.. அரண்மனை கோவில் வடக்கு திசையில் இருந்தாலும், கோவில் முழுவதும் நான் அலசி விட்டேன்.. பொக்கிஷம் இருப்பதற்கான அறிகுறியே இல்லை”
“துர்க்கை கோவிலில், பொக்கிஷம் தான் இருக்கும் என்று இல்லையே! அடுத்த துப்பு கிடைக்க கூட வாய்ப்பு இருக்கிறதே!”
“ஹ்ம்ம்.. அதையும் தேடிப் பார்த்துவிட்டேன்.. ஒன்றும் இல்லை”
“நான் ஒரு முறை பார்க்கட்டுமா?”
“தாராளமாகப் பார்.. உன் ஆய்வியல் கண்ணுக்கு ஏதேனும் வித்யாசமாகத் தெரிகிறதா என்று பார்.”
“இப்பொழுதே போகலாமா?”
“நாளை காலையில் உணவுக்கு முன் செல்லலாம்.”
“சரி” என்றவள், “அன்னைக்குப் பேசும் போது காளி கோவில் பத்தி சொன்னீங்களே?” என்று கேட்டாள்.
“சகதாத்திரி என்றால் துர்க்கை தான்.. காளி துர்க்கை இரண்டும் அம்மனின் அம்சம் என்றாலும் இரண்டும் ஒன்று இல்லை.. காளி கோபமாக காட்சி தருபவள், துர்க்கை சாந்தசொருபியாக காட்சி தருபவள்”
“ஓ” என்றவள், “முன்னேற்றம் எதுவும் இல்லாத நிலையில், இன்று மதியம் ஏன் இதைப் பற்றிப் பேசினீங்க?” என்று கேட்டாள்.
“விக்ரமை அழைத்துச் செல்வதாக இருந்தால் அதற்கு ஏற்ப அலுவல் வேலைகளை மாற்ற வேண்டும்.. அவனிடம் கலந்துரையாடி முடிவு எடுக்க நினைத்தேன்.. இப்போது, அவன் வரவில்லை என்று சொல்லி விட்டான்.. முதலில் இதற்கு அர்த்தம் கண்டு பிடித்த பிறகு, தேடலை என்றைக்குத் தொடங்கலாம் என்று முடிவு செய்வோம்.”
“ஹ்ம்ம்” என்றவள் கைபேசியை எடுத்து ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தாள். அவனும் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான்.
அவள் திடீரென்று, “எனக்கு ஒரு யோசனை!” என்றாள்.
“என்ன?”
“தாத்திரி என்றால் தாய், பூமி என்று அர்த்தம்.. அதாவது பூமித்தாய் என்று வைத்துக் கொள்வோம்.. பூமிக்கு அடியில் இருக்கும் என்று சொல்றாங்களோ?”
“நீ சொல்றபடி பூமித்தாய் வழி காட்டுவாள் என்று வைத்துக் கொண்டால், ‘வெய்யோன் திசை சக’ எதுக்கு சொல்லி இருக்கிறாங்க?”
“ப்ச்.. ஆமா.. அது எதுக்கு?” என்றவள் மீண்டும் கைபேசியை ஆராய்ச்சி செய்ய, அவன் மீண்டும் யோசிக்க ஆரம்பித்தான்.
சிறிது நேரத்தில் அவன், “சரி தேவி கிளம்பலாம்.. நாளை காலை 6.30 மணிக்கு நம் துர்க்கை கோவிலில் சந்திக்கலாம்.” என்றான்.
உதட்டசைவில் முத்தம் கொடுத்தவள், அவன் கையில் சிக்காமல் வெளியேறி இருந்தாள். அவனும் புன்னகையுடன் வேந்தபுரம் சென்றான்.
அடுத்த நாள் காலையில் சரியாக 6.30 மணிக்கு பூங்குழலி அரண்மைனைக் கோட்டையினுள் இருந்த துர்க்கை அம்மன் கோவிலுக்கு வர, அவளுக்காக மாறவர்மசிம்மன் காத்துக் கொண்டிருந்தான்.
“இனிய காலை வணக்கம்.. இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும்” என்று புத்துணர்ச்சியுடன் அவள் கூற,
புடவையில் அழகு தேவதையாக வந்து இருந்தவளை ரசித்த படி, “இனிய காலை வணக்கம்.. இன்றைய நாள் மிக இனிமையான நாள் தான் தேவி.. உனக்கும் அவ்வாறே அமையட்டும்.” என்றான்.
கண்களை உருட்டி அவனை மிரட்டியவள், “சாமி தரிசனத்திற்கு வந்திருக்கிறோம்.” என்றாள்.
“ஹ்ம்ம்.. சாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு தேவி தரிசனத்தை வைத்துக் கொள்கிறேன்.” என்றான்.
இருவரும் ஒன்றாக கோவிலினுள் சென்றனர். அந்த துர்க்கை அம்மன் கோவில் சிறியதாக இருந்தாலும், மிக நேர்த்தியாக இருந்தது. புன்னகை ததும்பிய துர்க்கை அம்மனின் அழகு முகத்தைக் காண கண்கள் இரண்டு போதாது. துர்க்கையை தரிசனம் செய்ததும், மனதில் தானே அமைதி தோன்றும்.
இருவரும் துர்க்கை அம்மன் முன் நின்று மனதார வேண்டினர். இருவரும் மற்றவரின் நலனையே வேண்டினர்.
பூசாரி தீபாராதனை செய்து இருவரின் முன்பும் நீட்டினார். இருவரும் தொட்டுக் கும்பிட்டதும், குங்குமம் கொடுத்தவர் பூங்குழலி கையில் அம்மன் கழுத்தில் இருந்து எடுத்த மல்லிச் சரத்தைக் கொடுத்தார்.
பூசாரி பிரசாத பாத்திரத்தை எடுக்கச் சென்ற இடை வேளையில், “தேவி” என்று அழைத்த மாறவர்மசிம்மன், அவள் திரும்பியதும், அவளது நெற்றியில் குங்குமத்தை வைத்தான்.
அதை எதிர்பார்க்காதவள் உடல் சிலிர்க்க நிற்க, அவனுக்குமே அவளது நெற்றியில் குங்குமத்தை வைத்த நொடியில் உடல் சிலிர்த்தது.
பூசாரி வந்து சக்கரை பொங்கல் பிரசாதத்தை கொடுக்கவும், இருவரும் அமைதியாக வாங்கினர்.
பின் மாறவர்மசிம்மன் பூசாரியிடம், “மகளை கல்லூரிக்கு முதல் நாள் அழைத்துச் செல்ல வேண்டும் என்று சொன்னீர்களே! நீங்கள் கிளம்புங்கள்.. நாங்கள் மெதுவாகத் தான் கிளம்புவோம்.. கோவில் நடையை சாற்றி சாவியை தீரனிடம் கொடுத்து விடுகிறேன்.. நீங்கள் தீரனிடம் இருந்து பெற்றுக் கொள்ளுங்கள்” என்றான்.
“மிக்க நன்றி ராஜா” என்று கூறியவர் சாவியை அவனிடம் கொடுத்துவிட்டுக் கிளம்பினார்.
அவன் பூசாரியுடன் பேசிய போது தலையில் மல்லி சரத்தை சூடி இருந்தவள், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அமைதியாக அவனது கரத்தை பற்றிக் கொண்டாள்.
“முதல் முறை வந்திருக்கிறாய்.. கோவில் எப்படி இருக்கிறது தேவி?” என்று கேட்டான்.
“ரொம்ப அருமையா இருக்குது..” என்றவள் அம்மனை பார்த்தபடி, “துர்க்கை அம்மனை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்குது.. மனதிற்கு அப்படி ஒரு அமைதி கிடைக்குது” என்றாள்.