மதியம் அவள் மகாராணிக்கு உணவை எடுத்துச் சென்று கொண்டிருந்த போது, “ஹாய் பியூட்டி” என்றபடி இளவரசன் வந்தான்.
“மீனாட்சி”
“தெரியும்”
“அப்போ அப்படியே கூப்பிடலாமே!”
“இளவரசனுக்கே கட்டளை போடுகிறாயா?”
அவனது முகத்தை கவனித்தவள், அதில் கோபம் இல்லை என்பதை அறிந்து, “என்னுடைய பெயரை வைத்தே அழைக்கலாமே என்று கேட்பது எப்படி கட்டளை ஆகும்?” என்று கேட்டாள்.
“கேள்வி கேட்பதே தப்பாச்சே!”
“என்னுடைய பெயர் எனது உரிமை இல்லையா!”
“அரண்மனையில் அரச குடும்பத்தினரை கேள்வி கேட்பது தவறு தான்.. நாங்க எப்படி கூப்பிட்டாலும் ஏத்துக்கணும்.”
“எந்த அரச குடும்பத்தினரும் வேலை செய்பவர்களை அடிமையாகவோ, கீழ்தனமாகவோ நடத்தியதா, நான் கேள்விபட்டது இல்லை”
“பியூட்டி பாராட்டு தானே!”
“அது என் பெயர் இல்லையே!”
“அழகாகப் பேசும் அழகி” என்றான் சிரிப்புடன்.
அவனை தீர்க்கமாகப் பார்த்தவள், “உங்க வயசை தெரிஞ்சுக்கலாமா?” என்று கேட்டாள்.
“25.. ஏன் கேட்கிற?”
“எனக்கு 26”
அவன் விரிந்த சிரிப்புடன், “பேசுறதுக்கு வயசு தேவை இல்லை.. பெரியவளா இருந்தா என்ன, சின்னவளா இருந்தா என்ன!” என்றான்.
“தோழியா நினைத்துப் பேசுறதுக்கு, தேவை இல்லை தான்”
சிறு ஆச்சரியத்துடன், “உனக்கு தில் ஜாஸ்தி.” என்றான்.
“உண்மையை பேசுறதுக்கு எதுக்கு பயப்படனும்?”
“இங்கே பயப்படனும்.”
“உங்களைப் பார்த்து மரியாதை வருவதை விட, பயம் வருவதைத் தான் விரும்புறீங்க போல”
அப்பொழுது அங்கே வந்த ராஜமாதா அவளை முறைத்துவிட்டு இளவரசனிடம், “இந்த நேரத்தில் உனக்கு இங்கே என்ன வேலை விக்கிரமா?” என்று கேட்டார்.
“மகராணியைப் பார்க்க வந்தேன்.”
“பார்த்தா அப்படி தெரியலையே!”
“மகாராணியின் உடல் நிலையைப் பற்றி விசாரிச்சிட்டு இருந்தேன்.”
அவர் முறைப்புடன் உள்ளே செல்ல, அவன் இவளைப் பார்த்து புன்னகையுடன் கண்ணடித்தபடி உள்ளே செல்ல, இவள் மனதினுள், ‘ஆண்டவா!’ என்று கூறியபடி மூச்சை நன்றாக இழுத்துவிட்டு உள்ளே சென்றாள்.
இளவரசன் பக்கம் திரும்பாமல், ராஜாமாதாவையும் நிமிர்ந்து பார்க்காமல், மகாராணியின் படுக்கை அறைக்குச் சென்று அவரை அமர வைத்து, உணவை பரிமாறிவிட்டு ஒதுங்கி நின்றாள்.
அதன் பிறகு மகாராணியிடம் பேசிவிட்டு ராஜமாதாவும் இளவரசனும் சென்றனர்.
மாலையில் இவள் ராஜமாதாவிடம் அன்றைய வேலைகளைப் பற்றிக் கூறச் சென்ற போது, அவர் இவளை முறைத்துக் கொண்டு தான் இருந்தார்.
இவள் பேசி முடித்ததும், “வந்த வேலையை மட்டும் பார்.” என்றார்.
“சரி, ராஜமாதா” என்று கூறிவிட்டு வெளியேறியவள் தீரனிடம் வேலையைப் பற்றிக் கூறிவிட்டு தோட்டத்திற்குச் சென்றாள்.
இன்று கவனமாக, ரோஜாவனம் பக்கம் செல்ல வில்லை அவள்.
சிறிது நேரம் கழித்து, ரோஜாவனம் நோக்கிச் சென்று கொண்டிருந்த மாறவர்மசிம்மன், இவளைப் பார்த்ததும் இவள் இருந்த இடத்திற்கு வந்தான்.
“காலையில் சாப்பிடச் சொன்னேனே!” என்றான்.
திடீரென கேட்ட குரலில் சிறு அதிர்வுடன் திரும்பியவள், “மனசு வரலை” என்றாள்.
“ஒருவேளை இளவரசர் சொல்லி இருந்தால் கேட்டிருப்பாயோ?”
அவனை தீர்க்கமாகப் பார்த்தவள், “நீங்க சொல்லியே கேட்கலை.” என்றாள்.
அவள் ‘ராஜா’ என்ற அர்த்தத்தில் தான் கூறுகிறாள் என்பது தெரிந்தாலும், அந்த பதில் அவனுக்குப் பிடித்து இருந்தது.
“ஏன் படிப்பில் இரண்டு வருட இடைவெளி?”
“நான் ஆசிரமத்தில் வளர்ந்தது உங்களுக்கே தெரியும்.. டென்த் முடிச்சதும் மேலே படிக்க ஸ்பான்சர் இல்லை.. ஒரு வருஷம் கழிச்சு ஸ்பான்சர் கிடைச்சதும் டிப்ளோமா படிச்சேன்.. படிப்பை முடிச்சு வேலை கிடைச்சதும், ஆசிரமத்தை விட்டு வெளியே போய்டணும்.. நான் படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கலை.. ஒரு வருஷம் கழிச்சு திரும்ப ஸ்பான்சர் கிடைச்சதும், பி.ஏ படிச்சேன்.. அப்புறமும் படிப்புக்கு ஏத்த வேலை கிடைக்கலை.. ஆனா ஆசிரமத்தில் பாரமா இருக்க விரும்பாம, கிடைச்ச வேலையில் சேர்ந்தேன்.. அதனால தான், இப்போ இங்கே இருக்கிறேன்.”
“பி.ஏ ஏன் ஆர்கியாலாஜி தேர்ந்தெடுத்தாய்?”
“முதல்லேயே என்னோட இன்ட்ரெஸ்ட் அது தான்.. ஆனா, டிப்ளோமா பிசியோதெரபி கோர்ஸ் தான் கிடைச்சுது. படிக்க ஆரம்பிச்சதும் அதில் ஆர்வம் வந்துருச்சு. ஆனா, மேல படிக்கிறப்ப அந்த கோர்ஸ் அதிக பீஸில் தான் கிடைச்சுது.. அதனால பி.ஏ ஆர்கியாலாஜி படிச்சேன்.”
“உன் படிப்பிற்கு யாரு நிதி உதவி செய்தது?”
சட்டென்று சுதாரித்தவள், “அது, எனக்கு தெரியாது.” என்றாள்.
“ஆசிரம நிர்வாகத்தில் நீ கேட்கவில்லையா?”
“கேட்டேன்.. என்னோட ஸ்பான்சர் பெயரை வெளிபடுத்திக்க விரும்பலைனு சொல்லிட்டாங்க.”
அவனது பார்வையே ‘நான் உன்னை நம்பவில்லை’ என்று கூற, உள்ளுக்குள் சிறு உதறல் எடுத்தாலும், அவள் அமைதியாகத் தான் நின்றாள்.
அவனது கூர்விழிகளை சந்திக்க முடியாமல், “மகாராணியைப் பார்க்கப் போகணும்.” என்றாள்.
அவன் தலை அசைக்கவும், தேவிபுரம் நோக்கிச் சென்றாள்.
ரோஜாவனதிற்குச் செல்லாமல் கொலு விருக்கைக்குச் சென்ற மாறவர்மசிம்மன் தீரனை அழைத்தான்.
தீரன் வந்ததும், “மீனாட்சியின் பின்புலத்தை சரி பார்த்தாயா?” என்று கேட்டான்.
“சரி பார்த்துட்டேன், ராஜா.. நாலு வயதில் ஆசிரமத்தில் சேர்க்க பட்டிருக்காங்க.. ஒரு விபத்தில் அம்மா அப்பா இறந்ததும், ஆசிரமத்தில் சேர்த்து இருக்கிறாங்க.. நிதி உதவி இல்லாம ஒரு வருடம் தாமதமாகி டிப்ளோமா படிச்சு இருக்கிறாங்க.. அப்புறம் வேலை கிடைக்காம ஒரு வருட இடைவெளிக்கு பிறகு நிதி உதவி கிடைக்கவும், மீண்டும் படிச்சு இருக்கிறாங்க.. அப்புறம் கிடைச்ச வேலையில் சேர்ந்து ஆசிரமத்தை விட்டு வெளியே வந்து இருக்கிறாங்க.. கடந்த இரண்டேமுக்கால் வருடமாக, அன்னை முகமையில் தான் வேலை பார்த்துட்டு இருக்கிறாங்க..”
மாறவர்மசிம்மன் யோசனையில் இருக்க, தீரன், “எனக்கும் சந்தேகம் இருக்குது, ராஜா” என்றான்.
“நேர்மையா நிமிர்வுடன் பேசுகிறவள் சில நேரங்களில் என் கண்ணை சந்திக்கத் தயங்குகிறாள்.. நிச்சயம் அவள் வேற ஏதோ ஒரு காரணத்திற்காகத் தான் அரண்மனை வந்திருக்கிறாள்”
“சில நேரம் அவங்களே தான் மகாராணிக்கு சமைக்கிறாங்க.”
“இப்போ இந்த அரண்மனையில், என்னைத் தவிர வேறு யாரின் உயிருக்கும் ஆபத்து கிடையாது.”
“இப்போ நீங்க சொன்னதே காரணமாக இருந்தால்?”
“அப்போ, அவளுக்கு எமன் நான் தான்.”
குழலின் இசை தொடரும்…