புல்லாங்குழலே! பூங்குழலே! ~ குழலிசை 4.1

குழலிசை 4

அடுத்த நாள் காலை உணவிற்காக அரச குடும்பத்தினர் அவர்களுக்கான உணவறையில் கூடி இருந்தனர். மகாராணி மட்டும் தலைவலி இருப்பதால் தனது அறையில் உணவை எடுத்துக் கொள்வதாக செய்தி அனுப்பி இருந்தார்.

பணிப்பெண் ஒருத்தி ராஜமாதா தட்டில் உணவை பரிமாறிவிட்டு, மாறவர்மசிம்மன் தட்டில் பரிமாறினாள்.

தனது தட்டில் பரிமாறிய இடியாப்பத்தை பார்த்தவன், “சந்ராமா” என்று கத்தி இருந்தான்.

இளவரசனுக்கு பரிமாறப் போன பணிப்பெண் இடியாப்ப பாத்திரத்தை பயத்தில் கீழே போட்டு, பதறி அவசரமாக எடுத்தபடி, “மன்னிச்சிருங்க, இளவரசே!” என்று நடுங்கியபடி கூறினாள்.

இளவரசனின் முறைப்பில் அவள் மேலும் நடுங்க, இளவரசன் ஏதோ சொல்லும் முன்,

அங்கே வந்த சந்ரா மாறவர்மசிம்மனின் கோபத்தையும் அவனது தட்டையும் பார்த்து, “மன்னிச்சிருங்க ராஜா.. மகாராணிக்காக மீனாம்மா செய்தது.. மீனாம்மா அதை இங்கே கொண்டு வந்து வைத்ததை நான் கவனிக்கலை. விஷயம் தெரியாமல் இவள் உங்களுக்குப் பரிமாறிட்டா.” என்றார் கலங்கிய குரலில்.

கோபத்துடன் உணவு தட்டை தூக்கி எரியப் போனவன், அது உணவை அவமரியாதை செய்வது போல் ஆகிவிடும் என்ற எண்ணத்தில் தட்டை மேசை மேல் போட்டுவிட்டு, வேக நடையுடன் வெளியேறி விட்டான்.

சந்ரா கவலையுடன் செல்லும் மாறவர்மசிம்மனை பார்த்தபடி நிற்க, ராஜமாதா, “பரிமாறு” என்று பணிப் பெண்ணைப் பார்த்து உறுமினார்.

அந்த பணிப்பெண் பயத்துடனே பரிமாறிவிட்டு நகர்ந்து கொள்ள, மூவரும் உண்ண ஆரம்பித்தனர்.

ஒரு  சாம்ராஜ்யத்தையே ஆளுபவன்,  உண்ணாமல் சென்றதை நினைத்து கவலைப்படும் சொந்தம் யாரும் அங்கே இல்லை. சந்ரா மட்டுமே அவனை நினைத்து கவலைக் கொண்டார்.

ரோஜாவனதிற்குச் சென்ற மாறவர்மசிம்மன் அங்கே இருந்த தனது அன்னை மலர்விழியின் அறையினுள் சென்று, புல்லாங்குழலின் இசையை ஒலிக்க விட்டு கண்களை மூடியபடி அமர்ந்து கொண்டான்.

மகாராணிக்கு உணவை கொடுத்துவிட்டு வந்த மீனாட்சி, விஷயம் அறிந்து சந்ராவிடம் விசாரித்தாள்.

ராஜா நான் செய்ற சாப்பாட்டை மட்டும் தான் சாப்பிடுவார்.” என்றார்.

அதுக்கா இவ்வளவு கோபம்! விட்டா அந்த பொண்ணுக்கு பயத்தில் காய்ச்சலே வந்திரும் போல!” என்றாள்.

அவரோ, “இது அரண்மனை.. எவ்வளவுக்கு எவ்வளவு விசுவாசம் இருக்கிறதோ, அதே மாதிரி சூழ்ச்சியும் துரோகமும் கூடவே இருக்கும்.” என்று பூடகமாகப் பேசினார்.

அவள் புரியாமல் பார்க்க, அவர் வேலையை தொடரப் போனார்.

அவள் பின்னாலேயே சென்று, “அது எப்படி சாப்பிடுறதுக்கு முன்னாடியே, நீங்க செய்யலைன்னு கண்டு பிடிச்சார்? என்று கேட்டாள்.

நான் இடியாப்பம் செய்ய மாட்டேன்”

ஏன்? உங்களுக்கு செய்யத் தெரியாதா?

நீ போய் சாப்பிடு தாயி”

ப்ளீஸ் சொல்லுங்க.. எனக்கு விஷயம் தெரியாம மண்டையே வெடிச்சிடும்”

என் மண்டையே வெடிச்சாலும், சில விஷயங்கள் என்னிடமிருந்து வெளியே வராது”

என்ன சந்ராமா இப்படி சொல்லிட்டீங்க!” என்று அவள் குறைப்பட,

சாப்பிட்டுட்டு போய் வேலையைப் பாரு தாயி” என்றார்.

இப்போ ராஜா எங்க?

விடை தெரிந்திருந்தாலும் அவர் பதில் கூறாமல் தனது வேலையை ஆரம்பிக்க, அவள் தீரனைப் போய்ப் பார்த்தாள்.

அவன் என்ன என்பது போல் பார்க்க, “ராஜாவை பார்க்கணும்.” என்றாள்.

அவன் பதில் கூறாமல் ஆராய்ச்சி பார்வை பார்க்க, “ப்ளீஸ்.. அவர் சாப்பிடலை.. அதுவும் என்னால்.. அதான் கேட்கிறேன்.” என்றாள்.

தெரியும்”

என்ன தெரியும்?

நீங்க செய்த காரியமும் அதன் விளைவும் தெரியும்.”

ராஜாவைப் பார்க்கணும் ப்ளீஸ்.. நான் வேணும்னு செய்யலை.”

தெரியும்.”

ப்ச்”

இப்போ ராஜாவைப் பார்க்க முடியாது.. நீங்க உங்க வேலையைப் பாருங்க.”

ஏன்?

அவன் அவளை முறைக்க, “ப்ளீஸ்” என்று கெஞ்சினாள்.

அவளது கெஞ்சல் பார்வையில், “ராஜா ரோஜாவனத்தில் இருக்கிறார்.” என்றான்.

நான் சாப்பாடு கொண்டு போகட்டுமா? என்று அவள் கேட்க, அவன் அவளை மீண்டும் முறைத்தான்.

இல்லை.. என்னால் தான் அவர் சாப்பிடலை.. அது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது.. சின்ன வயதில் சரியான சாப்பாடு இல்லாம நான் ஆசிரமத்தில் கஷ்டப்பட்டு இருக்கிறேன்.. அதனால் யாரும் சாப்பாடு இல்லாம கஷ்டப்பட்டா, எனக்கு மனசு தாங்காது. அதுவும் இன்னைக்கு, என்னால தான் ராஜா  சாப்பிடலை என்றபோது” என்று அவள் சற்று கரகரத்த குரலில் நிறுத்த,

யாரும், அவரை இப்போ பார்க்க முடியாது” என்றான்.

அவள் சிறு தவிப்புடன் பார்க்க, அவனோ, “நீங்க போனா, காவலாளிக்கு தான் தண்டனை கிடைக்கும்.” என்று கூறி திட்டவட்டமாக மறுத்து விட்டான்.

ராஜா சாப்பிடலைனு, உங்களுக்கு கொஞ்சம் கூட வருத்தமா இல்லையா?என்று முறைப்புடன் கேட்டாள்.

படி அளக்கும் ராஜா சாப்பிடலைனா வருத்தமா இருக்காதா!” என்றவன், அவள் பேசும் முன், “ஆனா நம்மால் எதுவும் செய்ய முடியாது.. நாம் நமது எல்லையைக் கடக்கக் கூடாது.. போய் வேலையைப் பாருங்க.. என்னையும் வேலை செய்ய விடுங்க.” என்று கூறி நகர்ந்து விட்டான்.

அவள் மனது கேட்காமல் மாறவர்மசிம்மனின் வண்டி நின்ற இடத்திற்கு சற்று தள்ளி நின்று கொண்டாள்.

அவளை விநோதமாக பார்த்த தயாளன் எதுவும் கேட்டுக் கொள்ளாமல், ராஜாவின் வரவிற்காக காத்துக் கொண்டிருந்தான். ராஜா வந்ததும் வண்டியை எடுக்கவென்று ஓட்டுநர் வண்டியின் அருகே நின்று கொண்டிருந்தான்.

அப்பொழுது வேக நடையுடன் வந்த மாறவர்மசிம்மன் வண்டியில் ஏறப் போக, அவசரமாக அவன் அருகே வந்தவள், “ராஜா” என்று அழைத்தாள்.

அவன் திரும்பிப் பார்க்கவும், தவிப்புடன், “ப்ளீஸ் என்னால் சாப்பிடாம கிளம்பாதீங்க.. என்னால தாங்கிக்கவே முடியாது.” என்றாள்.

தயாளனும், வண்டியில் ஏறியிருந்த ஓட்டுநரும் அவளை அதிசயமாகப் பார்த்தார்கள். இதுவரை யாரும் இப்படி மாறவர்மசிம்மனிடம் பேசியது இல்லை. வேலையாட்களுக்கு அவனிடத்து பாசம் அதிகமாக இருந்தாலும், அவனது முடிவை மீறி யாரும் பேசியது கிடையாது.

இதுவரை அறிந்திராத தாய்ப் பாசத்தை அவளிடத்தில் உணர்ந்த மாறவர்மசிம்மன் நொடி பொழுதில் சுதாரித்துக் கொண்டு, “இதில் உன் தவறு எதுவும் இல்லை.” என்றபடி வண்டியில் ஏற, தயாளன் முன் பக்கம் ஏறிக் கொண்டான்.

ஓட்டுநர் வண்டியை இயக்க, இவள் அவசரமாக, “ஹோட்டலிலாவது சாப்பிடுங்க, ப்ளீஸ்” என்றாள்.

வண்டியை எடுக்கப் போன ஓட்டுநரிடம் கையைக் காட்டி தடுத்த மாறவர்மசிம்மன் அவளிடம், “நான் வெளியே சாப்பிடுவது இல்லை.” என்றான்.

மதியம் அவன் எங்கிருந்தாலும், இருக்கும் இடத்திற்கு, சந்ரா சமைத்த உணவை அவனது ஓட்டுநர் அரண்மனைக்கு வந்து எடுத்துச் சென்று விடுவான். அரண்மனையில் மாறவர்மசிம்மன் நம்பும் ஆட்கள் நான்கே நபர்கள் தான். அவர்கள் சந்ரா, தீரன், தயாளன் மற்றும் அவனது ஓட்டுநர்.

அவள், “வெளியூர் போனா என்ன செய்வீங்க? என்று கேட்க,

நான் வெளியூர் செல்வது கிடையாது.. இன்றைய அறிவியல் வளர்ச்சியை வைத்து, இருக்கும் இடத்தில் இருந்துக் கொண்டே உலகையே ஆளலாம்.. நீ போய் சாப்பிடு” என்றுவிட்டு ஓட்டுநரைப் பார்க்க, வண்டி கிளம்பிச் சென்றது.

ராஜாவின் பொறுமையான உரையாடல் கண்டு, தயாளனும் ஓட்டுநரும் ஆச்சரியம் கொண்டாலும் அதை சிறிதும் வெளிப்படுத்திக் கொள்ள வில்லை.

மீனாட்சி முகத்திலும் குரலிலும் தெரிந்த உண்மையான தவிப்பிற்கு மதிப்பு கொடுத்தே, அவன் பொறுமையாகப் பேசியது.

மீனாட்சி காலை உணவை எடுத்துக் கொள்ளாமலேயே மகாராணியின் அறைக்குச் சென்று விட்டாள்.

error: Content is protected !!