உடனே, “மைக்ரோபோன் இருக்க அதிக வாய்ப்பு இருக்குது.. மெசேஜ் மட்டும் செய்.. கவனமா இரு.. உன்னால் முடியும்.. யூ வில் அடாப்ட் தேர்.. எனக்கு உன் மேல் நம்பிக்கை இருக்குது.. ஆல் தி பெஸ்ட்” என்ற பதில் கிடைத்தது.
மூச்சை இழுத்து விட்டவள் கைபேசியை பிரித்து பழையபடி அந்தந்த இடத்தில் பொருத்தினாள். பின் பெட்டியில் இருந்த உடைகளை அடுக்கி விட்டு, சுட்டிப்பேசியை மட்டும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
மெத்தையில் அமர்ந்தபடி அவளை இங்கே அனுப்பிய முகமைக்கு அழைத்து வேலையில் சேர்ந்து விட்டதாகக் கூறி அழைப்பைத் துண்டித்தாள்.
பின் வேகமாக குளித்து கிளம்பி மகாராணி அறைக்குச் சென்று, அழைப்பு மணியை அடித்தாள்.
கதவு திறந்ததும் உள்ளே சென்றவளை, “மகாராணியைப் பார்க்க வந்தது நினைப்பில் இருக்கிறதா? இல்லை, அரண்மனையில் கால் வைத்ததும், உன்னையே மகாராணி என்று கற்பனை செய்து கொண்டாயா?” என்ற இகழ்ச்சியான குரல் தான் வரவேற்றது.
மீனாட்சி குரல் வந்த திசையில் திரும்ப, அங்கே இளம் பெண் ஒருத்தி இருக்க, அது இளவரசியாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள்.
அவள் அமைதியாக இருக்க, இளவரசி கோபக் குரலில், “எவ்வளவு திமிர்! இவளை உடனே வேலையை விட்டு தூக்குங்க.” என்று அருகில் இருந்த வயதான பெண்மணியிடம் கூறினாள்.
கம்பிரமாக நரைத்த முடியுடன் இருந்த அந்தப் பெண்மணி ராஜமாதாவாகத் தான் இருக்க வேண்டும் என்று நினைத்தவள், “சாரி.. நான் என்ன தப்பு செய்தேன்னு எனக்குப் புரியலை” என்று அவரிடம் கூறினாள்.
ராஜமாதா பேசும் முன் இளவரசி மீண்டும் கோபக் குரலில், “பார்த்தீங்களா! எனக்கு பதில் சொல்லாமல் உங்களிடம் பேசுகிறாள்!” என்றாள்.
‘இவளோட அக்கப்போர் தாங்கலையே!’ என்று மனதினுள் நினைத்த மீனாட்சி, வெளியே நிர்மலமான முகத்துடன் அமைதியாக இருந்தாள்.
அவளது முகத்தையே கவனித்துக் கொண்டிருந்த ராஜமாதா, “உன் வருகையில் ஏற்பட்ட தாமதமும், இளவரசியை மதித்து பதில் கூறாததும் தான் உன் தவறு.. முதல் நாள் என்பதால் மன்னிக்கிறேன்.. இனி சரியாக இருந்து கொள்!” என்றவரின் கண்ணசைவில் ஒரு பணிப்பெண் வந்து நின்றாள்.
பின், “உன் வேலைகளைப் பற்றி, இவள் கூறுவாள்.. தினமும் மாலை ஆறு மணிக்கு எனக்கு உன் வேலைகளின் அறிக்கை வந்திருக்கணும்.. நீயே வந்து சொல்கிறாய்!” என்று கறாராகக் கூறினார்.
“சரி.”
“சரி ராஜமாதா, என்று கூற வேண்டும்.” என்று அவர் கடுமையான குரலில் கூற,
“சரி ராஜமாதா.” என்று உடனே திருத்திக் கொண்டாள்.
இளவரசி ஏதோ கூற வர, தனது ஒற்றை பார்வையில் இளவரசியை தடுத்து, தன்னுடன் அழைத்துக் கொண்டு வெளியேறினார்.
அவர்கள் செல்லவும், இழுத்துப் பிடித்திருந்த மூச்சை வெளியிட்ட மீனாட்சி, அருகில் இருந்த பணிப்பெண்ணைப் பார்த்து சிநேகமாகப் புன்னகைக்க, அவளும் சிநேகமாகப் புன்னகைத்தாள்.
மீனாட்சி, “எனக்கு என்னென்ன வேலைகள்?” என்று வினவ,
பணிப்பெண், “மகாராணியை கவனிச்சுக்கிறது தான்மா உங்க வேலை.. மகாராஜா இறந்த செய்தியை கேட்டு வேகமா வந்த போது படிகளில் உருண்டு விழுந்ததில், முதுகுத் தண்டில் அடிபட்டு, நடக்க முடியாம ஆகிருச்சு.” என்றாள்.
“உட்கார, தானே சாப்பிட, பேச்சு எல்லாம் இயல்பா தானே இருக்குது?”
“ஆமாமா.”
“இதுக்கு முன்னாடி யார் பார்த்துக்கிட்டாங்க?”
“நான் தான்மா”
“இப்போ என்னாச்சு?”
“புரியலைமா”
“பார்த்துக்க நீங்க இருக்கிறப்ப, என்னை ஏன் தனியா அப்பாயின்ட் செய்து இருக்காங்கனு கேட்டேன்”
“அப்பாயின்ட்னா?”
ஒரு நொடி யோசித்தவள், “என்னை ஏன் தனியா நியமிச்சு இருக்காங்க?” என்று கேட்டாள்.
“இதுக்குன்னு தனியா பொறுப்பான குழு இருக்குதாமே! அதில் இருந்து ஆளை வர வைக்கனும்னு இளவரசர் சொன்னார்.”
“ஓ! சரி வாங்க, உள்ளே போய் மகாராணியைப் பார்க்கலாம்.”
பணிப்பெண்ணுடன் உள் அறைக்குச் சென்றவள் புன்னகையுடன், “காலை வணக்கம் மகாராணி.. எப்படி இருக்கிறீங்க?” என்று கேட்டாள்.
பரிதாபமோ இரக்கமோ இல்லாமல் இளமை துள்ளும் புத்துணர்ச்சியான புன்னகையுடன் தன்னை அணுகிய மீனாட்சியைப் பார்த்ததும், மகாராணிக்கு பிடித்துப் போனது.
மகராணி லேசான மென்னகையுடன், “நான் நன்றாகவே இருக்கிறேன்.. உன் பெயர்?” என்று கேட்டார்.
“மீனாட்சி” என்றவள், “உங்க காலை நான் சோதிக்கலாமா?” என்று கேட்டாள்.
மகாராணி சலிப்புடன் பார்க்க, அவள் மென்னகையுடனே, “ஜஸ்ட் பைவ் மினிட்ஸ்.. ஸ்.. சாரி.. ஸ்.. மன்னிக்கவும்.. சும்மா ஒரு அஞ்சு நிமிஷம் பார்க்கலாமா!” என்றாள்.
“உனக்கு எப்படி வருதோ அப்படியே பேசு.. சுத்த தமிழை சிம்மன் விரும்பினாலும், அப்படி மட்டும் தான் பேச வேண்டும் என்று யாரையும் கட்டாயப் படுத்த மாட்டான்.”
“ஹ்ம்ம்.. அவர் எண்ணம் சரி தானே.. தமிழர்களா இருந்துட்டு தமிழில் பேசுவது தானே சரி. ஆங்கிலம் கலந்த தமிழ் பேசினா, பிற்காலத்தில் பாரதி சொன்ன மாதிரி, தமிழ் இனி மெல்லச் சாகும் நிலை வரத்தான் வாய்ப்பு இருக்கிறது.. நாளைய தலைமுறையினர் சுத்த தமிழ் தெரியாமலேயே போயிருவாங்க.”
“நன்றாகப் பேசுகிறாய்.. எனக்கு பேச்சு துணை இருக்கும் போல.” என்று கூற, இப்படி சகஜமாக பேசும் மகாராணியை பணிப்பெண் ஆச்சரியத்துடன் பார்த்தாள்.
அடுத்து மீனாட்சியை பார்த்தவள் மனதினுள், ‘பெரிய படிப்பு படிச்சு, பெரிய வேலையில் இருக்கணுமோ!’ என்று நினைத்துக் கொண்டாள்.
மீனாட்சி, “அப்படியே பேசிட்டே, உங்க காலை பார்க்கலாமே!” என்றாள்.
“சரி” என்று மகாராணி கூறியதும், அவள் பணிப்பெண்னிடம், “நீங்க கொஞ்ச நேரம் வெளியே இருங்க.. இல்லை, கிளம்பனும்னா கிளம்புங்க.. இனி நான் பார்த்துக்கிறேன்.” என்றாள்.
பணிப்பெண் மகாராணியை பார்க்க, அவரது கண்ணசைவில் வெளியேறினாள்.
பணிப்பெண் வெளியேறவும், தீரனை வந்து சந்திக்குமாறு அந்த பெண்ணிற்கு ஆணை வந்தது.
அந்த பணிப்பெண் போய் தீரனை சந்தித்ததும், அவன் பார்த்த பார்வையில், மீனாட்சி மகாராணி அறையினுள் வந்ததில் இருந்து நடந்தவற்றை அப்படியே ஒப்பித்தாள்.
அனைத்தையும் கேட்ட தீரன் மனதினுள், ‘டிக்சனரி கேட்ட பெண்ணா, இப்படி ராஜாவை ஆதரித்துப் பேசி இருக்கிறாள்! ஆளுக்கு தக்க பேசும் இவளை கவனிக்க வேண்டும்.’ என்று நினைத்தபடி பணிப்பெண்ணை பார்த்து கிளம்புமாறு தலை அசைத்தான்.
அங்கே மகாராணி அறையில், மகாராணியின் கால்களை ஒவ்வொரு இடமாகத் தொட்டு, தொடு உணர்ச்சியை சோதித்த பின், காலிற்கான சில உடற்பயிற்சிகளை செய்ய வைத்தாள்.
பின் மகாராணியை பார்த்துப் புன்னகையுடன், “உங்களுக்கு ஒன்றுமே இல்லை.. கீழே விழுந்ததில் முதுகுத் தண்டு எலும்பு கொஞ்சம் புடைத்து, கால் நரம்பை அழுத்திப் பிடிச்சிட்டு இருக்குது.. அதனால் ரத்த ஓட்டம் தடைபட்டு காலில், சில பகுதி மரத்துப்போய் இருக்குது.. இதை எக்ஸ்சர்சைஸ்.. உடற்பயிற்சி மூலமே சரி செய்திடலாம்.. ஆனா, கொஞ்சம் டைம் எடுக்கும்.” என்றாள்.
இவள் பேசியதைக் கேட்டதும் மகாராணி முகத்தில் நம்பிக்கை ஒளி தெரிந்தது.
அவர் மகிழ்ச்சியுடன், “நீ என்ன படித்து இருக்கிறாய்?” என்று கேட்டார்.
“டிகிரி ஆர்கியாலாஜி.. ஆனா, பிஸியோ தெரபியில் டிப்ளமோ கோர்ஸ் முடித்து இருக்கிறேன்..” என்றாள்.
“ஓ! மருத்துவர்கள் ஏதேதோ புரியாத மாதிரி ஆங்கிலத்தில் சொல்லி பயமுறுத்திட்டாங்க.. இங்கே இருக்கிறவங்களும் தான்.. நீ மட்டும் தான் நேர்மறையா நல்ல விதமாகச் சொல்லி இருக்கிறாய்.”
“டாக்டர்ஸ் சொன்னதைத் தான், நான் தமிழில் சொல்லி இருப்பேன்.. அவங்க.. டிஸ்க் பல்ஜ், ஸியாடிகா நெர்வ் ப்ராப்ளம்னு சொல்லி இருப்பாங்க.”
“ஹ்ம்ம்.. இதை மாதிரி தான் ஏதோ சொன்னாங்க.. அறுவை சிகிச்சை அது இதுன்னு சொன்னாங்க.. சிம்மா முதுகு எலும்பில் அறுவை சிகிச்சை செய்யவே கூடாதுன்னு சொல்லிட்டான்.. அதுக்கு விக்ரம் தான் சண்..” என்று பேசிக் கொண்டிருந்தவர் தான் அதிகமாக பேசுவதை உணர்ந்து, சட்டென்று பேச்சை நிறுத்திக் கொண்டார்.
அதைக் கண்டு கொள்ளாதது போல் அவள், “ராஜா சொன்னது தான் சரி.. கவலைப்படாதீங்க. கொஞ்ச நாளில் சரி செய்திடலாம்.. நீங்க முன்ன மாதிரி எழுந்து நடமாடுவீங்க.” என்றாள்.
அதன் பிறகு அவருக்கு தேவையான உணவுக் கட்டுப்பாட்டை கூறி கவனிக்க ஆரம்பித்தாள். அதன் பிறகு மகாராணி அதிகம் பேசவில்லை.
மகாராணியும் வேலை செய்பவர்களிடம் தள்ளியே தான் இருப்பார். ஆனால், இத்தனை நாட்கள் உள்ளுக்குள் பயந்து கொண்டிருந்தவர் மீனாட்சியின் பேச்சில் பயம் நீங்கி, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இயல்பாகப் பேசிவிட்டார், ஆனால், தனது செயலை உணர்ந்ததும் அமைதியானார். அவரது நிலையை புரிந்து கொண்ட மீனாட்சி, அதை பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை.
குழலின் இசை தொடரும்…