புல்லாங்குழலே! பூங்குழலே! ~ குழலிசை 2.1

குழலிசை 2

வேந்தபுரம் உள்ளே சென்றதும் மீனாட்சி எதிர் கொண்டது, அரண்மனையின் பொது மேலாளர் தீரனைத் தான்.

அவளது நியமனக் கடிதத்தை மறுமுறை பரிசீலனை செய்தவன், “உங்களுக்கு தேவிபுரத்தில் மகாராணி அறைக்கு அடுத்த அறையை ஒதுக்கி இருக்கிறேன். மதியச் சாப்பாடும், இரவுச் சாப்பாடும் அங்கேயே எடுத்துக்கோங்க.. காலை உணவுக்கு இங்கே தான் வரணும். தாமதப்படுத்தாம, சரியா எட்டு மணிக்கு மகாராணியை கூட்டிட்டு வந்திருங்க.. மகாராணி சாப்பிட்ட பிறகு, அவங்களை அவங்க அறையில் விட்டுட்டு, இங்கே வந்து நமக்கான உணவு அறையில் நீங்க சாப்பிட்டுட்டு, அடுத்த பதினைந்தாவது நிமிடம் மகாராணி அறையில் இருந்தாகணும்.” என்றான்.

அவள் அமைதியாக தலையை ஆட்டினாள்.

இன்னைக்கு ஒருநாள் இந்த நேரத்தில் காலை உணவு கிடைக்கும். நேரே போய் இடதுபுறம் போனா சமையல் அறை வரும். அங்கே சந்ரா அம்மா இருப்பாங்க. அவங்களைப் போய்ப் பாருங்க.” என்றான்.

அவள் மீண்டும் தலையசைத்தாள்.

அவன், “ஏதும் சந்தேகம் இருக்குதா? என்று கேட்க,

அரண்மனையில் எல்லாருமே இப்படி இங்கிலீஷ் கலக்காத சுத்த தமிழில் தான் பேசுவீங்களா? என்று சிறு கவலையுடன் கேட்டாள்.

அவள் கேட்ட விதத்தில் லேசாகச் சிரித்தவன், “நான் MBA கிராஜுவேட் தான்.. ராஜா பெரும்பாலும் ஆங்கிலம் கலக்காத தமிழ் தான் விரும்புவார்.” என்றான்.

ரைட்டு!’ என்று மனதினுள் கூறியவள் பெட்டியுடன் நகர,

பெட்டியை உங்க அறைக்கு அனுப்பிடுறேன்.. சாப்பிட்ட பிறகு, உங்க அறைக்கு போய் விரைவா கிளம்பி மகாரணியை போய்ப் பாருங்க.. நான் உங்க வரவைப் பற்றி மகாராணிக்கு செய்தி அனுப்பிடுறேன்.” என்றான்.

தமிழ் டு தமிழ் டிக்சனரி இங்கே கிடைக்குமா? என்று அவள் கேட்கவும்,

மென்னகையுடன், “இங்கே ராஜாவோட நூலகம் இருக்கிறது.. ராஜாவோட அனுமதி பெற்றுக் கொண்டு போய் பாருங்க.. அங்கே இருக்கலாம்.” என்றான்.

அவளது முகபாவத்தைப் பார்த்தவன், “முதல்ல தான் வித்யாசமா இருக்கும்.. அப்புறம் பழகிடும்.. கவலைப் படாதீங்க” என்றான்.

அவள் மீண்டும் தலை அசைத்துவிட்டு நகர்ந்தாள். அவள் நகர்ந்த அடுத்த நொடி, தீரனின் பார்வையில் ஒரு வேலையாள் வந்து மீனாட்சியின் பெட்டியை எடுத்துக் கொண்டு தேவிபுரம் நோக்கிச் சென்றான்.

தூண்கள், சுவர்கள் மற்றும் மேல்கூரையில் இருந்த வேலைபாடுகளை ரசித்துப் பார்த்தபடி சென்று கொண்டிருந்தவள், பின் தலையை உலுக்கிக் கொண்டு, “இதை நிதானமா நாளைக்குக் கூடப் பார்க்கலாம்.. முதல்ல வயிறைக் கவனிப்போம்.. சாப்பாடு இல்லைனு சொல்லிட்டா, சிறு குடலை பெருங்குடல் சாப்பிட்டுறப் போகுது..” என்று முணுமுணுத்தபடி சற்று வேகமாக நடந்தவள்,

ஒன்பது மணிக்கே ப்ரேக்பாஸ்ட் இல்லை, இதில் சுத்த தமிழ் வேற! இங்க எப்படி காலம் தள்ளப் போற மீனு!” என்று முணுமுணுத்தாள்.

தனது மடிகணினியில் மறைகாணி பதிவின் மூலம் மீனாட்சி உள்ளே வந்ததில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த மாறவர்மசிம்மனின் கீழுதடு மிக லேசாக யாரும் அறியா வண்ணம், மென்னகையில் விரிந்தது. வாயசைப்பில் இருந்து அவள் கூறியதை அறிந்து  கொண்டதின் விளைவே இந்தச் சிறு வளைவு.

ஒருவாறு சமையல் அறையை கண்டுபிடித்துச் சென்றவள், அங்கே இருந்த வயதான பெண்மணியை பார்த்து, “நீங்க தான் சந்ரா அம்மாவா? என்று கேட்டாள்.

அவர், “ஆமா.. நீங்க? என்றார்.

மரியாதை கொடுத்து என்னை கிழவி ஆக்காதீங்க.. நான் மீனு என்ற மீனாட்சி.. மகாராணியை பார்த்துக்க வந்திருக்கிற கேர்-டேக்கர்.. இப்போ என்னோட அவசரத் தேவை, என்னோட சிறுகுடலை காப்பாத்த கொஞ்சம் சாப்பாடு.” என்றாள்.

அவளது வேகப் பேச்சில் இரண்டு நொடிகள் விழித்த சந்ரா பின் புரிந்தவராக, “இதோ கொண்டு வரேன்.. அந்த அறைக்குப் போங்கம்மா” என்று வலதுபுறம் கையை நீட்டினார்.

இங்கேயே உட்கார்ந்து சாப்பிடக் கூடாதா?

அது அதுக்குன்னு இருக்கிற இடத்தில் தான் செய்யணும்.. இல்லை ராஜாவுக்குக் கோபம் வரும்” என்று அவர் சொன்னதும், மறுவார்த்தை பேசாமல் வேலையாட்களுக்கான உணவு அறைக்குச் சென்று அமர்ந்தாள்.

சந்ரா இட்லி, தோசை, சப்பாத்தி, சாம்பார், சட்னி, குருமா என்று உணவுகளை மேசையில் அடுக்க,

எனக்கு இட்லி மட்டும் போதும்.” என்றாள்.

எப்போதும் வயிறு நிறையச் சாப்பிடனும்.. அப்போ தான் தெம்பா வேலை செய்ய முடியும்.” என்றபடி அனைத்து உணவுப் பதார்த்தங்களையும் அவளது தட்டில் வைத்தார்.

இப்படி தட்டு புல்லா வச்சீங்கனா.. சாப்பிடவே வேணாம், இதைப் பார்த்தாலே என் வயிறு நிறைஞ்சிடும்.”

சின்னச் சிரிப்புடன், “அப்போ மயங்கி தான் விழுவீங்க.” என்றார்.

விழுவீங்க இல்லை, விழுவ” என்று அவரைத் திருத்தியவள், “இவ்ளோ சாப்பாடு தான் இருக்குதே அப்புறம் ஏன் ஒன்பது மணிக்கு வந்தா, சாப்பாடு இருக்காதுங்கிற மாதிரி அவர் சொன்னார்? என்று கேட்டாள்.

தீரன் தம்பியா?

பெயரெல்லாம் தெரியாது.. உங்க கிட்ட அனுப்பினவர்.” என்றபடி உணவைச் சாப்பிட ஆரம்பித்தாள்.

ஹ்ம்ம்.. தீரன் தம்பி தான்.. தம்பி சொன்னது சரி தான்.. 8.30க்கு எல்லா சாப்பாடும் ஆதரவற்றோர் ஆசிரமதுக்கு அனுப்பிடுவாங்க.. இன்னைக்கு சரியா சாப்பாடு அனுப்புற நேரத்தில், தீரன் தம்பி தான் ஒரு ஆள் சாப்பிடுற அளவுக்கு சாப்பாடு எடுத்து வச்சிட்டு அனுப்பச் சொன்னார்”

இது ஒரு ஆள் சாப்பிடுற சாப்பாடா?

இங்கே எப்போதும் சாப்பாடு அளவு அதிகமா தான் இருக்கும்.. வயிறும் மனசும் நிறைய சாப்பாடு போடணும்னு ராஜா சொல்வார்.”

வேலை செய்றவங்க வீட்டுக்கு அனுப்பலாமே! ஏன் ஆசிரமம்?

இங்கே வேலை செய்றவங்க இங்கயே சாப்பிடுவாங்க.. அவங்க பிள்ளைங்களுக்கு சாப்பாடு போய்டும்.”

ஓ! ஆனா மிச்சத்தை அனுப்புறதுக்கு பிரெஷ்ஷாவே செஞ்சு ஆசிரமத்துக்கு அனுப்பலாமே? என்று அவள் கேட்டதும் சுற்றி பார்த்தவர்,

மெதுவா பேசு தாயி.. இது அரண்மனை.. சுவருக்கும் கண்ணும் காதும் இருக்கும்.” என்றார்.

நான் தப்பா எதுவும் பேசலையே!”

ராஜாவை குறைச்சு பேசினியே?

எப்போ?

இப்போ தான்.. மிச்சத்தை அனுப்புறதா சொன்னியே!”

இது குறைச்சு பேசுறதா!’ என்று மனதினுள் நினைத்தவள், “சாரி.. தெரியாமச் சொல்லிட்டேன்.. மனசில் பட்டதை சொல்லிட்டேன்.”

இங்கே மனசில் பட்டதை சட்டுன்னு பேசிடக் கூடாது.. யோசிச்சு தான் வார்த்தையை விடனும்.. ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்.”

கொல்லும்மா?

அது   பழமொழி   தாயி.     ஆனா,      இங்கே    பொருந்தவும் செய்யும். பார்த்துச் சூதனமா இருந்துக்கோ!” என்றவர்,  “ஆசிரமங்களில் காலை உணவு ஒன்பது மணிக்கு மேல நடக்காது.. அதான் சீக்கிரம் அனுப்பிடுறோம்.. அது போக, ராஜா குடும்பத்தினர் எட்டேகாலுக்கு சாப்பிட்டு முடிச்சிருவாங்க.. வேலையாட்கள் சாப்பிட்டு முடிச்சு எட்டரைக்கு சாப்பாட்டை அனுப்பிடுவாங்க.. ஆசிரமத்தில் சமையல் செய்றவங்களுக்கும் வேலை வேணுமே! அதான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆசிரமத்துக்கு அனுப்புவோம். இது ராஜாவோட ஏற்பாடு தான்”

சண்டே கூட எட்டு மணிக்கு வந்திரனுமா?

அவர் ‘ஆம்’ என்பது போல் தலையை அசைக்க, அவளால் மனதினுள் மட்டுமே புலம்ப முடிந்தது.

அவள் சாப்பிட்டு முடித்து, தேவிபுரத்திற்கு வழியைக் கேட்டு தனது அறையைக் கண்டுபிடித்துச் சென்றாள்.

அவள் அங்கே செல்லவும், ஒரு வேலையாள் வந்து அவளது அறைச் சாவியை கொடுத்துச் சென்றான்

எல்லாமே பெர்பெக்ட் டைமிங் தான்’ என்று நினைத்த படி உள்ளே சென்றவள் அறையை பார்த்து, “ஹ்ம்ம்.. இது சின்னதா இருந்தா தான் ஆச்சரியப்படணும்.” என்று சொல்லிக் கொண்டாள்.

அறையை உன்னிப்பாக சுற்றிப் பார்த்தவள், பெட்டியையும் தோள்பையையும் எடுத்துக் கொண்டு உடை மாற்றும் சிறிய அறைக்குச் சென்றாள்.

உள்ளே சென்றதும் தலையில் மாட்டியிருந்த பெரிய தலைமாட்டியை(clip) கழட்டி அதில் இருந்து ஒரு பகுதியை பிரித்து எடுத்தாள். அது ஒரு கைபேசி மின்கலம். அடுத்து பெட்டியின் எண் பூட்டினை பிரித்து எடுக்க, அது பழைய வகை கைபேசியின் டயல்பேட். அடுத்து தோள்பையின் முன்புற வடிவமைப்பில் இருந்து ஒரு பகுதியை பிரித்து எடுக்க, அதுவும் கைபேசியின் ஒரு பகுதி தான். எடுத்த பொருட்களை ஒன்றாக திரட்டி பழைய வகை கைபேசியை உருவாக்கினாள். அடுத்து தோள்பையில் இருந்து சுட்டிப்பேசியை(Smart-phone) எடுத்து, அதில் இருந்த இரண்டு லைபேசிச்சில்லுகளில்(Sim) ஒன்றை மட்டும் எடுத்தாள். பழைய கைபேசியில் பொருந்துமாறு அந்த லைபேசிச்சில்லுவின் வெளிப்புற அமைப்பை ஒட்டிக் கொண்டு, பழைய கைபேசியில் பொருத்தினாள். பழைய கைபேசியை இயக்கி, “என்னால் ஒரு மணி நேரத்தையே கடக்க முடியலை.. மூச்சு முட்டுற மாதிரி இருக்குது.. எப்படி வந்த வேலையை செய்யப் போறேன்னு தெரியலை.. என்னை மெட்டல் டிடெக்டர் வச்சு செக் பண்ணி, பெட்டியையும் ஹன்ட்பேக்கையும் ஸ்கேன் செய்து தான் உள்ளே விட்டாங்க.. ரூம்உள்ளே கேமரா இருக்கிற மாதிரி தெரியலை. ஆனா மைக்ரோபோன் இருக்கும்னு நினைக்கிறேன்..” என்ற குறுஞ்செய்தியை யாருக்கோ அனுப்பினாள்.

error: Content is protected !!