புல்லாங்குழலே! பூங்குழலே! ~ குழலிசை 15.2

அவளை சமாதானம் செய்யும் வகையில் அணைப்பை இறுக்கி நெற்றியில் முத்தமிட்டவன், “நான் தேவி என்று தான் அழைக்க வந்தேன்.. ஆனால் விக்ரம் மறைவில் நின்றபடி நம்மை கவனிப்பதை, நான் கண்டு கொண்டேன்.. அதனால் தான், உன் பெயரைச் சொல்லி அழைத்தேன்.” என்றான்.

ஓ’ என்று மனதினுள் கூறிக் கொண்டவள், “என்னோட உண்மையான பெயர், மீனாட்சி இல்லை.” என்றாள்.

அவன் அதிராமல், “யூகித்தேன்.” என்றான்.

அவள் தான் கண்களை விரித்தபடி, “உங்களுக்கு தெரியாத விஷயம் என்று எதுவுமே கிடையாதா? என்று கேட்டாள்.

அவன் மென்னகையுடன், “என் தேவியின் உண்மையான பெயர் தெரியாதே!” என்றான்.

இப்போ தானே யூகித்தேன்னு சொன்னீங்க?

மீனாட்சி உனது உண்மைப் பெயராக இருக்காது என்று யூகித்தேன். ஆனால் உண்மையான பெயர் தெரியாது.. ஆனாலும், நூறு சதவிதமாகக் கருதவில்லை.. ஏனெனில் ஆசிரமத்தில் மீனாட்சி என்று கூறித் தான் விசாரித்தார்கள்.”

ஆசிரமத்தில் ஐயா வார்த்தையை மீறி, யாரும் எதுவும் பேச மாட்டார்கள்.. காரணம் தெரியாவிட்டாலும் ஐயா ஒரு வார்த்தை சொன்னால், அதை ஆராயாமல் ஒத்துக்குவாங்க.. ஆசிரமத்தில், ஐயாவுக்கு மட்டும், நான் இங்கே வந்த காரணம் தெரியும்.. 

இங்கே வரதுக்கு முன்னாடி மீனாட்சிங்கிற பெயரில் எல்லா சர்டிபிகேட்ஸ் ரெடி பண்ணோம்.. ராஜமாதாவுக்கு கூட என்னோட உண்மையான பெயர் தெரியாது. இந்த பெயரை நான் சூஸ் பண்ண ரெண்டு காரணங்கள்.. ஒன்று ஆசிரமத்தில் என்னுடன் வளர்ந்த தோழியின் பெயர் மீனாட்சி.. அவளும் என்னோட ஒன்னாத் தான் டிப்ளமோ படிச்சா.. யு.ஜி-யிலும் என்னோட கிளாஸ்ஸில் மீனாட்சினு ஒரு பொண்ணு இருந்தா.”

ஆக கல்லூரிகளில் மேலோட்டமாக மீனாட்சி என்ற பெயரை மட்டும் கூறி விசாரித்த போது, உனக்குச்  சாதகமான பதில் கிடைத்து விட்டது.”

ஹ்ம்ம்”

இனி நான் கவனமாக இருக்க வேண்டும்.. யாரைப் பற்றி விசாரித்தாலும் புகைப்படத்தையும் காண்பித்து விசாரிக்கக் கூற வேண்டும்.”

அவள் மென்னகைக்க, “சரி உன் பெயரை இப்போதாவது சொல், தேவி” என்றான்.

“பூங்குழலி.” என்றவள், “நல்லவேளை நீங்க என்னை தேவினு சொல்லி தான் கூப்பிடுறீங்க.. மீனாட்சினு கூப்பிட்டு இருந்தால், ரொம்ப கஷ்டமா கில்டியா பீல் பண்ணி இருப்பேன்.” என்றாள்.

பூங்குழலி! பூங்குழலைப் போல் மென்மையான பெண்.. ஆனால், பொருத்தமான பெயர் இல்லையே!”

ஏன்?என்று சிறு முறைப்புடன் கேட்டவள், “என்னோட அம்மா வச்ச பெயர்னு ஐயா சொன்னாங்க.” என்றாள்.

நான் தொட்டால் பூங்குழலை போல் குழைந்து விடுவாய்  தான்.” என்றபடி நாணத்துடன் நோக்கியவளின் கன்னத்தில் முத்தமிட்டவன், “ஆனால் நிஜத்தில் இந்த ராணி வீர மங்கை அல்லவா!” என்றான்.

நீங்க புகழ்ற அளவுக்கு ஒன்னும், நான் பெரிய வீர மங்கை இல்லை”

ஆயுதம் ஏந்தியவர்களுடன் நிராயுதபாணியாக சண்டை புரிந்தாயே!”

அதையே சொல்லாதீங்க.. அது தான், நான் முதல் முறையாக எதிரியுடன் சண்டை போட்டது.. உங்களுக்கு ஆபத்து என்றதும் சண்டை போட்டுட்டேன்.” என்றவள், “இதை விடுங்க.. இளவரசர் சொன்னதை கேட்டதும், அந்த நொடியில் உங்களுக்கு என்ன தோணுச்சு? என்று கேட்டாள்.

என்னை மயக்கிக் கொல்ல ஒரு பெண்ணை ராஜமாதா தேடி இருக்க வேண்டும்.. உனது காரியத்தை சாதித்துக் கொள்ள, அரண்மனை உள்ளே நுழைய, ராஜமாதாவின் திட்டத்திற்கு உடன்படுவது போல், நீ இங்கே வந்திருக்க வேண்டும் என்று நினைத்தேன்.. ஆனால், இப்பொழுது தான் தெரிகிறது.. என்னை மயக்கும் வேலை மட்டும் தான், உன்னிடம் சொல்லப்பட்டு இருக்கிறது.” என்றான்.

ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தவள், “ஒரு நொடி கூட, என் மேல் சிறு சந்தேகம் கூட வரலையா? என்று கேட்டாள்.

முதலில் நீ இங்கே வந்த புதிதில் உன் மேல் சந்தேகம் கொண்டேன் தானே! ஆனால், உன் மனம் அறிந்த பின், உன் மேல் சந்தேகம் கொண்டால் அது என்னை நானே சந்தேகப் படுவது போல் தான்.” என்றான்.

சட்டென்று எம்பி அவனது கன்னத்தில் முத்த மிட்டாள்.

சிரிப்புடன், “இனி உன் மகிழ்ச்சியை உணர்த்த, உதட்டில் மட்டும் தான் முத்தமிட வேண்டும்.” என்றான்.

அவள் புன்னகையுடன் சிறு குழந்தை போல் அழகு காட்ட, அவன் அதை ரசித்துச் சிரித்தான்.

பின் அவள், “இளவரசர் மறைஞ்சு நின்னுட்டு இருந்தார்னா! அப்போ நம்மளை பிரிக்க, வேணும்னே நீங்க வருவதை பார்த்துட்டு, அப்படி பேசி இருப்பாரோ? என்றாள்.

ஹ்ம்ம்.. சரி.. கூடவே என்னை எச்சரிக்கை செய்யவும், நினைத்து இருப்பான்.”

அவள் நம்பாமல் அவனைப் பார்க்க, அவன் மென்னகையுடன், “இங்கே அரண்மனையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம்.. போகப் போக நீயே புரிந்துக் கொள்வாய்..!” என்றான்.

என்னவோ போங்க! நான் உங்களைப் புரிந்து கொண்டால் போதும்.”

அப்படி இல்லை, தேவி.. ராணிக்கு அனைவரையும் பற்றி தெரிந்து இருக்க வேண்டும்.”“சரி, தெரிந்துக் கொள்கிறேன்.” என்றவள், “ஆனால், இளவரசர் உங்களை காப்பாற்ற நினைப்பதைத் தான், என்னால் நம்ப முடியவில்லை.. சொல்வது நீங்களாக இருக்கப் போய் நம்புகிறேன்.” என்றாள்.

“நான் கூறுவது நிஜம் தேவி.. அவனுக்கு என்னை பிடிக்காது தான். ஆனால் அவன் இயல்பில் ரொம்ப நல்லவன்.. யாரையும் காயப்படுத்த நினைக்காது, எப்பொழுதும் சிரித்த முகமாய் இருப்பவன்.

அவனது கோபம் வெறுப்பு எல்லாம், என் விஷயத்தில் மட்டுமே வெளிப்படும்.. அது கூட சிறு வயதில் இருந்து போதித்ததின் விளைவே! அதையும் மீறி அவனது உண்மையான குணம் வெளிப்படுவதால் தான் என்னைக் காப்பாற்ற நினைக்கிறான்..

தீய உபதேசத்தின் விளைவாக, நான் ராஜாவாக இருக்க தகுதி இல்லாதவன் என்றும் அவன் தான் தகுதி உடையவன் என்றும் நினைக்கிறான்.. அதனால் அவன் ராஜாவாக நினைத்தாலும், என் உயிரை மாய்க்க நினைக்க மாட்டான்..” என்றவன்,“என் தம்பி, நல்லவன் தேவி” என்றான்.

“மகாராணி எடுத்துக் கூறி இருக்கலாமே!”

error: Content is protected !!