புல்லாங்குழலே! பூங்குழலே! ~ குழலிசை 15.1

குழலிசை 15

அதிர்ச்சியில் நின்று இருந்த மீனாட்சி வாய் திறந்து பேசத் திணறுகையிலேயே மாறவர்மசிம்மன் இறுக்கமான முகபாவத்துடன், “ரோஜாவனம் வா” என்று கூறி வேகமாக நகர்ந்தான்.

சில அடிகள் நகர்ந்து இருந்தவன் திரும்பி நகராமல் நின்றிருந்தவளைப் பார்த்து, “மீனாட்சி” என்று அழைத்தான்.

அவள் திடுக்கிட்டு அவனை திரும்பிப் பார்க்க, “வா” என்றான்.

அவள் சாவி கொடுத்த பொம்மையைப் போல் அவன் பின்னே சென்றாள்.

இளவரசன், ‘ச! என்ன பேசப் போகிறான் என்று தெரியவில்லையே!’ என்று குமைந்தான்.

பின், ‘கோபமாத் தான் இருக்கிறான்.. நம் திட்டம் பலித்து விடும்’ என்று கூறிக் கொண்டவன், ‘ஆனா ரோஜாவனம் அழைத்து செல்கிறானே!’ என்று குழம்பினான். பின் இறுதியாக, ‘கொலுவிருக்கை அழைத்துச் சென்றால் விஷயம் எப்படியும் கசிந்து விடும்.. உண்மை தெரிந்ததை காட்டிக் கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில் தான் ரோஜாவனம் அழைத்துச் சென்று இருப்பான்’ என்ற முடிவிற்கு வந்தவன் புன்னகையுடன் தனது அறைக்குச் சென்றான்.

ரோஜாவனத்திற்கு சென்றதும், அங்கிருந்த நீண்ட சோபாவில் அவளை அமருமாறு செய்கை செய்தவன், தானும் அதில் அமர்ந்தான்.

மீனாட்சி பேச வாய் திறக்கையில்,

மாறவர்மசிம்மன் இறுகிய குரலில், “என் அன்னையை சாப்பாட்டில் விஷம் வைத்துக் கொன்றதைப் போல் என்னையும் சாப்பாட்டில் விஷம் வைத்து கொல்லச் சொன்னாங்களா? என்று கேட்டான்.

அவள் அதிர்ச்சியுடன் எழுந்து நின்றே விட்டாள்.

அவன் அலட்டிக் கொள்ளாமல், “சொல் தேவி” என்றான்.

இருந்த அதிர்ச்சியில் அவனது ‘தேவி’ என்ற அழைப்பை அவள் கவனிக்கவே இல்லை. அவள் கலங்கிய குரலில், “சத்தியமா உங்களைக் கொல்ல நான் இங்கே வரலை.. நான்..” என்றவளின் பேச்சை கையை நீட்டி தடுத்தான்.

அவள் தவிப்புடன் அவனைப் பார்க்க, அவனோ அவளை தீர்க்கமாகப் பார்த்தான்.

அவள் தவிப்புடன், “இளவரசர் சொல்லித் தான் அவங்க திட்டமே எனக்குத் தெரியும்.. ப்ளீஸ்..” என்றவளின் பேச்சை மீண்டும் இடையிட்டவன் கடுமையான குரலில்,

உன்னை பேசாதே என்றேன்.” என்றான்.

கலங்கி இருந்த விழிகளில் இருந்து கண்ணீர் வடிந்து விடவா என்ற நிலையில் இருக்க, அவள் தவிப்புடனும் ரணமாய் துடிக்கும் இதயத்துடனும் அவனைப் பார்த்தாள்.

அவளது தவிப்பை பார்க்க முடியாமல், அவன் கோபத்தை அடக்கிய நிதான குரலில், “ஆக, எந்த ஒரு சூழ்நிலையிலும், நான் உன்னை நம்புவேன் என்று நீ என்னை நம்பவில்லை!” என்றான்.

சில நொடிகள் கழித்தே அவன் கூறியதின் முழு அர்த்தத்தையும் உணர்ந்தவள், “மாறா!” என்று கதறியபடி ஓடி வந்து அவன் மேல் விழுந்து, அவனை அணைத்துக் கொண்டாள்.

எப்பொழுதும் அவளை அணைக்கும் கரங்கள் இன்று சிறிது கூட உயரவில்லை, ஆனால், அதை பற்றி அவள் சிறிதும் கவலைப் படவில்லை.

இவ்வளவு நேரம் துயரத்தில் தேங்கி இருந்த கண்ணீர் இப்பொழுது ஆனந்தக் கண்ணீராக அவளது கன்னத்தில் இறங்கியது. மகிழ்ச்சியுடன் அவனது முகம் முழுவதும் முத்தமிடத் தொடங்கி இருந்தாள்.

அவள் தன்னை நம்பவில்லையே என்ற கோபத்தில் இருந்தவனின் மனம் அவளது கதறலில் இளகத் தொடங்கி இருக்க, அவளது முத்தங்களில் அவனது கோபம் மெல்லக் கரைந்தது. அவனது கரங்கள் மெல்ல அவளது இடையை சுற்றி வளைத்தது.

ஒரு நிமிடத்தில் நூறு முத்தங்களுக்கு மேல் கொடுத்திருந்தவள், சிறிது மூச்சு வாங்கியபடி அவன் கண்களை நோக்கினாள்.

அவளது இடையை இறுக்கி, அவளைத் தன்னோடு நெருக்கியவன், “என் உதடுகள் மட்டும் என்ன பாவம் செய்தது, தேவி!” என்று கேட்டான்.

அப்பொழுது தான், தான் இருக்கும் நிலையும், தனது செயலும் அவளது மூளையில் உரைக்க, நாணமும் கூச்சமுமாக விலகப் பார்த்தாள். ஆனால் அவளால் அசையக்கூட முடிய வில்லை.

சிறு கெஞ்சலுடன் அவள் அவனை நோக்க,

அவனோ பிடியை தளர்த்தியபடி, “நீ ஏற்படுத்திய மனக் காயத்திற்கு நீ தானே மருந்திட வேண்டும்..” என்றான்.

அதற்கு மேல் சிறிதும் யோசிக்காமல், அவனது உதட்டில் முத்தமிட்டு இருந்தாள்.

அன்று போல் சட்டென்று விலகாமல் நிதானமாக நீண்ட முத்தம் ஒன்றை கொடுத்து  விலகியவள், “என்னை மன்னி..” என்று முடிக்கும் முன், வன்மையாக அவளது இதழ்களை சிறையிட்டு இருந்தான்.

இதுவரை இல்லாத வகையில் சற்று வன்மையாகவே இதழணைத்து இருந்தான். அதில் இருந்தே அவனது காயத்தின் அளவு அவளுக்குப் புரிய, அவனது முதுகை வருடிக் கொடுத்தாள். இந்த நிலையிலும் கூட தன்னை மன்னிப்பு கேட்க விடாமல் இதழ் அணைத்தவனின் மீது, அவளுக்கு காதல் கூடியது.

நொடிகள் நிமிடமாக, தன்னை தொலைக்கத் தொடங்கியவனின் கரம் மெல்ல அவளது இடையில் இருந்து, அவளது மேனியில் வலம் வர ஆரம்பித்தது. முதலில் அதிர்ந்தவள், பின் தனது நடுக்கத்தை மறைக்க முயற்சித்தபடி அமைதியாக இருந்தாளே தவிர, அவனை தடுக்க நினைக்கவில்லை.

ஆனால், அவளது நடுக்கத்தை உணர்ந்தவன் அவளது சரணாகதியில், தன்னவளை கௌரவிக்கும் பொருட்டு, தனது உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்தான். அவளது முழுச் சரணாகதியில் அவனது காயம் மாயமாய் மறைந்தது.

இதழைப் பிரித்து நிறைவான புன்னகையுடன் அவளைப் பார்த்தவன் காதலுடன், “என் தேவி” என்ற படி அவளது நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டு, அவளை விலக்கி தனது அருகே அமர வைத்தான்.  

அவள் அவனது நெஞ்சின் மீது கை போட்டு அணைத்தபடி, அவனது தோளில் சாய்ந்துக் கொள்ள, அவன் மென்னகையுடன் அவளது தோளைச் சுற்றி அணைவாக, கை போட்டான். 

அந்த மோன நிலையை இருவருமே கலைக்க விரும்பவில்லை.

சில நொடிகள் கழித்து அவள் மெல்லிய குரலில், “இளவரசர் பேசியதை நீங்க கேட்டதை தெரிந்து அதிர்ந்தாலும், உங்க மேல நம்பிக்கை இருந்தது.. எடுத்துச் சொல்லி புரிய வைக்க முடியும்னு தான் நினைத்தேன். ஆனா, நீங்க மீனாட்சினு கூப்பிட்டீங்க!” என்று வருத்ததுடன் குற்றம் சாட்டும் குரலில் கூறியபடி, அவனது முகத்தை அண்ணாந்து பார்த்தாள்.

‘ஆக, என் தேவி, என்னை நம்பித் தான் இருக்கிறாள்!’ என்ற எண்ணம் தித்திப்பாய் அவனுள் இறங்கியது.

error: Content is protected !!