புல்லாங்குழலே! பூங்குழலே! ~ குழலிசை 14.2

அழைப்பை எடுத்த ரஞ்சித், “குட் மார்னிங் தீரன்.. என்ன காலையிலேயே போன் பண்ணி இருக்கிறீங்க? என்றான்.

காலை வணக்கம் ரஞ்சித்.. மாறவர்மசிம்மன் பேசுகிறேன்.”

சட்டென்று, “காலை வணக்கம் சார்.. சொல்லுங்க” என்று சிறு பணிவு கலந்த மரியாதையுடன் கூறினான்.

மாறவர்மசிம்மன், “சங்கரநாராயணன் சாரோட வங்கிக் கணக்கு பற்றிய விவரம் வேண்டும்.” என்றதும் தீரன் மற்றும் ரஞ்சித் அதிர்ச்சி அடைந்தனர்.

ரஞ்சித் அதிர்ச்சியுடன், “சார்! நீங்க சொல்றவர்.” என்று இழுத்து அவரைப் பற்றி குறிப்பிட்டு கேள்வி கேட்க,

ஆம்.. அவரே தான்.” என்ற மாறவர்மசிம்மன், “அவர் மீனாட்சிக்கு நிதி உதவி செய்து இருப்பாரோ என்று சந்தேகம் கொள்கிறேன்.” என்றான்.

ரஞ்சித் யோசனையுடன், “எதை வைத்துச் சொல்றீங்க சார்? என்று கேட்டான்.

ஒரு யூகம் தான்.. அது தவறாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.”

இதுவரை உங்கள் யூகம் தப்பாப் போனது இல்லையே, சார்!”

நன்றி”

இன்னமும் எனக்கு பிடிபடலை சார்.. எப்படி இவங்க ரெண்டு பேரையும் லிங்க் பண்ணீங்க?

நிதி உதவி செய்வதற்கு, இருவருக்கும் சம்பந்தம் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லையே!”

அது சரி தான்.. ஆனால், அதன் தொடர்ச்சி மீனாட்சியின் அரண்மனை வருகை.. அதான் என்ன லிங்க்னு யோசிக்கிறேன்.”

மன்னிக்கவும்.. சில விஷயத்தை என்னால் வெளிப்படையாகப் பேச முடியாது.”

என்ன சார்! நீங்க போய், சாரி எல்லாம் சொல்லிட்டு இருக்கிறீங்க! வெளிப்படையாச் சொல்ல முடியாதுனு சொன்னாப் போதாதா?

நன்றி.. நான் கேட்டது?

கொஞ்சம் கஷ்டம் தான், ஆனா முடியும்”

எப்போது கிடைக்கும்?

அதிக பட்சம் ஒரு வாரத்தில் தரப் பார்க்கிறேன் சார்”

சரி” என்றவன் தீவிர குரலில், “ரஞ்சித்.. இந்த விஷயத்தில் உங்களின் அனுமானங்கள் கூட..” என்றவனின் பேச்சை இடையிட்ட ரஞ்சித் தீவிர குரலில், “என்னைத் தான்டி வெளியே போகாது, சார்” என்று முடித்தான்.

நன்றி.. விவரம் கிடைத்ததும் சொல்லுங்க”

ஓகே சார்” என்றதும் அழைப்பைத் துண்டித்து கைபேசியை தீரனிடம் நீட்டினான்.

தீரன் இன்னமும் அதிர்ச்சி விலகாமல், “கந்தன் ஏதும்..” என்று ஆரம்பிக்க,

மறுப்பாக தலை அசைத்த மாறவர்மசிம்மன், “உயிரே போனாலும், கந்தன் வாய் திறக்க மாட்டார்.” என்றான்.

அப்புறம் எப்படி! எங்கே, எப்படி விஷயம் கசிந்து இருக்கும்?என்று நினைத்தபடி தீரன் தீவிரமாக யோசிக்க,

மாறவர்மசிம்மன், “அவர் என் தந்தையின் நண்பர் என்பதை மறந்து விட்டாயா? என்றான்.

இளவரசர்!”

ஒரு பிரச்சனையும் வராது.. நீ போய் உன் வேலைகளைக் கவனி”

சரி ராஜா” என்று கூறி தீரன் விடைபெற்று வெளியே சென்றான்.

தேவி! உண்மையிலேயே நீ வீராங்கனை தான்.’ என்று மென்னகையுடன் கூறிக் கொண்டவன், அன்றைய வேலைகளைத் தொடங்கினான்.

காலை உணவை முடித்த பிறகு மகாராணி அறையில் மீனாட்சி மகாராணியை சாய்ந்தார் போல் கால் நீட்டி மெத்தையில் அமரச் செய்து, தலையணையை அவர் தொடை மேல் வைத்து செய்தித்தாளை தலையணை மேல் வைத்தாள்.

மகாராணி, “சந்ராவிடம் பேசினாயா? என்று கேட்டார்.

சிறு சங்கடத்துடன், “இன்னும் இல்லை, மகாராணி.” என்றாள்.

மகாராணி அமைதியாக செய்தித்தாளை படிக்க ஆரம்பிக்க,

அவள், “சந்ராமாவை தனியாப் பார்த்துப் பேச சந்தர்ப்பம் அமையவில்லை.” என்றாள்.

அதற்கும் அவர் பதில் கூறவில்லை. ‘சொல்றதை சொல்லி விட்டேன்.. இதற்கு மேல் உன் விருப்பம்.’ என்பது போல், அவர் அமைதியாக இருந்துக் கொண்டார்.

ஆனால் மீனாட்சியோ மனதினுள் ‘இன்னைக்கு சாயங்காலம் கண்டிப்பா சந்ராமா கிட்ட கேட்டே ஆகணும்.’ என்ற தீர்மானத்தை எடுத்தாள்.

மாலையில் மீனாட்சி ராஜமாதாவை சந்திக்கச் சென்ற போது,

ராஜமாதா கூர்மையான பார்வையுடன், “நேற்று வீர சாகசங்கள் செய்து இருக்கிறாய் போல!” என்றார்.

பெரிதாக எதுவும் இல்லை, ராஜமாதா.. ராஜா தான் சண்டை போட்டார்.”

எனக்கு கிடைத்த தகவல் அப்படி இல்லையே! நீ அவன் உயிரை காப்பாற்றியதாக கேள்விப் பட்டேன்.” என்று குற்றம் சாட்டும் குரலில் கூறினார்.

அவள் சிறிதும் அசராமல், “உயிரை காப்பாற்றும் அளவிற்கு நான் எதுவும் செய்யவில்லை ராஜமாதா.. அவருக்கு என் மேல் முழுமையான நம்பிக்கை வர வேண்டும் என்பதற்காக, அவர் மேல் விழ இருந்த ஒரு வெட்டை தடுத்தேன்.. அவ்ளோ தான். அதை நான் தடுக்காமல் இருந்து இருந்தால், அவருக்கு காயம் ஏற்பட்டு இருக்குமே தவிர, உயிர் போகும் வாய்ப்பு இல்லை.” என்றாள். 

ஆக.. இப்போது அவன் உன்னை பூரணமாக நம்புகிறான்.”

அப்படித் தான் நினைக்கிறேன்”

இப்போதும் சந்தேகமாகத் தான் கூறுகிறாய்!” என்று சற்று கோபத்துடன் அவர் கூற,

நேத்து என்னோட செயலுக்கு எதிர்வினையா அவர் பெரிதாக உணர்ச்சிவசப் பட்டு உருகி குழைந்து எதுவும் சொல்லலை. ஆனா, என் மேல் நம்பிக்கை வந்து இருக்கும் என்று நம்புகிறேன்.” என்றாள்.

சரி.. அடுத்து என்ன செய்வது என்று நாளை கூறுகிறேன்.”

சரி ராஜமாதா”

நீ செல்லலாம்.” என்றதும் அவள் வெளியேறினாள். அடுத்து என்ன செய்வது என்று ராஜமாதா யோசிக்க ஆரம்பித்தார்.

பராந்தககேசரியின் ஆட்கள் மீனாட்சியின் தாக்குதலை பற்றி எதுவும் அவரிடம் கூறவில்லை. ஒரு பெண்ணிடம் அடி வாங்கியதை அவமானமாகக் கருதியவர்கள், அதை பற்றி வாய் திறக்கவில்லை. ஆனால், முதலில் மேலோட்டமாக இந்த சம்பவத்தை பற்றி கூறி இருந்த ராஜமாதாவின் உளவாளிகள், பிறகு நன்றாக விசாரித்து தெரிந்து கொண்டு முழு விவரத்தையும் இரவு தான் ராஜமாதாவிடம் கூறி இருந்தனர்.

மீனாட்சி பொது தோட்டம் வழியே ரோஜாவனம் தோட்டத்தை நோக்கி சென்றுக் கொண்டிருந்த பொழுது, அவள் முன் வந்து நின்ற இளவரசன், “இப்போ தான் எனக்கு விஷயம் தெரியும்.. என் முழு ஆதரவும் உனக்கு இருக்கும்.” என்றான்.

என்ன விஷயம்? எனக்கு எதற்கு உங்கள் ஆதரவு?

எனக்கு எல்லாம் தெரியும்?

என்ன தெரியும்?

ராஜமாதாவின் ஏற்பாட்டில் அவனைக் கொல்லத் தான் கேர் டேக்கர் என்ற பெயரில், நீ இங்கே வந்து இருக்கிறாய் என்ற உண்மை எனக்குத் தெரியும் என்கிறேன்”

அவள் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள்.

என்ன கொலை திட்டமா!’ என்ற அதிர்ச்சியுடன் அவள் பார்க்க, அவனோ தனக்கு உண்மை தெரிந்ததில் அவள் அதிர்ச்சி அடைந்ததாக, தவறாக நினைத்துக் கொண்டான்.

வெற்றி கழிப்பை மனதினுள் மறைத்தபடி வரவழைத்த சிறு பதற்ற குரலில், “யாரோ வராங்க.. நான் அப்புறம் பேசுறேன்.” என்று கூறிவிட்டு வேகமாக சென்றவன், ஒரு மரத்தின் மறைவில் அவளைப் பார்த்த படி நின்றான்.

மாறவர்மசிம்மன் வருவதைப் பார்த்த இளவரசன் வேண்டுமென்றே மாறவர்மசிம்மன் இவள் அருகே வந்ததும் அறியாதவன் போல், இவள் முன் நின்று அவ்வாறு பேசினான். இளவரசனின் திட்டம் மாறவர்மசிம்மனுக்கு ராஜமாதாவின் திட்டத்தை தெரியப் படுத்தி, அவனை சுதாரித்துக் கொள்ளச் செய்வதும், மீனாட்சியை அவனிடம் இருந்து பிரிப்பதும்.

சில நொடிகள் கழித்தே அதிர்ச்சியில் இருந்து இயல்பிற்கு திரும்பிய மீனாட்சி, தனக்கு முன் நின்றிருந்த மாறவர்மசிம்மனை கண்டு மின்சாரம் தாக்கியதைப் போல் பெரிதும் அதிர்ந்தாள்.

குழலின் இசை தொடரும்…

error: Content is protected !!