மன்னிக்கவும் தோழமைகளே!!! வேற ஒரு வேலையில் கொஞ்சம் பிஸியா இருந்ததால் இன்று தாமதம். உங்களின் comments அனைத்திற்கும் இன்று reply போட்டுவிடுகிறேன்.. sorry for the delay.
குழலிசை 13
சுவாமி தரிசனத்தை முடித்து விட்டு கோவிலின் வெளிப் பிரகாரத்தில் ஆள் அரவம் குறைவாக இருந்த இடத்தில் மாறவர்மசிம்மனும் மீனாட்சியும் அமர்ந்து இருந்தனர்.
அவள், “கோவில் அருமையா இருக்குது.. இந்த கோவிலோட வரலாறு பற்றிச் சொல்லுங்களேன்.” என்றாள்.
“இந்த கோவில் பராக்கிரம பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது.. மன்னரோட கனவில் சிவபெருமான் தோன்றி, பாண்டியர்களின் முன்னோர்கள் வழிபட்ட லிங்கம் செண்பக வனத்தில் உள்ளதாகவும், கோட்டையில் இருந்து ஊர்ந்து செல்லும் எறும்புகளைத் தொடர்ந்து சென்றால், அங்கு ஒரு லிங்கத்தைக் காணலாம் என்றும், அதற்கு கோவில் கட்டுமாறும் கூறினாராம்.
இந்த கோவிலை சிவபெருமான் கட்டச் சொன்னதிற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது.. தெற்கில் உள்ள சிவபக்தர்கள் வடக்கில் இருக்கும் காசிக்கு பாத யாத்திரை செல்லும் போது, காசியை அடைவதற்கு முன்னரே இறந்து விடுவதால், அவர்களுக்கு தனது அருள் கிடைக்கவே இங்கே தெற்கில் இந்தக் கோவில் கட்டச் சொன்னாராம்.. இந்தக் கோவிலை வைத்துத் தான், இந்த ஊருக்கு தென்காசி என்ற பெயர் வந்தது.”
“இன்ட்ரெஸ்டிங்.. இதுவும் அரண்மனையில் இருக்கும் ஓலைச் சுவடிகளில் இருந்து தெரிஞ்சுக் கிட்டீங்களா?”
“அது மட்டுமில்லை.. வழி வழியாக முன்னோர்கள் சொன்னது.. அது போக தென்காசி பாண்டியர்களைப் பற்றிய கல்வெட்டுகள் இங்கே இருக்கிறது.”
“கல்வெட்டை இப்போ பார்க்கலாமா?” என்று ஆர்வத்துடன் கேட்டாள்.
“இன்னொரு நாள் பகலில் வந்து பார்க்கலாம்.”
“ஹ்ம்ம்.. சரி.. இங்கே காத்து செம்மையா அடிக்குது.. பொதுவா கோவில் உள்ளே, இப்படி காத்து வீசி நான் பார்த்தது இல்லை.”
“இதுவும் இந்த கோவிலின் சிறப்பு அம்சம்.. வேற எந்தக் கோவிலிலும் கிடையாது.. கோவில் கோபுரத்தின் ரெண்டு பக்கமும், அதாவது வெளியேயும் கோவிலுக்குள் பாதி பகுதியிலும் எப்போதும் காற்று வீசிக் கொண்டே இருக்கும்.”
“வாவ்.. எப்படி?” என்ற போது மாறவர்மசிம்மனின் கைபேசி சிணுங்கியது.
கைபேசியை எடுத்துப் பார்த்தவன் அழைப்பு தீரனிடம் இருந்து வந்திருக்கவும், “பேசிவிட்டு வருகிறேன் தேவி” என்று கூறி சற்று தள்ளி நின்று கொண்டு அழைப்பை எடுத்தான்.
“சொல்லு, தீரா”
“வேறு கைப்பேசி இருக்கிறது ராஜா.. ஆனால் முழுதாக இல்லை.. எளிதாக கண்டு பிடிக்க முடியாத வகையில், கைப்பேசியைப் பிரித்து ஆங்காங்கே வைத்து இருக்கிறாங்க.. கைப்பேசியின் பேட்டரி மற்றும் சிம் கிடைக்கவில்லை.”
“நன்றாகத் தேடி விட்டாயா? தேவி கைப்பை கூட எடுத்து வரவில்லை.. கைப்பேசி மட்டுமே கையில் இருக்கிறது”
“ஒரு வேளை, அந்தக் கைப்பேசியின் பேட்டரியையே இதற்கும் பயன் படுத்துவாங்களா இருக்கும். இப்போ கையில் இருக்கும் கைப்பேசி டுயல் சிம் கைப்பேசியாக இருந்தால், அதனுள் இந்த சிம் இருக்கலாம்.”
“தேவி கையில் இருக்கும் கைப்பேசி இரண்டு சிம் போடும் வகை தான். ஆனால், ஒரு சிம் தான் இருக்கிறது.. பார்த்துவிட்டேன்.. தேவியிடம் இருக்கும் கைப்பேசி ஸ்மார்ட் போன்”
“இங்கே கிடைத்து இருப்பது சாதாரணமான கைப்பேசி தான்.”
“ஹ்ம்ம், அதற்கு தனி மின்கலம் இருக்கும்.”
“நன்றாக தேடி விட்டேன் ராஜா.. இரண்டும் இங்கே இருக்க வாய்ப்பு இல்லை.”
“இப்போது கையில் வைத்து இருக்கும் கைப்பேசியில் சிம் இல்லை.. ஆனால் IMEI எண் வைத்து வேற சிம் எப்போதாவது பொருத்தப்பட்டு இருந்தாலும் கண்டுபிடித்து விடலாம்.. அது என்னவாகிற்று?”
“ரஞ்சித் மெயில் செய்றதாகக் கூறினார்.. எனது அறைக்குப் போனால் தான் தெரியும், ராஜா..” என்றவன், “பேட்டரி இருந்தால், இப்போதே இந்த கைப்பேசியின் IMEI எண் கண்டுபிடுத்து விடலாம்.. பிறகு புது எண்ணை கண்டு பிடிப்பது சுலபம்.” என்றான்.
“வேறு வழி இருக்கிறதா என்று பார்ப்போம்.. இப்போது நீ உன் அறைக்குச் செல்..! மற்றதை நேரில் பேசிக் கொள்ளலாம்.”
“சரி ராஜா.. கிடைத்த கைப்பேசி பாகங்களை எடுத்துச் செல்லவா இல்லை..” என்றவனின் பேச்சை இடையிட்டவன்,
“இல்லை.. அப்படியே எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு அறைக்குச் செல்” என்றான்.
“சரி ராஜா” என்று கூறி அழைப்பைத் துண்டித்தான்.
அடுத்து வீட்டிற்கு செல்லும் வழியில், அவளுக்கு இளநீர் வாங்கிக் கொடுத்தவன், தான் அருந்த வில்லை.
அவள் மறுக்கவும், “மறுக்காமல் குடி தேவி.. இனி நாம் வெளியில் வரும் வேளையில், வீட்டில் இருந்தே எடுத்து வந்து விடலாம்.” என்று கூறி, அவளை சம்மதிக்க வைத்தான்.
இளநீரை கையில் வாங்கியவள், “இளநி(இளநீர்) இப்போ தானே, நம்ம கண்ணு முன்னாடி தானே வெட்டித் தராங்க!” என்றாள்.
“இளநீரை சீவும் அரிவாளில் விஷம் தடவி இருந்தால்!”
சற்று அதிர்வுடன் அவள் அவனைப் பார்க்க,
“உறவு என்ற பெயரில், எதிரி நம்முடனே இருக்கும் போது, இவ்வளவு கவனம் அவசியம் ஆகிறது.” என்றான்.
“அரண்மனை வாழ்க்கை முற்களால் பிணையப் பட்ட ரோஜா” என்றாள்.
அவன் உதட்டோர மென்னகையுடன், “பயமாக இருக்கிறதா, தேவி?” என்று கேட்டான்.
“எல்லோருமே ஒரு நாள் போய்த் தான் ஆகணும்.. என் உயிர் மேல் எனக்குப் பயம் இல்லை.. உங்களுக்கு ஏதேனும் ஆகி விட்டால்! என்னால் அதை தாங்கிக் கொள்ளவே முடியாது.” என்றவளின் குரல் கமறியது.
அவளைத் தன் தோள் மீது சாய்த்துக் கொண்டவன், “எனக்கென்று யாரும் இல்லாத போதே கவனத்துடன் இருந்தவன், இனி இரட்டிப்பு கவனத்துடன் இருப்பேன், தேவி.. கவலை கொள்ளாதே!” என்றான்.
“ஹ்ம்ம்”
“சரி இளநீரைக் குடி” என்றபடி பிடியை சற்று தளர்த்தினான். அப்பொழுதும் அவனது தோளில் சாய்ந்தபடியே தான் இளநீரை அருந்தினாள்.
இளநீரை அருந்த ஆரம்பித்ததும், “அவர் குடிக்கலையா?” என்று வெளியே நின்று கொண்டிருந்த சுதிரை சுட்டிக் காட்டி அவள் கேட்க,
அவளது கவனிப்பில் மென்னகைத்தவன், “அவனும் வெளியே உண்ண மாட்டான்.” என்றான்.
“ஏன்?”
“வண்டியை ஓட்டுகையில் என் உயிர் அவன் கையில் இருக்கிறது, அல்லவா! அதனால்”
“ஓ” என்றவள் மீதியையும் குடித்து முடித்தாள்.
கதவின் கண்ணாடியை அவன் இறக்கவும், அவன் குரல் கொடுக்க அவசியமே இல்லாமல், சுதிர் வேகமாக வந்து இளநீர் கூடை வாங்கினான். அதை ஓரமாகப் போட்டவன் தனது இருக்கையில் ஏறி அமர்ந்து வண்டியைக் கிளப்பினான். அவள் சற்று நகர்ந்து நேராக அமர்ந்துக் கொண்டாள்.
அரண்மனைக்கு வந்ததும், அவள் தேவிபுரம் செல்ல, மாறவர்மசிம்மன் தனது அறைக்குச் சென்றான்.
மீனாட்சி தனது அறைக்குச் சென்றதும் உடை மாற்றும் அறைக்குச் சென்று, பழைய கைப்பேசி பாகங்களை ஒருங்கிணைத்து இயக்கி, குறுச்செய்தி அனுப்பினாள்.
“அங்கிள்.. மாறனிடம் உண்மையைச் சொல்லி விடவா?” என்று கேட்டாள்.
“ராஜா சொல் என்றேன்.. இப்போது வேண்டாம்.” என்ற பதில் வந்தது.
“ராஜா, இனி தேவை இல்லை.” என்று அவள் பதில் அனுப்ப,
சிரிக்கும் முகவடிக் குறியீடுடன், “சந்தோசம்.” என்ற பதில் வந்தது.
அவள், “உண்மையைச் சொல்லிடவா?” என்று மீண்டும் கேட்க,
அவர், “உண்மை அறிய, சிம்மன் காதல் நாடகம் ஆட வில்லையே!” என்று கேட்டார்.
“நிச்சயம் இல்லை” என்று இவள் அனுப்பவும்,
“வேலை முடியாத நிலையில், ரொம்பவும் அவசியம் என்றால் மட்டும் உண்மையைச் சொல்.” என்று பதில் அனுப்பினார்.
“ஓகே அங்கிள்.”
“உங்கள் இருவருக்காகவும் மிகவும் மகிழ்கிறேன்.. மனமார்ந்த வாழ்த்துக்கள் மா.” என்று அவர் அனுப்ப,
அவள் சிரிப்பு முகவடி குறியீடுடன், “தேங்க்யூ அங்கிள்.” என்று அனுப்பினாள்.
“இனி தான் நீ மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.. சிம்மனைச் சுற்றி ஆபத்துகள் அதிகம்.. அது உன்னையும் தாக்கும்.. முக்கியமாக ராஜமாதவிற்கு உண்மைக் காரணம் தெரியவே கூடாது.”
“புரிகிறது அங்கிள்.. நான் கவனமாகவே இருக்கிறேன்.”
“சரி மா.. டேக் கேர்”
“ஓகே அங்கிள்.. பை” என்று அனுப்பி கைப்பேசி பாகங்களை பிரித்து, அதன் இடத்தில் வைத்தாள்.
அதே நேரத்தில் மாறவர்மசிம்மன் தனது அறைக்குச் சென்றதுமே, தனது அறையினுள் இருக்கும் ரகசிய கதவின் வழியே, தீரன் அறையில் இருக்கும் ரகசிய அறைக்குச் சென்றான்.
மாறவர்மசிம்மனின் திடீர் வரவில் தயாளன் சற்றே அசந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ள வில்லை. தீரன் அறையில் ரகசிய அறை உண்டு என்பது தெரிந்தாலும், இன்று தான் முதல் முறையாக அந்த ரகசிய அறையினுள் வந்து இருக்கிறான். கூடவே ராஜா மற்றும் தீரனின் அறைகள் ரகசிய வழி மூலம் பிணைக்கப் பட்டிருப்பதும், இன்று தான் அவனுக்குத் தெரிய வந்தது. மாறவர்மசிம்மன் உள்ளே வந்ததும் இருவரும் எழ, அவர்களை அமரச் சொன்னவன் தானும் அமர்ந்து, “என்னென்ன ஆவணங்கள் கிடைத்து இருக்கிறது?” என்று கேட்டான்.