அறைக்குச் சென்றதும் மாறவர்மசிம்மன் மீனாட்சியை கைபேசியில் அழைத்தான். அவள் அழைப்பை எடுத்ததும், “என்ன செய்துக் கொண்டிருக்கிறாய் தேவி?” என்று கேட்டபடி தீரனிற்கு குறுஞ்செய்தி அனுப்பினான். தீரனும் அவளது அறையில் இருக்கும் ஒலிவாங்கிகள் அனைத்தையும் அணைத்து வைத்தான்.
“சும்மா தான் படுத்து இருக்கிறேன்.”
“உடம்பு ஓய்வில் இருக்கிறது.. மூளை?”
“அம்மா அப்பாவுடன் இருந்த அந்த பொக்கிஷ நினைவுகளை திரும்ப நினைத்துப் பார்த்தேன்.. முன்னாடி மனசே பாரமா இருக்கும்.. இப்போ அதை நினைத்துப் பார்க்கும் போது, அப்பா அம்மா என் கூடவே இருக்கிற மாதிரி ஒரு பீல்.. அந்த உணர்வை வார்த்தைகளால் சொல்ல முடியலை.. சந்தோஷமா இருக்குது.. கூடவே ஒருவித புது தெம்பு வருது.. தனி தைரியமும் வருது..”
“உன் தைரியத்தின் அளவைத் தான் இன்று பார்த்தேனே! நிராயுதபாணியாக ஆயுதம் ஏந்தியவர்களை தாக்கினாயே!”
“அது வேறு.. நான் சொல்ற பீல் வேறு”
“ஹ்ம்ம்.. புரிகிறது..” என்றவன், “இன்று ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது.” என்றான்.
“என்ன?”
“எல்லா விதத்திலும் இந்த ராஜாவுக்கு ஏற்ற ராணி நீ தான்.”
சிறு வெட்கத்துடன், “இதை சொல்லத் தான் போன் பண்ணீங்களா?” என்று கேட்டாள்.
“இல்லை.. நாம் இருவரும் தென்காசி பெரிய கோவில் சென்று வரலாம்.. கிளம்பி வேந்தபுரம் வா.”
“திரும்ப தனியாவா! எதுக்கு ரிஸ்க்?”
“சுதிர் தான் வண்டியை ஓட்டப் போகிறான்.”
“இன்னொரு நாள், போகலாமே!”
“ஏன், இன்றைக்கு என்ன?”
“மதியம் தான் ஒரு தாக்குதல் நடந்து இருக்குது.”
“அதனால் என்ன! என்னுடன் அஞ்சா நெஞ்சம் கொண்ட வீராங்கணை நீ இருக்கிறாயே!”
“கிண்டல் பண்ணாதீங்க” என்று அவள் லேசாகச் சிணுங்க,
சிரித்தபடி, “நேரில் வந்து இதே மாதிரி சிணுங்கிக் காட்டு” என்றான்.
“ஹும்ம்” என்று மீண்டும் சிணுங்கினாள்.
அதை ரசித்துச் சிரித்தவன், “கவலை வேண்டாம் தேவி.. ஆபத்து எதுவும் நிகழாது.. கிளம்பி வா!” என்றான்.
“எப்படி உறுதியாச் சொல்றீங்க?”
“உடனே அடுத்த தாக்குதல் நடக்க வாய்ப்பு இல்லை.”
“இருந்தாலும்…”
“இன்னொரு நாள் போனால் மட்டும், தாக்குதல் நடக்காது என்று என்ன நிச்சயம்?”
அவள் அமைதியாக இருக்க,“தர்க்கம் செய்யாமல் கிளம்பி வா, தேவி.” என்றான்.
அரை மனதுடன், “சரி, வருகிறேன்.” என்றாள்.
“புடவையில் வா, தேவி” என்றவன், “நேரே எனது அறைக்கு வா.” என்றான்.
சிறு அதிர்வுடன், “உங்க அறைக்கா!” என்றாள்.
அவன் ரகசிய புன்னகையுடன், “ஆம்.. தேவியின் தரிசனத்திற்காகக் காத்திருக்கிறேன்.” என்று கூறி அழைப்பைத் துண்டித்தவன் தீரனிற்கு குறுஞ்செய்தி அனுப்ப மறக்கவில்லை.
ஆகாய வண்ணப் புடவையில் தயாராகி வேந்தபுரம் சென்றவள், வெட்கமும் சிறு படபடப்புமாக அவனது அறையினுள் நுழைந்தாள்.
“வருக வருக தேவி.” என்று வசீகரப் புன்னகையுடன் வரவேற்றவனின் விழிகள், அவளை அங்கம் அங்கமாக ரசிக்கத் தொடங்கியது.
அவள் வெட்கமும் கூச்சமுமாக பார்வையைத் தாழ்த்திய படி, “கிளம்பலாமா?” என்று மெல்லிய குரலில் கேட்டாள்.
அவள் அருகே வந்து ஒற்றை விரலால் அவளது நாடியைப் பிடித்து முகத்தை நிமிர்த்தியவன், “புடவையில் ரொம்பவே அழகாய் இருக்கிறாய், தேவி.. அப்படியே எனது மனதை கொள்ளை அடிக்கிறாய்” என்றான்.
அவள் நாணத்துடன் மெல்லிய குரலில், “நீங்க தான் அழகு.” என்றாள்.
“உன்னை விட இல்லை”
“ஹ்ம்ஹும்.. உங்கள் கம்பீரத்தின் அருகே, நான் குறைவு தான்.”
“அதெல்லாம் இல்லை.. சரி இருவருமாக புகைப்படம் எடுப்போம்.” என்று கூறியவன் அவளை இடையோடு சேர்த்து அணைத்தபடி நின்று, தனது கைப்பேசியை புகைப்படம் எடுக்கத் தோதாகப் பிடித்தான்.
அவள் லேசாக நெளிந்துக் கொண்டே இருக்க, “இன்று தான் உன்னை முதல் முறையாக அணைப்பதை போல் நெளிகிறாயே, தேவி! சரியாக நில்” என்றான்.
அவனது கரம் அவளது வெற்று இடையில் பதிந்திருக்க, அவளால் சரியாக நிற்கவே முடிய வில்லை.
அவள், “நான் அந்தப் பக்கம் நிற்கிறேன்” என்று கூறவும் தான், விஷயத்தை புரிந்துக் கொண்டவன் வாய்விட்டுச் சிரித்தபடி பிடியைத் தளர்த்தி, அவளது வெற்று இடையை லேசாக வருடினான்.
அவனது மெல்லிய தீண்டலில் அவளது உணர்வுகள் தாளம் தப்ப, அதன் தாக்கத்தை தாங்க முடியாமல் தவித்தாள்.
அவனை நிமிர்ந்து பார்த்து, “ப்ளீஸ்” என்று கெஞ்சியவளின் மென்னிதழ்கள், அவனது முரட்டு இதழ்களிடம் சிறைபட்டுக் கொண்டது.
நிதானமாக மென்மையாக முத்தமிட்டு இதழ் பிரித்தவன், “இது சிறு முன்னோட்டம் மட்டும் தான்.. கோவிலுக்கு சென்று திரும்பிய பின், மீதியை பார்த்துக் கொள்கிறேன்.” என்று கூறி கண் சிமிட்டினான்.
“கோவிலுக்கு போகலாம்னு சொல்லி வரச் சொல்லிட்டு, என்ன வேலை பார்க்கிறீங்க!” என்றாள் வெட்கம் கலந்த மிரட்டலுடன்.
“தேவியின் அழகு என்னை பித்தம் கொள்ளச் செய்கிறது”
“பழியை, என் மீது போட்டாகிறதா!”
“உண்மையைத் தானே சொல்கிறேன்.. இப்போது கூட பிரிய மனம் வரவில்லை.. கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக..” என்றவனின் பேச்சை இடையிட்டவள்,
“கதை பேசியது போதும்.. கிளம்பலாம் வாங்க” என்றாள்.
“புகைப்படம் எடுத்துவிட்டுச் செல்லலாம்.” என்றபடி கைப்பேசியை மீண்டும் எடுத்தான்.
“நான் அந்த பக்கம்.”
“இப்படியே நில்” என்று கூறி அவளது வெற்றிடையை பற்றிய படியே தான் புகைப்படத்தை எடுத்தான்.
அவனது கம்பீரப் புன்னகையும், கொடி போல் அவன் மீது படர்ந்திருந்தவளின் நாணப் புன்னகையும் என்று, அந்தப் புகைப்படம் மிக அழகாக இருந்தது.
“உன் கைப்பேசியை கொடு.. அதிலும் எடுக்கலாம்.” என்றான்.
அவள் தனது பெருவிரல் ரேகையை பதிவிட்டு கைப்பேசியை இயக்கி, அவனிடம் கொடுத்தாள்.
அதை வாங்கியதும் முதலில் அவனது கண்கள் சென்றது கைப்பேசியின் பிணைய குறியீடு இருக்கும் இடத்திற்குத் தான். பிணைய குறியீடின் அருகே ‘1’ என்று இருக்கவும், அவளது கைப்பேசி இரண்டு கைபேசிச்சில்லுகள்(simcards) போட்டுக் கொள்ளும் வசதி உடையது என்பதையும், தற்போது ஒரே ஒரு கைபேசிச்சில்லு மட்டும் தான் அதில் பொருத்தப்பட்டு இருக்கிறது என்பதையும் புரிந்துக் கொண்டான்.
ஒரே நொடியில் அதை குறித்துக் கொண்டவன், புகைப்படம் எடுத்துவிட்டு கைப்பேசியை அவளிடம் கொடுத்தான்.
இதைப் பற்றி அறியவே புகைப்படம் எடுக்கும் திட்டத்தை தீட்டினான். ஒருவேளை இரண்டு கைபேசிச்சில்லுகள் இருந்தால், அவள் அறியாமல், மற்றொரு எண்ணில் இருந்து தனக்கு அழைப்பு கொடுக்க நினைத்தே அவ்வாறு செய்தான்.
அதன் பிறகு, “கிளம்பலாம் தேவி” என்றபடி அவளை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.
அடுத்து அனைத்தும் மாறவர்மசிம்மனின் திட்டபடியே நடந்தது.
மாறவர்மசிம்மன் மீனாட்சியை தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோவிலுக்கு அழைத்துச் சென்று விட, தயாளன் ஒலிவாங்கிப் பதிவுகளை ஆராய்ந்துக் கொண்டிருக்க, தனது வேலையாட்களுடன் தேவிபுரத்தில் இருக்கும் வேலையாட்களின் அறைகளை சோதிக்கச் சென்ற தீரன், மீனாட்சியின் அறையினுள் சென்று சோதிக்க ஆரம்பித்தான்.
குழலின் இசை தொடரும்…