புல்லாங்குழலே! பூங்குழலே! ~ குழலிசை 12.2

அதாவது அவள் மீது சந்தேகம் வராமல் இருக்க என்னைக் காப்பாற்றி இருக்கிறாள் என்று கூறுகிறாய்”

நிச்சயமாகக் கூறவில்லை.. வாய்ப்பு இருக்கிறது என்று சொல்கிறேன், ராஜா”

ஹ்ம்ம்.. சரியாகத் தான் யோசிக்கிறாய்.. நானும் இதை எல்லாம் யோசித்தேன் தான்.. உனக்கு முழுவதுமாக தெரியாத ஒரு விஷயம், எனக்கு மட்டுமே முழுதாக தெரிந்த விஷயம்.. எங்களுக்குள் இருக்கும் காதல்.”

தீரன் அமைதியாக இருக்க, மாறவர்மசிம்மன், “காதலே நடிப்பு என்பது உன் வாதம் சரியா?என்றான்.

தீரன் ‘ஆம்’ என்று கூற முடியாமல் இப்பொழுதும் அமைதியாக இருக்க, “தயங்காமல் சொல், தீரா.. நான் உனக்கு பேசும் உரிமை அளிக்கவில்லையா என்ன? என்றான்.

தீரன்  அவசரமாக, “நான்  அமைதியாக  இருந்ததிற்கு அது காரணம் இல்லை, ராஜா.. என் வாதம் உங்கள் மனதை வருத்தி விடக் கூடாதே என்று நினைத்தேன்.. எப்படியும் என் மனதில் இருப்பது உங்களுக்குத் தெரிகிறது.. இனி அந்த கண்ணோட்டத்திலும் நிச்சயமாக நீங்கள் யோசிப்பீங்க.. அப்புறம் எதற்கு என் வாயினால் கூறிஉங்களை வருத்த வேண்டும் என்று நினைத்தேன்” என்றான்.

பரவாயில்லை.. உனது வாதங்களை ஒவ்வொன்றாகக் கூறு”

அவங்க சண்டையிட்டதைப் பார்த்துத் தான் உங்களுக்கு மீண்டும் சந்தேகம் வந்திருக்கிறது.. ஆகையால், அவங்களோட சண்டை நேர்த்தியாக இருந்து இருக்க வேண்டும்.. கேர் டேக்கருக்கும் சண்டை பயிற்சிக்கும் என்ன சம்பந்தம்?

காதல் என்ற பெயரில் உங்களை ஏமாற்றிக் கொல்வது தான் அவங்க திட்டமோ?

ஒருவேளை ராஜமாதா, இல்லை, இளவரசர் அவங்களை வர வைத்து இருப்பாங்களா?

இன்னொரு சந்தேகம் கூட இருக்கிறது, ராஜா.. ஒருவேளை இன்று நடந்த தாக்குதலே அவங்களோட ஏற்பாடாக இருக்குமோ? என்று கூறி நிறுத்தினான்.

உன்னுடைய முதல் கேள்வியை நான் தேவியிடமே கேட்டுவிட்டேன்.. ஆசிரமத்தில் கராத்தே பயிற்சி அளித்தகாகக் கூறினாள்.. அதை விசாரித்து சரி பார்..

அடுத்து அவள் நிச்சயம் என்னைக் கொல்ல வரவில்லை.. அவளது வரவின் காரணத்தைப் பற்றி எனக்கு ஒரு அனுமானம் இருக்கிறது.. அது சரியா என்று பார்க்கலாம்..

அடுத்து விக்ரம் இவளை அனுப்பி இருக்க மாட்டான்.. இந்த உளவாளி வேலை எல்லாம் அவனுக்கு வராது.. ஆனால், ராஜமாதாவை உறுதியாக மறுக்க முடியாது..

அடுத்து இந்த தாக்குதல் பராந்தகன் செயல் தான்.. வந்தவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களை வைத்துச் சொல்கிறேன்.” என்று நீண்ட விளக்கத்தைக் கொடுத்தான்.

இப்போது நான் என்ன செய்ய வேண்டும், ராஜா?

தேவி அறையில் இருக்கும் ஒலிவாங்கி பற்றிக் கேட்டேனே!”

அது.. உங்கள் எண்ணை அவங்களிடம் கொடுத்ததில் இருந்து, அதன் பதிவுகளை நான் ஆராய வில்லை.. ஆனால், நீங்க திரும்ப நிதி உதவி செய்தவரைப் பற்றி பேசியதில் இருந்து, கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன்.” என்று சிறு தயக்கத்துடன் கூறினான்.

புரிகிறது.. தயக்கம் தேவை இல்லை.. இனி நான் பேசும் நேரங்களில் மட்டும் ஒலிவாங்கியை அணைத்து வை.” என்றவன், “பழைய பதிவுகள் உனது மடிக்கணினியில் இருக்கிறது தானே!” என்று கேட்டான்.

ஆம் ராஜா”

முதலில் ரஞ்சித் உதவியுடன் அவளது கைப்பேசி IMEI எண், கைப்பேசி எண்ணிற்கான ரசீது, குறுஞ்செய்தி தகவல்கள் என்று அனைத்தையும் வாங்க ஏற்பாடு செய்.

அடுத்து ஒலிவாங்கியின் பதிவுகளை பரிசோதித்துப் பார்.. வந்து ஒரு மாதம் ஆகிறது.. நிச்சயம் அவளின் குழுவினரிடம் தொடர்பு கொண்டு இருப்பாள்.. பதிவில் அவள் யாரிடமாவது பேசி இருந்தால், பதிவில் இருக்கும் நேரத்தையும் கைப்பேசி ரசீதில் இருக்கும் நேரத்தையும் வைத்துஅவளது குழுவினரின் எண்ணைக் கண்டு பிடித்து விடலாம்..

யாரிடமும் பேசியதாக பதிவில் இல்லை என்றால், குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறாளா என்று பார்.. குறுஞ்செய்தியும் அனுப்பவில்லை என்றால், சந்தேகம் நிவர்த்தி ஆகி விடாது..

IMEI எண் வைத்து, அவள் கைப்பேசியில் வேறு எண் பொருத்தி இருக்கிறாளா என்று பார்.. அப்படி எதுவும் இல்லை என்றாலும், சந்தேகம் நிவர்த்தி ஆகி விடாது..

இதுவரை சொன்ன எதிலும் நமக்கு சாதகமாக எதுவும் கிடைக்கவில்லை என்றால், அவள் குழுவினரை தொடர்பு கொள்ள, இன்னொரு கைபேசி வைத்து இருக்கிறாள் என்று அர்த்தம்..

அதன் மூலம் பேசி இருந்தால் ஒலி வாங்கிப் பதிவில் தெரிந்து விடும். ஆனால் குழுவினரின் எண்ணை கண்டு பிடிப்பது எளிதல்ல.. அந்த மற்றொரு கைப்பேசியில் இருந்து குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாலும் சுலபமாக கண்டுபிடிக்க முடியாது..” என்று கூறி, சில நொடிகள் யோசித்தவன்,

ஒன்று செய்யலாம்.. சற்று நேரத்தில் நான் அவளை அழைத்துக் கொண்டு தென்காசி பெரிய கோயில் சென்று வருகிறேன்.. அந்த நேரத்தில் நீ வழக்கமான சோதனையை மேற்கொள்வது போல் அனைத்து அறைகளையும் சோதனையிடு.. யாருக்கும் சந்தேகம் வராத வகையில், அவளது அறைக்குள் சென்று வேறு கைபேசி இருக்கிறதா என்று நீயே சோதித்துப் பார்..

தயாவையும் சேர்த்துக்கொள்.. அவன் இங்கே பதிவுகளை ஆராயும் நேரம், நீ அங்கே அவள் அறையை சோதித்துப் பார்”

நல்ல யோசனை ராஜா.. நிச்சயம் வெற்றி கிட்டும்.. ஆனால், தயா உங்கள் பாதுகாப்பிற்காக உங்களுடன் வர வேண்டுமே!”

அடுத்த தாக்குதல் உடனே நடைப்பெற வாய்ப்பு ரொம்பவே குறைவு.. அப்படியே நடந்தாலும் சுதிர் என்னுடன் தானே இருப்பான்.. நான் சமாளித்துக் கொள்வேன்.”

சரி ராஜா..” என்றவன், “அன்பு வேண்டுகோள் ராஜா.. இனி எக்காரணம் கொண்டும் தனியே செல்ல வேண்டாம்.” என்றான்.

உதட்டோர மென்னகையுடன், “கவலை வேண்டாம்.. இனி அவ்வாறு செல்ல மாட்டேன் என்று சந்ராமாவிடம் வாக்கு கொடுத்து விட்டேன்.” என்றான்.

இப்பொழுது தான் நிம்மதியாக இருக்கிறது.. நன்றி ராஜா”

தேவி வளர்ந்த ஆசிரமத்தில் கராத்தே பயிற்சி அளிக்கிறார்களா என்பதை சரி பார்க்க மறந்துவிடாதே!”

சரி பார்த்து விடுகிறேன், ராஜா”

ஏதேனும் சிறு தகவல் கிடைத்தாலும், உடனே எனக்குத் தெரிவிக்க வேண்டும்.”

சரி ராஜா”

என் அறைக்குச் சென்றதும், தேவியை அழைத்துப் பேசுவேன்.. அவள் எனது அழைப்பை எடுத்ததும் உனக்கு குறுஞ்செய்தி அனுப்புகிறேன்.. பேசி முடித்த பிறகும் குறுஞ்செய்தி அனுப்புகிறேன்.”

சரி ராஜா”

அதன் பின் சிறு தலை அசைப்புடன் மாறவர்மசிம்மன் வெளியேறினான்.

error: Content is protected !!