புல்லாங்குழலே! பூங்குழலே! ~ குழலிசை 10.2

மாறவர்மசிம்மன் சிறு தலை அசைப்புடன் முன்னே செல்ல, அவளும் அவனுடன் இணைந்து நடந்தாள். தயாளன் பின்னால் தொடர்ந்தான்.

இவர்கள் இறங்கிச் சென்றதும், வண்டியில் ஓடிக் கொண்டிருந்த குளிமியை அணைத்து வண்டியை பூட்டிய ஓட்டுநர், அருகே இருந்த மரத்தின் நிழலில் நின்று கொண்டான்.

பரபரப்பாக ஓட்டமும் நடையுமாக வந்த ஆசிரம உரிமையாளர், “வாங்க ராஜா” என்றார்.

அவன், “எனக்கு தனி கவனிப்பு தேவை இல்லை.. எப்பொழுதும் போல் எல்லாம் இயல்பா நடக்கட்டும்.. அங்கே போய் கவனிங்க” என்றான்.

ஆகட்டும் ராஜா.. ஆகட்டும்” என்றவர் வேகமாக உள்ளே ஓடி அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று மறுபடியும் சரி பார்த்தார்.

மாறவர்மசிம்மனின் வருகை இதுவே முதல் முறை, அதனாலேயே உரிமையாளர் மகிழ்ச்சியுடனும் பதற்றத்துடனும் இருந்தார்.

அடுத்து மீனாட்சி ஒவ்வொரு குழந்தைக்கும் தன் கையால் பரிமாற, அவளது முகத்தில் தோன்றிய பூரிப்பை இருக்கையில் அமர்ந்தபடி மாறவர்மசிம்மன் நிர்மலமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அனைத்துக் குழந்தைகளும் உண்டு முடித்ததும், மாறவர்மசிம்மனின் கண் அசைவில் வெளியே சென்ற தயாளன் இரண்டு நிமிடங்களில் உள்ளே வந்த பொழுது அவனுடன் இரண்டு பெரிய அட்டை பெட்டிகளை தூக்கியபடி ஆசிரம வேலையாள் ஒருவன் வந்தான்.

மீனாட்சி ‘என்ன’ என்பது போல் அவனைப் பார்க்க, அவன் அவள் காதில், “குழந்தைகளுக்கு புத்தாடைகள்..” என்றான்.

அவள் கண்கள் மின்ன அவனை நோக்க, அவன், “என்னுடைய சிறு பங்களிப்பு” என்றான்.

தயாளன் வந்து, “மேடம்” என்று அழைக்க,

அவள் சிறு ஆச்சரியத்துடன் திரும்பி, “என்னையா கூப்பிட்டீங்க? என்று கேட்டாள்.

எஸ் மேடம்.. நீங்க வந்தீங்கனா குழந்தைகளுக்கு டிரஸ்சஸ் கொடுத்திடலாம்.” என்றான் பணிவுடன்.

அவள் மாறவர்மசிம்மனைப் பார்க்க, அவன், “இனி இதற்கெல்லாம் பழகிக்கொள்.” என்றான்.

அவள் மறுத்து கூறும் முன், “குழந்தைகள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.. போய் கொடு” என்று கூறி இருந்தான்.

அனைவர் முன்பும் விவாதிக்க விரும்பாமல் அவளே சென்று அனைத்து குழந்தைகளுக்கும் புத்தாடைகளை வழங்கினாள். குழந்தைகளின் முகத்தில் இருந்தே அவர்களின் மகிழ்ச்சியை புரிந்து கொண்டவளின் மனம் நெகிழ்ந்தது.

அதன் பிறகு கிளம்பும் வேளையில் மாறவர்மசிம்மன் ஓட்டுநரிடம் கையை நீட்டியபடி, “நீயும் தயாவும் வாடகை வண்டியில் வாங்க” என்றான்.

ஓட்டுநர் அதிர்ச்சியுடன் தயாளனைப் பார்க்க, தயாளன், “சார்.. உங்களையும் மேடமையும் தனியா அனுப்ப முடியாது.. மன்னிக்கணும்.” என்றான்.

மாறவர்மசிம்மனின் பார்வையில் ஓட்டுநர் வண்டிச் சாவியை அவனது நீட்டிய கரத்தில் கொடுத்துவிட, தயாளன் ஓட்டுநரை முறைத்தான்.

மாறவர்மசிம்மன் தயாளனைப் பார்த்து, “அவனை ஏன் முறைக்கிறாய்? என்றான்.

தயாளன், “நீங்க தனிமையை விரும்புவது எனக்குப் புரிகிறது.. ஆனால் அதை விட உங்கள் பாதுகாப்பு தான் எனக்கு முக்கியம்.. தயவுசெய்து இந்த ஒருமுறை நான் சொல்வதைக் கேளுங்கள்” என்றான்.

அவனோ, “வாடகை வண்டி வரும் வரை நான் காத்திருக்கிறேன்.. என் வண்டி பின்னாலேயே நீங்க வாங்க.” என்றான்.

தயாளன் ஏதோ கூற வர, அவன், “வண்டிக்கு முன் பதிவு செய்” என்று முடித்துவிட்டான்.  

அடுத்த பத்தாவது நிமிடத்தில் வாடகை வண்டி வந்ததும், இரண்டு வண்டிகளும் ஒன்றாகக் கிளம்பியது. முதலில் மாறவர்மசிம்மன் வண்டி கிளம்ப, அதன் பின்னால் வாடகை வண்டியில் தயாளனும் ஓட்டுநரும் தொடர்ந்தனர்.

மீனாட்சி, “தேங்க்ஸ்” என்று கூற,

மாறவர்மசிம்மன், “எதற்கு? என்று கேட்டான்.

எல்லாத்துக்கும்.. அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்ததுக்கு.. என்னை வெளியே கூட்டிட்டு வந்ததுக்கு.. என்  கையாலேயே பரிமாற ஏற்பாடு  செய்ததுக்கு.. ட்ரெஸ் வாங்கியதுக்கு.. ட்ரெஸ் வாங்கினப்ப குழந்தைகளோட முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி, ஒரு நிறைவைத் தந்தது..

எல்லாத்தையும் விட என்னோட மனசை திசை திருப்பியதுக்கு.. முகத்தை தேடிட்டு இருந்த என்னை உண்மையான மகிழ்ச்சியை தேட வைத்ததுக்கு.. ஒவ்வொரு வருஷமும் இந்த நாள் அப்படி ஒரு வலியோடு, பாரத்துடன் தான் கழியும்.. ஆனா இன்னைக்கு.. தேங்க்ஸ்”

எனக்கு, நீ நன்றி சொல்வாயா?

மனப்பூர்வமான நன்றியை கேள்வி கேட்காம ஏத்துக்கணும்.”

ஹ்ம்ஹும்”

ஹ்ம்ம்”

நான் கேட்ட விதத்தில் தெரிவித்தால் தான் ஏற்றுக்கொள்ளப் படும்”

அவள் வெட்கத்தை மறைக்க முயற்சித்தபடி, “ஏய்” என்று கூற, அவன் எப்பொழுதும் போல் அதை ரசித்துச் சிரித்தான். 

அப்பொழுது கிளை சாலையில் இருந்து திடீரென்று ஒரு இரு சக்கர வண்டி முதன்மை சாலைக்குள் நுழைய, தயாளன் மற்றும் சுதிர்(ஓட்டுநர்) இருந்த வாடகை வண்டியின் ஓட்டுநர் சுதாரித்து வண்டியை நிறுத்தியதால், விபத்து தவிர்க்கப் பட்டது.

அந்த இரு சக்கர வண்டியை ஓட்டி வந்தவன் வாடகை வண்டியின் ஓட்டுநரைப் பார்த்து, “பார்த்து வர மாட்டியா? என்று கத்தினான்.

இவன், “டர்னிங்கில் வரும் போது, நீ தான் பார்த்து வரணும்” என்று கூற,

அவன், “இந்த ரோட்டில் இவ்வளவு வேகத்தில் வந்துட்டு என்னை நீ சொல்றியா? என்று குரலை உயர்த்தினான்.

இவன், “நான் சரியாத் தான் வந்தேன்.. தப்பை உன் மேல வச்சிட்டு என்னைச் சொல்லாதே!” என்று சண்டைக்கு தயார் ஆக,

தயாளன், “சண்டை வேண்டாம்.. வண்டியை எடுங்க” என்றான். மாறவர்மசிம்மனின் வண்டி சற்று முன்னால் சென்றிருக்கவும், தயாளன் சண்டையை வளர்க்க விரும்பவில்லை.

வாடகை வண்டியின் ஓட்டுநர், “நீங்க பார்த்தீங்க தானே சார்.. எப்படி உள்ளே நுழைஞ்சான்னு.. என்னைச் சொல்றான்.” என்றான்.

அந்த இருசக்கர வண்டியை ஓட்டியவன் இப்பொழுதும் கத்திக் கொண்டு தான் இருந்தான்.

தயாளன், “சிலர் அப்படி தான்.. நீங்க வண்டியை எடுங்க.. முன்னாடி போன வண்டியை விரட்டிப் பிடிங்க” என்றான்.

தயாளன் அவ்வளவு சொல்லவும் ஓட்டுநர் வண்டியை கிளப்பினான்.

ஆனால், இவர்கள்  கிளம்பிய  சிறிது தூரத்திலேயே வண்டியின் வட்டையில்(tyre) ஆணி துளையிட்டதில் வண்டி நின்று விட்டது. 

தயாளன் மனதிற்கு எதுவோ சரியில்லை என்று தோன்றவும் சுதிரைப் பார்த்து, “செக் பண்ணு” என்றான்.

சுதிர் கீழே இறங்கி பழுதான வட்டையைப் பார்த்தான். நான்கு ஆணிகளை கொண்ட சிறு மரத் துண்டினால் தான் வட்டையில் துளை ஏற்பட்டு இருந்தது. அதை பார்த்ததும் சுதிர் பரபரப்புடன், “தயா ராஜாவுக்கு போன் பண்ணு.. இது திட்டமிட்ட சதி” என்றான்.

அதே நேரத்தில் அந்த ஆள் அரவமற்ற சாலையின் நடுவே ஒரு இருசக்கர வண்டி சரிந்து கிடக்க, அதன் அருகே ஒருவன் வலிப்பில் துடித்துக் கொண்டிருந்தான்.

அதை சற்று தூரத்தில் பார்த்த மீனாட்சி, “அச்சோ! வண்டியை நிறுத்துங்க.” என்றாள்.

அதை அவளுக்கு முன்பே கவனித்து இருந்த மாறவர்மசிம்மன் வண்டியின் வேகத்தை குறைத்து இருந்தான். கூடவே பின்னால் வந்து கொண்டிருந்த வண்டியைக் காணவில்லை என்பதையும் கவனித்து இருந்தவன், அவளிடம், 108 கூப்பிடு” என்றான்.

அவள் அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்க, அவன், “எதையும் சட்டுன்னு நம்பிடக் கூடாது.. ஆள் அரவமற்ற சாலை.. எது வேணாலும் நடக்கலாம்.. தயா வந்து கொண்டிருந்த வண்டியையும் பின்னால் காணும்.” என்றான்.     

நீங்க போய்ப் பார்க்க வேண்டாம்.. வண்டியை இங்கேயே நிறுத்துங்க, நான் போய்ப் பார்க்கிறேன்”

உன்னைப் பிடித்து வைத்து என்னை மிரட்டினால்? என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுதே தயாளனிடம் இருந்து இவனுக்கு அழைப்பு வர, சாலையின் இரு பக்கப் புதரின் மறைவில் இருந்து திடீரென்று முகத்தை மூடிய சில  ஆட்கள் அரிவாளுடனும் கத்தியுடனும் இவனது வண்டிக்கு முன்னும் பின்னும் வந்து சூழ்ந்து நின்றனர். வலிப்பில் துடித்துக் கொண்டிருந்தவனும் அவர்களுடன் கத்தியை ஏந்தி நின்று கொண்டிருந்தான்.

மீனாட்சி அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்க, அவனோ சிறிதும் அஞ்சாமல் தயாளனின் அழைப்பை எடுத்து, “சுற்றி வளைத்து விட்டார்கள்.. பதற்றபடாமல் வாங்க” என்றான்.

பார்வையைச் சுழற்றிய தயாளன் வண்டி எதுவும் அருகில் தென்பட வில்லை என்றதும், ஓட ஆரம்பித்தபடி, “வண்டியை விட்டு கீழே இறந்காதீங்க ராஜா.. நாங்க இப்போ வந்திருவோம்.” என்றபோது சிறு கருங்கல் ஒன்று பறந்து வந்து மாறவர்மசிம்மன் வண்டியின் பின் பக்கக் கண்ணாடியை உடைத்தது.

சுதிர் தயாளனை முந்திக் கொண்டு வேகமாக ஓட ஆரம்பித்து இருந்தான்.

அந்த சத்தத்தை கேட்டு தாயளன் மீண்டும், “வண்டியை விட்டு இறங்காதீங்க, ராஜா” என்றான்.

அவனோ, “நான் பார்த்துக்கிறேன்.” என்று கூறி அழைப்பைத் துண்டித்து இருந்தான்.

ப்ச்” என்றபடி தயாளனும் வேகமாக ஓட ஆரம்பித்தான்.

என்ன நடந்தாலும் வண்டியை விட்டு கீழே இறங்காத” என்று மீனாட்சியை பார்த்துக் கூறிய மாறவர்மசிம்மன் வண்டியின் முகப்பலகையில் இருந்து தனது பிச்சுவா கத்தியையும் கட்டாரியையும்(கத்தி வகை) எடுத்தான். அதன் உரைகளை அகற்றியவன் பிச்சுவா கத்தியை இடது கையிலும், கட்டாரியை வலது கையிலும் ஏந்தியபடி, கம்பீரமாக கீழே இறங்கி நின்றான்.

தன்னை இறங்க வைக்கத் தான் கல்லால் வண்டியைத் தாக்கினார்கள் என்பதை அறிந்தே மீனாட்சிக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்ற எண்ணத்தில் கீழே இறங்கினான்.

குழலின் இசை தொடரும்…

error: Content is protected !!