குழலிசை 10
மாறவர்மசிம்மனின் வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த மீனாட்சி யோசனையில் ஆழ்ந்து இருந்தாள். வண்டியின் முன்பக்கம் ஓட்டுநரும் தயாளனும் இருக்க, பின் பக்கம் மாறவர்மசிம்மனும் மீனாட்சியும் அமர்ந்து இருந்தனர்.
இன்று மீனாட்சியின் பெற்றோர் இறந்த தினம். அதனை முன்னிட்டு அநாதை ஆசிரமத்தில் மதிய உணவிற்கு தனது செலவில் ஏற்பாடு செய்யக் கேட்ட மீனாட்சி, உணவை தனது கையால் பரிமாற விரும்பியதால் இந்தப் பயணம்.
பெற்றோரின் நினைவோடு, முன்தினம் மகாராணி அவளிடம் பேசியதும், அவளது மனதினுள் ஓடிக் கொண்டிருந்தது.
முன்தினம் காலை உணவை முடித்ததும் மகாராணி அறையில் மீனாட்சி, “மகாராணி.. நாளைக்கு மதியம் பன்னிரண்டு மணியில் இருந்து சாயங்காலம் வரை விடுமுறை எடுத்துக்க அனுமதி வேண்டும்.” என்று கேட்டாள்.
“காரணம்?”
“நாளைக்கு என்னோட அப்பா அம்மா இறந்த நாள்.. வேலைக்குப் போனதில் இருந்து இந்த நாளில் ஆசிரமத்தில் அன்னதானம் செய்றேன்.. நாளைக்கு பக்கத்தில் இருக்கும் ஆசிரமத்தில் மதிய உணவு அன்னதானம் செய்ய, ராஜா மூலம் ஏற்பாடு செய்திருக்கிறேன்.. என் கையால் பரிமாற விரும்புறேன்.. அதான் விடுமுறை கேட்கிறேன்.”
“நல்ல விஷயம் தான்.. எடுத்துக்கொள்” என்றவர், “ராஜமாதாவிற்குத் தெரியுமா?” என்று கேட்டார்.
“இல்லை மகாராணி.. உங்களிடம் முதலில் கேட்க நினைத்தேன்.”
“இப்போவே பார்க்க அனுமதி கேள்.. பார்க்க அனுமதித்தால் விடுமுறை பற்றிக் கேட்டுவிடு.”
“சரி மகாராணி”
“ஆசிரமத்திற்கு எப்படி செல்லப் போகிறாய்?”
“ராஜா அழைத்துச் செல்வதாகக் கூறினார்.”
சிறு அதிர்ச்சியுடன், “சிம்மன் தன்னுடன் அழைத்துச் செல்வதாகக் கூறினானா?” என்று கேட்டார்.
அவள் சிறு சங்கடத்துடன், “ஆமாம் மகாராணி.” என்றாள்.
மாறவர்மசிம்மன் மீனாட்சியை விரும்புவதாக மகளின் மறைமுகப் பேச்சில் இருந்து அறிந்து இருந்தாலும் முழுமையாக அதை அவர் நம்பவில்லை. தற்போது நேரிடையாக கேள்விப்படும் பொழுது நம்பாமல் இருக்க முடியவில்லை.
சில நொடிகள் மௌனத்தில் கழிந்தது.
“நீ அருமையான பெண் தான். ஆனால்…” என்று நிறுத்தியவர், “சிம்மனின் தாய் மலர்விழி பற்றி உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.
அவள் அமைதியாக இருக்கவும், “உனக்கு தெரிந்ததைச் சொல்.” என்றார்.
“அவங்க ராஜவம்சம் இல்லைனு தெரியும்.. அதனால் தான், ராஜா தனிமைப் படுத்தப் பட்டு இருக்கார்னும் தெரியும்.” என்றாள்.
“ஹ்ம்ம்.. அவங்க எப்படி இறந்தாங்க என்று தெரியுமா?”
“காய்ச்சலில் இறந்ததா கேள்விப்பட்டேன்.”
மறுப்பாக தலை அசைத்தவர், “நான் சொன்னேன் என்று கூறி, சந்ராவிடம் மலர்விழி பற்றிக் கேள்.” என்றார்.
மீண்டும் அவள் அமைதியாக இருக்க,
“என் பெயரைச் சொல், உண்மை தெரியும்.” என்றவர், “நான் உன்னை பயமுறுத்தக் கூறவில்லை.. ஆனால், மலர்விழியின் நிலை உனக்கு வர வேண்டாம் என்ற எண்ணத்தில் தான் கூறுகிறேன்.” என்றார்.
அவள் அமைதியாக ‘சரி’ என்பது போல் தலையை ஆட்டினாள்.
அடுத்து, அவள் ராஜமாதாவை சந்தித்து, விடுமுறை பற்றி பேசிய போது அவர் மறுப்பு தெரிவிக்க வில்லை. மாறவர்மசிம்மனுடன் செல்ல இருப்பதால் அவர் மறுக்க மாட்டார் என்பதை, அவளும் உணர்ந்து தான் இருந்தாள்.
ஆனால், “அவன் கேட்கும் போது நான் உடனே சம்மதித்ததாகக் கூறாதே.. முறைத்தேன், கோபமாகத் திட்டினேன் என்று கூறு.. புரிகிறதா?” என்று கடுமையான குரலில் கூறினார்.
அவள் சம்மதம் கூறிச் சென்றதும், அவர் மனதினுள், ‘எமகாதகன்.. சிறு சந்தேகம் வந்துவிட்டால் கூட, நம் திட்டம் அனைத்தும் பாழ்’ என்று கூறிக் கொண்டார்.
இவற்றை நினைத்துப் பார்த்து கொண்டு இருந்தவளின் கவனம் சிதறும் வகையில் மாறவர்மசிம்மன் அவளது கையைப் பற்றினான்.
சிறு திடுக்கிடலுடன் அவனை அவள் நோக்க, அவன் கண்ணசைவிலேயே, ‘என்னாயிற்று?’ என்று கேட்டான்.
அவள் மென்னகையுடன் ‘ஒன்றுமில்லை’ என்பது போல் தலையை ஆட்டினாள்.
அதை அவன் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும், மற்றவர்கள் முன் வெளிப்படையாக கேட்க முடியாமல் அமைதியாக இருந்து கொண்டான்.
ஆசிரமம் முன் வண்டி நின்றதும், மாறவர்மசிம்மன், “தயா எல்லாம் தயாராக இருக்கிறதா என்று பார்.. ஐந்து நிமிடங்கள் கழித்து நாங்கள் வருகிறோம்.” என்றான்.
“ஓகே சார்” என்று கூறி தயாளன் இறங்கிச் சென்றதும், ஓட்டுநரும் கீழே இறங்கிக் கொண்டான்.
“இப்போது சொல் தேவி.. என்ன யோசனை? உன் முகமே சரி இல்லையே!” என்று கேட்டான்.
அவனது அன்னையைப் பற்றிப் பேசி அவனை வருத்த விரும்பாமல், “அப்பா அம்மா ஞாபகம்.” என்றவள் மென்னகைக்க முயற்சித்தபடி, “வேற ஒன்றும் இல்லை.” என்றாள்.
அவள் தனது வலியை தன்னுள் மறைக்க முயற்சிப்பதைப் புரிந்து கொண்டவன் ஆதரவாக அவளை தோளோடு அணைத்து, அவளது தலையை தனது தோளில் சாய்க்கவும், அவள் சற்று உடைந்து தான் போனாள். இத்தனை வருடங்கள் மனதினுள் பூட்டி வைத்திருந்த வருத்தங்கள், மெல்ல வெளியே வந்தது.
அவனது கையைச் சுற்றி வளைத்துப் பிடித்தபடி, “எனக்கு அப்பா அம்மா முகம் கூட ஞாபகம் இல்லை.. ஆசிரமத்தை விட்டு வந்ததும், என்னை அங்கே சேர்த்த என் அப்பாவோட நண்பரைத் தேடிப் போனேன். அவங்க அங்கே இல்லை.. எந்த ஊரில் இருக்கிறாங்கன்னும் தெரியலை.. என்னை ஆசிரமத்தில் விட்டப்ப, அப்பா அம்மா போட்டோவையும் சேர்த்துக் கொடுத்துட்டு போய் இருந்து இருக்கலாம்.” என்ற போது அவளது குரல் கரகரத்து நடுங்கியது.
அவன் பிடியை இறுக்கிய படி அவளது உச்சந் தலையில் முத்தமிட்டு, “உனக்கு நான் இருக்கிறேன் தேவி.. கலங்காதே..!” என்று தேற்றினான்.
முகத்தை மட்டும் நிமிர்த்தி அவனைப் பார்த்தவள், “இதை எல்லாம், நான் இதுவரை யாரிடமும் ஷேர் பண்ணது கூட இல்லை..” என்றாள்.
அவளது வலியைக் கண்டு, அவனுக்கு பெரிதும் வலித்தது.
“சரி சொல்.. உன் மனதில் இருக்கும் அனைத்தையும் சொல் தேவி.. நான் கேட்கிறேன்” என்றான்.
இரண்டு நொடிகள் அமைதியாக இருந்தவள், “ஒண்ணுமே இல்லனா கூடப் பரவா இல்லை.. இது கொடுமை தெரியுமா!” என்றாள்.
பின், “ரெண்டு உருவம் கூட ஓடிப் பிடித்து விளையாடியது, ஒரு உருவம் என்னை தூக்கிப் போட்டு விளையாடியது, ஒரு உருவம் ஊட்டி விட்டதுனு மங்கலா மனதில் தோன்றும்.. நான் எவ்வளவு முயற்சித்தும் அந்த முகங்களை தெளிவா கொண்டு வர முடியலை.. அம்மா அப்பா குரல் கூட சரியா ஞாபகத்தில் இல்லை.. யோசித்து யோசித்துப் பார்த்தே துவண்டு போறேன்..” என்றவளின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.
அவளது கண்ணீரைத் துடைத்தவன், “உன் பெற்றோர் உருவமா உன்னுடன் இல்லை என்றாலும் இப்பொழுது கூட உன்னுடன் தான் இருப்பார்கள்.. உன் வருத்தம் அவர்களையும் பாதிக்கும்.. அந்த வயதில் உன்னை விட்டுச் சென்ற பொழுது எவ்வளவு துடித்து இருப்பார்கள்! உன் சந்தோசம் மட்டுமே அவர்களின் ஆத்மாவை சாந்திப் படுத்தும்” என்றான்.
அவள் கலங்கிய விழிகளுடனே அவனை நோக்க,
அவன், “இப்படி வருந்துவதை விட, மங்கலாகத் தெரியும் நிகழ்வுகளில் இருக்கும் மகிழ்ச்சியை உணர முயற்சி செய், தேவி.
மனதை ஒரு நிலைப் படுத்தி யோசித்துப் பார்..! உன் தந்தை உன்னை தூக்கிப் போட்டு விளையாடிய போது, சிறு குழந்தையான நீ கிழுக்கிச் சிரித்து இருப்பாய், அதைக் கண்டு அவரும் மகிழ்ச்சியுடன் சிரித்து இருப்பார்..
மூவரும் ஓடி விளையாடிய தருணத்திலும் வேண்டுமென்றே உன்னைப் பிடிக்க முடியாதது போல் அவர்கள் விளையாடி இருப்பார்கள்.. அப்போது வெற்றிக்களிப்பில் நீ சிரித்து இருப்பாய், உன் சிரிப்பில் அவர்களும் சிரித்து இருப்பார்கள்..
கண்களை மூடி சில நொடிகள் அமைதியாக இருந்து, பின் நிதானமாக யோசித்துப் பார்.” என்றான்.
சற்று நகர்ந்து சம்மணமிட்டு அமர்ந்து கண்களை மூடி அவன் கூறியது போலவே செய்தாள். இரண்டு நிமிடங்களில் அவன் கூறியது போலவே அந்த நிகழ்வுகளில் இருந்த சிரிப்புச் சத்தத்தையும் மகிழ்ச்சியையும் அவளால் உணர முடிந்தது. அது அவளது முகத்திலும் பிரதிபலிக்க, அவன் நிம்மதியுற்றான்.
மெல்ல கண்களைத் திறந்தவள், மகிழ்ச்சியுடன் புன்னகைத்தபடி அவனை அணைத்து கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு, “தேங்க் யூ ஸோ மச், மாறா” என்றாள்.
அவளது முதல் அணைப்பையும் முத்தத்தையும் அனுபவித்து ரசித்தவன் விரிந்த புன்னகையுடன், “நன்றியை இப்படியா தெரிவிப்பாய்?” என்றான்.
அவள், “ஏன்? உங்களுக்குப் பிடிக்கலையா?” என்று லேசாக வாடிய முகத்துடன் கேட்க,
“உன்னுடைய முதல் அணைப்பையும் முத்தத்தையும் அணு அணுவாக ரசித்து மகிழ்கிறேன் தேவி.. நான் கூறியது.. கன்னத்திலா முத்தம் கொடுப்பாய்! இதழில் அல்லவா முத்தமிட்டு உன் மகிழ்ச்சியை பகிர்ந்திருக்க வேண்டும்!” என்று உல்லாசப் புன்னகையுடன் கூறியபடி கண் சிமிட்டினான்.
“ஏய்!” என்று வெட்கத்துடன் சிரித்தபடி, அவனது புஜத்தில் கை வைத்துத் தள்ளினாள்.
வாய்விட்டுச் சிரித்தவன், “மாலையில் வசூலித்துக் கொள்கிறேன்.. இப்பொழுது உள்ளே செல்லலாம் வா.. நேரமாகிறது” என்றான்.
அவன் கீழே இறங்க, அவனைத் தொடர்ந்து லேசான மனதுடன் அவளும் கீழே இறங்கினாள். முன் பக்கக் கதவின் அருகே நின்றிருந்த தயாளன், “எல்லாம் தயாராக இருக்கிறது, சார்” என்றான்.