புல்லாங்குழலே! பூங்குழலே! ~ குழலிசை 9.2

ஹ்ம்ம்” என்றவன் அருகில் இருந்த கருவியை காண்பித்து, “இதில் கீழே அமர்ந்துக் கொண்டு, இடது புறம் இருக்கும் கல்லை இடது காலாலும் வலது புறம் இருக்கும் கல்லை வலது காலாலும் சரிவில் மேல் நோக்கித் தள்ளி, பின் மெதுவாக கீழே இறக்க வேண்டும்.. மிகவும் கவனமாகச் செய்ய வேண்டும்.. தொடை மற்றும் கரண்டைப் பகுதி சதை வலுப்பெற செய்யும் உடற்பயிற்சி இது..

அடுத்து இந்தக் கல் முக்காலியில் அமர்ந்து கொண்டு, தலை தரையில் தொடும் அளவிற்கு பின்னால் வளைந்து, பின் நிமிர்ந்து அமர வேண்டும்.. இது வயிற்றுப் பகுதிக்கான பயிற்சி.. இதைச் செய்தால் தொப்பையே இருக்காது.” என்றான்.

இது எல்லாமே ஜிம்மில் இருக்குதே.”

ஹ்ம்ம்.. நம் முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே யோசித்தது தான்.. அவங்க கற்களால் சற்று கடினமான முறையில் செய்தது இப்போது இரும்பு மற்றும் இரும்பு வடத்தைப் பயன் படுத்தி எளிதான முறையில் செய்யும் படி இருக்கிறது.”

இதெல்லாம் இப்போ தான் புதுசாப் பார்க்கிறேன்.”

அவன் மென்னகைத்தான்.

பின், “சிலம்பு இருக்குது.. உங்களுக்கு சிலம்பு சுத்தத் தெரியுமா? என்று ஆர்வத்துடன் கேட்டாள்.

அவன் அதை எடுத்து சுற்றிக் காட்டவும், கண் இமைக்க மறந்தபடி பார்த்துக் கொண்டு நின்றாள்.

சிலம்பை அதன் இடத்தில் வைத்தவன் அவள் முன் சொடக்கிடவும், அசடு வழியச் சிரித்தாள்.

பின், “ஏய்! இது இளவட்டக்கல் தானே!” என்று கத்தினாள்.

அதே தான்.. இதைத் தூக்கினால் தான் என்னை கல்யாணம் செய்து கொள்வாயா, தேவி? என்று புன்னகையுடன் கேட்டான்.

அப்படிச் சொல்லிடக் கூடாதுன்னு முன் எச்சரிக்கை கேள்வியா இது? என்று அவளும் புன்னகையுடன் புருவம் உயர்த்திக் கேட்டாள்.

கண்டு பிடித்து விட்டாயே!” என்றவன் போலியாக முகத்தை சோகமாக வைத்துக்கொள்ள, அவள் வாய்விட்டுச் சிரித்தாள்.

அவன் சட்டையை கழட்டியபடி, அதை தூக்க ஆயுதமாக,

ஏய்.. நான் சும்மா தான் சொன்னேன்..” என்றாள் சிறு அதிர்ச்சியுடன்.

புன்னகையை மட்டும் பதிலாகத் தந்தவன் கழட்டிய சட்டையை அவள் தோளில் போட்டான்.

உள்பனியனுடன் நின்றவனின் புஜங்கள் சங்கோஜத்தை அளித்தாலும், அதை விடுத்து, “ப்ளீஸ்.. வேண்டாம்.. எங்கேயாவது பிடிச்சுக்கப் போகுது” என்று பதறினாள்.

பயம் வேண்டாம் தேவி.. கர்லாக்கட்டையைத் தான் பயிற்சி செய்வது இல்லை.. இதைத் தூக்கிப் பழக்கம் தான்..” என்றபடி அதை நெருங்கினான்.

அவள் செய்வதறியாது பயத்துடன் பார்க்க,

இந்தப் பக்கமாக நகர்ந்து நில்” என்றவன் அவள் நகர்ந்ததும் தூக்க ஆரம்பித்தான்.

முதலில் குத்தாங்காலிட்டு உட்கார்ந்த நிலையில் கல்லை இரு கைகளாலும் சேர்த்து அணைத்துப் பிடித்தான். பின் லேசாக எழுந்து கல்லை முழங்காலுக்கு மேலாக நகர்த்திய படி மெல்ல நிமிர ஆரம்பித்தான். பின்னே கொஞ்சம் கொஞ்சமாக கல்லை நெஞ்சின் மீது ஏற்றியவன், தோள்பட்டைக்கு பின்னால் கொண்டு சென்று, கல்லை கீழே போட்டான்.

கல்லை தூக்கியவனை விட, பார்த்த அவளுக்குத் தான் மூச்சு வாங்கியது.

கல்லை அதன் இடத்திற்குத் தள்ளியபடி நகர்த்தி வைத்தவன், கைகளை தட்டியபடி அவளை நெருங்கினான்.

அவள் வார்த்தைகளின்றி அவனைப் பார்த்துக் கொண்டே நிற்க, சட்டையை எடுத்துப் போட்டபடி, “சந்தோஷத்தில் இறுக்கி அணைத்து முத்தத்தால் முகத்தை ஈரமாக்குவாய் என்று நினைத்தேன்.” என்றான்.

அவள் இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல், “எனக்கு வார்த்தையே வரலை” என்றாள்.

வார்த்தை தானே வரலை! முத்தம் வரும்.” என்று கூறி கண் சிமிட்டியபடி, அவளது இடையை வளைத்துப் பிடித்தான்.

அவள் செல்ல முறைப்புடன், “உங்களுக்கு ஒரு சாக்கு.” என்றாள்.

உனக்காகத் தானே இள வட்டக் கல்லைத் தூக்கினேன்!”

நான் தூக்கச் சொல்லலையே!”

இளவட்டக்கல்லை தூக்கியதிற்கு பரிசு கிடையாதா? என்று முகத்தைப் பாவம் போல் வைத்து அவன் கூற,

இப்படி முகத்தை வைத்து ஏமாத்தாதீங்க” என்றாள்.

நான் உன்னை ஏமாற்றுகிறேனா!” என்று அவன் ஒரு மாதிரி குரலில் வினவ,

அவள் பதற்றத்துடன், “நான் விளையாட்டாத் தானே சொன்னேன்.” என்றாள்.

விளையாட்டுக்குக் கூட சில வார்த்தைகளை சொல்லக் கூடாது.. ஒரு சொல்..” என்று பேசிக் கொண்டிருந்தவனின் பேச்சு, அவளது இதழ் முத்தத்தில் மறைந்து போனது.

அவள் மென்மையாக முத்தமிட்டு, முகத்தை விலக்கிக் கொள்ள,

அவனோ, “என்ன பண்ண? என்று கேட்டான் கிண்டலான பார்வையுடன்.

அவனது கையை விலக்க முயற்சித்தபடி, “ஏன், உங்களுக்குத் தெரியாதா? என்றாள்.

அவளை இன்னும் இறுக்கமாக அணைத்தபடி, “நான் நினைத்தாலொழிய, உன்னால் என்னை விட்டுப் போக முடியாது.” என்றான்.

அவள் சிறு கலக்கத்துடன், “இன்னைக்கு ஏன் விட்டுப் போறது, விலகுறதுனே பேசிட்டு இருக்கிறீங்க?என்று கேட்டாள்.

இது ஒரு வழிப் பாதை என்று உனக்கு வலியுறுத்துகிறேன்” என்றவன், “சரி வா கடைசி அறைக்குப் போய்ப் பார்க்கலாம்.” என்றபடி முன்னால் நடக்க, அவளும் அவனுடன் நடந்தாள். அந்த அறை முழுவதும் ஆயுதங்கள் இருந்தன.

வெவ்வேறு வகையான வாள்கள் இருந்தன. ஒரு பக்கம் மட்டும் கூர்மையாக இருக்கும் நெடு வாள், இருப்பக்கமும் கூர்மையாக இருக்கும் நேர் வாள், இருப்பக்கக் கூர்மையுடன் வளைந்து வளைந்து இருக்கும் நெடுங்கொண்ட வாள், உருமி(சுருள் வாள்) என்று வகை வகையாக இருந்தது.

கத்தியும் பிச்சுவா கத்தி, கட்டாரி, வில்லுக்கத்தி, மட்டுவு என்று பல வகையில் இருந்தது.

வளரி, ஈட்டி, கேடயம், வரையாடு கொம்பு, கோடரி என்று நிறைய ஆயுதங்கள் இருந்தன.

இவற்றுள் அவளை முதலில் கவர்ந்தது வளரி தான். வளரி என்பது ஒருபுறம் கனமாகவும் மற்றொரு புறம் லேசாகவும் கூர்மையாகவும் மரம் அல்லது இரும்பினால் பிறை வடிவாகச் செய்த எறி கருவி. அதை வீசினால், இலக்கைத் தாக்கிவிட்டு, எய்தவர் கைக்கே வந்து சேர்ந்துவிடும்.

அதைப் பார்த்தவள், “வளரி மரத்தில் கூட செய்வாங்களா? என்று கேட்டாள்.

ஹ்ம்ம்.. மரத்தால் செய்த வளரி மயக்கத்தை மட்டும் தரும். ஆனால், இரும்பு வளரி உயிரையே எடுத்துவிடும்.”

இதை யூஸ் பண்ண, சொல்லித் தரீங்களா?

ஹ்ம்ம்.. என்னுடன் பேசும் பொழுதில், நீ ஆங்கில வார்த்தைகளை முற்றிலும் துறந்த பிறகு.”

இது போங்கு” என்று அவள் சிணுங்க, அவனோ அதை ரசித்துச் சிரித்தான்.

அதன் பிறகு, “சில ஈட்டி வித்யாசமா இருக்குதே!” என்று கேட்டாள்.

ஹ்ம்ம்.. முனையில் பட்டையான கத்தி மாதிரி இருக்கிறது போர் வீரர்கள் பயன் படுத்தியது.. மற்றது அரண்மனைக் காவலாளிகள் பயன்படுத்தியது.”

இதையே இப்போ இருக்கிற காவலாளிகள் கிட்டயும் கொடுக்கலாமே!”

அந்தக் காலத்தில் எதிரிகளும் ஈட்டிகளுடன் தான் இருந்தனர்.. இப்போ அப்படியா!”

ஹ்ம்ம்.. சரி தான்.”

அதன் பிறகு வாள் வகைகளை விளக்கிக் கூறினான்.

அவள், “ரணசிம்ம ராஜாவோட வாள் இருக்குதா? என்று கேட்டாள்.

மீண்டும் அவளைக் கூர்மையாகப் பார்த்தவன், அவள் இயல்பாக கேட்டது போல் தோன்றவும், “அந்த வாள் இங்கே இல்லை.” என்றான். அவள் சிறு அதிர்ச்சியுடன், “என்ன இவ்ளோ சாதரணமாச் சொல்றீங்க?” என்று கேட்டாள்.

error: Content is protected !!