புல்லாங்குழலே! பூங்குழலே! ~ குழலிசை 8.2

அவன் திரும்பி பார்க்கவும், அவர், “உன் தாய்மாமன் இன்று அழைத்துப் பேசினான்.. அவன் மகன் ஒரு மாதத்தில் வெளிநாட்டில் இருந்து வந்து விடுவானாம்.. அவன் வந்ததும் காஞ்சனாவிற்கும் அவனுக்கும் நிச்சயம் செய்து கொண்டு, ஒரு வருடம் கழித்து திருமணத்தை வைத்து கொள்ளலாமா என்று கேட்டான்.” என்றார்.

இளவரசி வெட்கத்துடன் தரை நோக்க,

இளவரசன் கோபம் விடுத்து, “காஞ்சனா படிப்பை முடிக்கத் தானே காத்திருந்தோம்.. இப்போது இந்த ஒரு வருட இடைவெளி, ஏன்? என்று கேட்டான்.

வெளிநாட்டில் தொழில் சம்பந்தமாக புதிதாக ஏதோ கற்றுக் கொண்டானாம்.. அதை தொழிலில் புகுத்தி, ஒரு வருடமாவது தொழிலில் முன்னேறிய பிறகு தான்திருமணம் என்று கூறிவிட்டனாம்.”

சரி.. அப்படியே செய்யலாம்.”

என்ன காஞ்சனா, உனக்கும் சம்மதம் தானே?

உங்கள் விருப்பம் ராஜமாதா” என்றவள் வெட்கத்துடன் வெளியே ஓடிவிட்டாள்.

ராஜமாதா மென்னகையுடன், “சரி.. நாளை உன் தாய்மாமனிடம் பேசி விடுகிறேன்.” என்றதும் சம்மதம் தெரிவித்து அவனும் வெளியேறினான்.

அடுத்த நாள் மாலையில் மீனாட்சி ஆர்வத்துடன் மாறவர்மசிம்மனுடன் கன்னிமாடம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாள்.

மாறவர்மசிம்மன் உதட்டோரப் புன்னகையுடன், “கன்னிமாடம் செல்வதில் இவ்வளவு ஆர்வமா!” என்றான்.

நேற்றில் இருந்து இதையே சொல்றீங்க.. அது தான் இப்போ அந்தப்புரமா இல்லையே!”

ஆனால் உன் மனதில் அந்த நினைப்பு இருக்கிறதே!”

அது நேத்து நீங்க கன்னிமாடம்னு சொன்னதும், சட்டுன்னு தோணுச்சு தான்.. ஆனா, இப்போ பண்டை கால பொருட்களை பார்க்கும் ஆர்வம் மட்டும் தான்.”

என்னை பார்ப்பதற்கு கூட இவ்வளவு ஆர்வம் காட்டியது இல்லை.” என்று அப்பொழுதும் அவன் சீண்ட,

என்ன வேணா சொல்லிக்கோங்க.. இப்போ நான் எக்ஸ்சைட்டட் மூடில் இருக்கிறேன்.” என்றாள்.

அவன் பார்த்த பார்வையில், “நோ.. நோ.. ஸ்…. ப்ளீஸ்.. ஓ! தயவு செய்து என் ஆங்கிலச் சொற்களை பொறுத்துக் கொண்டு, என்னை உள்ளே அழைத்துச் செல்லுங்கள் அரசே!” என்றபடி கையெடுத்துக் கும்பிட,

அவன் மென்னகையுடன், “வா” என்றான். அப்பொழுது அரண்மனை வாயிலுக்கு வந்திருந்தனர்.

அரண்மனை வாயில் காவலாளிகள் அவனது புன்னகை முகத்தை கண்டு, அதிசயத்தைக் கண்டது போல் நிற்க, அவன் ‘என்ன’ என்பது போல் புருவம் உயர்த்திப் பார்க்கவும், சட்டென்று சுயம் பெற்றுப் பதறியபடி, லேசாக தலை வணங்கி வணக்கம் செலுத்தினர்.

சிறு தலை அசைப்புடன் அதை ஏற்றுக் கொண்டவன், “யாரையும் உள்ளே அனுமதிக்காதீர்கள்.” என்ற கட்டளையுடன், அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

ஆஜானுபாகுவான ஒரு காவலாளி வந்து பணிவுடன் வணங்கி நிற்கவும், சிறு தலை அசைப்புடன் அவனது வணக்கத்தை ஏற்றபடி, தன்னிடம் இருந்த பெரிய திறவுகோலைக் கொடுத்தான்.

பணிவுடன் திறவுகோலைப் பெற்றுக் கொண்ட காவலாளி, திறவுகோலை அந்த  பிரம்மாண்டமான பத்தடி உயரம் கொண்ட கதவின் நடுப் பகுதியில் இருந்த திறவுகோல் துளையினுள் பொருத்தித் திருகினான். சிறு சத்தத்துடன் கதவின் உள் பூட்டு திறந்து கொள்ள, திறவுகோலை எடுத்து மீண்டும் பணிவுடன் மாறவர்மசிம்மனிடம் கொடுத்தான்.

பின் அந்தக் காவலாளி சிறு சிரமத்துடன், ஒற்றை ஆளாக வலதுபுறக் கதவைத் தள்ளி, பின் இடதுபுற கதவைத் தள்ளினான். அவனது முயற்சியில் சிறு சத்தத்துடன் கதவுகள் திறந்துக் கொண்டது.

மாறவர்மசிம்மன், “நான் பார்த்துக் கொள்கிறேன்.. நீ செல்லலாம்.” என்றதும், மீண்டும் பணிவுடன் வணங்கிச் சென்றான்.

மீனாட்சி அந்த பிரம்மாண்டமான கதவின் வேலைப்பாடுகளை கரம் கொண்டு வருடி ரசித்தபடி, “இதை நாமளே செய்து இருக்கலாமே? என்றாள்.

மாறவர்மசிம்மன், “கதவை அசைத்துப் பார்” என்றான்.

அவளும் உடனே கதவைத் தள்ள முயற்சித்தாள் ஆனால் முடியவில்லை. அவனைத் திரும்பிப் பார்த்தவள், பின் தனது பலம் முழுவதையும் திரட்டி இரண்டு கைகளையும் வைத்துத் தள்ள முயற்சித்தாள், கதவு இம்மி கூட அசையவில்லை.

மென்னகையுடன் அவளது முயற்சியை பார்த்தவன், “விடு.. உன்னால் முடியாது.” என்றான்.

கைகளை எடுத்த படி அவனைப் பார்த்தவள், “அது என்ன என்னால் முடியாது! நீங்க தள்ளுங்க பார்ப்போம்.” என்றாள்.

முடியாது என்று இல்லை.. சற்று சிரமம் கொள்ள வேண்டும்.” என்றவன், தனது பலத்தை திரட்டி கதவை தள்ளிக் காட்டினான்.

வாவ்.. செம!” என்றாள்.

புன்னகையுடன், “சரி வா.. உள்ளே போகலாம்.” என்றபடி அழைத்துச் சென்றான்.

அரண்மனை முழுவதும் இருந்த நுண்ணிய வேலைபாடுகளை, ஓவியங்களை ஆச்சரியத்துடனும் பிரம்மிப்புடனும் பார்த்தவள், “மத்த அரண்மனையை விட இது வித்யாசமா ரொம்ப அழகா இருக்குது.” என்றாள். 

என்ன வித்தியாசம்?

இங்கே பழமை மாறாம இருக்குது.. மத்த அரண்மனைகளிலும் இதே போல் இருந்தாலும், அதெல்லாம் அசல் இல்லை.. அசலை நீங்க கொஞ்சம் நவீனப்படுத்தி இருக்கிறீங்க.”

ஹ்ம்ம்.. நீ அகழாய்வியல் படிச்சதை ஒப்புக் கொள்கிறேன்”

அகழாய்வியல்?

தொல்பொருள் ஆய்வியலை.. அதாவது ஆர்கியாலாஜி.. அதை இப்படியும் சொல்லலாம்.”

ஓ!” என்றவள் அங்கிருந்த ஓவியங்களைப் பார்த்து, “இதெல்லாம் மூலிகையில் இருந்து எடுத்த கலர்ஸ்.. ம்ம்.. வண்ணங்கள் வைச்சு வரைந்ததா? என்று கேட்டாள்.

ஹ்ம்ம்..”

அந்த காலத்திலேயே எவ்வளவு நிறங்கள் கொண்டு வந்திருக்காங்க! ஜஸ்ட் அமேசிங்”

நம் முன்னோர்களின் திறமைகள் நமக்குத் தான் தெரிவது இல்லை”

தெரிந்ததால் தானே இப்படி பாதுகாத்து வரீங்க!”

பொதுவாக நம் மக்களைச் சொல்கிறேன்..”

ஓ! இங்கே வந்தால் நேரம் போறதே தெரியாது போல!” என்றவளின் பார்வை ஓவியங்களில் தான் இருந்தது.

அவனுமே ஓவியங்களைப் பார்த்தபடியே, “அது சரி தான்.. இந்த ஓவியங்கள் ஒவ்வொரு முறையும் புதிதாகப் பார்ப்பது போலவே நம்மை கவர்ந்து இழுக்கும்.. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கற்பனை தோன்றும்..” என்றான்.

ஹ்ம்ம்”

இங்கிருக்கும் மொத்த ஓவியங்களிலும் நூறுக்கும் மேற்பட்ட முகங்கள் இருக்கும்.. ஒன்று கூட மற்றொன்றோடு ஒத்துப் போகாது.. ஒவ்வொரு முகமும் தனித்தன்மையுடன் இருக்கும்..”

ஆச்சரியத்துடன் அவனை நோக்கியவள், “அப்படியா!” என்றாள். 

இன்னொரு நாள் ஓவியங்களை மட்டும் பார்க்க என்று வரலாம்.. இப்போது மற்ற அறைகளுக்குச் செல்லலாம் வா”  என்று அழைத்துச் சென்றான்.

முதல் அறையில் குதிரை வண்டிகளும் பல்லக்குகளும் இருந்தன.

அடுத்த அறையில் பல புகைப்படங்கள் இருந்தன. அதே அறையில் ஆங்காங்கே சிதைந்து இருந்த பெரிய மர பலகை இருக்க, அதில் அந்த அரண்மனையின் மன்னர்கள் பெயர்களும், அவர்கள் ஆட்சி புரிந்த காலமும் செதுக்கி இருந்தது.

அந்த பலகையை பார்த்தபடி, “வெளியே இதே மாதிரி ஒரு போர்டு பார்த்தேனே!” என்றாள்.

ஹ்ம்ம்.. நடுவில் சரியா பராமரிக்காம கரையான் கொஞ்சம் அரித்து விட்டது.. நான் ஆட்சிக்கு வந்ததும், இங்கிருக்கும் பொருட்களை நன்றாகப் பராமரிக்க ஆரம்பித்தேன்.. இதில் சில பெயர்கள் அழிந்ததால் வெளியே அந்தப் பலகையைச் செய்து வைக்க ஏற்பாடு செய்தேன்,

அழிஞ்ச பெயரை எப்படி கண்டுபிடிச்சீங்க?

இங்கே ஒரு அறையில் பழமை வாய்ந்த ஓலைச் சுவடிகள் நிறைய இருக்கின்றன.. அதில் இருந்து கண்டுபிடித்தேன்..”

அதை நான் பார்க்க முடியுமா?

இல்லை.. ஓலைச்சுவடிகள் மற்றவர்கள் பார்வைக்குக் கிடையாது”

ஓ!” என்று அவளது குரல் சுருதி இறங்கி ஒலிக்க, முகமும் சற்றே வாடியது.

அவன், “நம்ம கல்யாணத்திற்குப் பிறகு காட்டுகிறேன்.” என்றதும், வெட்கத்துடன் கூடிய மகிழ்ச்சியுடன் அவள் முகம் மலர்ந்தது.

அடுத்த அறையில் அக்காலத்து மகாராஜாக்கள் மகாராணிகள் பயன்படுத்திய உடைகள், தலைப் பாகைகள் இருந்தன. 

அவற்றைப் பார்த்தவாறு, “சந்ராமா பொக்கிஷம் பற்றி ஏதோ சொன்னாங்க.. அது உண்மையா?என்று கேட்டாள்.

சட்டென்று விழிகளும் மூளையும் கூர்மையுற அவளைப் பார்த்தவன், அவள் அதை சாதாரணமாக கேட்டது போல் தோன்றவும், “என்ன சொன்னாங்க? என்று சாதாரணக் குரலில் கேட்டான்.

ரணசிம்ம ராஜா கதையை சொல்றப்ப சொன்னாங்க.. ஏதோ ஒரு வார்த்தை சொன்னாங்களே! பஞ்ச.. பஞ்ச..” என்று அவள் திணற,

அவன், “பஞ்சரத்தினம்” என்றான்.

எஸ்.. இது தான்.. நறுமுகை தேவிக்கு ராஜா வாங்கிக் கொடுத்த ஜுவெல்ஸ்.. ஸ்.. நகைகள் பற்றி சொன்னப்ப சொன்னாங்க.. ராணி இறந்ததும் ராஜா இந்தப் பொக்கிஷங்களை ரகசியமா மறைத்து வச்சிட்டார்னும்.. இப்போ கூட எங்கேயோ பொக்கிஷ புதையல் இருக்கிறதாவும் சொன்னாங்க.”

நானும் கேள்வி பட்டிருக்கிறேன்.”

அப்போ சும்மா வதந்தி தானா!”

“இருக்கலாம்.” என்றபடி தோள்களை குலுக்கினான்.

குழலின் இசை தொடரும்…

error: Content is protected !!