அவனும் அவளை அணைத்தபடி கன்னத்தை அவளது உச்சந்தலையில் பதித்து சற்று இளைப்பாறினான். அந்த மோன நிலையைக் கலைத்தது மீனாட்சி தான்.
அவனது நெஞ்சில் சாய்ந்திருந்தபடியே, “மகாராணியை பார்க்கப் போகணும்.” என்றாள்.
விலக மனம் இல்லாமல், “ஹ்ம்ம்.. போகலாம்.” என்றான்.
“மாறா!” என்று அவள் அழைக்க,
சட்டென்று அணைப்பைத் தளர்த்தி அவளது முகத்தை பார்த்தவன், கண்கள் ஒளிர உற்சாகத்துடன், “ஏய்! இப்போ என்ன சொன்ன?” என்று கேட்டான்.
அவள் வெட்கத்துடன், முகத்தை அவனது நெஞ்சில் மறைத்தாள்.
அவன், “ஏய்!” என்று காதலுடன் அழைத்தான்.
“ஹ்ம்ம்”
“இன்னொரு முறை அப்படிக் கூப்பிடு”
அவனது நெஞ்சின் மீதே மறுப்பாக தலையை அசைத்தாள்.
“தேவிமா!” என்று அவன் கெஞ்சலாக அழைக்க,
சட்டென்று நிமிர்ந்து பார்த்தவள், “நீங்க எதற்காகவும் கெஞ்சக் கூடாது” என்றாள்.
மென்னகையுடன், “இதுவே முதல் முறை” என்றான்.
“இது தான் கடைசி முறையும்” என்று அவள் கறாராகக் கூற,
காதலுடன் நோக்கியவன், “அப்போ என்னக்காக இன்னொரு முறை என் பெயரைச் சொல்லிக் கூப்பிடு.” என்றான்.
சிறு நாணத்துடன், “மாறா!” என்றாள் மென்மையான குரலில்.
“என் தேவி” என்றவன் தனது கட்டுப்பாட்டை இழந்து, அவளது இதழில் இதழ் பதித்து இருந்தான்.
இருவருக்குமான முதல் முத்தம், அதுவும் இதழ் முத்தம்! அந்த முத்தம் இருவரின் உயிர்வரை சென்று தீண்ட, இருவரின் உடலும் சிலிர்த்தது.
முதலில் அதிர்ந்து விலக நினைத்தவள், மெல்ல அவனது முத்தத்தில் மயங்கினாள்.
மென்மையாக லேசாக முத்தமிட்டு விலகிவிட நினைத்தவனால், அது முடியாமல் போனது. அவளது இதழின் மென்மை அவனை விலகவிடாமல் சுழலைப் போல் இழுத்தது.
நேரம் செல்ல, அவனது முத்தத்தின் வேகம் கூடியது. சுவாசத்திற்காக சற்று இடைவெளி விட்டவன், மீண்டும் அவளது மென் இதழ்களை சுவைத்தான். இந்த முறை நிறுத்தி நிதானமாக ரசித்து அனுபவித்துச் சுவைத்தான்.
அவளது உமிழ்நீர் அவனுள் சென்று அவனை பித்தம் கொள்ளச் செய்ய, அவனது நாடி நரம்புகள் பேயாட்டம் போட்டது.
சட்டென்று சுதாரித்து விலகியவன், அவளது முகம் பார்க்காமல், “மகாராணியை பார்க்கப் போ, தேவி” என்றான்.
தனது முகம் பார்க்க மறுப்பவனை, அவள் சிறு தவிப்புடன் பார்க்க, அவளது அமைதியில் அவளது மனநிலையை உணர்த்தவன், சிரமத்துடன் தனது உணர்வுகளை கட்டுபடுத்திக் கொண்டு, “இப்போ நீ கிளம்பவில்லை என்றால், என்னை நானே கட்டுபடுத்துவது சிரமம், தேவி” என்றான்.
அவள் முகம் சிவக்க எழுந்துக் கொள்ள, “தேவி” என்று அழைத்தவன், ஒருமுறை அவளை இறுக்கமாக அணைத்து விடுவித்தான்.
பின் மென்னகையுடன், “நாளை மாலை சந்திக்கலாம்.” என்றதும், அவள் சிறு வெட்கத்துடன் தலை அசைத்துக் கிளம்பினாள்.
அவள் சென்ற சில நிமிடங்கள் கழித்து கொலுவிருக்கைக்கு சென்றவன், தீரனை அழைத்தான்.
தீரன் வந்ததும் அவன், “நேற்று மறைகாணி அணைத்து வைக்கப் பட்டிருந்தது, ராஜமாதாவின் காதை எட்டி இருக்கிறது.” என்றான் சற்று கடுமையான குரலில்.
தீரன் அதிர்ச்சியுடன் பார்க்க,
“அந்த நேரத்தில் உன்னை சந்திக்க யாரும் வந்தார்களா?” என்று கேட்டான்.
“இல்லையே ராஜா.”
“இந்த விஷயம் ராஜமாதா காதிற்குப் போனது பெரிதல்ல.. ஆனால், எங்கே தவறு நடந்திருக்கிறது என்று யோசி.”
சில நொடிகள் யோசித்த பின், “எனது நேரடி கவனிப்பில் இருக்கும் மறைகாணிகளின் பதிவுகளை நான் மட்டும் தான் பார்க்க முடியும்.. என் அறையில் இருக்கும் ரகசிய அறையின் இருப்பிடம் எனக்கும் உங்களுக்கும் மட்டும் தான் தெரியும்.. நேத்து மறைகாணியை திரும்ப இயக்கும் வரை, நான் அங்கேயே தான் இருந்தேன்.. என்னை யாரும் சந்திக்கவும் வரவில்லை.. என் பக்கம் இருந்து விஷயம் போய் இருக்க வாய்ப்பு இல்லை, ராஜா..” என்ற தீரன் இன்னும் தீவிரமாக யோசித்தான்.
யோசனையில் இருந்த மாறவர்மசிம்மன், “சுதிரை(ஓட்டுநர்) எனக்கு காவலாக அழைத்தாய் தானே!”
“ஆம் ராஜா.”
“இதைப் பற்றி பிறகு விவாதித்தீர்களா?”
“அது” என்று அவன் தயங்க,
“சொல்” என்றான்.
“மன்னிக்கவும் ராஜா.. உங்கள் அனுமதி இல்லாமல் உங்களது புன்னகை முகத்தை புகைப்படம் எடுத்து எனக்கு, தயா மற்றும் சந்ராமாக்கு அனுப்பினான்.”
மெலிதாக சிரித்தவன், “அது பரவாயில்லை” என்றான்.
தீரன் ஆசை தீர அவனது மென்னகை சித்தும் முகத்தைப் பார்க்க, அவன் விரிந்த புன்னகையுடன், “என் தேவி கூட, என்னை இப்படி பார்த்தது இல்லை.” என்றான் கிண்டலாக.
அவனது கிண்டலில் சட்டென்று சுயம் பெற்று அசடு வழிந்த தீரன், மனதினுள் மகிழ்ந்தான்.
மாறவர்மசிம்மன், “சரி சொல்.” என்றான்.
சட்டென்று தீவிரமான தீரன், “நீங்க ரோஜாவனம் சென்றதும், சுதிர் தான் என்னைக் கைபேசியில் அழைத்து, மறைகாணியை திரும்ப இயக்கக் கூறினான்.” என்றதும்,
“ஆக.. என் சிரிப்பை கண்ட பூரிப்பில் சுற்றம் பார்க்காமல் பேசி இருக்கிறான்.” என்றான்.
தீரன் மெல்லிய குரலில் சிறு தயக்கத்துடன், “அப்படித் தான் நினைக்கிறேன், ராஜா” என்றான்.
“அவனைக் கூப்பிடு.”
அடுத்த ஐந்து நிமிடத்தில் ஓட்டுநர் வந்ததும் தீரன் மறைகாணி விஷயம் ராஜமாதாவின் காதை எட்டியதைப் பற்றி மட்டும் கூறினான்.
மாறவர்மசிம்மன், “எங்கே தவறு நடந்து இருக்கும் என்று நீ நினைக்கிறாய்?” என்று கேட்டான்.
அந்த மறைகாணி தீரனின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பது என்பதை அறிந்து இருந்தவன், தான் அழைக்கப் பட்டிருப்பதில் இருந்து விஷயத்தை யூகித்தவனாக தலை குனிந்தபடி, “மன்னிச்சிருங்க ராஜா.. உணர்ச்சிவசப்பட்ட நிலையில், சுற்றம் பார்க்காமல் வழியில் நின்றபடி தீரனை அழைத்துப் பேசிவிட்டேன்.. தண்டனையை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.” என்றான்.
மாறவர்மசிம்மன், “தண்டனை கொடுப்பதற்காக உன்னை அழைக்கவில்லை.. கவனமாக இருந்துகொள் என்று எச்சரிக்கத் தான் அழைத்தேன்.” என்றான்.
“மன்னிச்சிருங்க ராஜா.. இனி ஒரு போதும் இதைப் போல் நடக்காது.”
“சரி, நீ செல்லலாம்.”
“நன்றி ராஜா” என்று கூறிக் கிளம்பினான்.
தீரன் அமைதியாக நிற்கவும்,
மாறவர்மசிம்மன், “அன்று இதே போன்ற தவறுக்கு காவல் தலைவனுக்கு தண்டனை கொடுத்தவன் உங்களுக்கு ஏன் கொடுக்கவில்லை என்று யோசிக்கிறாயா? இல்லை, நான் பாரபட்சம் பார்ப்பதாக நினைகிறாயா?” என்று கேட்டான்.
“நீதிமான் ரணசிம்மன் சுந்தரபாண்டிய மகாராஜாவின் வழியில் ஆட்சி செய்யும் உங்களிடம் பார பட்சத்திற்கு இடமில்லை.. எங்களை தண்டிக்காததிற்கு என்ன காரணமாக இருக்கும் என்று தான் யோசித்துக் கொண்டிருந்தேன், ராஜா” என்றான்.
“சில நேரத்தில், நாமும் தந்திரத்தை கையாள வேண்டியதாக இருக்கிறது.”
தீரன் புரியாமல் பார்க்கவும்,
“நமக்கு விஷயம் தெரியும் என்று ராஜ மாதாவிற்குத் தெரியாது.. உங்களை தண்டித்து அப்பன் குதிருக்குள் இல்லை என்று காட்டிவிடக் கூடாது என்பது தான் காரணம்.” என்றான்.
“இப்போது புரிகிறது, ராஜா”
“இனி கவனமாக இருங்கள்.”
“கண்டிப்பாக ராஜா.”
குழலின் இசை தொடரும்…