அந்த அறையின் உள்ளே சென்றவளின் கண்கள் அதன் அமைப்பைக் கண்டு விரிந்தது. அறையின் இடதுபுறம் படுக்கை அறை இருக்க, வலது புறம் குளியல் அறையும், உடைமாற்றும் அறையும் இருந்தது. வரவேற்பு அறையின் முடிவில் கண்ணாடிச் சுவர் இருக்க, அதைத் தாண்டி ஒரு சிறு அறையின் பரப்பளவில் பெரிய உப்பரிகை இருந்தது. உப்பரிகை முழுவதும் வண்ண மலர்களைக் கொண்ட செடி கொடிகள் படர்ந்து இருக்க, நடுவில் மர ஊஞ்சல் இருந்தது. கண்ணாடிச் சுவர் அருகே மூன்று திவான்கள் கொண்ட மெத்தை போன்ற சோபா இருந்தது. அறையின் உள் இருந்தே தோட்டத்தின் அழகை ரசிக்கவே, அந்த ஒற்றைச் சுவர் மட்டும் கண்ணாடியால் அமைக்கப் பட்டிருந்தது. தோட்டம் சிறு வனம் போல் காட்சியளிக்க, மயில்களும், முயல்களும் புள்ளி மான்களும் ஓடிக் கொண்டிருந்தன.
மாறவர்மசிம்மன் எதிர்பார்த்தது போலவே அவள் கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு, உப்பரிகைக்குத் தான் சென்றாள்.
அவள் கண்களில் தெரிந்த ரசனையை அவன் ரசித்தான்.
மேலே வரும் பொழுது இருந்த மனநிலை மாறியிருக்க, அவள் தோட்டத்தை பார்வையிட்டபடி ரசனையான புன்னகையுடன், “ரொம்ப ரொம்ப அழகா இருக்குது.. உங்க ஐடியாவா?” என்று கேட்டாள்.
“என்னோடது மட்டுமில்லை.. மகாராஜா, அன்னை என்று மூவரின் யோசனையும் சேர்ந்து இருக்கிறது..
ரோஜாவனதிற்கான இந்த பிரத்யேக தோட்டம் மகாராஜாவின் யோசனை. இந்த உப்பரிகையில் இருக்கும் குட்டித் தோட்டம் அம்மாவின் யோசனை. தந்தையிடம் அம்மா ஆசைப்பட்டுக் கூறியதாகக் கூறினார். இரண்டு யோசனையையும் முழுதாகச் செயல் படுத்தியது மட்டுமே நான்.
இந்தக் கண்ணாடிச் சுவரும், இந்த அரண்மனையின் பாதுகாப்பும் என் யோசனை. இந்தக் கண்ணாடிச் சுவர் வழியே தோட்டத்தை பார்க்க முடியும். ஆனால் தோட்டத்தில் இருந்து உள்ளே இருப்பதை பார்க்க முடியாது. நாம் தனியே சுதந்திரமா இருப்பதற்காக, இந்தப் பக்கம் சற்று தள்ளி தான் காவலர்கள் இருப்பார்கள். தோட்டத்தில் அந்நியர்கள் கால் பதித்தால், அலாரம் அடித்து விடும். மறைகாணி இருக்கிறது தான், ஆனாலும் இந்த அறையில் கண்ணாடிச் சுவர் இருப்பதால், கூடுதல் பாதுகாப்பு.”
“முயல் மான் எல்லாம் ஓடுதே!”
“ஹ்ம்ம்.. அவற்றின் கால்களை பதிவு செய்து வைத்து இருப்பதால் அலாரம் அடிக்காது.”
“பறவைகள்?”
“குறிப்பிட்ட எடைக்கு மேல் தரையில் பதிந்தால் தான் அலாரம் அடிக்கும்”
“அருமை”
“உட்கார்” என்றபடி அந்த மர ஊஞ்சலில் அமர்ந்தான்.
அவள் இன்னமும் தோட்டத்தை பார்த்தபடியே ஊஞ்சலில் அமர, மென்னகையுடன் அவளைப் பார்த்தான்.
“இன்று காலையில் அழைப்பாய் என்று எதிர் பார்த்தேன்.” என்றான்.
துள்ளி ஓடிக் கொண்டிருந்த மானிடம் இருந்த கவனத்தை கலைத்து அவனைப் பார்த்தவள், “என்ன?” என்றாள்.
“காலையில் தீரன் என்னுடைய எண்ணைக் கொடுத்தும் நீ என்னை அழைப்பாய் என்று நினைத்தேன்.”
“அது..”
“ஹ்ம்ம்”
“நீங்களே கொடுத்து இருக்கலாமே!”
மென்னகையுடன், “உன்னைப் பார்த்தால் தான் நான் மற்றவற்றை மறந்துவிடுகிறேனே!” என்றவன், “அதனால் தான் அழைக்கவில்லையா?” என்று கேட்டான்.
“இல்லை.. அப்படி இல்லை”
“பிறகு?”
“அது.. பேச காரணம் எதுவும் இல்லையே!”
“காரணம் இருந்தால் தான், என்னுடன் பேசுவாயா?”
“அப்படி இல்லை”
“சரி சொல்.. உன் மனதை எது குடைகிறது? எதற்காக கலங்கித் தவிக்கிறாய்?” என்று கேட்டான்.
மீண்டும் சிறு கலக்கத்துடன் அவனை நோக்கியவள் மெல்லிய குரலில், “நீங்க என்னை தேவின்னு கூப்பிடுறீங்க.” என்றாள்.
“அப்படிக் கூப்பிடுவது பிடிக்கவில்லையா?”
அவள் அவசரமாக, “அப்படி இல்லை.” என்றாள்.
சற்று விரிந்த மென்னகையுடன், “பிறகு என்ன?” என்றான்.
“ரணசிம்ம ராஜா நறுமுகை ராணியை அப்படித் தான் கூப்பிட்டாராம்.”
உல்லாசமாகச் சிரித்தவன், “நேற்று இரவு சந்ராமாவிடம் இந்தக் கதையைத் தான் கேட்டாயா?” என்றவன், “அது தானே அவங்க பெயர்!” என்றான்.
“ஆமா.. ஆனா, அவர் கூப்பிட்ட காரணம் வேறு.”
ரகசிய புன்னகையுடன், “என்ன காரணமோ?” என்றான்.
“உங்களுக்கே தெரியும்.” என்று அவள் சிணுங்கினாள்.
அவளது சிணுங்கலில் அவனது பார்வை சற்றே மாற, அவளுள் படபடப்பு வந்தது. அவளது முகத்தில் இருந்து அதைப் படித்தவன், சட்டென்று தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தான்.
இயல்பான குரலில், “தெரியும் தான்.. நீ என்ன தெரிந்து வைத்திருக்கிறாய் என்று தெரிந்தால் தானே, நான் விளக்கம் சொல்ல முடியும்.” என்றான்.
மெல்லிய குரலில் அவன் முகம் பார்க்காமல், “நீங்க நேத்துச் சொன்ன அர்த்தத்தில் தான் அழைத்தாராம்.” என்றாள்.
“நான் என்ன சொன்னேன்?”
“ப்ளீஸ்”
“முதல் நாள் என்னிடம் தைரியமாகப் பேசிய பெண் எங்கே போனாள்?” என்று அவன் நகைப்புடன் கூற,
முறைப்புடன், “ஹ்ம்ம்.. காக்கா தூக்கிட்டு போயிருச்சு.” என்றாள்.
வாய்விட்டுச் சிரித்தவன், சிரித்து முடித்ததும் அவளது கையை தனது கைக்குள் அடக்கியபடி, “ரணசிம்ம ராஜானு இல்லை, பொதுவாவே ராஜாக்கள் தங்கள் மனைவியை தேவி என்று தான் அழைப்பர்.. நேற்று இலைமறை காயாகக் கூறியதை, இப்பொழுது நேரிடையாகவே கூறி விடுகிறேன்..
யாரும் நெருங்க முடியாத என்னிடத்தில் தைரியமாக வாதித்து, எனக்காக வருந்தி, எனது பின்புலத்திற்காக அல்லாமல், என் மீது உண்மையான பாசமும் நேசமும் காட்டிய இந்த தேவதையை, நான் மனப்பூர்வமாக விரும்புகிறேன்.
உன்னைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் நான் பார்வையால் கூடத் தீண்டியது கிடையாது.. என் காதலை நீ ஏற்கவில்லை என்றாலும், என் மனதினுள் நுழைந்த முதல் மற்றும் கடைசிப் பெண் நீ மட்டும் தான். என்னைத் திருமணம் செய்துக் கொள்ள உனக்குச் சம்மதமா, தேவி?” என்று கேள்வியில் முடித்தான்.
அவன் பேசியதைக் கேட்டு, அவளது கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. அவன் காதல் சொன்னதில் வந்த மகிழ்ச்சியும், இருவருக்கும் இடையே இருக்கும் அந்தஸ்து வேறுபாட்டால் எழுந்த கலக்கம், தான் பொய் சொல்லி இங்கே நுழைந்த விஷயம் தெரிந்தால் வெறுத்துவிடுவனோ என்ற பயம் என்று எல்லாம் சேர்ந்து அழுகையாக வெளியேறியது.
அவளது கண்ணீரைத் துடைத்து, அவளை தோளோடு அணைத்தபடி, “என்ன தேவி?” என்றான்.
“நான் ராஜவம்சம் இல்லை.”
“அதனால் என்ன? என் தாய் கூடத் தான் ராஜவம்சம் கிடையாது.”
“நான்.. நான்.. யாரும் இல்லாமல் அநாதை ஆசிரமத்தில் வளர்ந்தவள்.”
“நீ யாரும் இல்லாமல் அநாதை ஆசிரமத்தில் வளர்ந்தாய்.. நானோ தந்தை இருந்தும் விடுதியில் தான் வளர்ந்தேன்.” என்றவன், அவளது இரு கன்னங்களைப் பற்றி முகத்தை ஏந்தியபடி, அவளது கண்களைப் பார்த்து,
“இனி யாரும் இல்லை என்று சொல்லாதே.. நான் இருக்கிறேன்.. அதே போல் எனக்கு எல்லாமுமாக நீ இருப்பாய் தானே, தேவி?” என்றவனின் குரலில் காதலும் ஏக்கமும் சரி சமமாக இருந்தது.
அவனது காதலை தாங்கிக் கொண்டவளால், அவனது ஏக்கத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. சட்டென்று அவனை இறுக்கமாக அணைத்து, முகத்தை அவனது நெஞ்சில் அழுத்தமாகப் பதித்தாள்.
அவளது அணைப்பே அவளது சம்மதத்தையும் காதலையும் சொல்லி விட, அவன் அடைந்த மகிழ்ச்சிக்கும் நிம்மதிக்கும் வானமே எல்லை. இத்தனை நாட்கள் ஓடிய ஓட்டத்திற்கும், தனது வாழ்விற்கும் அர்த்தம் கிடைத்ததைப் போல் உணர்ந்தான்.