குழலிசை 7
சந்ராவிடம் பேசிவிட்டு தனது அறைக்குச் சென்ற மீனாட்சி, உடை மாற்றும் அறைக்குச் சென்று பழைய கைபேசியை எடுத்து, அந்த நபருக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள்.
“பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது.” என்று இவள் அனுப்ப,
“ராஜமாதா?” என்ற பதில் வந்தது.
“எஸ்.. இன்னைக்கு என்னைக் கூப்பிட்டு, அவங்க தான் என்னை இங்கே வரச் வச்சதா சொன்னாங்க.”
“நீ தெரிந்த மாதிரி காட்டிக்கலை தானே!”
“அதெல்லாம் ஷாக் ரியாக்சன் சரியா கொடுத்துட்டேன்.”
“குட்.. அப்படி என்ன நடந்தது?”
“சாயங்காலம் தோட்டத்தில் என் கூடப் பேசினப்ப, ராஜா சிசிடிவி ஆஃப் பண்ணச் சொல்லி இருக்கார்.”
“ஸோ, அவங்களைப் பொறுத்தவரை நீ உன் வேலையை ஆரம்பிச்சிட்ட.”
“எஸ்”
“நம்ம வேலை?”
“சில விஷயங்கள் சேகரித்து இருக்கிறேன்.. வேலை முடிந்ததும் சொல்றேன்.”
“சரி” என்றவர், “உன் வேலையும் தனியா நடக்குதோ!” என்று அனுப்பினார்.
“என் வேலையா! என்ன அங்கிள்?”
சிரிக்கும் முகவடி குறியீடுடன், “சைட் அடிக்க ஆரம்பிச்சுட்ட போல!” என்று அனுபினார்.
“அப்படி எல்லாம் இல்லை, அங்கிள்”
“தப்பில்லை.”
“என் நிலை எனக்குத் தெரியும்.” என்று அனுப்பியவள், “குட் நைட்” என்று அனுப்பி, கைபேசியை தனித் தனியாகப் பிரித்து, எப்பொழுதும் போல் அதன் இடத்தில் வைத்து விட்டு வந்து படுத்தாள்.
மெத்தையில் படுத்தவளின் நெஞ்சம் முழுவதும் மாறவர்மசிம்மன் தான் நிறைந்து இருந்தான். தனது மனம் அவன் மீது மையல் கொண்டுவிட்டதை புரிந்து கொண்டவள், தனது மனதிற்கு கடிவாளம் இடவே குறுஞ்செய்தியில் ‘தனக்கு எந்த எண்ணமும் இல்லை’ என்பது போல் தன் நெஞ்சறிய பொய் உரைத்தாள்.
ஆனால் காட்டாற்று வெள்ளத்தைப் போல் அவளது தடைகளை மீறி உணர்வலைகள் தாக்கி, அவன் மீது காதல் சுரக்கத் தான் செய்தது.
கண்களை மூடியவளின் மனக்கண்ணில் தோன்றிய மாறவர்மசிம்மன் அவளது இடையை அணைத்தபடி காதல் வழிந்த விழிகளுடன், “மனம் கவர்ந்த பெண்ணை தேவி என்று அழைக்கும் வழக்கமும் இருக்கிறது.” என்றான்.
சட்டென்று கண்களைத் திறந்தபடி எழுந்து அமர்ந்தாள்.
இடையில் இப்பொழுதும் அவனது கரத்தின் சூட்டை உணர்வது போல் தோன்ற, தனது இடையை தடவிக் கொண்டாள்.
பின் தலையை உலுக்கிக் கொண்டு, ‘இல்லை.. வேணாம்.. மனதை அலைபாய விடாதே..! அவன் ராஜவம்சத்தை சேர்ந்தவன்.’ என்று தனக்குத் தானே கூறிக் கொண்டவள், கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு, படுத்து உறங்க முயற்சித்தாள்.
சற்று நேரத்தில் உறங்கியவளின் கனவில் மாறவர்மசிம்மன் ரணசிம்ம ராஜாவாகத் தோன்ற, அங்கே அவனை அணைத்துக் கொண்டு நின்ற நறுமுகை தேவி அவளே.
அடுத்த நாள் மாலையில் அவளை சந்தித்த மாறவர்மசிம்மனை கண்டு, அவளை மீறி அவளது முகம் மலர,
அவனோ, “நேற்று இரவு ராஜமாதா எதற்கு உன்னை அழைத்தார்கள்?” என்று கேட்டான்.
“அது” என்று தயங்கியபடி அவள் பார்வையை தாழ்த்தி பதிலை யோசித்தாள்.
“ஹ்ம்ம்.. சொல்லு”
“அது.. நேத்து இந்த இடத்தில் இருக்கிற சிசிடிவி கொஞ்ச நேரம் ஆஃப் ஆகி இருந்ததாம்.” என்றாள்.
சட்டென்று உல்லாச மனநிலைக்கு மாறியவன் ரசகிய புன்னகையுடன், “அதைப் பற்றி காவல் தலைவனிடம் தானே விசாரிக்க வேண்டும்.. உன்னிடம் ஏன் கேட்டார்கள்?” என்றான்.
அவள் அவனை முறைக்க, அவன் அதை ரசித்துச் சிரித்தான்.
“இப்போ கூட தான் அணைத்து வைக்கப் பட்டிருக்கிறது” என்ற படி, அந்த நீண்ட கல் இருக்கையில் அவன் அமர, அவள் நகர்ந்து அமர்ந்தாள்.
“எதற்கு பயம்? இப்படிச் செய்துவிடுவேன் என்றா?” என்று கேட்டபடி, அவளது இடையை வளைத்து, தன்னை நெருங்கியபடி அமரச் செய்தான்.
இதை சற்றும் எதிர்பாராதவள், சிறு நடுக்கமும் அதிர்ச்சியுமாக அவனைப் பார்த்தாள்.
ஒற்றை விரலால் அவளது முகவடிவை அளந்த படி, “நீ என்ன பதில் சொன்ன?” என்று கேட்டான்.
தனது மனதை அடக்கி, அவனை விட்டு விலகியே இருக்க வேண்டும் என்று அவள் முடிவெடுக்க, அவனோ காதலில் வேகத்தைக் கூட்டினான்.
அவனது இந்த அதிரடி நெருக்கத்தில் அவளது இதயத்துடிப்பு வெளியே கேட்டுவிடும் அளவிற்கு வேகமாக அடித்துக்கொள்ள, விலக முயற்சித்தாள். ஆனால், அவளால் இம்மி கூட நகர முடியவில்லை.
“இப்போது உன்னுடைய பயம் என்ன தேவி?” என்று கேட்டபடி தனது முகத்தை அவள் முகம் அருகே கொண்டு வர,
எங்கே முத்தமிட்டு விடுவானோ என்ற பயத்தில் அவசரமாக, “பயம் இல்லையே.. பயம் இல்லை.” என்றாள்.
வாய்விட்டுச் சிரித்தவனை அவள் மெய்மறந்து, கண்ணிமைக்க மறந்து அப்படியே பார்த்துக் கொண்டு இருக்க, இதழ் குவித்து அவளது முகத்தில் லேசாக ஊதினான்.
சட்டென்று சுயம் பெற்றவள் கூச்சமும் நாணமுமாக தலையை தாழ்த்திக் கொண்டாள்.
அவளை அள்ளி அணைத்து இதழில் கவி பாட துடித்த மனதை பெரும்பாடுபட்டு அடக்கியவன், ‘என்னை வசியம் செய்து, உன் மீது பித்துப்பிடிக்க வைக்கிறாய் பெண்ணே!’ என்று மனதினுள் கூறிக் கொண்டான்.
பின் சுதாரித்துக் கொண்டு, “ராஜாமாதாவிடம் நீ என்ன சொன்ன?” என்று மீண்டும் வினவினான்.
அவள் அமைதியாக இருக்க, அவன், “தேவி” என்று அழைத்தான்.
அவள் தவிப்புடன் அவனைப் பார்க்க, அவன், “எதற்கு இந்தக் கலக்கம்?” என்று கேட்டான்.
“நான் தள்ளி உட்கார்ந்துக்கிறேனே, ப்ளீஸ்” என்று கெஞ்சியவளின் விழிகள் கலங்குவது போல் இருக்கவும், தனது கையை எடுத்துக் கொண்டான்.
அதற்கும் மனம் கலங்கினாள். அவளது மனமே அவளுக்கு எதிராக இருக்க, அவனது காதலை ஏற்கவும் முடியாமல், அவனை விட்டு விலகவும் முடியாமல் கலங்கித் தவித்தாள்.
அவன் கையை எடுத்த பிறகும், அவள் அப்படியே அமர்ந்து இருக்கவும், அவன் எழுந்துக் கொண்டான்.
அவள் இன்னமும் கலங்கிப் போய் அவனைப் பார்த்தாள்.
“ஐந்து நிமிடங்கள் கழித்து ரோஜாவனம் வா.. காவலாளி உன்னை தடுக்க மாட்டான்.” என்று கூறிவிட்டு ரோஜாவனம் நோக்கிச் சென்றான்.
தன்னை நிலைப்படுத்திக் கொள்ள சில நிமிடங்களை எடுத்துக் கொண்டவள், அவன் சொன்னது போல் ரோஜாவனம் சென்றாள்.
முதல் முறையாக ரோஜாவனம் அரண்மனையின் உள் நுழைந்தவளின் உடம்பு முழுவதும் சிலிர்த்தது. முன்பு வந்திருந்தால் எப்படியோ, நெஞ்சம் முழுவதும் மாறவர்மசிம்மன் மீது காதலை சுமந்திருப்பதோடு, முன்தினம் அறிந்துக் கொண்ட இந்த அரண்மனையின் வரலாறும் சேர்ந்துக் கொள்ள, மொத்தத்தில் அவள் அவளாக இல்லை.
அரண்மனையே அமைதியாக இருக்க, மாறவர்மசிம்மனை அவளது கண்கள் தேடியது.
“மேலே வா, தேவி.” என்ற குரலில் நிமிர்ந்து பார்த்தாள்.
கைகளை கட்டிக் கொண்டு அவளைப் பார்த்தபடி, மாடிப் படியின் கைபிடியில் சாய்ந்தபடி நின்றிருந்தான்.
அவனைப் பார்த்த படியே ஏறியவளின் மனம் அவனை நெருங்க நெருங்க உணர்ச்சிப் பிம்பமாக மாறிக் கொண்டிருந்தது.
அவள் கடைசி படி வந்ததும், “என்னுடன் வா!” என்று கூறி ஒரு அறையினுள் சென்றான்.