தன்னை முற்றிலுமாக தொலைத்தவனின் கரங்கள், மெல்ல இடையில் இருந்து மேல் நோக்கி பயணித்து அவளது செழுமையை வருட, அவளது பெண்மை விழித்துக் கொண்டது.
சட்டென்று அவனிடமிருந்து விலகியவள், அவன் முகம் காண முடியாமல் திரும்பி நின்று கொண்டாள்.
முதலில் சுவைத்துக் கொண்டிருந்த தேனமுது பிடுங்கப் பட்டதும், விழிக்கும் குழந்தையைப் போல் விழித்தவன், பின் சுய உணர்வைப் பெற்றான்.
அவன், “என்னை மன்னித்து விடு, தேவி.. என்னை மறந்து அவ்வாறு நடந்துக் கொண்டேன்..” என்றதும் சட்டென்று திரும்பியவள்,
“மன்னிப்பு கேட்டு என்னை பாவி ஆக்காதீர்கள் அரசே!” என்றாள்.
“இப்பொழுதே உன்னை கந்தர்வ மணம் புரிய ஆவல் கொள்கிறேன், தேவி. ஆனால் ஆறு திங்கள்(மாதம்) பொறுத்துக் கொள்.. முறைப்படி வந்து ஊரறிய உன்னை என் அரண்மனைக்கு அழைத்துச் செல்வேன்.” என்றான்.
“காத்திருக்கிறேன், அரசே!”
அவளை தோளோடு அணைத்தவன், “இப்பொழுதாவது உனது முழுப் பெயரைச் சொல் தேவி” என்றான்.
அவள் மென்னகையுடன், “நறுமுகை தேவி.. நித்திலை நாட்டின் இளவரசி” என்றாள்.
அவன், “பொருத்தமான பெயர்” என்றதும், அவள் நாணத்துடன் அவனைப் பார்த்தாள்.
சில நொடிகள் அவளது நாணத்தை ரசித்தவன், பின் சிறு கவலையுடன், “தேவி” என்று அழைத்தான்.
அவனது குரலின் பேதத்தை கண்டு் கொண்டவள், “என்ன அரசே! எதற்கு இந்தக் கலக்கம்?” என்று கேட்டாள்.
சற்று தயங்கியவன், “நான் திருமணம் ஆனவன்” என்றான்.
அவளோ மென்னகையுடன், “எனக்கு நாட்டை ஆளும் பட்டத்தரசி உரிமை வேண்டாம், அரசே..! தங்கள் இதயத்தை ஆளும் அரசியாக, நான் இருந்தால் போதும்.” என்று காதலுடன் கூறினாள்.
பெரும் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக அவளை அணைத்து, “என் தேவி.. என்றும் நீ மட்டுமே எனது இதயத்தை ஆளும் அரசி. ஆம், அரசியலுக்காக நடந்த முதல் திருமணத்தில் நான் காதலை உணர்ந்தது இல்லை. காதலை உணர்ந்ததும், உணரப் போவதும் என் இதயராணியான உன்னிடத்தில் மட்டும் தான் தேவி.” என்றவன் அவளது நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான்.
அதன் பின் மரத்தின் நிழலில் அமர்ந்தபடி இருவரின் நாட்டைப் பற்றிப் பேசியவர்கள், நேரம் போவது தெரியாமல் ஏதேதோ பேசினார்கள்.
அருகில் கேட்ட புரவியின் கனைப்பில், இருவரும் திரும்பிப் பார்த்தனர்.
புன்னகையுடன் எழுந்து தன்னைத் தேடி வந்த தனது புரவி அருகே சென்று தடவிக் கொடுத்தபடி, “தேவி.. இவன் தான் எனது சகோதரன், தீரன்” என்றவன்,
புரவியிடம், “தீரா.. இவள் தான் எனது இதயராணி நறுமுகை தேவி.” என்றான்.
அவன் எழுந்ததும் தானும் எழுந்த நறுமுகை தேவி மென்னகையுடன் நிற்க, அவளுக்கு வணக்கம் செலுத்துவது போல் புரவி தலை அசைத்து மெலிதாகக் கனைத்தது.
அவள் புன்னகையுடன் அதன் முகத்தை தடவிக் கொடுத்தபடி, “வணக்கம் தீரா” என்றாள்.
நேரம் ஆவதை உணர்ந்த ரணசிம்மன், “நாழி ஆகிறது, தேவி” என்றான்.
“தங்களின் வருகைக்காகக் காத்திருப்பேன் அரசே!” என்றாள்.
அவளது கரத்தைப் பற்றியவன், ராஜமுத்திரை கொண்ட தனது மோதிரத்தை அணிவித்து, அவளை இறுக்கமாக அணைத்து, அவளது இதழில் நீண்ட முத்தததை பதித்து விலகினான்.
பின் “காத்திரு தேவி” என்று கூறியபடி அவளது கரத்தினை அழுத்தமாகப் பற்றி விடுவித்தவன், தனது புரவி மீது தாவி ஏறினான்.
அவனது பிரிவை நினைத்து அவளது மனம் வெகுவாகக் கலங்கினாலும், வெளியே இன் முகத்துடனேயே அவனை வழியனுப்பினாள்.
“அப்புறம் என்னாச்சு?” என்று மீனாட்சி வினவ,
சந்ரா, “சொன்னது போல், ஆறு மாதங்கள் கழித்து பெண் கேட்டு அவர் போகவில்லை.” என்றார்.
“ஏன்? என்னாச்சு?” என்று சிறு பதைப்புடன் கேட்டாள்.
“அவர் ஆறு மாத அவகாசம் கேட்டது ரோஜாவனத்தை கட்டுவதற்காகத் தான்.. தோட்டத்தில் இருக்கும் குளமும் நறுமுகை தேவிக்காக அவர் உருவாக்கியது தான்.. இவற்றை அவர் கட்டி முடித்த நேரம் நாட்டில் போர் அறிவிப்பு வந்துவிட்டது.. தனது இதயராணியை கைப்பற்றுவதை சற்று தள்ளி வைத்த ராஜா, வீரர்களை போருக்கு தயார் செய்யும் பணியில் இறங்கினார்” என்றவர் மீண்டும் அந்த ராஜா காலத்திற்கே சென்றுவிட்டார்.
ஆதவன் மெல்ல தனது செங்கதிரை வீசத் தொடங்கியதும், போர் முரசு கொட்ட, அதன் ஒலி எட்டுத் திக்கும் எதிரொலித்தது. அந்த ஒலியைக் கேட்டு எழில்புர மக்கள் எவரும் அச்சம் கொள்ள வில்லை, அந்த அளவிற்கு தங்கள் அரசர் ரணசிம்மன் சுந்தர பாண்டியன் மீது நம்பிக்கை கொண்டிருந்தனர்.
ஆயுதங்கள் எளிதில் துளைக்க முடியாத பிரத்யேக கவசத்தை அணிந்து, முதுகில் வில் அம்பையும், வலது கையில் கூர்வாளையும் இடது கையில் கேடயத்தையும் ஏந்தியபடி, வீர்கள் முன் சீரும் சிங்கமாக வந்து நின்றான் ரணசிம்மன்.
“வீரர்களே! நமது நாட்டின் எல்லையை எதிரிகளின் நிழல் கூடத் தொட முடியாது என்பதை உணர்த்த நேரம் வந்து விட்டது.. நமது வீரத்தை நிரூபிக்கும் நேரம் இது.. வெற்றி நமதே! ஜெய் எழில்புரம்.” என்ற ரணசிம்மனின் வீர சொற்பொழிவின் எதிரொலியாக,
வீரர்கள் அனைவரும், “வெற்றி நமதே!” என்றும் “ஜெய் எழில்புரம்!” என்றும் வீரத்துடன் கூச்சலிட்டனர்.
“வெற்றி நமதே! முன்னேறிச் செல்வோம் வீரர்களே!” என்ற ரணசிம்மனின் கர்ஜனையில் வீரர்கள் ஆவேசத்துடன் போரிட முன்னேறினர்.
போர் தொடங்க, இரு பக்க வீரர்களும் ஒருவரை ஒருவர் தாக்கத் தொடங்கினர்.
ஒரு பக்கம், அம்புகள் சீறிப் பாய்ந்துக் கொண்டு இருக்க, ஒரு பக்கம் குதிரைப் படையும், மறுபுறம் யானைப் படையும் போரிட்டுக் கொண்டிருக்க, நடுவில் வாள் ஏந்திய வீரர்கள் போரிட்டுக் கொண்டிருந்தனர். எதிரி நாட்டு வீரர்களை தனது வாளுக்கு இரை ஆக்கியபடி வீரர்களை உடுருவியபடி நடுவே பிரவேசித்த ரணசிம்மன், எதிரி நாட்டு அரசனுடன் போரிடத் தொடங்கினான்.
ஈட்டிகள் உரசும் ஒலியும், வாள்கள் மோதிக் கொள்ளும் ஒலியும், யானைகளின் பிளிறலும், புரவிகளின் கனைப்பும், போர்க்களம் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருந்தது.
சண்டை வலுப்பெற்று வீரர்கள் இன்னும் ஆவேசத்துடன் போரிட, அங்கே குருதி ஆறாக ஓடியது.
உச்சி வெயிலில் வேர்வையாக வடிந்த குருதியை துடைக்கக் கூட நேரமின்றி, போரிட்டுக் கொண்டிருந்தனர்.
மாலையில் ஆதவன் மறையும் வேளையில், சங்கு முழங்கவும், யுத்தம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இருபுறமும் சேதாரம் ஏற்பட்டு இருந்தாலும், ரணசிம்மன் பக்கம் சொற்ப உயிர் சேதமே இருந்தது. ஆனால், எதிரி பாதி படை வீரர்களை இழந்து இருந்தான்.
கூடாரத்துக்குச் சென்றதும் வீரர்களின் காயங்களுக்கு மருந்திடப்பட்டது.
வீரர்களுக்கு மத்தியில் நின்றுக் கொண்டிருந்த ரணசிம்மன், “எழில்புரம் வீரம் விளைந்த பூமி என்று இன்னொரு முறை நிரூபித்து விட்டீர்கள் வீரர்களே! நாளையே நமக்கு வெற்றி கிட்டும்.” என்று வீர முழுக்கமிட,
“வெற்றி நமதே!” என்று வீரர்கள் உற்சாகத்துடன் கோஷமிட்டனர்.
மீண்டும் அடுத்த நாள் காலையில் தொடங்கிய யுத்தம் மதிய வேளையிலேயே நிறைவடைய, வெற்றிமாலையை சூடியது ரணசிம்மனே.
வீரர்களின் ஆரவாரத்துடன் ரணசிம்மன் நாடு திரும்ப, பட்டத்துராணி, அவனுக்கு வெற்றித் திலகமிட்டு வரவேற்றாள்.
“அடுத்து கல்யாணம் தானே!” என்று மீனாட்சி ஆர்வத்துடன் வினவ,
சந்ரா புன்னகையுடன், “ஹ்ம்ம்.. வெற்றிக்களிப்பு முடியும் முன்னே எழில்புரம் விழாக்கோலம் பூண்டது.. சொன்னது போல் ராஜ நறுமுகை தேவியை ஊரறிய திருமணம் செய்து கொண்டார். ரெண்டு பேரும் அப்படி ஒரு காதலுடன் வாழ்ந்தாங்களாம்.. ராணி விஷ காச்சலில் இறந்த கொஞ்ச நாளில் அரசரும் இறந்துட்டாராம்.” என்றார்.
மீனாட்சி மெய் சிலிர்க்க, “என்ன ஒரு காதல் இல்லையா, சந்ராமா” என்றாள்.
குழலின் இசை தொடரும்…