குழலிசை 6
ராஜமாதா அறையில் இருந்து வெளியே வந்த மீனாட்சியை பிடித்துக் கொண்ட சந்ரா, தனது அறைக்கு அழைத்துச் சென்றார்.
அறையினுள் சென்று கதவை அடைத்து, அவளது கையைப் பற்றிக் கொண்டு கலங்கிய கண்களுடனும் நெகிழ்ந்த குரலிலும், “ராஜாவை நல்லா பார்த்துக்கோங்க, தாயி.. இனி இந்தக் கட்டை நிம்மதியா வேகும்.” என்றார்.
“ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க?”
“உங்களுக்கு தெரியாது தாயி.. ராஜா பல கஷ்டங்களை தாண்டி வந்திருக்கிறார்.. வந்திருக்கார் என்ன! இப்பவும் அதே நிலை தான்.. புல்லாங்குழல் காற்றை உள்ளே வாங்கி இனிய இசையை வெளியே தருவது போல, ராஜா கஷ்டங்களை தனக்குள் வைத்துக் கொண்டு வெளியே நமக்கு மகிழ்ச்சியை தருகிறார்.. தன்னோட நாலாவது வயதில் சிரிப்பை மறந்தவர், சிரித்து இன்னைக்கு தான் பார்க்கிறேன்.. அதற்கு நீங்க தான் தாயி காரணம்..”
“நாலு வயதில் இருந்து அவர் சிரித்ததே இல்லையா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள்.
“ஆமா தாயி.. இதற்குள் உங்களுக்கே தெரிந்து இருக்கும், ராஜாவோட அம்மா ராஜவம்சம் கிடையாது.. அதனால தான், ராஜமாதா இன்று வரை ராஜாவை தன்னோட பேரனா ஏத்துக்கவே இல்லை.. தன்னோட மகனின் மகன் தனது வம்சம் தானே என்று அவங்க யோசிக்கவே இல்லை..
அவங்க மட்டும் ஏத்துக்கிட்டு இருந்தா, ராஜாக்கு இந்த நிலையே வந்து இருக்காதே! மக்கள் அனைவரும் இவரைக் கொண்டாட, வீட்டில் பாசமா பேச ஒரு ரத்த சொந்தமும் தயாரா இல்லை..” என்றவர் பெருமூச்சை வெளியிட்டு தொடரப் போக,
“மகாராணி நல்லவங்களாத் தானே தெரியுறாங்க!” என்றாள்.
“மகாராணி நல்ல குணவதி தான்.. மாற்றாந்தாய் போல, நடந்துக்கலை தான், ஆனா, அன்பும் காட்டலை.. அவங்க ராஜாவை ஆதரிக்கவும் இல்லை. வெறுக்கவும் இல்லை.. இளவரசர் மற்றும் இளவரசி மனதில் ராஜா மீது பாசத்தை வளர்க்கவும் இல்லை.. அத்தோடு அவங்களோட அண்ணனும் ராஜமாதாவும் இளவரசர் மற்றும் இளவரசி மனதில் ராஜா மீது ஏற்படுத்திய வெறுப்பை, களையவும் முற்படவில்லை”
“ஹ்ம்ம்..”
“மகாராஜா காதலித்து திருமணம் செய்து கொண்ட புண்ணியவதி தான் ராஜாவோட அம்மா.. ராஜாக்கு நாலு வயசு இருக்கும் போது காய்ச்சலில் படுக்கையில் விழுந்தவங்க எழுந்தக்கவே இல்லை..
அவங்க இறந்ததும், ராஜாவை காரணம் காட்டி மகாராஜாவை மறுகல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சு, தன்னோட அண்ணன் மகளை கட்டி வச்சாங்க ராஜமாதா.. ஆனா, இன்னொரு பக்கம் ராஜா மனதில் ‘இனி உன் அப்பா உனக்கு இல்லை’ என்ற பிம்பத்தை வளர்த்தாங்க.. ராஜா அதை நம்பலைனாலும், மகாராஜா அவரை விடுதிக்கு அனுப்பினதும், நம்ப ஆரம்பிச்சுட்டார்.. மகாராஜாக்கு அது புரிந்தாலும் அப்போ அவருக்கு வேறு வழியும் இல்லாததால் அப்படியே விட்டுட்டார்..”
“நாலு வயசில் ஹாஸ்டல் அனுப்பினாங்களா?”
“ஆமா தாயி.. அப்போ இருந்த சூழ்நிலைக்கு அது தான் சரின்னு மகாராஜாக்குப் பட்டுச்சு.. ராஜாக்கு கொஞ்சம் விவரம் தெரிந்த பிறகு எடுத்துச் சொன்னா புரிஞ்சுப்பார்னு, மகாராஜா நினைத்தார், ஆனா அதற்குள் ராஜா விலக ஆரம்பித்து இருந்தார்.. அரண்மனைக்கு வரதையே முற்றிலும் தவிர்த்து விடுதியிலேயே தங்கிட்டார்..
வெளி நாட்டுக்குப் போய் படித்த ராஜா அங்கேயே இருக்கப் போறதா முடிவெடுத்தப்ப மகாராஜா ஆடிப் போயிட்டார்.. ஒரே ஒரு முறை தன்னை வந்து பார்க்குமாறு கெஞ்சி, கஷ்டப்பட்டு தான் ராஜாவை அரண்மனைக்கு வர வச்சார்..
அப்புறம் சில உண்மைகளை மகாராஜா சொன்னதும் தான், தன்னைச் சுற்றி பின்னப்பட்ட சூழ்ச்சிகளை ராஜா புரிந்து கொண்டார்.. உடனே பொறுப்புகள் அனைத்தையும் தன் கையில் எடுத்தார்.. அதுக்கு அப்புறம் ஊரும் செழித்தது, மகாராஜா, ராஜா உறவும் செழித்தது.. யார் கண்ணு பட்டுச்சோ, மகாராஜா விபத்தில்..” என்று கலங்கியபடி நிறுத்தினார்.
“மகாராஜா என்ன உண்மைகளைச் சொன்னார்?”
“அதை ராஜா கிட்ட கேட்டுக்கோங்க தாயி”
“மகாராஜா இறப்பை பற்றி, சில பேச்சு இருக்குதே!”
“அப்படியா?”
அவள் அவரை முறைக்கவும், அவர், “அரண்மனையில் சூழ்ச்சிகளுக்கும் தந்திரங்களுக்கும் துரோகங்களுக்கும் வதந்திகளுக்கும் பஞ்சம் கிடையாது தாயி.”
“அன்னைக்கும் இப்படித் தான் சொன்னீங்க.. யாரு யாருக்கு துரோகம் செய்தா?”
“இதையும் ராஜா கிட்டயே கேளுங்க தாயி” என்றவர்,“நீங்க கேட்காமல், தக்க நேரத்தில் ராஜாவே உங்களிடம் சொல்லுவார்.” என்றார்.
அவரை அறிந்தவளாக, “ரோஜாவனத்தைப் பற்றியாவது சொல்லுங்க.” என்றாள்.
“ராஜாவோட அம்மா வாழ்ந்த அரண்மனை.. அவங்க இறந்த பிறகும், மகாராஜா அதை பராமரித்து வந்தார்.. ராஜா ஒரு படி மேல போய் பெயரிற்கு ஏற்றார் போல், ரோஜாவனமா மாற்றி விட்டார்.. மனம் சரி இல்லைனா, ராஜா அங்கே தான் போவார்.”
“இதெல்லாம் எனக்கே தெரியுமே! நான் கேட்டது பழைய ராஜா கதை.. அதாவது ரோஜாவனம் உருவான பல நூற்றாண்டுக் கதை”
“அதை தெரிந்து என்னமா செய்யப் போறீங்க?”
“பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராஜாக்களை பத்தி தெரிஞ்சுக்கிறதில எனக்கு ஆர்வம் அதிகம்.”
“சரி சொல்றேன்.. இந்த ரோஜாவனத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ரணசிம்மன் சுந்தர பாண்டியன் என்ற ராஜா தன்னோட காதல் ராணி நறுமுகை தேவிக்காக கட்டியது. வைரம், வைடூரியம், மாணிக்கம், மரகதம், முத்து என்று பஞ்சரத்தினத்தால் ராணியை அலங்கரிச்சாராம்.. ராணி இறந்ததும் ராஜா இந்த பொக்கிஷங்களை ரகசியமா மறைத்து வச்சிட்டாராம்.. இப்போ கூட நம்ம நாட்டில் எங்கேயோ இந்த பொக்கிஷப் புதையல் இருக்கிறது என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.”
“அதை விடுங்க.. ரணசிம்ம ராஜா நறுமுகை ராணியோட காதல் கதை உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டாள்.
“ஹ்ம்ம்.. தெரியும்.. ஒருமுறை வேட்டைக்கு போய் இருந்தப்ப தான், ரணசிம்மன் ராஜா, நறுமுகை தேவியை பார்த்தாராம்..” என்று கதை சொல்ல ஆரம்பித்தவர் அந்த ராஜா காலத்திற்கே சென்றுவிட்டார்…………………
அந்த அமைதியான வனத்தில் காற்றின் வேகத்தோடு வந்த அந்த சாம்பல் நிறப் புரவி எழுப்பிய ஒலியில், சில பறவைகள் பயத்துடன் பறந்து வேறு திசைக்குச் சென்றன.
அந்தப் புரவியின் மீது வசீகரத்துடன் கம்பீரமாக அமர்ந்திருந்தவன், பல நாடுகளை கைப்பற்றிய, வில் ஏந்துவதில் அர்ஜுனன் என்றும், வாள் சுழற்றுவதில் வேங்கை என்றும், வீரத்திலும் விவேகத்திலும் அரிமா என்றும், அறிவுச்சுடரொளி, நீதிமான், வெற்றி சிகாமணி என்று பல பெயர்களைப் பெற்ற பாண்டிய மன்னன் ரணசிம்மன் சுந்தர பாண்டியன்.
சிறிது தூரம் சென்றதும் ஒரு ஓடையைக் கண்ட ரணசிம்மன் தனது புரவியின் களைப்பை உனார்ந்தார் போல், அதன் கழுத்தை தடவியபடி, “தீரா, சற்றே ஓய்வு எடுக்கலாம்.” என்றான்.
அவனது கூற்றைப் புரிந்து கொண்ட ‘தீரன்’ என்ற அந்தப் புரவி மெல்ல நின்றது. குதித்துக் கீழே இறங்கிய ரணசிம்மன், ஓடைக்குச் சென்று முகம் மற்றும் கரங்களை அலம்பிவிட்டு, நீரைப் பருகினான். புரவியும் அவன் அருகே வந்து நீரைப் பருகியது.
பின் புரவியை தட்டிக் கொடுத்தவன் மென் நகையுடன், “அரை நாழிகை இங்கே களைப்பாறு தீரா.. வேட்டை ஆடிவிட்டு வருகிறேன்.” என்று கூற, புரவி சம்மதம் கூறுவது போல் தலையை சிலுப்பியது.
தனது வில் அம்பை எடுத்துக் கொண்டு வனத்தின் உள்ளே சென்றான். ஓர் இடத்தில் மான் ஒன்றைக் கண்டவன், சப்தம் எழுப்பாமல் அதை வீழ்த்த, குறி வைத்தான். அவனது அம்பு சீறிப் பாய்ந்த நொடி, அவனை நோக்கி இரண்டு அம்புகள் இடதுபுறத்தில் இருந்து பாய்ந்து வந்தது. ஒன்று இவனது மூக்கை உரசியபடி இவனைத் தாண்டிச் செல்ல, மற்றொன்று இவன் எய்த அம்பை முறியடித்தது.