“பாப்பா, எங்க இருக்கா?”
“நான் பால்கனியில் தான் இருக்கேன்.. சொல்லுங்க”
“இன்னைக்கு ஏதும் முக்கியமான வேலை இருக்குதா? லீவ் போட்டுட்டு வீட்டில் இருக்க முடியுமா?”
“என்னாச்சு? லீவ் போடுறது ஓகே! ஆனா, இன்னைக்கு மலரை கூட்டிட்டு காலேஜ் போகணும்.”
“ஓ! அதை மறந்துட்டேன்.. ஓகே… நீங்க அந்த வேலையை முடிச்சுட்டு வீட்டுக்கு வாங்க. ஒரு முக்கியமான விசயம் பேசணும்.. பாப்பா கூட நீங்க இருக்கிறது பெட்டர்.. அதான் கேட்டேன்.”
“கொலையாளி யாருனு, கண்டு பிடிச்சிட்டீங்களா?”
“கிட்டத்திட்ட நெருங்கிட்டேன்.. என் யூகம் தப்பாது.. பாப்பா கிட்டயும் சில கேள்விகள் கேட்கணும்.. அதான்…”
“சரி.. நான் வந்ததுக்கு அப்புறம் பேசலாம்.”
“ஹும்ம்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தான்.
‘லயனி உடைந்து போற அளவுக்கு, யாரா இருக்கும்!’ என்ற யோசனையுடன் உள்ளே வந்தவனின் தோளில் கை வைத்தவள்,
“என்னாச்சு கிங்? ஹாஸ்பிடலில் எதும் பிரச்சனையா?” என்று கேட்டாள்.
சட்டென்று சுதாரித்து மென்னகைத்தவன், அவளது இடையை வளைத்துப் பிடித்தபடி, “விட்டதை முடி” என்று கூறி கண் சிமிட்டினான்.
அவள் நீண்டதொரு இதழ் முத்தத்தை கொடுத்த பிறகே அவளை விட்டவன், “என்னோட வரதைப் பத்தி, மலர் கிட்ட சொல்லீட்டியா?” என்று கேட்டான்.
“முதல்ல தயங்கினாங்க.. அப்புறம் சரி சொல்லீட்டாங்க”
“நானும் தான் தயங்கினேன்.. எங்க விட்ட!”
“தப்பே செய்யாம, நீங்க ரெண்டு பேரும் ஏன் தயங்குறீங்க! அக்கா கிட்ட நேத்து சொன்னதைத் தான், இப்போ உங்க கிட்டயும் சொல்லப் போறேன். அக்கா வேலைக்கு போகப் போறது, இன்னைக்கு தான் உங்க சித்திக்கு தெரிய வரும்.. கண்டிப்பா ஏதாவது பேசுவாங்க. அதை மாமா சமாளிப்பாங்க..! இல்லைனா நான் பேசிக்கிறேன்.. அடுத்து, இதான் முக்கியமானது..
நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து போறதுக்கு, கண்டிப்பா கமெண்ட் செய்வாங்க.. அதுக்கு நான் பதில் சொல்லிக்கிறேன்.. ரெண்டு பேரில் யாராவது ஒருத்தர் பிச்சுக்கோனு ஓடப் பார்த்தீங்க! நிஜமாவே ஓட விட்டு அடிப்பேன்!” என்றாள்.
வாய் விட்டு சிரித்தவன், “சரிங்க மேடம்.. நீங்களே டீல் பண்ணுங்க.. நான் அமைதியா இருக்கிறேன்.” என்றான்.
“நான் என்ன பேசினாலும், நீங்க அமைதியா தான் இருக்கணும்.” என்று அவள் பூடகமாகக் கூற, அவன் யோசனையாகப் பார்த்தான்.
“என்ன!” என்று அவள் மிரட்டலாக வினவ,
“என்னவோ பிளான் பண்ணிட்ட… செய்..! நான் அமைதியா இருக்கிறேன்.”
“வாக்கு மாறக்கூடாது கிங்.”
“எதுக்கு இவ்ளோ ஸ்ட்ரெஸ் பண்ற?”
“நான் பேசும் போது புரியும்.”
“எப்படியும் நியாயம் இல்லாததை நீ பேசப் போறது இல்லை.. பார்த்துக்கலாம்.. வா.” என்றபடி அவளை அழைத்துச் சென்றான்.
வெற்றிவேந்தன் கல்லூரிக்கு கிளம்பி இருக்க, பெண்கள் அனைவரும் காலை உணவை முடித்ததும்,
தர்மலிங்கம், “ஆல் தி பெஸ்ட் மலர்.. நல்ல நேரத்தில் கிளம்பி போயிட்டு வா.” என்றார்.
பத்மாவதி, “எங்க போறா?” என்று வினவ,
மலர்கொடி அருகே இருந்த லயனிகாஸ்ரீ, அவளது கையை பிறர் அறியாமல் பற்றிக் கொண்டாள்.
வடிவழகி, “கூறுகெட்டவளே! கிளம்பும் போது யாராவது இப்படி கேட்பாங்களா?” என்றார்.
“பின்ன வேற எப்படி கேட்கிறது?” என்றவர் மலர்கொடியைப் பார்த்து குரலை உயர்த்தி, “ஏய்! சீவி சிங்காரிச்சி மினுக்கிட்டு எங்கடி கிளம்பிட்ட?” என்று கேட்டார்.
எப்பொழுதும் அவரது இப்படிப்பட்ட வார்த்தைகளில் துவண்டு விடும் மலர்கொடி, இன்றோ லயனிகாஸ்ரீயின் துணை தந்த துணிவில் அவரைப் பார்த்து, “வேலைக்கு போகப் போறேன் சின்னத்தை.” என்றாள்.
வார்த்தைகள் இன்னும் திடமாக வரவில்லை என்றாலும், முதல் முறையாக அவரை நேருக்கு நேர் பார்த்து அவள் பேசியதே, பெரிய மாற்றம் தான்.
அதை தாங்கிக் கொள்ள முடியாத பத்மாவதி, “என்ன வேலைக்கு போகப் போறியா? யாரைக் கேட்டு இந்த முடிவை எடுத்த?” என்று கத்தினார்.
“நான் தான் அவளை வேலைக்கு போகச் சொன்னேன்” என்ற தர்மலிங்கம், “மலர் வேலைக்குப் போறதில் உனக்கு என்ன பிரச்சனை?” என்று கேட்டார்.
சட்டென்று குரலை தணித்து, எரிச்சலையும் கோபத்தையும் மறைத்தபடி, “இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு சரி வருமா மாமா! சுந்தர் இருந்தா வேற! இப்ப போய்…” என்று இழுத்து நிறுத்தினார்.
“இப்போ தான் கண்டிப்பா போகணும்.. அவளோட மகனுக்கு அவ தானே துணை..! அப்போ வெளி உலகத்தை பார்த்து நிறைய தெரிந்துக்கிறது தான் நல்லது.. இதுக்கு மேல இதில் பேச எதுவும் இல்லை…” என்றவர், “வைத்தி ரெடியா?” என்று தம்பியை கேட்டார்.
“கிளம்பலாம் அண்ணா.” என்றபடி அவர் வரவும், இருவரும் கிளம்பினர்.
அடுத்து லயனிகாஸ்ரீ, வடிவழகி, கனிமொழி என்று ஒவ்வொருவராக மலர்கொடிக்கு வாழ்த்துக் கூற, அவள் மென்னகையுடன் அவற்றை ஏற்றுக் கொண்டாள். அதை வயிற்றெரிச்சலுடன் பத்மாவதி பார்த்துக் கொண்டு இருந்தார்.
“கிளம்பலாமா மலர்?” என்று மகிழ் கொற்றவன் கேட்டதும்,
பத்மாவதி வன்மமும் வெஞ்சினமும் கலந்த ஆணவச் சிரிப்புடன் லயனிகாஸ்ரீயைப் பார்த்து, “இவளை வேலைக்கு கிளப்பியது நீ தானே! இப்போ உன் வாழ்க்கையே போகப் போகுது.. என்ன புரியலையா? ஆனா, எந்த தைரியத்தில் உன் புருஷனை கூட அனுப்புற? வந்து ஒரு வாரம் கூட ஆகல, இல்லையா.. அதான் உனக்கு விசயம் தெரியல..! இதுங்க ரெண்டும் சேர்த்து அடித்த லூட்டி தாங்காம தான், புண்ணியவான் போய் சேர்ந்துட்டான்!” என்றார்.
கனிமொழி, “மகிழ், நீங்க கிளம்புங்க.” என்று அவர்களை கிளப்பப் பார்க்க,
“கொஞ்சம் இருங்க அத்தை.. ரொம்ப நாளா ஓடிட்டு இருக்க பஞ்சாயத்தை, முடிச்ச அப்புறம் கிளம்புவாங்க.” என்று லயனிகாஸ்ரீ கூறியதில், பத்மாவதி தவறாகப் புரிந்து கொண்டு, வெற்றிச் சிரிப்பு சிரிக்க,
கனிமொழி, “நான் சொல்றேன்ல அவங்க கிளம்பட்டும்.” என்றார்.
அவள் அமைதியாக மகிழ் கொற்றவனைப் பார்க்க, அவன், “என்ன பேசணுமோ? இல்லை, கேட்கணுமோ… கேளு!” என்றான்.
கனிமொழி, “மகிழா” என்று ஆரம்பிக்க, அவரை இடையிட்டு, “நீங்க உங்க மகனுக்காகப் பேசாமல் இருக்கலாம். ஆனா, நான் என்னோட கணவருக்காக பேசாம இருக்க மாட்டேன்.” என்ற லயனிகாஸ்ரீ, பத்மாவதியைப் பார்த்து, “அப்போ, ஆரி குட்டி ராசியால் ராஜா மாமா இறக்கலனு சொல்ல வரீங்க… ரைட்!” என்றாள்.
“அது!” என்று சற்றே திணறிய பத்மாவதி, “அதுவும் தான்” என்று இழுத்தார்.
“இரண்டில் ஏதாவது ஒன்னைத் தான் சொல்லணும்.. ஆரி குட்டி ராசினு நீங்க சொல்றதில், பெரிய ஓட்டை இருக்கே! அவன் பிறந்த அன்னைக்கு ஒன்னும் ராஜா மாமா இறக்கலயே!”
“அது.. ஆரி வீட்டுக்கு வர அன்னைக்கு தானே இறந்தான்.. அதான் அப்படி நினைத்து சொன்னேன்.”
“அப்படிப் பார்த்தாலும், மலர் அக்கா ஹாஸ்பிடலில் இருந்து அவங்க வீட்டுக்கு தான் ஆரிக் குட்டியை தூக்கிட்டு போறதா இருந்தாங்க.. ஸோ… உங்க லாஜிக் படி பார்த்தா, அவன் ராஜா மாமாவை விட்டு விலகிப் போனதால் தான், அவர் இறந்து இருக்கார்.”
“ஹ…”
“என்ன சரி தானே!”