அன்று இரவு கூடலின் பின், தன்னவனின் நெஞ்சில் தலை வைத்து படுத்தபடி, மலர் மற்றும் தர்மலிங்கத்திடம் பேசியதை கூறினாள். தர்மலிங்கத்திடம் பேசியதில், அவர் மனம் திறந்து பேசியதை மட்டும் கூறவில்லை.
அவள் கூறியதை அமைதியாகக் கேட்டவன், “மலருக்காக தயா பத்திய உண்மையை இப்பவே சொல்லிட்டியா?” என்று கேட்டான்.
“ஹும்ம்”
“தர்மம் தலை காக்கும்னு ஓவரா நம்பிடாத…” என்று கிண்டல் செய்தான்.
“ப்ச், கிங்!” என்றபடி அவள் அவனது புஜத்தில் தட்ட,
மென்னகையுடன், “நிஜமா தான் சொல்றேன்.. தனா அக்கா ஹைபர் ஆகிட்டா, இவர் டோட்டலா மாறிடுவார்.” என்றான்.
“பார்த்துக்கலாம்” என்றவள், “எனக்கு என்னவோ நீங்க மாமாவை சரியா புரிஞ்சுக்கலையோனு தோணுது.” என்றாள்.
“நேத்தும் இப்படி தான் சொன்ன…! அவர் என்னை கனிவா, ஏக்கத்துடன் பார்க்கிறதா வேற சொன்ன…! ஆனா.. ப்ச்.. எப்படி சொல்ல..? இத்தனை வருஷம் அவர் கூடவே ட்ரவல் செய்துட்டு இருக்கிறேன்.. சொல்றது நீயா இருக்கப் போய் மறுக்காம இருக்கேன். ஆனா, என்னால் ஏத்துக்கவும் முடியல…”
“இத்தனை வருஷமும் ஒட்டாத ரயில் தண்டவாளமா தானே ட்ரவல் செய்துட்டு இருக்கிறீங்க!” என்றபடி நாடியை அவன் நெஞ்சில் பதித்து அவன் முகம் நோக்கியவள், தர்மலிங்கம் மனம் விட்டு பேசிய அனைத்தையும் கூறினாள்.
சில நொடிகள் மௌனத்தில் கழிய, அவன் கன்னத்தை பற்றியபடி, “கிங்!” என்றாள்.
அவள் கை மீது தனது கையை வைத்து, அவளது கையை அழுத்தியவன், “இந்த பன்னிரண்டு வருஷம் என்ன செய்தார்? நாங்க விலகினா, அதட்டி உட்கார வச்சு பேசி இருக்க வேண்டியது தானே…! அவன் மருகினா, இவர் துடித்தாராம்! துடித்து எண்ணத்தை கிழிச்சார்…!
ஒரு பெயரில் கூட, மாற்றத்தை கொண்டு வர முடியலை! இவரெல்லாம்… என்ன பார்க்கிற? தனக்கு மகன் தான் பிறப்பான்னும், அவன் அழகுக்கே ராஜாவா இருப்பான்னும் சொல்லி, அவன் பிறக்கிறதுக்கு முன்னாடியே பெரியம்மா வச்ச பெயர் தான் ‘சுந்தர் ராஜன்.’
ஆனா, என்னைத் தவிர யாரும் அவனை ராஜானு கூப்பிட மாட்டாங்க.. அதுக்குக் காரணம் சித்தி. தனா அக்கா மூலம் ‘அம்மாவை கொன்னவன் ராஜாவா! சுந்தர்னு கூப்பிடுங்க’னு சொல்லி, எல்லோரும் அப்படி தான் கூப்பிடுவாங்க.. எனக்கு என்னோட அம்மா வைக்க நினைத்த நேம், மகிழ் வேந்தன். ஆனா, வேணும்னு அதை மாற்றி மகிழ் கொற்றவன் ஆக்கியதும், சித்தி தான்..! என்னை கொட்டுனும், ராஜாவை சுண்டெலினும் கூப்பிடுவாங்க..!
அவங்க பையனுக்கு வெற்றி வேந்தன்னு வச்சு வேந்தன்னு கூப்பிடுவாங்க.. அதான் நான் வேணும்னே, அவனை வெற்றினு தான் கூப்பிடுவேன்” என்றவன் ஒருவித பிடிவாதக் குரலில்,
“வேண்டாம்.. எதையும் மாற்ற வேண்டாம்.. ராஜாக்கு கிடைக்காத அப்பா பாசம், எனக்கும் வேண்டாம்.” என்றான்.
ஒரே நாளில் மாற்ற முடியாது என்பதை உணர்ந்தவள், “ரெண்டு நாளா மதுரகீதம் போடவே இல்லை.. இப்போ போடலாமா?” என்று பேச்சை மாற்றினாள்.
அவன் தனது பேச்சை கவனிக்காமல், பழைய நினைவுகளில் சுழன்று கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்தவள், தனது கைபேசியை எடுத்து பாடலை ஒலிக்க விட்டாள்.
“இதழில் கதை எழுதும் நேரமிது
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆஆஆஆ…” என்ற பாடலை ஒலிக்க விட்டு, அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
கிட்டத்திட்ட பாடல் முடியும் தருவாயில் தான் சுயம் பெற்றவன், “ஹே! என்ன இந்த நேரத்தில் பாட்டு போட்டு இருக்க? ஆனா செம பாட்டு.” என்றான்.
“ரெண்டு நாளா மதுரகீதம் போடலனு, இப்போ போட்டேன்.” என்று கூறி கண் சிமிட்டினாள்.
“ஆமா.. ஏன் நீ போடல…?”
“போட விட்டா தானே!” என்றபடி அவள் அடுத்த பாடலை போடுவதற்காக கைபேசியை எடுக்கப் போக,
அவள் கையை பிடித்தவன் விஷமப் புன்னகையுடன், “ஏன்! நான் என்ன செய்தேன்!” என்றான்.
தன் இடையை இறுக்கிப் பிடித்து இருந்த அவனது மறுகரத்தை சுட்டிக் காட்டியவள், “இதோ இப்படி தான் ஆரம்பிக்கும்.” என்றாள்.
“அப்புறம்!”
“என்னையே மதுரகீதமா மாத்தி இசைக்க ஆரம்பிச்சிடுவீங்க.” என்றபடி சிரித்தாள்.
மோகமும் தாபமும் கலந்த பார்வையுடன், “எஸ்.. சரியா சொன்ன.. நீ தான் என்னோட மதுரகீதம்.. அதுவும் காதல் மதுரகீதம்!” என்றவன் சிரித்துக் கொண்டிருந்தவளின் இதழை விரலால் வருடியபடி,
“சிரித்துச் சிரித்து
என்னைச் சிறையிலிட்டாய்
கன்னம் சிவக்க சிவக்க வந்து
கதை படித்தாய்” என்று பாடினான்.
“நினைத்து நினைத்து நெஞ்சில்
அடைத்து விட்டாய்
பக்கம் நெருங்கி நெருங்கி
இன்பச் சுவை கொடுத்தாய்” என்று பதிலுக்கு அவள் பாட,
“பழகப் பழக இனிக்கும் இசை நீயே
எனக்காக மட்டும் தினம் தினம் இசைக்கும் மதுரகீதமே!” என்று தனது விருப்பம் போல் பாடினான்.
வாய்விட்டு சிரித்தவள், “கிங்! எப்படியெல்லாம் உங்க இஷ்டத்துக்கு பாடுறீங்க?” என்றாள்.
“எல்லாமே மெய்” என்றவன், “மெய்யோட பொருளை தேடுவோமா!” என்றபடி அவளது இதழை சிறையிட்டான்.
அதன் பிறகு, தனது கரம் மற்றும் இதழ் கொண்டு மதுரகீதத்தை இசைக்க ஆரம்பித்தான்.
அன்று காலையில், “இந்த பட்டன்ஸ் நீங்க போட்டுக்க மாட்டீங்களா?” என்று செல்லமாக முறைத்தபடி, லயனிகாஸ்ரீ தன்னவனின் சட்டை பொத்தான்களை போட்டு விட்டுக் கொண்டிருந்தாள்.
அவனோ அவளது வெற்று இடையை வருடியபடி, “நீ போட்டு விட்டா தானே, இப்படி செல்ல தீண்டல்…” என்றபடி லேசாகக் கிள்ளி, “செல்ல சீண்டல் எல்லாம் செய்ய முடியும்.” என்று கூறி கண் சிமிட்டினான்.
அவன் கிள்ளியதில் துள்ளிக் குதித்தவளின் இடையை பற்றி தன்னுடன் இறுக்கியவன், “லவ் யூ லயனெஸ்..” என்று கூறி ஆழமான இதழ் முத்தம் கொடுத்தான்.
விரிந்த புன்னகையுடன், “லவ் யூ ஸோ மச் கிங்” என்றவள், அவனது இதழில் முத்தமிட்டாள்.
“லவ் சொல்றப்ப லிப் லாக் தான் அக்செப்ட்”
“போதும் போதும்.. அதான் நீங்க கொடுத்தீங்களே!”
“இந்த உலகத்தில் கொடுக்கவும் வாங்கவும் திகட்டாத ஒரே விஷயம், முத்தம் மட்டும் தான்.. ஸோ போதும் சொல்லாம குடு.”
அவள் அவன் இதழை நெருங்கிய போது, அவனது கைபேசி இசைத்தது. அவள் சத்தமாகச் சிரிக்க, “இரு உன்னை வந்து கவனிச்சுக்கிறேன்.” என்று விட்டு தனது கைபேசியை எடுக்கச் சென்றான்.
கைபேசியில் தயாளனின் பெயரைப் பார்த்தவன், ‘எதுக்கு லயனிக்கு கூப்பிடாம, நமக்கு கூப்பிடுறார்?’ என்று யோசித்தபடி அவளிடம், “பேசிட்டு வரேன்” என்று விட்டு அழைப்பை எடுத்து, “ஹலோ” என்றபடி உப்பரிகைக்குச் சென்றான்.