அதன் பிறகு அன்றே வடிவழகி ஆச்சியிடம் இது பற்றி பேச, அவரோ, “தாராளமா செய் ராஜாத்தி.. நீ வந்து தான் அவளுக்கு விடிவு காலம் வரணும்னு இருக்குது.. எப்படியாவது உன்னை மாதிரி அவளையும் மாத்திடு.” என்று மனதார கூறினார்.
அடுத்து தர்மலிங்கத்திடம் போய் நின்றாள். வீட்டில் இருக்கும் அவரது அலுவலக அறையில் அவரை தனியாகச் சந்தித்தாள்.
தன்னிடம் முதல் முறையாக பேச வந்திருப்பவளை, அவர் யோசனையாகப் பார்க்க,
“நீங்க எனக்கு ஒரு உதவி செய்யணும்.” என்றாள்.
லேசாகச் சிரித்தவர், “உதவியை யாரும் இப்படி கேட்க மாட்டாங்க.” என்றார்.
“நான் கேட்கப் போறது உதவி தான், ஆனா, நீங்க கண்டிப்பா செய்யணும்.. அதான் இப்படி சொன்னேன்.”
மென்னகையுடன், “மலருக்கு, என்ன செய்யணும்?” என்று கேட்டார்.
“உங்க வெற்றிகளுக்கான காரணம் புரியுது.”
தனது கேள்வியில், அவள் ஆச்சரியம் கொள்வாள் என்று நினைத்த அவர் தான், அவளது புரிதலான பதிலில் ஆச்சரியம் கொண்டார்.
அவரது எண்ண ஓட்டத்தை, அவர் முகத்தில் இருந்து படித்தவள் மென்னகையுடன், “நானும் பிஸ்னெஸ் உமென் தான்.. சின்ன டிப்ஸ் தரேன்.. இஷ்டம் இருந்தா, ஃபாலோ செய்யுங்க.. உங்களோட எண்ண ஓட்டத்தை, உங்க முகத்தில் காட்டாமல் இருந்தா, இன்னும் டாப் லெவல்ஸ்.. ரீச் ஆவீங்க.” என்றாள்.
மென்னகையுடன், “தேங்க்ஸ்” என்றவர், “இந்த வயசுக்கு மேல டாப் லெவல் போனா என்ன? இல்லைனா என்ன…? என்ன இருந்தும் வீட்டில்..” என்று நிறுத்தியவர் பெருமூச்சொன்றை வெளியிட்டு, “டாபிக் டைவர்ட் ஆகுது.. நீ கேட்க வந்ததை கேளு.” என்றார்.
அவர் பேசியதை மனதில் குறித்துக் கொண்டவள், மலர்கொடி பற்றிப் பேசினாள்.
“மலர் அக்கா வேலைக்குப் போக, உங்க அனுமதி வேணும்.. ஆச்சி கிட்ட கேட்டேன்.. அவங்க சந்தோஷமா சரி சொல்லிட்டாங்க.. வீட்டில் நீங்க ஸ்ட்ராங்கா சொன்னா, தேவை இல்லாத பேச்சு வராது.”
“மலர் கிட்ட பேசினியா? அவளுக்கு ஓகேயா?”
தனது திட்டத்தைப் பற்றி விளக்கினாள்.
“சரி நீ ஏற்பாடு செய்.. நான் பேசுறேன்.”
“தேங்க்ஸ்.”
“அதை நான் தான் சொல்லணும்.. தேங்க்ஸ்”
எதற்கு என்று கேட்காமல் மென்னகையுடன், “சீக்கிரம், எல்லாம் சரியாகும்.” என்றாள்.
“நீ வந்த பிறகு அந்த நம்பிக்கை வந்து இருக்குது.” என்றவர், “உனக்கு ஏதும் பிரச்சனையா? நான் வேணா சரி செய்யவா?” என்று கேட்டார்.
“கேட்டதுக்கு தேங்க்ஸ்… ஆனா, உங்க உதவியை மறுப்பதற்கு சாரி.”
“இவனே வீட்டில் என்னத்தை கிழிச்சிட்டான்னு நினைச்சு வேணாம்னு சொல்றியா!”
லேசான மென்னகையுடன் மறுப்பாகத் தலை அசைத்தவள், “இந்த வயசிலும், யார் உதவியும் இல்லாம தொழிலை நடத்துறது ஈஸி இல்லை. வீட்டிலும் பெரிய அளவில் உங்க தப்பு இருப்பதா எனக்கு தெரியலை. தப்பே இல்லைனு சொல்ல மாட்டேன். ஆனா மூலகாரணமோ, முழு தவறும் உங்களிடம் இல்லைனு சொல்லுவேன்.
என்னோட கணிப்பு சரினா, பெரியத்தை நினைப்பில் கொஞ்சம் நாள் நீங்க எதையும் கண்டுக்காம இருந்தப்ப, சின்னத்தை வீட்டு கன்ட்ரோலையும், தனா அண்ணியையும் தன் கைப்பிடியில் வைத்து இருக்கணும். புதுசா வந்த அத்தையும், எதையும் மாற்ற நினைக்கலை. அதுக்கு அண்ணியோட உடல் நிலையும், அவங்க ரெண்டாந்தாரம் என்றதும் முக்கிய காரணமா போய்டுச்சு..!”
வேதனையான பெருமூச்சை வெளியிட்டவர், “நீ ரொம்ப புத்திசாலி.” என்றார்.
“இங்கே வந்ததில் இருந்து எல்லோரையும் கவனிக்கிறேனே! நீங்க அவரைப் பார்க்கும் போது, உங்க கண்ணில் பாசத்தையும் ஏக்கத்தையும் பார்த்து இருக்கிறேன். உங்க பையனோட பாசத்தை ரொம்ப மிஸ் செய்றீங்க தானே!” என்றாள்.
“என் பசங்களை நான் கொஞ்சியதே கிடையாது.. தூர இருந்து தான் ரசித்து இருக்கேன்.. நான் அவங்களை நெருங்கினாலே, தனா அழுது ஆர்பாட்டம் செய்ய ஆரம்பிச்சிடுவா..! கனி உடனே என்னை போகச் சொல்லிடுவா.. அவ தான் பசங்களை பார்த்துப்பா.. ஆனாலும், ஒருமுறை கனி சொன்னதை மீறி, மகிழனை தூக்கி முத்தம் கொடுத்துட்டேன். அன்னைக்கு தனாக்கு பிட்ஸ் வந்து, கஷ்டப்பட்டு தான் அவளைக் காப்பாத்தினேன். அதில் இருந்து பசங்களை நெருங்கியது இல்லை. ஆனா அவன்களுக்கு வேண்டியதை, யார் மூலமாவது கிடைக்கிறது போல் செய்திடுவேன்.
மகிழனை விட, சுந்தர் தான் ரொம்ப பாவம்.. சின்ன வயசில் அவனை தனா அம்மாவை நீ தான் கொன்னனு, வெறுப்புடன் திட்டும் போது, அவன் வெம்புறதை பார்த்து… எனக்கு நெஞ்சம் பதறி துடிக்கும். ஆனா, என்னால் எதுவுமே செய்ய முடியாது.
நானோ.. கனியோ.. பேசினா, பத்மா அதை திரித்துப் பேசி… தனாக்கு பிட்ஸ் வர மாதிரி செய்துடுவா..! தனா கல்யாணம் ஆகி போனதுக்கு அப்புறம், நான் பேச நினைத்தாலும் அவங்க அதை விரும்பல… என்னை விட்டு தூரமா போயிட்டாங்க.” என்றவர் கண்கள் கலங்கியபடி,
“ஒருத்தன் என்னை புரிஞ்சுக்காமலேயே போய் சேர்ந்துட்டான்.. இன்னொருத்தன் என்னை புரிஞ்சுக்கிறதுக்குள் நான் போய் சேர்ந்திடுவேன் போல…” என்றார்.
“உங்க அனுபவத்தில், நீங்க எவ்வளவோ பார்த்து இருப்பீங்க.. மனதை தளர விடாதீங்க.. மாற்றம் ஒன்று தான் மாற்றம் இல்லாதது.. உங்க மகன் உங்களுக்கு கிடைப்பார்.. இட்ஸ் அ ப்ராமிஸ்!”
லேசாகச் சிரித்தவர், “தேங்க்ஸ்” என்று கூற,
அவள் செல்லமாக முறைத்தாள்.
“உன் பிரச்சனை..” என்று அவர் ஆரம்பிக்க,
அவள், “தயா பார்த்துப்பான் மாமா.” என்றாள்.
“சரி உன் பிரச்சனையை சரி செய்துட்டு, உன்னை பற்றி சொல்லு.. இப்போ ஒன்னே ஒன்னு கேட்கலாமா?”
“கேளுங்க.. பதில் சொல்ல முடிந்தால் சொல்றேன்.”
சிரிப்புடன், “தயா, நிஜமாவே உன்னோட அண்ணா தானா?” என்று கேட்டார்.
“ஏன் இப்படி கேட்கிறீங்க?”
“உன் மேல் இருக்கும் அதிக பாசம், அக்கறை, கவனிப்பு எல்லாம் வச்சு அண்ணானு தான் தோணுது. ஆனாலும், ஏதோ ஒன்னு.. எப்படி சொல்ல…! சம் இன்ஸ்டின்ட்னு வச்சுக்கோயேன்!”
லேசாகச் சிரித்தவள், “தயா எனக்கு அண்ணனுக்கும் மேல.. அரவணைக்கும் போது தாய், கண்டிக்கும் போதும் காக்கும் போதும் அப்பா, செல்ல சண்டை போட்டு விளையாடிய போது அண்ணா, தோள் கொடுக்கும் போது தோழன், வழி நடத்தும் போது, வெல் விஷ்ஷர்.. ஆனா..” என்று நிறுத்தியவள்,
“உங்க இன்ஸ்டின்ட் சரி தான்..! நிஜத்தில் தயா என்னோட மெய்க்காப்பாளன். என்னோட பன்னிரெண்டாவது வயதில் இருந்து என்னோட நிழல் போல, என்னோடவே இருக்கிறான். மெய்க்காப்பாளன்னு அவனை சாதாரணமா நினைச்சிடாதீங்க. சார் ரெண்டு எம்.பி.ஏ டிகிரீ வச்சு இருக்கார். ரெண்டு காலேஜுக்கு சொந்தக்காரன்.” என்றாள்.
பின், “இதெல்லாம்..” என்று அவள் ஆரம்பிக்க,
“நீயா சொல்றவரை, கனி கிட்ட கூட சொல்ல மாட்டேன்.” என்றார்.
மென்னகையுடன், “தேங்க்ஸ்” என்றாள்.
“அப்போ, தயா காலேஜில் தான் மலர் வேலை பார்க்கப் போறாளா?”
“இல்ல.. அக்கா வேற காலேஜில் தான் வேலை பார்க்கப் போறாங்க.”
அவர் சரி என்பது போல் தலையை அசைக்க,
“சரி மாமா, நான் ரூமுக்கு போறேன்.” என்று கூறி வெளியேறினாள்.