அதிகரித்த இதயத்துடிப்புடன், வெட்கம் கலந்த அதிர்ச்சியுடன் மறுப்பாக தலையை அசைத்தாள்.
“நேத்து நைட் கொடுத்தியே!”
“அது ஏதோ, ஒரு ப்ளோல கொடுத்துட்டேன்…”
தனது நெருக்கத்தில் மட்டும், மென்மையான பூவாக மாறிவிடும் தன்னவளை, அணு அணுவாக ரசித்தபடி மென்னகையுடன், “இப்பவும் அதே ப்ளோல கொடு.. ஆனா இங்க…” என்றபடி, தனது உதட்டின் மீது விரலை வைத்துக் காட்டினான்.
சற்றே அதிர்ந்தாலும், நொடிப் பொழுதில் சுதாரித்து, “நீங்க உங்க லவ்வை சொன்ன பிறகு தரேன்.” என்றாள்.
“நான் தானே சொல்லல.. நீ உன் லவ்வை சொல்லிட்டியே! அப்போ கொடுக்கலாம்.. இப்போ கூட, உன் லவ்வை சொல்லிட்டு கொடு.”
“அதெல்லாம் முடியாது.. நீங்க சொன்ன பிறகு தான்…”
“நீ தான் 90’ஸ் கிட்”
“பரவாயில்லை.. இந்த விசயத்தில் நான் அப்படியே இருந்துக்கிறேன்” என்றவள், அவனுக்கு மீண்டும் அழகு காட்டினாள்.
அதை ரசித்துச் சிரித்தவன், “ஒரு முக்கியமான வேலை செய்யணும் வா.” என்றபடி அவளை அறையின் கதவருகே அழைத்துச் சென்று, “உன்னோட பிங்கர் பிரிண்ட் பீட் பண்ணனும்.. லாக் ஆட்டோமெடிக்.. திறக்கிறது தான் பயோமெட்ரிக்!” என்றான்.
“நீங்க இல்லாதப்ப… ரூமுக்கு உங்க சித்தி வந்தாங்களா? அதான் இந்த செக்யூரிட்டியா?”
“எஸ்.. அவங்க மட்டுமில்ல.. அக்காவும், சுபாவும் கூட வந்து இருக்காங்க.”
“வெற்றி?”
“அவன் வர மாட்டான்.”
“அவனை, நான் பார்க்கவே இல்லையே!”
“பைனல் இயர்.. ப்ராஜெக்ட்னு சுத்திட்டு இருக்கிறான்.. இல்ல… பிரெண்ட்ஸ் கூட வெளிய போய் இருக்கலாம்.. அப்படியே பிரெண்ட் வீட்டில் தங்கி இருப்பான் இந்த மாதிரி நேரத்தில், அங்கிருந்தே காலேஜ் போயிட்டு, சாயங்காலம் தான் வீட்டுக்கு வருவான்.”
“ஓ! சுபா அடிக்கடி வர மாட்டாளா?”
“வருவா.. இப்போ கன்சீவ் ஆகி இருக்கா.. இந்த நேரத்தில் அலைச்சல் வேணாம்னு.. எப்படியும் வளைக்காப்பு முடிச்சு இங்கே தான் வரப் போறானும், வராம இருக்கா!”
“ஹும்ம்.. மலர் அக்கா, ஏன் அவங்க வீட்டுக்கு போகாம, இங்க இருக்காங்க?”
“மலர் ஃபாமிலி மிடில் கிளாஸ் தான்.. சித்தி வேணும்னே அப்படி தான் பார்த்து பொண்ணு எடுக்க வச்சாங்க. மலர் அப்பா கொஞ்சம் சிக்.. அதனால் வீட்டோட கண்ட்ரோல், அவங்க அண்ணி கையில் தான்.”
“ஸோ… அவங்க இவங்களை ஏத்துக்க தயாரா இல்லை.”
“ஹும்ம்.. இதில் வேடிக்கை என்னனா.. இவங்களும் வீட்டு வாரிசு.. அது இதுனு சொல்லி, மலரை இங்கே இருக்க வச்சாங்க.. ஆனா, அந்த வாரிசைத் தான் ராசி இல்லாதவன்னு தூற்றுவாங்க…”
“அதை, சீக்கிரம் சார்ட் அவுட் பண்ணலாம்… ஹும்… நாம அவங்களுக்கு மறு கல்யாணம் செய்து வைக்கலாமா? சின்ன வயசு தானே! அதுவும் ஒரு வருஷம் மட்டும் தானே வாழ்ந்தே இருக்காங்க!” என்றாள்.
“நான் இதுவரை யோசிக்கல.. ஆனா, கண்டிப்பா செய்யலாம். சுயநலமா இருந்துட்டேனோ! முன்னாடியே ஸ்டெப்ஸ் எடுத்து இருக்கணும் இல்ல!”
“அப்படிலாம் இல்ல.. உங்களையும் அவங்களையும் சேர்த்து வச்சு பேசினதும், அவங்களை பத்தி யோசிச்சு கூட இருக்க மாட்டீங்க..! அதும் போக, ராஜா மாமா உங்களுக்கு ரொம்ப க்ளோஸ்.. ஸோ… உங்க மனசில் அவங்க ராஜா மாமாவோட மனைவியா தான் பதிஞ்சு இருப்பாங்க. எப்படியும் நான் சொன்னதை, இன்னும் கொஞ்ச நாளில் நீங்களே கூட யோசிச்சு தான் இருப்பீங்க.”
‘எனக்காக சொல்ற…’ என்பது போல் பார்த்து லேசாகச் சிரித்தவன், “கொஞ்சம் போராடனும்.. பிரச்சனை செய்றவங்களை சாமாளிக்கிறது கஷ்டம் இல்ல.. முதல்ல, மலரை ஒத்துக்க வைக்கணும்.. அவங்க மனசில் எந்தளவுக்கு ராஜா பதிந்து இருக்கான்னு தெரியலை…”
“பார்த்துக்கலாம் விடுங்க.. ரெண்டு பேரையும் கோர்த்து தான் விட முடியும்.. வாழ்க்கையை அவங்க தான் வாழனும்…”
“ரெண்டு பேரா! அப்போ மாப்பிள்ளை ரெடியா?”
“கொஞ்சம் யோசிச்சா, நீங்களே கண்டு பிடிச்சிடுவீங்க.” என்று கூறி கண் சிமிட்டினாள்.
அவன் விரிந்த புன்னகையுடன், “தயாவா…” என்றான்.
அவளும் விரிந்த புன்னகையுடன், கண்ணடித்து அதை உறுதி செய்தாள்.
பேசிய படியே… அவளது கைரேகையை கதவின் தாழிடும் கருவியில் பதிவு செய்து, சரியாக வேலை செய்கிறதா என்றும் உறுதி செய்து கொண்டான்.
“இந்நேரம் ஆச்சியும் மலரும் எந்திருச்சு இருப்பாங்க. கீழ போகலாம்.” என்ற போது,
மீண்டும் அவனது கைபேசி இசைத்தது.
எடுத்துப் பார்த்தவன், “நவீனா.. நீ பேசிட்டு கூப்பிடு.” என்றபடி கைபேசியை அவளிடம் கொடுத்துவிட்டு உப்பரிகைக்குச் சென்றான்.
பேசி முடித்து, “கிங்” என்று அழைத்தாள்.
அறையினுள்ளே வந்தவன்… அவள் அமர்ந்து இருந்ததையும், கதவு திறந்து இருப்பதையும் பார்த்து, “என்னாச்சு? ஏதும் பிரச்சனையா? தயா இங்கே வரப் போறாரா?” என்று கேட்டான்.
அவள் மென்னகையுடன், “தயா வரட்டும்.” என்றாள்.
சரியாக அப்பொழுது அறை வாயிலில் வெளியே நின்ற படி, “பாப்பா” என்று தயா அழைத்தான்.
அவள் மகிழ் கொற்றவனைப் பார்க்க, “உள்ள வாங்க தயா.” என்றான்.
தயாளன் உள்ளே வந்து கதவை மூடியதும்,
மகிழ் கொற்றவன், “என்னாச்சு தயா? என்ன பிரச்சனை?” என்று கேட்டான்.
அவன் புருவ முடிச்சுடன், “பாப்பா தான், எனக்கு ‘மிஸ்டு கால்’ கொடுத்தா….” என்றான்.
அப்பொழுது தான், அவள் தயாளனிடம் பேசவே இல்லை என்பதை கவனித்த மகிழ் கொற்றவன், “உங்க மேல கோபமா இருக்கானு நினைக்கிறேன்…” என்றான்.
சட்டென்று அவள் பக்கம் தயாளன் திரும்ப, அவள் அவனை தீர்க்கமாகப் பார்த்தாள்.
இலகுவான குரலில், “நவீனா, போன் செய்தாளா?” என்று கேட்டான்.
கடும் கோபத்துடன், “என்னை விட மூத்தவனா போயிட்ட, இல்ல… இந்நேரம் உன் கன்னம் பழுத்திருக்கும்.” என்றாள்.
மகிழ் கொற்றவன், “என்ன விசயம்?” என்றான்.