கோமதிநாதன், “என்ன தயா தனியா சிரிச்சிட்டு இருக்கிறீங்க?” என்று கேட்டான்.
“சும்மா ஒருமையிலேயே பேசுங்க அண்ணா.. தனியா சிரிக்கல.. மகிழோட சித்தியைப் பார்த்து தான் சிரித்தேன்.”
“அது என்ன, மகிழோட சித்தி?”
அவன் மென்னகையுடன், “அது அப்படி தான்.” என்றான்.
“புரிஞ்சுது.. சரி.. எதுக்கு அவங்களைப் பார்த்து சிரிச்ச?”
“பாப்பாவைப் பற்றி தெரியாம, இப்படி சில்லறத்தனமா நடந்துக்கிறாங்களேனு நினைச்சு சிரிச்சேன்.”
“ஸ்ரீ, உனக்கு பாப்பாவா?”
அவன் மென்னகையுடன், “சின்ன வயசில் இருந்து அப்படி கூப்பிட்டே பழகிடுச்சு.. பாப்பா ஒரு பக்கா ஆப்டிமிஸ்ட்.. எதிலும் நல்லதை மட்டும் தான் எடுத்துப்பா.. நானே பல முறை பிரமிச்சு இருக்கிறேன்.” என்றான்.
“ரொம்ப நல்ல குணம்.. எதிலோ படிச்சு இருக்கிறேன்.. அவங்க தன்னை மட்டுமில்ல, தன்னை சுற்றி இருக்கிறவங்களையும் சந்தோஷமா வச்சுப்பாங்கலாம்.”
“உண்மை தான்.. பாப்பா கூட இருந்தாலே… நம்மளை சுத்தி ஒரு பாசிட்டீவ் வைப் இருக்கிற பீல் இருக்கும். மனசு லேசா ஹாப்பியா இருக்கும்.”
“அதான், மகிழ் மொத்தமா கௌந்துட்டான்!” என்று சிரித்தான்.
இவர்களின் பேச்சை அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்த தனலட்சுமி, அங்கே வந்த லயனிகாஸ்ரீயிடம், “எல்லாத்தையுமே பாசிட்டீவ்வா மட்டும் தான் நீ பார்ப்பியாமே!” என்றாள்.
மென்னகையுடன், “ஆமா” என்றவள் தயாளனைப் பார்த்து, “உனக்கு பேச டாபிக் இல்லனு என்னைப் பத்தி பேசிட்டு இருக்கியா! பிச்சு பிச்சு..” என்று ஆள் காட்டி விரலை ஆட்டி மிரட்டினாள்.
தயாளன் மென்னகைக்க, “உன்னை பத்தி தெரிஞ்சுக்க, நான் தான் கேட்டேன்.” என்ற கோமதிநாதன், “மகிழ் எங்க?” என்று கேட்டான்.
“ஹாஸ்பிடலில் இருந்து போன் வந்தது.. பேசிட்டு இருக்காங்க.”
தனலட்சுமி லயனிகாஸ்ரீயைப் பார்த்து, “இன்னைக்கு தான் முதல் முறையா உன்னை பார்க்கிறேன்.. அண்ட் இன்னைக்கு தான் முதல் முறையா அத்தான் கிட்ட தலை குனிஞ்சு நின்னேன்.. இதில் என்ன பாசிட்டிவிட்டி நீ பார்க்கிற?” என்று கேட்டாள்.
“நீங்க சொன்னது உங்களோட கோணம்.. என்னை கேட்டீங்கனா..? இன்னைக்கு தான் முதல் முறையா, நீங்க ‘நம்ம மகிழ்’னு சொல்லி இருக்கிறீங்க.. அது எவ்வளவு பெரிய விசயம்! இதைவிட வேற என்ன பாசிட்டிவிட்டி வேணும்!
அண்ட் நீங்க சொன்னதுக்கு வரேன்.. நீங்க ஏன் தலை குனிந்து நின்னதை நினைக்கிறீங்க! அந்த இடத்தில், எனக்கு தெரிந்தது உங்க காதல்..! என்ன பார்க்கிறீங்க? உங்களுக்கு பிடிக்காத, இன்ஃபாக்ட் நீங்க வெறுக்கிற மகிழோட வைஃப் கிட்ட நீங்க சாரி கேட்டீங்க! அதுக்கு, நீங்க அண்ணா மேல் வைத்திருக்க காதலும், அண்ணா உங்க மேல் வைத்திருக்க காதலும் தான் காரணம். அந்த இடத்தில் ஜெயித்தது உங்க ரெண்டு பேர் காதல்..!” என்றவள் மென்னகையுடன், “உங்க காதலுக்கு என்னோட சல்யூட்!” என்றபடி கையை நெற்றிக்குக் கொண்டு சென்று வணக்கம் வைத்தாள்.
தனலட்சுமி மனதினுள் பிடித்தமின்மையை மீறி, சிறு பிரமிப்பு தோன்றியது தான். ஆனால், அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
“செம ஸ்ரீ.. யாரும் யோசிக்காத கோணம்.. எவ்ளோ அழகான எண்ணப்போக்கு! இந்த பாசிட்டிவிட்டி இருந்தால், வாழ்க்கையை ஜெயித்திடலாம்.” என்று கோமதிநாதன் மனதாரப் பாராட்டினான்.
அவளோ மென்னகையுடன், “ஜெயிக்கிறது, தோற்கிறதுனு என்னண்ணா இருக்குது! என்னைப் பொறுத்தவரை. இருக்கிறது ஒரு வாழ்க்கை, அதை சந்தோஷமா வாழ்வோமே! அவ்ளோ தான்.” என்றாள்.
“இங்க என்ன மாநாடு?” என்றபடி மகிழ் கொற்றவன் வர,
லயனிகாஸ்ரீ, “கிங் நல்லவரா, ரொம்ப நல்லவரானு ஆராய்ச்சி செய்துட்டு இருக்கோம்.” என்று கூறி கண்சிமிட்டினாள்.
தமக்கையை ஓரப்பார்வை பார்த்தபடி, “கெட்டவன்னு, ஆராய்ச்சி முடிவு வந்து இருக்குமே!” என்றான்.
“சச.. ரொம்ப கெட்டவன்னு தான் முடிவு வந்தது.”
விரிந்த புன்னகையுடன், “வாலு” என்றவன், அவளது தலையை லேசாகக் கலைத்தான்.
தனலட்சுமி… இருவரின் புரிதலையும், பழகும் விதத்தையும் ஆச்சரியத்துடன் பார்த்தாள்.
மகிழ் கொற்றவன், “என்ன தயா! இங்கே வந்த கொஞ்ச நேரத்திலேயே, இந்த பாப்பாக்கு காதலிக்க வேற யாரும் கிடைக்கலையானு தோணுதா?” என்று கேட்டான்.
அவனோ, “பாப்பா எப்போதுமே தி பெஸ்ட்டை தான் தேர்ந்தெடுப்பா..! உங்களை விட வேற யாராலும் அவளை சந்தோஷமா வச்சிக்க முடியாது.” என்றான்.
“நீங்க கூடவா!” என்று கேட்டு அவன் கண் சிமிட்ட,
தயாளன், “கண்டிப்பா என்னை விட, உங்க கூட பாப்பா ரொம்பவே சந்தோஷமா இருப்பா.” என்றான்.
அவன், ‘அப்படியா!’ என்பது போல், தன்னவளைப் பார்த்து புருவம் ஏற்ற,
அவளும் பார்வையால், ‘அதில் உங்களுக்கு சந்தேகமா கிங்!’ என்று பதிலளித்தாள்.
கோமதிநாதன், “டேய்! நாங்களும் இங்கே தான் இருக்கோம்.” என்று கிண்டல் செய்ய,
அவனோ, “இன்னும் நீங்க கிளம்பலையா மாமா!” என்றான்.
கோமதிநாதன் நெஞ்சில் கை வைத்தபடி, “டேய்.. ஒரு நாளுக்கு ஒரு ஷாக் கொடுடா..! என் லிட்டில் ஹார்ட் தாங்காது.” என்று கூற,
அதற்கும் அவன், “உங்க லிட்டில் ஹார்ட் தான் அக்கா கிட்ட சேஃபா இருக்குதே!” என்றான்.
“தனம் என்னைப் பிடி.. எனக்கு மயக்கமே வர மாதிரி இருக்குது.” என்ற அவனது கலாட்டாவில், அங்கே சிரிப்பலை கிளம்ப, தனலட்சுமியின் உதட்டோரத்தில் கூட சிறு மென்னகை பூத்திருந்தது.
இவர்களை மலர்கொடி சிறு ஏக்கத்துடன் பார்க்க, பத்மாவதியோ, வயிற்றெரிச்சலோடு பார்த்துக் கொண்டு இருந்தார்.
ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்த தர்மலிங்கத்திடம்,
வடிவழகி, “உன் மகன் இந்த வீட்டிற்கு மகாலட்சுமியையே கூட்டிட்டு வந்து இருக்கான்.. நீ வேணா பாரு.. இனி இந்த வீட்டில் சுபீட்சம் மட்டும் தான் நிறைஞ்சு இருக்கும்.” என்றார்.
தனியாக நின்றிருந்த மலர்க்கொடியிடம் சென்ற லயனிகாஸ்ரீ, “எங்க, நம்ம வீட்டோட வி.ஐ.பி?” என்று கேட்டாள்.
“ஆரியை கேட்கிறியா? தூங்கிட்டு இருக்கான்.. எழுந்திருக்கிற நேரம் தான்.”
“உங்களுக்கு யார் இந்த பெயரை வைத்தது?”
“என்னோட அப்பா.. ஏன் கேட்கிற?”
“உங்க அப்பா ஒரு தீர்க்கதரிசி.. மலர் போன்ற மென்மையான குரல் இருக்கிற கொடி இடையாளுக்கு, சரியான பெயர் மலர்கொடி தானே!” என்று கூறி கண் சிமிட்டினாள்.
“நீ வைக்கிற ஐஸ்க்கு கோல்ட் இல்ல, ஜன்னியே வந்துரும்.”
“அய்யோ, நான் உண்மைய தான் சொல்றேன்.. பிலீவ் மீ பேபிமா!” என்று அவள் நடிகர் வடிவேலு போலவே கூற, பல மாதங்கள் கழித்து, மலர்கொடி மனம் விட்டுச் சிரித்தாள்.
பத்மாவதியைத் தவிர, மற்ற அனைவருமே மலர்கொடியின் சிரிப்பை கண்டு மகிழ்ந்து, நிம்மதியும் கொண்டனர். தனலட்சுமி இதுவரை எப்படியோ, இந்த நொடியில் அவளால் அந்தச் சிரிப்பை வெறுக்க முடியவில்லை. மலர்கொடியின் சிரிப்பில், அவள் மகிழவும் இல்லை; வெஞ்சினமும் கொள்ளவில்லை.
சிறிது நேரத்தில் எழுந்து வந்த ஆரியன், சற்றே உடல் நிலை சரி இல்லாத காரணத்தாலும், புதிய ஆளிடம் சட்டென்று பேச முடியா குணத்தினாலும், லயனிகாஸ்ரீயிடம் பெரிதாகப் பேசவில்லை.