பத்மாவதி விடாமல், “அப்போ, உன் மகன் தப்பு செய்து இருக்கான்னு சொல்றியா?” என்று கேட்டார்.
“தப்பு செய்தால்னு சொன்னேன்…”
உடனே தனலட்சுமி, “அப்போ, நான் பொய் சொல்றேன்னு சொல்றீங்களா?” என்று கனிமொழியிடம் கோபமாக சண்டைக்கு வர,
பத்மாவதியின் உதட்டோரம், குரூரப் புன்னகை அரும்பியது.
கனிமொழி அப்பொழுதும் அமைதியான குரலில், “இல்லமா.. அப்பா சொன்னதை தான் நானும் சொல்றேன்.. நீயே நேரில் பார்த்து சொல்லி இருந்தா, மறுவிசாரணை இல்லாம அவனுக்கு தண்டனை தான்” என்றார்.
அதற்கு தனலட்சுமி பேசும் முன், வடிவழகி ஆச்சி, “நீங்க யாரும் என் பேரனை நம்ப வேண்டாம்.. போங்கடி போக்கத்தவள்களா…!” என்றார்.
தனலட்சுமி, “நீ வேணா பாரு ஆச்சி.. உன் பேரன், எவளோ… தரம் கெட்ட ஒருத்தியை இழுத்துட்டு தான் வரப் போறான்” என்றாள்.
“என்ன பேச்சு இது தனா? வாயை அடக்கி பேசு.” என்று அவர் அவளை சத்தமிட,
“உனக்கு தெரியாது ஆச்சி.. என் சின்ன மாமியார் சொன்னதில் பாதியைத் தான், நான் இங்கே சொல்லி இருக்கிறேன்.. மீதியை உன்னோட தங்கக் கம்பி வந்ததும் கேட்கிறேன்.” என்றாள்.
பத்மாவதி ஆர்வமாக, “அப்படி என்ன சொன்னாங்க தனா?” என்று கேட்க,
“அவன் வந்ததும் சொல்றேன் சித்தி.” என்றே கூறினாள். அதில் அவருக்கு கோபம் வந்தாலும், வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
“அவன் வர வரைக்கும் இப்படியே உட்கார்ந்து இருக்கிறதா? போங்க.. சாயங்காலம் பார்த்துக்கலாம்.” என்று கூறி அனைவரையும் வடிவழகி கிளப்பிவிட்டார்.
சொன்னதிற்கு பத்து நிமிடங்கள் முன்னதாக, மாலை 5.20க்கே வீட்டிற்கு வந்திருந்தனர்.
மகிழ் கொற்றவனைப் பார்த்ததும், வெளி காவலாளி வாயிற்கதவை திறந்துவிட்டான்.
மகிழுந்து உள்ளே சென்று நின்றதும்,
தயாளன், “முதல்ல நீங்க ரெண்டு பேரும் போங்க.. நான் கார் செட்டில் செய்து அனுப்பிட்டு வரேன்.” என்றான்.
இவர்கள் இருவரும் உள்ளே செல்ல, அவர்களின் திருமணக் கோலத்தைக் கண்டு, யாரும் பெரிதாக அதிரவில்லை என்றாலும், சிறு அதிர்வலை இருக்கத் தான் செய்தது.
வீட்டுக் கூடத்தில் குழந்தை ஆரியனையும், வெற்றி வேந்தனையும் தவிர, மற்ற அனைவரும் கூடி இருக்க, வேலையாட்களுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டு இருந்தது. குழந்தை உறங்கிக் கொண்டு இருக்க, மற்றவன் இன்னும் வீடு திரும்பி இருக்கவில்லை.
பத்மாவதி, “திருட்டுக் கல்யாணம் செய்த யாருக்கும் இந்த வீட்டில் இடம் இல்லை.. வெளியே போடா!” என்று குரல் எழுப்ப,
அதை சிறிதும் பொருட்படுத்தாத மகிழ் கொற்றவன், தன்னவளிடம் கையை நீட்ட, அவள் மென்னகையுடன் பற்றினாள்.
அவளை அழைத்துக் கொண்டு வடிவழகியை நோக்கி அவன் செல்ல,
பத்மாவதி, “என்னடா நான் பேசுறதை மதிக்காம போய்கிட்டே இருக்க…?” என்று கத்தினார்.
வடிவழகி முன் நின்றவன், “அழகி.. மை டார்லிங்..! சீமையில் தேடிக் கண்டு பிடிச்ச உன்னோட பேத்தி இவ தான். பேரு லயனிகாஸ்ரீ..! எங்களை ஆசீர்வாதம் பண்ணு.” என்றபடி தன்னவளுடன் அவர் காலில் விழுந்தான்.
அவர் முகம் கொள்ளா புன்னகையுடன், “ரெண்டு பேரும் நீண்ட ஆயுளோடு, பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழுங்க!” என்று வாழ்த்தினார்.
மகிழ் கொற்றவன் எழுந்து கொள்ள, அவர் முன் மண்டியிட்டு அமர்ந்து இருந்த லயனிகாஸ்ரீ, “வெறும் வாழ்த்து மட்டும் தானா?” என்று கேட்டாள்.
தனலட்சுமி, “நான் சொல்லலப்பா” என்று கூறிக் கொண்டு இருக்க,
பத்மாவதியும், “பாருங்க மாமா.. வந்ததும் வராததுமா அவ கேட்கிறதை! அவ குறி பணம் தான்.. இது சரிபட்டு வராது.. நம்ம குடும்பம் நல்லா இருக்கணும்னா, முதல்ல அவளை துரத்தி விடுங்க.” என்று கூறினார்.
ஆனால், இவர்களைக் கண்டு கொள்ளாமல் ஆச்சியும் பேத்தியும் தங்கள் உலகில் இருக்க, அவர்களை ரசித்தபடி மகிழ் கொற்றவன் நின்றிருந்தான்.
லயனிகாஸ்ரீ கண்ணில் இருந்த குறும்பைக் கண்டு கொண்ட வடிவழகி, “என்ன வேணும்? இந்த செயின்..” என்றபடி கையை தனது மூன்றுவட தங்கச் சங்கலியில் வைக்க,
அவர் கையைப் பிடித்து தடுத்தவள், “எனக்கு இதில் எல்லாம் விருப்பம் இல்லை அழகியே!” என்றாள்.
‘அதான் தெரியுமே!’ என்று மனதினுள் நினைத்தவர் சிரித்தபடி, “வேற என்ன வேணும்?” என்று கேட்டார்.
“இறுக்கி அணைச்சு ஒரு உம்மா.” என்று கூறி, கண் சிமிட்டினாள்.
சத்தமாகச் சிரித்த ஆச்சி, “என் பேரன் கிட்ட கேட்க வேண்டியதை என் கிட்ட கேட்கிறியே!” என்றார்.
“என்னோட கிங் கிட்ட தனி டீலிங்..! அழகி கிட்ட தனி டீலிங்!”
“உனக்கும் நான் அழகியா!”
“அவர் என் கிட்ட பேசும் போது, உங்களை அப்படி தான் சொல்வார்.. இல்லைனாலும் நீங்க அழகி தான்.”
“பேச வாயே திறக்காத என் பேரனுக்கு, நீ தான் சரியான ஜோடி!” என்றவர் அவள் கன்னங்களை பற்றி நெற்றியில் முத்தமிட்டு, “என்னைக்கும் இதே மகிழ்ச்சியுடன் இருடா தங்கம்.” என்று வாழ்த்தினார்.
அவரை இறுக்கமாக கட்டிக்கொண்டு, கன்னத்தில் முத்தமிட்டவள், “லவ் யூ அழகி” என்றாள்.
மீண்டும் சத்தமாகச் சிரித்தவர், “ஏதோ கருகுற வாடை வருதோ!” என்றார்.
“அதெல்லாம் வாய்ப்பில்லை!” என்று அவள் தன்னவனை சீண்டலாகப் பார்த்தபடி கூற,
அவனோ, “டார்லிங்.. உனக்கு எத்தனை லவ் யூ சொன்னாலும், எனக்கு சொல்றது போல் வராது.. அது தனி!” என்றான்.
அப்பொழுது தர்மலிங்கம், “அம்மா! என்ன இது? வீட்டுக்கு பெரியவங்களா அவனை கேள்வி கேட்காம, அவனுடன் சேர்ந்து கூத்தடிச்சிட்டு இருக்கிறீங்க!” என்றார்.
வடிவழகி, “இத்தனை நாள் இவன் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டிக்கிறான்னு புலம்பிட்டு, இப்போ இப்படி சொல்ற!” என்றார்.
“அதுக்குனு இப்படியா திருட்டுக் கல்யாணம் செய்துக்கிறது? அது சரியா?”
“ஆமாடா! அவன் வந்து நான் ஒரு பொண்ணை காதலிக்கிறேன்னு சொன்னதும், இந்த வீட்டில் உடனே சரி சொல்லிட்டு தான், மறு வேலை பார்ப்பீங்க! மாநாடு போட்டு என்னவோ கொலை குத்தம் செய்த மாதிரி பேசி, எப்படியும் கடைசியில் முடியாதுனு தானே சொல்லுவீங்க..! அதான், நான்… கல்யாணம் செஞ்சே பேத்தியை கூட்டிட்டு வானு சொன்னேன்.” என்று ஒரே போடாகப் போட்டார்.
தனலட்சுமி உடனே, “உன் உத்தமப் பேரனை காப்பாத்த, சும்மா உடான்ஸ் விடாத ஆச்சி!” என்று ஆரம்பிக்க,
“நீ சொன்னாலும், சொல்லலைனாலும்… என் பேரன் உத்தமன் தான்டி!” என்றார்.
“அதான், திருட்டு கல்யாணம் செய்தானோ?”
“நான் தான் சொன்னேன்னு சொல்றேனே!”
“பொய் சொல்லாத ஆச்சி.. இந்த சீம சிங்காரி பேரே உனக்கு இப்போ உன் பேரன் சொல்லி தான் தெரியும்!”
“அது, உங்க எல்லோருக்கும் தெரிறதுக்காக சொன்னான்.”
“அப்போ, ஏன் உனக்கும் நான் அழகி தானானு புதுசா பேசுற மாதிரி கேட்ட?”
“அது.. புதுசா தான் பேசுறேன்.. இன்னைக்கு தான் என் பேத்தி கிட்ட முதல் முறை பேசுறேன்.. முந்தா நேத்து தான் எனக்கே என் பேரனோட காதல் விசயம் தெரியும்..! அது கூட அவனா சொல்லல.. நடுராத்திரி ஒரு கெட்ட கனவு வரவும், இவனுக்கு போன் போட்டேன். அந்த நேரம் பார்த்து, ஒரு நர்சு வந்து உங்க மனைவினு ஏதோ பேசிட்டு போச்சு.. என்ன ஏதுனு நான் கேட்டப்ப தான், காதலிக்கிற விசயத்தை சொன்னான்.
பேத்திக்கு உடம்பு முடியலைனு நைட் நேரம் ஹாஸ்பிடல் சேர்த்தப்ப, வேற வழி இல்லாம கணவன் மனைவினு சொல்லிட்டதா சொன்னான். இதை தான் உன் சின்ன மாமியா, அரையும் குறையுமா கேட்டுட்டு… உன் கிட்ட வத்தி வச்சு இருக்கா..! நீயும் இங்க வந்து ஆடிட்டு இருக்க..! நல்ல வேளை, நான் இவனை கையோட கல்யாணம் செய்து பேத்தியை கூட்டிட்டு வரச் சொன்னேன்.”
அனைவரும் அவர் கூறிய கதையில், ‘ஆ’வென அவரைப் பார்த்தனர். அதில் மகிழ் கொற்றவன் மற்றும் லயனிகாஸ்ரீயுமே அடக்கம், என்ன, அவர்கள் இருவரும் அதை மனதினுள் மறைத்துக் கொண்டனர்.
சில நொடிகளில் சுதாரித்த தனலட்சுமி, “அவங்க, இவனை நேத்து பார்த்ததா தான் சொன்னாங்க!” என்றாள்.
“நேத்து டிஸ்சார்ஜ் ஆறதுக்கு முன்னாடி பார்த்து இருப்பா!”
“ஓஹோ! அப்படியே உன் பேத்தி உடம்புக்கு என்ன வந்துச்சுனு சொல்லிடேன்!”
“அது” என்று அவர் திணற,
நக்கலாக, “நான் சொல்லவா?” என்றவள் இகழ்ச்சியும் எகத்தாளமும் கலந்த குரலில் மகிழ் கொற்றவனைப் பார்த்து, “இவ வயித்தை கழுவி தானே, கூட்டிட்டு வந்து இருக்க!” என்றாள்.