
கீதம் 10
பயண ஏற்பாடு முகமையின்(travel agency) மூலம் ஏற்பாடு செய்திருந்த மகிழுந்தில், அவர்களின் பயணம் திருச்சியில் இருந்து தொடங்கிய பத்தாவது நிமிடத்தில், மகிழ் கொற்றவனின் கைபேசி இசைத்தது.
கைபேசியை எடுத்தவன் அழைப்பை ஏற்காமல், அதையே யோசனையுடன் பார்க்க,
லயனிகாஸ்ரீ, “யாரு?” என்று கேட்டாள்.
“அப்பா நம்பர்”
“எடுக்க வேண்டியது தானே!”
“கண்டிப்பா அப்பா பேச மாட்டாங்க.. அம்மா தான் பேசுவாங்க.. ஆனா, புதுசா இருக்குது.”
“முதல்ல அட்டென்ட் செய்யுங்க.. கட் ஆகிடப் போகுது.”
அழைப்பை ஏற்று மெளனமாக இருந்தவன், மறுபக்கம் இருந்து, “மகிழா” என்ற அன்னையின் குரலைக் கேட்ட பிறகே, “சொல்லுங்கம்மா” என்றான்.
“இன்னைக்கு, வீட்டுக்கு நீ வரேன்னு சொன்னியே!”
“ஆமாம்மா.. வந்துட்டு தான் இருக்கேன்.. இப்போ தான் காரில் கிளம்பி இருக்கேன்.. சாயங்காலம் வந்திடுவேன்.. என்ன விசயம்ம்மா?”
“சரிப்பா” என்றவர் இரண்டு நொடிகள் கழித்து, “உன் கூட யாரும் வராங்களா?” என்று கேட்டார்.
“யார் கேட்கச் சொல்றா? என்னோட சிஸ்டரா? இல்ல… உங்க சிஸ்டரா?”
“மகிழா!”
“உங்க வீட்டுகாரர், உங்களுக்கு போன் கொடுத்ததே அதிசயம்.. அதிலும், என் கிட்ட பேசுறதுக்காக கொடுத்தது உலக அதிசயம்!” என்றவன், “நான் பேசிட்டு இருப்பதை கேட்டுட்டு இருக்க எல்லோருக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன்.. நீங்க நினைக்கிற மாதிரி, நான் முட்டா பீஸ் இல்லை.” என்று கூறி அழைப்பைத் துண்டித்துவிட்டான்.
பின் அவன் யோசனையில் ஆழ,
ஐந்து நிமிடங்கள் கழித்து லயனிகாஸ்ரீ, “என்னாச்சு கிங்?” என்று கேட்டாள்.
“நம்ம விசயம், வீட்டிற்கு தெரிந்து இருக்குது.. எப்படினு யோசிக்கிறேன்…”
“எப்படி சொல்றீங்க?”
“இத்தனை வருசத்தில்… வெளியூர் போன எனக்கு, அம்மா போன் செய்றது இதான் முதல் முறை. அதுவும் என்னைப் பற்றி எதுவும் கேட்காம, நான் யாரையும் கூட்டிட்டு வரேனானு கேட்கிறாங்க.. இது அம்மாவோட இயல்பே இல்ல…”
“உங்களைப் பற்றி கேட்காம, நேரடியா கேள்வி கேட்டது கூட… உங்களுக்கு ஒரு ஹின்ட் கொடுக்க இருக்கலாமே! ஐ மீன் யாரோ சொல்லித் தான், அவங்க இந்த கேள்வி கேட்கிறாங்கனு தெரியப்படுத்த அப்படி செய்து இருக்கலாம்!”
லேசாகச் சிரித்தபடி, “அம்மா போன் செய்ததே, அவங்க இயல்பு இல்லையே! சரி, இதை விடு..! எப்படி நம்ம விசயம் தெரிந்து இருக்கும்? எதுவரை தெரிந்து இருக்கும்? இதைத் தான் இப்போ யோசிக்கணும்.” என்றான்.
தயாளன், “உங்க ரிலேட்டிவ் யாரும் இந்த ஊரில் இருக்காங்களா?” என்று கேட்டான்.
“இல்லை, ஆனா.. அக்கா ரிலேட்டிவ்ஸ் இருக்காங்கனு நினைக்கிறேன்…!”
“ஒருவேளை அவங்க ரெஜிஸ்டர் ஆபீஸ்ஸில் வேலை செய்றாங்களோ?”
“தெரியல…” என்றவனின் மூளை, ‘யார்! எங்கே பார்த்து இருப்பாங்க?’ என்று யோசித்துக் கொண்டே தான் இருந்தது.
‘ஹோட்டல் அண்ட் கோவிலில் பார்த்து இருக்க வாய்ப்பு இல்லை.. அப்போ, ஹாஸ்பிடல், ரிதன்யா கல்யாண மண்டபம்.. இல்லை, ரெஜிஸ்டர் ஆபீஸ்ஸில் தான், பார்த்து இருக்க வாய்ப்பு இருக்குது.’ என்று யோசித்தான்.
இந்த யோசனை ஒருபுறம் இருக்க,
ஓட்டுநரிடம், “ப்ரோ, சென்னை ரீச் ஆக எவ்ளோ நேரம் ஆகும்?” என்று கேட்டான்.
“ஃபோர் அண்ட் ஹாஃப் டு ஃபைவ் ஹவர்ஸ் ஆகும் சார்.”
மணியைப் பார்த்தவன், அது 2.30 என்று காட்டவும், “என்ன ப்ரோ இப்படி சொல்றீங்க! என் பிரெண்ட்ஸ் த்ரீ டு த்ரீ அண்ட் ஹாஃப் ஹவர்ஸ்ஸில் போய்டுவேன்னு சொல்லுவாங்களே!” என்றான்.
“நான் அவ்ளோ வேகமா போக மாட்டேன் சார்”
“ஆனா, எங்களுக்கு சீக்கிரம் போகணுமே!”
“என்னால் அவ்ளோ வேகமா போக முடியாது சார்.. நான் லாங் ட்ரிப், இதான் செகண்ட் டைம்.. சாரி சார்.”
மகிழ் கொற்றவன், ஓட்டுநர் அருகே அமர்ந்திருந்த தயாளனைப் பார்க்க, அவன், “உங்களுக்கு எத்தனை மணிக்கு ரீச் ஆகணும்?” என்று கேட்டான்.
“முதல் முறை போறோம்.. அதுவும் பிரச்சனை வேற ரெடியா இருக்குது.. விளக்கு வைக்கிறதுக்கு முன்னாடி போறது பெட்டர்.. ஸோ 5.30க்கு நம்ம வீட்டில் இருக்கணும்.”
“ரீச் ஆகிடலாம்.” என்ற தயாளன், “தம்பி நீ வண்டியை ஓரம் கட்டு.” என்றான்.
ஓட்டுநர் வண்டியை ஓரமாக நிறுத்தியதும், “நீ இறங்கி என் இடத்துக்கு வா.. நான் வண்டியை ஓட்டுறேன்.” என்றான்.
“சார்!”
“டைம் வேஸ்ட் செய்யாம இறங்கு தம்பி.” என்றபடி தயாளன் இறங்கி மறுபுறம் சென்று விட, ஓட்டுநர் வேறு வழி இல்லாமல் தயங்கியபடியே இறங்கி, தயாளன் இருந்த பக்கம் சென்று அமர்ந்தான்.
மகிழுந்து, இப்போது தயாளனின் கையில் சீறிப் பாய்ந்தது.
மகிழ் கொற்றவன், கைபேசியில் தனது அக்கா கணவர் கோமதிநாதனை அழைத்தான்.
அழைப்பை எடுத்த கோமதிநாதன், “எப்படி இருக்க மகிழ்? என்ன விசயம்? கூப்பிடாத ஆள், கூப்பிட்டு இருக்க!” என்று கேட்டான்.
“நல்லா இருக்கேன் மாமா.. நீங்க எப்படி இருக்கிறீங்க?”
“ரொம்ப நல்லா இருக்கிறேன்.. சொல்லு…”
“உங்க சொந்தத்தில் யாரும், திருச்சியில் ரெஜிஸ்டர் ஆபீஸ்ஸில் வேலை பார்க்கிறாங்களா?”
“இல்லையே மாப்ள.. ஏதும் ப்ராப்பர்டி பத்தி விசாரிக்கனுமா? இல்லை, ரெஜிஸ்டர் செய்யனுமா?”
“இல்ல மாமா.. இது வேற விசயம்.. நான் ஒரு பொண்ணை காதலிக்கிறேன்..” என்றவனின் பேச்சை இடையிட்டு,
“பார்டா!” என்று அவன் கூற, இங்கே லயனிகாஸ்ரீ கண்களை விரித்து சத்தமின்றி, ‘அப்படியா கிங்?’ என்று கேட்டாள்.
ஆள் காட்டி விரலை ஆட்டி அவளை மிரட்டியவன், “மாமா!” என்றான்.
சிரித்தபடி, “வாழ்த்துக்கள் மாப்ள..” என்ற கோமதி நாதன், “பொண்ணு திருச்சியா! கல்யாணம் செய்ய தான் ஹெல்ப் கேட்கிறியா? வீட்டில் ஒரு முறை பேசி பார்க்கலாமே, மாப்ள! நான் வேணா மாமா கிட்ட பேசட்டுமா?” என்று கேட்டான்.
“வீட்டில் என்ன நடக்கும்னு உங்களுக்கு தெரியாதா மாமா! அதனால் இன்னைக்கு காலையில் தான், திருச்சி கோவிலில் கல்யாணம் செய்துட்டு, ரெஜிஸ்டர் ஆபீஸ் போய் கல்யாணத்தை ரெஜிஸ்டரும் செய்துட்டேன்!”
“அடேய்…!”
“என்ன மாமா!” என்ற அப்பாவியான குரலில் கூற,
“இது உலகமகா நடிப்புடா!”
மகிழ் கொற்றவன் சிரிக்கவும்,
“சிரிக்காதடா! முதல் முறை நீயா போன் போட்டு இருக்கியேனு நம்பி எடுத்ததுக்கு.. உன்னால் முடிந்தளவு என்னை நல்லா வச்சு செய்யப் போற.. அதான…!”
“என்ன மாமா!”
“இப்போ எதுக்குடா போன் போட்டு உன் கல்யாண விசயத்தை சொன்ன! வீட்டில் பேசி சமாதானம் செய்யவா?”
“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் மாமா.. எனக்கு நீங்க ஒரே ஒரு ஹெல்ப் தான் செய்யணும்.”
“என் பொண்டாட்டி வாயை அடைக்கனுமா! அது நடக்கிற காரியமா?”
“அக்கா, நீங்க சொன்னா கேட்பாங்க மாமா.”
“என்னவோ போ! சரி, தங்கச்சி பேரு என்ன?”
“லயனிகாஸ்ரீ.”
“என்னோட வாழ்த்துக்களை சொல்லிடு”
“சரி மாமா”
“ஒரு பேச்சுக்காது பேசுறீங்களா மாமானு கேட்கிறியாடா! உன்னை மாதிரியே, அவளையும் குடும்பத்தை விட்டு விலக்கியே வைக்கப் போறியா?”
“அப்படியெல்லாம் இல்லை மாமா.. முதல்ல இப்போ எதுக்கு போன் போட்டேன்னு சொல்றேன்.. அப்புறம் பேசுங்க.”
“இன்னும் நீ முடிக்கலையா…!”
“இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே!” என்று சிரிப்புடன் கூற,
“அப்ப.. நீ ஒரு முடிவோட தான்டா இருக்க…”
“அக்கா, அங்க வீட்டுக்கு போய் இருக்காங்களா?”
“ஆமா, நான் காலையில் கிளம்பும் போது, போகப் போறதா தான் சொன்னா.. என்னாச்சு?”
“என்னைக்கும் இல்லாம இன்னைக்கு அம்மா, அப்பா போனில் இருந்து எனக்கு போன் போட்டு, எப்போ வருவேன்? யாரையும் கூட்டிட்டு வரேனானு கேட்டாங்க.. அதான் என் விசயம் எப்படி வீடு வரை போச்சுனு எனக்கு தெரியலை.. உங்க சொந்தம் தான், ரெண்டு மூனு பேர் இங்கே திருச்சியில் இருக்காங்க.. அதான் கேட்டேன்.”
“முதல்ல… ஏன் இந்த அவசர கல்யாணம்னு சொல்லு? லயனிகாஸ்ரீ வீட்டில் பேசுனியா, இல்லையா?”
“இப்போதைக்கு, அவளைப் பற்றிய விவரங்களைச் சொல்ல முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன் மாமா.. எங்க கல்யாணமும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தான் நடந்தது.. அவ ஊர் திருச்சி இல்லை.. அவ அவளோட பிரெண்ட் கல்யாணத்துக்கு வந்தா, நான் மெடிக்கல் காண்ஃபரென்ஸ் வந்தேன்.. எதுவும் முன்னேற்பாடா நடக்கலை.. எங்க கல்யாணம் இப்படி தான் நடக்கணும்னு இருக்குது போல….”
“என்னடா, இப்படி மொட்டையா சொல்ற?”
“நம்ம குடும்பத்தில், நான் நம்பும் ஒரே ஆள் நீங்க தான் மாமா.. அதான் என் கல்யாண விசயத்தை சொல்றேன்.. ஆனா, லயனி பற்றி இப்போ சொல்ல முடியாத சூழ்நிலை.. மன்னிச்சிடுங்க.”