
கீதம் 9
அந்தக் கோவிலில் மகிழ் கொற்றவனும் லயனிகாஸ்ரீயும் மணக்கோலத்தில் நிற்க… அவனது மறுபக்கம் சந்தோஷும், அவளது மறுபக்கம் தயாளனும் நின்றிருக்க, இவர்கள் எதிரே, லயனிகாஸ்ரீயின் பாட்டி வசந்தாம்பாள் நின்றிருந்தார். திருமண நிகழ்வுகளை தயாளன் ஏற்பாடு செய்திருந்த ஆட்கள், புகைப்படம் மற்றும் காணொளியாகப் பதிவு செய்து கொண்டிருந்தனர்.
சாமி பாதத்தில் வைத்து பூஜை செய்த பொன் தாலியை, அய்யர் மகிழ் கொற்றவன் கையில் கொடுத்தார்.
மகிழ் கொற்றவன் புன்னகையுடன் தன்னவளைப் பார்க்க, அவளும் புன்னகையுடன் அவனைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தாள். இருவருமே சூழ்ந்திருந்த பிரச்சனைகளை ஓரங்கட்டி விட்டு, தங்களுக்கான அந்த பிரத்யேக நிமிடங்களை மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் தான் எதிர் கொண்டனர்.
அவள் காதல் நிறைந்த விழிகளுடன் புன்னகைத்த படி, “லவ் யூ கிங்” என்று கூற,
தானும் புன்னகைத்தபடி அவளது கழுத்தில் பொன் தாலியை அணிவித்தவன், அதனுடன் கோர்த்திருந்த மஞ்சள் கயிற்றினில் மூன்று முடுச்சுகளைப் போட்டு, அவளது நெற்றியில் முத்தமிட்டான்.
சந்தோஷ், “கலக்குறியே மச்சி!” என்றபடி கை தட்ட, தயாளனும் மகிழ்ச்சியுடன் கை தட்டினான்.
“இதுக்கும், லவ் யூ கிங்.” என்று கூறி கண் சிமிட்டினாள்.
அதன் பிறகு, தாலி மற்றும் அவளது நெற்றி வகுட்டில் குங்குமம் வைத்தான். இருவரும் மூன்று முறை மாலையை மாற்றிக் கொண்ட பிறகு, அவளது கால்களில் மெட்டி அணிவித்தான்.
மெட்டி அணிவித்த பொழுது சந்தோஷ், “இதான் மச்சி முதல் பாடம்.. பொண்டாட்டி காலில் விழுறது.. ரொம்ப முக்கியமானதும் கூட.. நல்லா பழகிக்கோ.” என்று நண்பனை கிண்டல் செய்தான்.
தயாளன், “அனுபவமோ!” என்று அவனையே கிண்டல் செய்ய,
“ஆமா சார்.. அனுபவஸ்தன் சொல்றேன்.. கேட்டுக்கோங்க. உங்களுக்கும் பின்னாடி தேவைப் படும்.” என்று அசராமல் சந்தோஷ் பதில் கொடுத்ததில், அங்கே சிரிப்பலை எழுந்தது.
மகிழ் கொற்றவன், லயனிகாஸ்ரீ, தயாளன் மற்றும் சந்தோஷ் சேர்ந்து புகைப்படம் எடுத்த பிறகு, மகிழ் கொற்றவன் மற்றும் லயனிகாஸ்ரீ மட்டும் தனியாக சில புகைப்படங்களை எடுத்தனர்.
தயாளனின் கண்ணசைவில், காணொளி எடுத்துக் கொண்டு இருந்தவன்… கருவியை அணைத்தான்.
பின், மகிழ் கொற்றவன் மற்றும் லயனிகாஸ்ரீ வசந்தாம்பாள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர்.
“என்றும் இதே அன்புடனும், நல்ல புரிதலுடனும், மகிழ்ச்சியுடனும், நீண்ட காலம் வாழுங்க.!” என்று மனதார வாழ்த்தினார்.
“தேங்க்யூ பாட்டி.” என்றபடி அவரை கட்டிக் கொண்டவள், “மொபைலில் ஒரே ஒரு போட்டோ எடுக்கலாமே பாட்டி.. ப்ளீஸ்..” என்று கொஞ்சியபடி கெஞ்சினாள்.
மறுப்பாக தலை அசைத்தவர்… கண்டிப்பான குரலில், “நீ குழந்தை இல்லை லயா.” என்றார்.
அவளோ, “சந்தோஷ் ப்ரோ மொபைலில் எடுக்கலாமே! யாரும் பார்க்க வாய்ப்பில்லை.. பிரச்சனை வராது.” என்றாள்.
அவளை முறைத்தவர், “இப்போ நீ ஒரு பெரிய குடும்பத்தில் மருமகள்.. உன்னைப் பற்றி மட்டும் யோசிக்காம, எல்லோரையும் சேர்த்து யோசிக்கணும். எல்லாத்துக்கும் முதல்ல உன் கணவரைப் பற்றி யோசிக்கணும்.” என்றார்.
அவர் சொல்ல வருவதை புரிந்து கொண்ட மகிழ் கொற்றவன், “நான் ஏற்கனவே சொன்னது தான் பாட்டி.. என் பக்கம் யாரும் இல்லைனு எனக்கு வருத்தமே இல்லை. நீங்க வந்து எங்களை ஆசிர்வாதம் செய்ததில் தான், எங்க கல்யாணமே நிறைவு அடைந்து இருக்கு..! அவளுக்காக, சந்தோஷ் மொபைலில் போட்டோ எடுக்கலாமே!” என்றான்.
“இல்லை தம்பி. போட்டோ சரி வராது.. நேத்தே உங்க வீட்டிற்கு தெரியாம கல்யாணம் செய்றதில் எனக்கு உடன்பாடு இல்லைனு சொன்னேன். நீங்க ஏதேதோ சொல்லி என் வாயை அடைச்சுட்டீங்க. அதே மாதிரி, உங்க வீட்டு பெரியவங்க இல்லாம நான் மட்டும் வந்ததில், இப்பவும் எனக்கு உடன்பாடு இல்லை தான்..! நீங்க அவ்ளோ தூரம் சொன்னீங்கனு தான், நான் கல்யாணத்துக்கு வந்தேன். ஆனா, கண்டிப்பா போட்டோ வேணாம். உங்க வீட்டில் உங்க திருமணத்தை ஏற்று, ரிசெப்ஷன் வைக்கும் போதே நானும் போட்டோ எடுத்துக்கிறேன்..
திரும்பவும் சொல்றேன்.. நான் கல்யாணத்துக்கு வந்ததை சொல்லாதீங்க. அது வேற மாதிரி போக வாய்ப்பு இருக்குது. இப்போதைக்கு லயாவோட அடையாளத்தை மறைக்கப் போறதா சொல்றீங்க, அப்போ அவளோட செல்வ நிலை தெரியாத போது, நாங்க பிளான் செய்து உங்களை வளைத்துப் போட்டதா பேச்சு வரும்.. அதான் சொல்றேன்..”
“ஹும்ம்.. புரியுது பாட்டி.. நீங்க கவலைப் படாதீங்க.. நான் லயனியை நல்லா பார்த்துப்பேன். யாரும், அவளை தப்பா பேச விட மாட்டேன்.”
“ஹலோ கிங்! அவங்க பேசினா, நானே ஒரு கை பார்த்துப்பேன்.” என்று லயனிகாஸ்ரீ கூற,
வசந்தாம்பாள், “லயா” என்று அதட்டினார்.
“பாட்டி.. நீங்க தாத்தாவை மாமா மச்சான்னு ஆசையா கூப்பிட்டு இருப்பீங்க தானே! அதை மாதிரி தான் இந்த கிங்.” என்று கூறி கண் சிமிட்டினாள்.
அடுத்து அவர் பேசும் முன்,
மகிழ் கொற்றவன், “ஒரு ரெகுவெஸ்ட் பாட்டி.. இந்த ‘ஸ்பெஷல் டே’ இல், லயனி கிட்ட கோபமா பேசாதீங்களேன். நான் சொல்லி உங்களுக்கு தெரிவதற்கு இல்லை, லயனிய விட பொறுப்பான, தைரியமான பெண்ணா யாரும் இருக்க முடியாது. நீங்க, தயா, நான்.. நம்ம 3 பேர் கிட்ட மட்டும் தான் அவளோட குழந்தை குணம் வெளிப்படும். அது எனக்கு ரொம்பப் பிடிக்கும்..” என்று புன்னகையுடன் முடித்தான்.
அவர் நெகிழ்ச்சி கலந்த புன்னகையுடன், “ரொம்ப சந்தோசம் ப்பா.. இப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்குது. இவளை இவளுக்காக ஏத்துக்கிற, இவளை நல்லா பார்த்துக்கிற, பாதுகாக்கிற துணை அமையணுமேனு ரொம்ப கவலைப்பட்டு இருந்தேன், அதுக்கும் மேல இவளை புரிந்து கொண்டு தாங்குற கணவனா நீங்க கிடைத்து இருப்பது.. என்ன சொல்ல? இவ அப்பா செய்த புண்ணியமோ என்னவோ…! இப்போ தான் இவ அப்பா ஆத்மா சாந்தி அடையும்.” என்றார்.
பின், “அப்புறம் என்ன சொன்னீங்க! நான் கோபப்படக் கூடாதுனா? என் கோபத்தை மேடம் மதிச்சாங்கனு நினைக்கிறீங்க!” என்று கிண்டலாகக் கேட்டார்.
லயனிகாஸ்ரீ, “பொய்க் கோபத்துக்கெல்லாம் மதிப்பு கிடையாது.” என்று கூறி நாக்கை துருத்தி அழகு காட்டினாள்.
“வாலு” என்றபடி அவளது தலையில் கைவைத்து ஆட்டியபடி அவர் சிரிக்க, மகிழ் கொற்றவனும் சிரித்தான்.