அனிச்சவிழி அழகினிலே காதல் – 3 (1)

தலை விண் என்று வலித்தது. தந்தையின் பேச்சு புதிதில்லை தான் அவனுக்கு, ஆனால் இன்று அது வரைமுறையைத் தாண்டி, இத்தனை ஆண்டுகளாய் நட்புகளின் முன் சென்றாயனை தூக்கிய நிறுத்திய சுவர், இன்று தரையோடு தரையானதும் உடன் அவனை பேசிய அந்த சொல், உடல் கூசியே விட்டிருந்தது விஷ்ணுவிற்கு.

தந்தையானலும் சுயகௌரவம் பார்ப்பவனுக்கு அந்த சொல் கூசாமல் இருந்தால் தான் தவறே!

கண்கள் சற்று கலங்கி தான் போய்விட்டது. அணிந்திருந்த டீசர்ட் காலரில் அதை நாசுக்காய் துடைத்து விட்டாலும், அவன் முகமும் கண்களும் காட்டிக்கொடுத்துவிட்டது.

சங்கீத்திற்கே ஒரு மாதிரியான மனநிலை ஆகிவிட்டது‌. நாமும் தேவையில்லாமல் பேசிவிட்டோமோ என்று நினைத்தவனுக்கு விஷ்ணுவை, தன்னின் ஜிகிரி தோஸ்த்தை அப்படி சுத்தமாய் கண்கொண்டு பார்க்க முடியாமல் தலை திருப்பி நின்றுவிட்டான்.

தலையை அழுத்த கொதியபடி எழுந்து நின்றவன் முன்பு  தண்ணீர் வாட்டிலை நீட்டினார் அங்கு ஷட்டில் விளையாட வந்த ஒரு நபர்.

அவன் அவரை கேள்வியாய் நோக்க, “தண்ணி குடிச்சுட்டு முகம் கழுவிக்கோ ப்பா” என்றார் தன்மையாய்.‌

அந்த வார்த்தையின் தன்மை அவன் மனத் தணலை குறைத்திருக்க, மறுக்காது வாங்கிக் கொண்டான்.

அவரும் தன் போக்கில் ஏதோ யூகித்தபடி, “கஷ்டம்ன்னு ஒன்னு நம்மனால தாங்கிக்க முடியும்ன்னு கடவுளுக்கு தெரிஞ்சனால தான் நமக்கு அத கொடுக்கறான். அத தாண்டி வந்த பின்ன, இதுக்கா நான் கலங்கினேன்னு பின்னாடி யோசிப்பீங்க. எதுவா இருந்தாலும் போராடி பாருங்க பாய்ஸ்” என்றவர் விஷ்ணுவின் தோளை தட்டிக்கொடுக்கபடி சென்றார்.

செல்லும் அவரை பார்த்திருந்த சங்கித், “ஓசில உபதேசம் பண்ணுறத மட்டும் யாரும் விடுறதில்ல மாப்புள” என்று கடுப்புடன் சொன்னவனுக்கு,

“ஆனா வயசான பின்னாடி என்ன ஆனாலும் சரி மச்சீ, இந்த மாதிரி லூஸ் ஸ்டாக் மட்டும் நாம பண்ணவே கூடாது” என்றபடி கோர்ட்டினுள் சென்றான் விஷ்ணு‌.

அவனின் நிலையில் அந்த நபரின் பேச்சு சற்று எரிச்சலை கொடுத்தது. அதுவும் அவன் கேட்காத, கேட்க விரும்பாத அந்த அட்வைஸ் போன்ற பேச்சு, அவன் ரசிக்கவில்லை.

இருந்த கடுப்பில் அவனின் ஆட்டம் இன்று ஆக்ரோஷமாக இருக்க, அவனிடம் மாட்டிய அந்த இறகுப் பந்து பிய்ந்த நாரானது‌.

எதிரே இருவர் விஷ்ணுவிற்கு சமமாக நின்று ஆடினாலும் ஒற்றையாளாய் அவ்விருவரையும் சமாளித்தும் விட்டான்.

அவனின் அந்த ஐந்தே முக்கால் அடி கூட ஒருவித பிளஸ் தான் அவனிற்கு.

வியர்வை வழிய போத்தென்று தரையில் அமர்ந்தவன் காதில் சென்றாயனின் பேச்சே வண்டாய் குடைய, சரியாக அவனை அழைத்தார் அவனை பெற்றவர்.

‘தாய்குலம் காலிங்’ என்று சப்தமில்லாது அதிர்ந்த அவனின் தொலைபேசியை எடுத்தவன், “இப்போ என்கிட்ட என்ன வேல செய்ய சொன்னார் உங்க புருஷர்ர்?” என்று வார்த்தையை அவன் பல்லிடுக்கில் கடித்தபடி கேட்க,

“அது தம்பி, காந்திபுரம் போய் வசூல்..” என்று தயங்கி பேசிய செண்பாவைத் திட்டவும் முடியாமல், தன்னின் கையாளாகத் தனத்தை நினைத்து கோபம் மட்டுமே வந்தது விஷ்ணுவிற்கு.

“அம்மா, என்னைய தவிட்டுக்கா வாங்கின? எத்தன வேலை சொல்லிட்டே இருக்கார்? படிக்கறதா வேண்டாமா நான். காலேல சங்கி முன்னாடியே அப்படி பேசுறார், என்ன நினைச்சிட்டு இருக்கார் உங்க புருஷர்ர். திரும்ப எதிர் கேள்வி கேட்க எனக்கு ஒத்த நிமிசம் ஆகாது, ஆனா பேசின பின்ன அவர் தான் வருத்தப்படுவார். பார்த்துக்கோங்க” என்றான் மிகுந்த கோபத்துடன்.

அவனின் வயதும் அப்படி. தனக்கு நேர்ந்த அவமானத்தை இன்னமும் கடந்த வர முடியாது நீரில் அமிழ்ந்தும் பந்தாய் அவன் தத்தளிக்க, அதற்குள்ளாக வேறொரு புதிய பஞ்சாயத்திற்கு பிள்ளையார் சுழி இட ஆரம்பித்திருந்தார் சென்றாய பெருமாள்.

மகன்களை பெற்ற அம்மாக்களுக்கு மட்டும் தான் தெரியும் வளரும் பிள்ளையையும் கணவரையும் சமாளிப்பது என்பது இருநூறு முறை இமயமலையை ஏறி இறங்குவதற்கு சமம் என்று.

“அவர் என்ன இன்னிக்கு நேத்தே பேசுறார், விடு தம்பி. நம்ம கடை வேலைய நாம தான செய்யனும். அதான் சொல்லுறார்” என்று நயமாய் அவர் பேச,

“ஆனா நீங்க நல்லா சேம் சைட் கோல் படுங்கீங்க.”

“என்ன பண்ணுறது, காரியம் ஆகனுமே”

“அதுக்கு, நான் எல்லாம் இனி வேலை செய்யுறதா இல்ல. படிக்கவிடாம சும்மா அந்த அரிசியும் பருப்பையுமே கட்டிட்டு அழுக சொல்லுறீங்களா?”

“அவர் சொன்ன வேலயை முடிச்சுட்டு படியேன் தம்பி”

“புரியாம பேசாதீங்க ம்மா. காலேல இருந்து மிட் நைட் வர ஏதாவது சொல்லிட்டே இருக்கார். காலேஜ் லீவ்னால சரி, இதுவே காலேஜ் இருந்தா என் படிப்பு வீணாகாதா? அவர் வந்த படிப்பையும் வேண்டாம்ன்னு சொல்லிட்டு லூசு மாதிரி பொட்டலம் போட உட்காந்தா என்னையும் அப்படியே இருக்க சொல்லுறார்! என்னால அவரை மாதிரி எல்லாம் இருக்க முடியாது. சொல்லி வைங்க” என்று போதும் மட்டும் கோபத்தை இறக்கி வைத்துவிட்டே அவன் தொலைப்பேசியை அணைக்க, அதுவரை அவனையும் அவனின் பேச்சையும் மட்டுமே கவனித்தும் அவதானித்தபடியும் இருந்தார், வேதாச்சலம்.

error: Content is protected !!