அத்தியாயம் – 03
“மசமசன்னு நின்னுடுட்டே இருக்க? ஆளுங்க வந்தா பொருள் எடுத்து தரமாட்டியா?” என்று கடையில் நான்கைந்து வாடிக்கையாளர்கள் இருக்கும் போது தன் மனைவியை வசைபாடியபடி மளிகைப் பொருட்களை எடுத்து கொடுத்தார், சென்றாய பெருமாள்.
முகத்தில் எப்போதும் வெடிக்கும் எள்ளும் கொள்ளும் தாராளமாகவே இன்றும் வெடித்துக்கொண்டு இருக்க, அடுத்தவர் முன்பு தன் மனைவியை பேசுகிறோம் என்ற எண்ணம் துளியும் இல்லாமல் வியாபாரம் பார்த்து கொண்டிருந்தார் அவர்.
“அண்ணே, அரை கிலோ சாப்பாட்டரிசி, ரெண்டு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ உழுந்து, நூறு மல்லி” என்று நீண்ட நாள் வாடிக்கையாளர் ஒருவர் கேட்டு நிற்க, கடையில் இருக்கும் வேலையாளைத் தவிர்த்து தானே எடுத்துக்கொடுத்தார் சென்றாயன்.
பகட்டாக கல்லாவில் அமராமல், ஓடியாடி அவரும் வேலையாட்களுக்கு நிகர் வேலை செய்வதால் கடையில் எப்போதும் சுறுசுறுப்பும் கவனமும், ஆட்கள் வருகையில் குறைவில்லாமலும் இருந்தது.
முன் ஐம்பதில் இருக்கும் அவரின் வயதுக்கு ஏற்ப இருக்கும் வியாபார அனுபவத்தின் பயனால் இன்று இரண்டு சற்று பெரிய பலசரக்கு கடைகளை நகரின் முக்கிய இடத்தில் வைத்திருக்க உதவியது.
அக்கடைகள் தான் அவரின் இருபத்தி ஐந்து வருட உழைப்பின் பெரும் வெகுமதி.
தன்னின் உயிராய் நேசிக்கும் தொழிலை இன்னமும் பல்கிப் பெருக வைக்க வேண்டும் என்ற முனைப்புடன் முன்னேரும் எண்ணமுடன் தொழில் செய்பவர்.
“கண்ணு என்ன பிடறிலையா வெச்சிருக்க? நூறு மல்லி கேட்டா, நூத்தம்பது போடுற? உங்க அப்பன் வூட்டு பொருளோ” என்ற அவர் குரலே அந்த சற்று பெரிய கடையை அடைத்திருந்தது.
கைகள் தன்பாட்டிற்கு பொருட்களை பொட்டலம் போட்டாலும், ‘இது எல்லாம் எங்களுக்கு பழகின ஒன்னு’ என்ற எண்ணத்துடன் தான் அந்த நான்கு வேலையாட்களும் இருந்தனர்.
ஆனால் சென்றாயன் தன் மனைவியை நடத்தும் பாங்கில் அவர்களின் மனதில் சென்றாய பெருமாள் என்ற மனிதனின் கண்ணாடி பிம்பத்தில் கீறல்விட ஆரம்பித்திருந்தது.
அவர் மனைவி எப்போதும் போல், வாய் திறவாமல் கிராம்பையும் பட்டையையும் சிறு சிறு பொட்டலாமாக கவரில் அடைக்கும் பணியை செய்துகொண்டிருந்தார்.
‘குரங்குக்கு வாக்கப்பட்டா மரத்துக்கு மரம் தாவித்தானே ஆகனும்’ என்ற நினைப்புடனே இந்த இருபத்தி இரண்டு வருடமாய் சென்றாயனுடன் ‘அட்ஜஸ்ட்’ செய்து கொண்டு தன் வாழ்க்கை வண்டியை ஓட்டுகிறார்.
“பாரு, எல்லாம் எப்படி தூசியும் தும்புமா இருக்கு? எங்க போனான் உன் புள்ள, ஒத்த வேலைக்கு லாயக்கு இல்ல. எல்லாம் நானே செய்யனும். ** பைய, வரட்டு இருக்கு” என்றபடி கீழே சிந்தியிருந்த மஞ்சள், தனியா பொடிகளை துணி கொண்டு கூட்டியபடி இருக்க,
“ம்மா.. அரிசி மண்டி சப்ளையர் லீவாம். நாளைக்கு மதியத்துக்கு முன்ன அவங்க குட்டி யானையில ஏத்தி அனுப்பிடுவாங்கலாம்” என்று சொல்லிக் கொண்டே வந்தவனை இடைமறித்து கத்தினார் சென்றாயன்.
“ஏன்டா அறிவுகேட்ட *, நேரா நேரத்துக்கு சோத்த கொட்டிக்கற தான. நாளைக்கு காலேலையே சிப்பம் வேணும்னு தானே சொல்லி அனுப்பினேன். இப்போ மதியம் வரும்னு சொல்லிட்டு நிக்கற, அறிவு * இல்லையா உனக்கு… இந்த அழகா வியாபாரம் பண்ணா தெருவுல தான் நிக்கனும்” என்று கோபமாக பேசிக்கொண்டே போனவரை,
“அப்போ உங்க செலவுல வண்டி எடுத்துட்டு போய் அரிசி வாங்கிக்கோங்க. அவங்களா டோர் டெலவரி கொடுத்தா, அது வர நாளைக்கு மதியம் இல்லேனா சாயந்திரம் கூட ஆகும். காசு போட்டு போர்ட்டர் புக் பண்ணிக்கோங்க” என்றவன் கையில் இருந்த கடை பையை தூக்கி எறிந்தபடி கடையை விட்டு சென்றிருந்தான், விஷ்ணு.
விஷ்ணு முகுந்தன். சென்றாய பெருமாளின் மூத்த புதல்வன். தந்தை – தாயின் குணத்தை சரிசமமாக குழைத்து அதில் அவனுடைய தனி குணாதிசயத்தையும் கலந்தவாறு இருந்தவனை கையால்வது என்பது சற்று சிரமமாகத் தான் இருக்கும்.
ஆனால், பழக்கம் பண்பு என்ற வகையில் நல்ல மதிப்பீட்டில் தான் இருப்பான். கல்லூரி இறுதி ஆண்டில், ஒரு சொல்லிக்கும் படியான பர்சன்டேஜ் வைத்து சென்றாய பெருமாளின் கூட்டில் இருந்து தப்பிக்கத் துடிக்கும் இருபது வயது இளைஞன்.
அவன் சென்ற பின்புதான் சென்றாயன் கவனித்தார் அவனுடன் வந்திருந்த சங்கீத்தை.
“வா சங்கீத், அம்மா நல்லா இருக்காங்கலா? கேம்பஸ் எல்லாம் வருதா? ஏதாவது ப்ளேஸ் ஆகிட்டியா?” என்று வரிசையாக கேள்வி கேட்டபடி அவனை சமாளிக்கும் நோக்குடன் சென்றார் செண்பா. செண்பக மலர், சென்றாய பெருமாளை அலங்கரிக்கும் அவரின் துணைவி.
அவனோ, சென்றாயரின் வாய் பேச்சிலேயே ஸ்தம்பித்து நின்றிருக்க, செண்பா அவனிடம் கேட்ட கேள்விகளுக்கோ இல்லை அவர் அவனை நோக்கி வந்ததோ தெரியாது சென்றாயரையே பார்த்தபடி இருக்க, “சங்கீத்” என செண்பா அவனின் தோளில் ஒரு அடி போட்டவுடன் தான் நிகழ்விற்கு வந்தான்.
“ஆன்ட்டி” என்று விழித்தனை பார்க்க செண்பாவிற்கு சற்று சங்கடமாகத்தான் இருந்தது. இருந்தும், “சாப்பிட்டியா சங்கீத்?” என்று கேட்டவருக்கு தலையசைத்தவன்,
“டைம் ஆச்சு ஆன்ட்டி, நான் வரேன்” என்றவன் தன் கண்ணாடியை சரி செய்தபடி திரும்பி நடக்க, பின் அவசரமாக திரும்பி சென்றாயனிடம்,
“அப்பா, இந்த வார மெம்பர்ஸ் மீட்டிங்க்கு உங்கள வர சொன்னாங்க ப்பா” என்றவன் தலையசைப்புடன் விடைபெற்றான்.
“அய்யோ! வாயத் தெறந்தாவே கூவம் தான் போல” என்று முணுமுணுத்து வந்தவனை முறைத்தபடி பைக்கூடன் நின்றிருந்தான் விஷ்ணு.
அவனை பார்த்ததும் ஒரு சமாளிப்பு சிரிப்புடன் வந்தவனை, “ச்சீ, மூடிட்டு ஏறு. சிரிப்பு வேற இப்போ ஒரு கெடு” என்று கடுத்தபடி வண்டியை எடுத்தவனை,
சங்கீத், “நீ இரு. நானே ஓட்டுறேன்” என்று வண்டியை வாங்கிய கையுடன் அவன் சென்ற இடம் வேகா’ஸ் டென்னிஸ் கோர்ட் தான்.
அவ்விடத்தைப் பார்த்ததும் தன்னால் ஒரு ஆசுவாசம் எழுந்தது விஷ்ணுவிற்கு.
ஒரு நீண்ட பெருமூச்சை இழுத்தவிட்டபடி வண்டியில் இருந்து இறங்கி தன் முன்பிருந்த பாராங்கல்லின் மேல் அமர்ந்துவிட்டான்.