அத்தியாயம் 18

தியாகராஜனும் வசந்தியும் கிளம்பிச் சென்றதும் பிரதீஷ் சைதன்யாவிடம் வந்தான். அவளின் கையைப் பிடித்துச் சாய்விருக்கையில் அமர்த்தியவன் அவளின் பக்கத்தில் அமர்ந்தவன்,”ஏதாவது என்கிட்ட சொல்லனுமா சையு?” என்று அவளின் கண்ணைப் பார்த்துக் கேட்டான்.

ஆனால் அவளோ அவனது முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்து விட்டு வேகமாக எழுந்தவள்,”நான் படிக்கப் போறேன்.” என்று கூறி உள்ளே செல்ல திரும்ப அவளின் கையைப் பிடித்து அவளை நிறுத்தினான்.

“உட்கார் சையு. எதுவா இருந்தாலும் என்கிட்ட பேசு. இப்படி இருந்தால் எப்படி நீ நினைக்கிறது எனக்குத் தெரியும்?” என்று கேட்டான்.

“நீங்க தான் ஓகே சொல்லிட்டீங்க அப்புறம் என்ன?” என்று கேட்டு விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“ஓ! நான் தான் உன்கிட்ட கேட்டேனே?”

“நீங்க அவங்ககிட்ட ஓகே சொல்லிட்டு தான் என்கிட்ட கேட்டீங்க!” என்று கூற, இப்போது அவனது தவறு புரிந்தது.

“சரி ஓகே இப்போ சொல்லு உனக்கு இஷ்டமில்லையா? நான் மாமாகிட்ட சொல்லிக்கிறேன்.” என்று கூற,

“இல்லை இல்லை அதெல்லாம் ஒன்னுமில்லை. ஜஸ்ட் நான் ப்ரைடே அம்மா வீட்டுக்குப் போயிட்டு அங்கே இருந்து சண்டே கோவிலுக்குப் போகலாம்னு நினைச்சேன். உங்ககிட்ட கேட்கனும்னு இருந்தேன். அதுக்குள்ள இவங்க வந்துட்டாங்க.” என்று கூற, பிரதீஷ் யோசிக்க ஆரம்பித்தான்.

பின்னர் அவளை நோக்கி,”சரி நீ யோசிச்ச மாதிரியே ப்ரைடே உங்க அம்மா வீட்டுக்குப் போகலாம். அப்புறம் சனிக் கிழமை மதியம் தான மாமா வீட்டுக்குப் போகனும். ஸோ ஒரு பண்ணிரெண்டு மணிக்குக் கிளம்பினா போதும் அதுவரைக்கும் நம்ம உங்க அம்மா வீட்டுல இருக்கலாம். இப்போ ஓகே வா?” என்று கேட்க, அவனை அணைத்துக் கொள்ள கைகள் பர பரத்தது. ஆனால் வெட்கம், கூச்சம் எல்லாம் போட்டிப் போட அவனது கையை மட்டும் பிடித்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் தலையாட்டினாள்.

அவளது மகிழ்ச்சியைப் பார்த்து அவளது தலையைப் பிடித்து ஆட்டியவன்,”சரி ஓகே இப்போ போய் படி.” என்று கூறிவிட்டு அவன் எழுந்து சென்றான். செல்லும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் சைதன்யா. அவளது மனம் மெதுவாக அவனது பக்கம் சாய ஆரம்பித்தது.

தனது பெற்றோர்கள் தான் இப்படிப் பார்த்துப் பார்த்து அவளிற்காகச் செய்வார்கள். வினய் கூட அவனது பெற்றோரிடம் சண்டைப் போட்டிருக்கான்,’தன்னை என்ன குப்பைத் தொட்டியிலிருந்து எடுத்து வந்தீர்களா? இவளிற்கு மட்டும் பார்த்துப் பார்த்துச் செய்கிறீர்கள் என்று.’ அதற்கு அவர்கள் சைதன்யா வேறு வீட்டிற்குச் செல்பவள் அப்போது அங்கு அவளை இப்படிக் கவனிப்பார்களா என்று தெரியாது. அதனால் தான் தாங்கள் அவளைத் தாங்குகிறோம் என்று கூறுவார்கள். அப்போது எல்லாம் சைதன்யா பெருமையுடன் சுற்றி வருவாள். அத்தனைச் சந்தோஷமாகவும் இருக்கும் இத்தகையப் பெற்றோர்களுக்கு மகளாகப் பிறந்ததில். ஆனால் இப்போது பிரதீஷூம் தன்னைத் தன் பெற்றோர்கள் போல் பார்த்துப் பார்த்துச் செய்வதை எண்ணி அவள் உண்மையிலே கொடுத்து வைத்ததாக எண்ணினாள்.

அதன் பிறகு அவர்களது உறவில் சில முன்னேற்றங்கள் வந்திருந்தது. முதலில் எப்போதும் பிரதீஷ் தான் முதலில் பேச்சைத் தொடங்குவான். சைதன்யாவாகப் பேசியதாகச் சரித்திரம் இல்லை. ஆனால் இப்போது எல்லாம் சைதன்யாவாகப் பேச ஆரம்பித்து விட்டாள். அதே போல் மாலை நேரம் பிரதீஷ் அலுவலகத்திலிருந்து வந்ததும் நடைப்பயிற்சி செய்ய கிளம்பிடுவான். இப்போது அவனுடன் சைதன்யாவும் செல்கிறாள். அதுவும் அவனாக அழைக்காமல் அவளாக அவனுடன் சென்றது பிரதீஷிற்கு அத்தனைச் சந்தோஷம்.

பிரதீஷ் கூறியது போல் வெள்ளிக் கிழமை வேலை முடித்து இருவரும் இரண்டு நாட்களிற்குத் தேவையான உடைமைகளை எடுத்துக் கொண்டு சைதன்யா இல்லத்திற்குச் சென்றார்கள். அவர்களுக்கு அங்குத் தடபுடல் வரவேற்பு நடந்தது. அதுவும் திருமணமாகி சடங்குகள் எல்லாம் முடிந்து முதல் தடவை இருவரும் வருகிறார்கள்.

சைதன்யாவை தனியாக அழைத்துச் சென்ற அருணா அவளிடம்,”எப்படி இருக்க தன்யா?” என்று கேட்டார்.

“என்ன மா நீங்க மதியம் தான பேசுனோம். அதுக்குள்ள எப்படி இருக்கீங்கனு கேட்கிறீங்க?”

“ப்ச் இருந்தாலும் நேர்ல கேட்கிற மாதிரி வருமா. சரி சொல்லு அங்கு எப்படி இருக்கு? மாப்பிள்ளை உன்னை நல்லா பார்த்துக்கிறாங்களா?” என்று கேட்டார்.

“ம் அதெல்லாம் சூப்பரா பார்த்துக்கிறாங்க. டெய்லி நானும் அத்தானும் வாக்கிங் எல்லாம் போறோம் தெரியுமா?” என்று கூற,

“வாக்கிங்கா? ஏன் நீ குண்டா இருக்கனு உன்னை வாக்கிங் வரச் சொன்னாரா மாப்பிள்ளை? டெய்லி பேசுறோம் தான நீ ஏன் இதை என்கிட்ட சொல்லலை?” என்று ஒருமாதிரி குரலில் கேட்க, சைதன்யாவிற்குப் புரியவில்லை அவரது குரலிலிருந்த வித்தியாசம்.

அதனால் சாதாரணமாக,”அத்தான் எல்லாம் சொல்லலை மா. எனக்குத் தான் போகனும் போல இருந்துச்சு. அதான் நானா தான் அத்தான்கிட்ட கேட்டு அவங்க கூடப் போறேன்.” என்று கூறினாள்.

“சரி நீயே சொல்லிருந்தாலும் மாப்பிள்ளை வேண்டாம்னு சொல்லிருக்கனும் தான? ஏற்கனவே நீ ஆபிஸ்ல வேலைப் பார்த்து அவ்ளோ டையர்டா வர. இதுல வாக்கிங் போயிட்டு வந்தால் இன்னும் டையர்டாகும். அப்போ நீ எப்படிப் படிப்ப?” என்று கேட்டார்.

“அம்மா நீ வேற முதல் நாள் மட்டும் தான் கொஞ்சம் டையர்டா இருந்துச்சு. அப்புறம் இரண்டு நாள் ரொம்ப ப்ரெஷா பீல் பண்ணேன் மா. முதல்ல விட இப்போ கொஞ்சம் எனர்ஜெட்டிக்கா பீல் பண்றேன்.” என்று அவள் கூற, அருணா அப்போது சமாதானமாகினாலும் அவரது மனம் ஏனோ அடித்துக் கொண்டது. ஆனால் அதை அவர் காட்டிக் கொள்ளவில்லை. தன் மகள் சந்தோஷமாக இருக்கிறாள் அது போதும் என்று அமைதியாகி விட்டார்.

அன்று வெள்ளிக் கிழமை என்பதால் அவர்கள் வீட்டில் கவுச்சி எடுக்கவில்லை. ஆனால் இரவு உணவை அருணா சைதன்யாவிற்குப் பிடித்த பதார்த்தமாகப் பார்த்துப் பார்த்துச் செய்தார். அவளிற்குப் பிடித்த அடை, அவியல், இடியாப்பம், தேங்காய் பால், சொதி, இனிப்பிற்கு அவளிற்கு மிகவும் பிடித்த ப்ரெட் அல்வா செய்திருந்தார்.

“அம்மா இதெல்லாம் டூ மச். எல்லாம் தன்யாவுக்குப் பிடிச்ச டிஷ்ஷா செஞ்சுருக்கீங்க.” என்று வினய் குறைப்பட,

“டேய் உனக்காகத் தான் இடியாப்பத்துக்கு சொதி செஞ்சேன். எங்களுக்கு எல்லாம் தேங்காய் பால், அவியல் இருந்தாலே போதும்.” என்று கூறவும் தான் அமைதியானான்.

அருணாவிற்கு பிரதீஷ் மேல் சிறிது கோபம், சைதன்யாவை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றதால். ஆனால் அதை எல்லாம் அவர் அவனிடம் காட்டவில்லை. தன் மகளே இஷட்பபட்டு செய்யும் போது தான் எதுவும் கருத்துக் கூறக் கூடாது என்று அமைதியாகி விட்டார். இருந்தாலும் பிரதீஷிற்கு எந்த விதத்திலும் மரியாதைக் குறைவாக அவர் நடத்தவில்லை. அவர் உணவுகளைச் செய்வதற்கு முன்பே இதெல்லாம் அவனிற்குப் பிடிக்குமா என்று கேட்டுத் தான் செய்தார். அவன் கேட்ட ஒரே கேள்வி சைதன்யாவிற்கு இதெல்லாம் பிடிக்குமா என்று தான். அருணா பிடிக்கும் என்று கூறியவுடன் தனக்கும் இதுவே போதும் என்று அவன் கூற கேட்டவர்க்குத் தான் அத்தனைச் சந்தோஷம். அந்தச் சிறு வருத்தம் கூட மறைந்து போனது போலிருந்தது அருணாவிற்கு. இதைப் பார்த்துக் கொண்டிருந்த சதாசிவத்திற்கும் மனம் நிம்மதியாக அதே சமயம் மகிழ்ச்சியாகவும் உணர்ந்தார். திடீ‌ர் திருமணம், எதையும் யோசிக்காமல் பிரதீஷின் வார்த்தையை மட்டும் நம்பி செய்துவிட்டார். வெளியே காட்டவில்லை என்றாலும் மனம் அடித்துக் கொண்டே இருந்தது. இப்போது தான் நிம்மதியாக உணர்ந்தார்.

வினய் மற்றும் சைதன்யாவின் கலாட்டாக்களில் அவர்களது இரவு உணவு சந்தோஷமாக முடிந்தது. பிரதீஷ் தான் சைதன்யா இவ்வளவு பேசுவாள் என்பதை ஆ வென்று வாயைப் பிளந்தும் அதே சமயம் அவளை ரசித்தும் பார்த்தான். அவன் ரசித்துப் பார்க்கிறான் என்பதை மற்றவர்கள் கவனிக்காமல் சாமர்த்தியமாக மறைத்து விட்டான்.

சாப்பிட்டு முடித்து சைதன்யாவின் அறைக்கு வந்தார்கள் பிரதீஷூம் சைதன்யாவும். உள்ளே நுழைந்ததும் பிரதீஷ் சைதன்யாவின் கையைப் பிடித்து இழுத்து அணைத்துக் கொள்ள இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை சைதன்யா. திகைத்து அப்படியே நிற்க, சில நிமிடங்கள் கழித்து அவளை விடுவித்தவன் அவளது கண்ணத்தைத் தட்டி, கீழ் உதட்டைப் பிடித்து இழுத்தவன்,”இந்த வாய் எவ்ளோ பேசுது. உனக்கு இவ்ளோ பேச வருமா? அப்புறம் ஏன் என்கிட்ட மட்டும் அமைதி?” என்று கேட்டுவிட்டு அவளது உதட்டை விடுவிக்க அவளோ திக் பிரமை பிடித்தது போல் அப்படியே நிற்க, மீண்டும் அவளது கண்ணத்தில் தட்டினான் பிரதீஷ்.

அதில் சுயு உணர்வுப் பெற்றவள் அவனிடமிருந்து சற்று விலகி நின்று,”என்ன பண்றீங்க?” என்று உள்ளே சென்ற குரலில் கேட்க,

“பார்ரா கீழே மட்டும் அவ்ளோ வாய். ஆனால் இங்கே காத்து தான் வருது மொமன்ட்டா?” என்று கேட்க, அவள் எதுவும் பேசாமல் முகத்தைத் தொங்கப் போட, அவளது நாடி துடிப்பை அவனது ஒற்றை விரலால் பிடித்து அவளது முகத்தை நிமிர்த்தியவன்,”சரி ஓகே போய் தூங்கு.” என்று கூறவும் வேகமாக ஓடிச் சென்று பெட்டில் படுத்தவள் போர்வையை எடுத்து தலை முழுதும் போர்த்திக் கொண்டு படுத்து விட்டாள்.

அதில் சிரித்த பிரதீஷ் அவளிடம் வந்து,”நான் எதுவும் செய்யலை சையு. போர்வையை முகத்துல இருந்து எடு. அப்புறம் மூச்சு முட்டும்.” என்று கூறவும் கண்ணைத் திறக்காமல் போர்வையை மட்டும் விலக்கித் திரும்பிப் படுத்துக் கொண்டாள். பிரதீஷூம் சிரிப்புடன் அவளின் அருகில் வந்து படுத்துக் கொண்டான்.

அடுத்த நாள் பிரதீஷ் கூறியது போல் பண்ணிரெண்டு மணிக்கு வீட்டிலிருந்து கிளப்பியவர்கள் அரைமணி நேரத்தில் ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் பிரதீஷின் வீட்டிற்குத் தான் முதலில் சென்றார்கள்.

திருமணமாகி ஒரு வாரமாகி இருந்தாலும் இன்னும் அவர்கள் புதுமணத் தம்பதிகள் என்பதால் ஆர்த்தி எடுத்துத் தான் வரவேற்றார் சுமித்ரா. உள்ளே நுழைந்தவுடன் பிருந்தா இருவருக்கும் கருவேப்பில்லை, கடுகு, சீரகம், கொத்தமல்லி எல்லாம் தாளித்துக் கொட்டிய மோரை கொண்டு வந்து குடுக்க இருவரும் அதைப் பருகினர்.

சரியாக அந்நேரம் தத்தி தத்தி நடந்து பிரதீஷிடம் வந்தான் சுதீஷ் மற்றும் பிருந்தாவின் அருமை புதல்வன் இவான். அவனைப் பார்த்ததும் வேகமாக எழுந்த பிரதீஷ் அவனைத் தூக்கிப் போட்டு விளையாட கிழுக் கிழுக்கென்று சிரித்தது அந்தப் பிஞ்சு. அவர்களையே ஆசையாக சைதன்யா பார்க்க, அவளின் பார்வையை வைத்து பிருந்தா அவளிடம்,”என்ன அப்படிப் பார்க்கிற சைதன்யா?”என்று கேட்டாள்.

“இல்லை அக்கா, பார்க்க செம க்யூட்டா இருக்கான். என்கிட்ட வருவானா?” என்று ஏக்கத்துடன் கேட்க,

பிரதீஷ் உடனே தன் அண்ணன் மகன் காதில்,”சாம்ப் சித்திக்கிட்ட போங்க.” என்று கூறி அவனை சைதன்யாவிடம் நீட்ட அந்தக் குட்டியும் சித்தப்பா சொன்னதைத் தட்டாமல் அவளிடம் தாவ உடனே வாங்கிக் கொண்டாள் சைதன்யா.

“அவன் யார் கூப்பிட்டாலும் வருவான் சைதன்யா. அதனால நீ தயங்க வேண்டாம்.” என்று பிருந்தா சிரித்த முகமாகக் கூற சைதன்யாவும் இவானை அணைத்துக் கொண்டு அவளைப் பார்த்துச் சரியென்று தலையசைத்தாள்.

அப்போது அங்கு வந்த சுமித்ரா,”பிரதி எல்லாரும் ஒரே கார்ல தான போறீங்க? இல்லை இரண்டு பேரும் பைக்ல போறீங்களா?” என்று கேட்டார்.

“அம்மா இந்த வெயில்ல வண்டி எல்லாம் வேண்டாம். கார்லயே போயிக்கிறோம் அம்மா. அதுவும் இவான் வேற இருக்கான்.” என்று கூறவும் சரியென்று தலையசைத்தவர் சைதன்யா இவானிடம் கொஞ்சிப் பேசுவதை மகிழ்ச்சியுடன் பார்த்துவிட்டுச் சென்றார். இந்த ஒரு வாரமாக யாரிடமும் ஒட்டாமல் இருந்தவளைப் பார்த்துச் சற்று பயம் வந்தது அவர் மனதில். எங்கு மகனிடமும் இவள் இப்படியே இருந்து விடுவாளோ என்று. அதிலும் வசந்தி, பிரதீஷின் வீட்டிற்கு வந்துச் சென்று போனதும் இங்கு வந்து சைதன்யா எந்த வேலையும் செய்வதில்லை என்றும் அவள் பிரதீஷை மதிக்காமல் நடந்து கொள்கிறாள் என்றும் பலவாறு திருத்திப் பேசிச் சென்றார். நல்ல வேளை அப்போது பிருந்தா அங்கிருந்ததால் அவளிற்கும் தன் அம்மாவைப் பற்றித் தெரிந்ததால் அவரை அனுப்பிவிட்டு சுமித்ராவைச் சமாளித்து விட்டாள். இருந்தாலும் அவரது மனதில் நெருடல் இருந்து கொண்டே இருந்தது. இப்போது அவள் தன் பேரனுடன் விளையாடுவதைப் பார்த்து பிருந்தா கூறியதுப் போல் போகப் போக அனைத்தும் சரியாகி விடும் என்ற நம்பிக்கை அவரிற்கு வந்தது.

நேரமானதும் சுமித்ரா,”ஓகே கிளம்புங்க. நேரமாச்சு பாருங்க. இப்படியே உட்கார்ந்து இருந்தா அப்புறம் என் அண்ணன் உங்களை எதிர்பார்த்து ஏமாந்து போவார். கிளம்புங்க நாலு பேரும்.” என்று அவர் விரட்டவும் தான் நால்வரும் எழுந்து கிளம்பிச் சென்றார்கள்.

தியாகராஜனின் வீட்டிற்கு வர, வெளியேவே வந்து வரவேற்றார் அனைவரையும். அதைப் பார்த்த சுதீஷூம் பிரதீஷூம்,”எதுக்கு மாமா இந்த ஃபார்மாலிட்டு எல்லாம். நம்ம வீடு தான இது.” என்று கூற,

“மருமகனே இந்த வரவேற்பு என் பொண்ணு சைதன்யாவுக்கு.” என்று சிரித்துக் கொண்டே கூற, அதிர்ச்சியுடன் பார்த்தார்கள் பிரதீஷூம் சுதீஷூம்.

“என்ன பல்பு வாங்கினீங்களா? நீ வா சைதன்யா நம்ம உள்ளே போகலாம்.” என்று அவளின் கையைப் பிடித்துக் கொண்டே உள்ளே அழைத்துச் சென்றாள் பிருந்தா. சைதன்யாவும் அவர்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே இவானைத் தூக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.

“இப்படிக் கவுத்துட்டீங்களே மாமா.” என்று இருவரும் கூற,

அவரும் சிரித்துக் கொண்டே,”சரி சரி வாங்க.” என்று அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.

உள்ளே நுழைந்ததும் அவர்கள் மூவரும் பார்த்தக் காட்சி வசந்தி இவானை சைதன்தாவிடமிருந்து வாங்கியதை தான். பார்க்க அது சாதாரணமாக அவரது பேரனைத் தூக்குவது போல் தான் இருக்கும் ஆனால் உண்மையிலே அவர் இவான் சைதன்யாவிடம் இருப்பது பிடிக்காமல் அவளிடமிருந்து பிடுங்காத குறையாகத் தான் வாங்கினார். அது பிருந்தாவிற்கும் நன்றாகப் புரிந்தது. ஆனால் இப்போது எதுவும் அவளால் பேச முடியவில்லை. என்ன தான் அவர் செய்வது தவறு என்றாலும் சைதன்யா, பிரதீஷ் மற்றும் சுதீஷ் முன்பு அவரிடம் சண்டை போட அவள் விரும்பவில்லை. ஒரு வேளை அப்படிப் போட்டால் அவர்கள் கண்டிப்பாக வசந்தியை தவறாக எண்ணுவார்கள். அது அவளிற்குத் தலை இறக்கம். அதனால் அமைதியாக இருந்துவிட்டாள் பிறகுப் பார்த்துக் கொள்ளலாம் என்று.

பிரதீஷ், சுதீஷ், சைதன்யா மற்றும் தியாகராஜன் முன் அறையில் போடப்பட்டிருந்த சாய்விருக்கையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அதாவது மற்ற மூவரும் பேசிக் கொண்டிருக்க அதை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்து இருந்தாள் சைதன்யா. பிருந்தா தன் அம்மாவுடன் சமையலறைக்குச் சென்றாள்.

அங்கு ப்ரீத்தி நின்று கேரட்டைச் சாப்பிட்டுக் கொண்டிருக்க, அவளிடம் வந்த பிருந்தா,”ஹேய் ப்ரீத்தி நீ இங்கே தான் இருக்கியா? ஏன் வெளில வரலை நீ?” என்று கேட்டாள்.

அவளோ கோபத்துடன் பிருந்தாவைப் பார்த்து,”எதுக்கு நான் வந்து அந்த மகாராணியை வரவேற்கனுமா? அதெல்லாம் முடியாது.” என்று வெறுப்பாகக் கூற,

“ப்ரீத்தி என்ன இது? நீ இன்னுமா பிரதீஷை மனசுல வைச்சருக்க? அவனுக்கு கல்யாணமாகிடுச்சு. இது தப்பு ப்ரீத்தி.” என்று தீர்க்கமாக அதே சமயம் கோபத்துடனும் கூறினாள் பிருந்தா.

“நீ பேசாத அக்கா. உனக்கு என்ன நீ நினைச்ச வாழ்க்கைக் கிடைச்சிருச்சு. அதனால நீ பேசத் தான் செய்வ. தங்கச்சினு கொஞ்சமாவது என் மேல பாசம் இருந்திருந்தா எனக்காக நீ பேசிருப்ப. ஆனால் உனக்குத் தான் அப்படி எதுவுமில்லை அதனால் தான் அமைதியா இருந்துட்ட.” என்று அவளும் இவளுடயை கோபத்திற்கு இணையாகப் பேச அதிர்ச்சியுடன் பார்த்தாள் பிருந்தா. அந்த அதிர்ச்சியைப் பொருட்படுத்தாமல் ப்ரீத்தி அங்கிருந்து கோபத்துடன் சென்று விட்டாள்.

“என்ன மா இவள் இப்படிப் பேசுறா நீயும் அமைதியா இருக்க?” என்று வசந்தியைப் பார்த்துக் கேட்க,

“நான் யார்க்குனு பேசுவேன்? இரண்டு பேரும் என்னுடைய பொண்ணு தான். ஆனால் கஷ்டத்துல இருக்கிறது அவள் தான. விடு கொஞ்ச நாள் ஆனால் சரியாகிடும். அவள் பிரதீஷ் மேல ரொம்ப ஆசையா இருந்தால். அது போக நாளாகும் தான.” என்று வசந்தி கூறினாலும் அவருக்கும் மனதிற்குள் அந்த எண்ணம் இல்லாமல் இல்லை. பிருந்தா நினைத்திருந்தால் நடந்திருக்கும் என்பது அவரது எண்ணம். ஆனால் அதை அவர் காட்டிக் கொள்ளவில்லை அவ்வளவு தான்.

அப்போது சரியாக அங்கு வந்த தியாகராஜன்,”என்ன பண்ணிட்டு இருக்கீங்க? சாப்பாடு தயார் தான? அதைக் கொண்டு வந்து வைக்க இவ்ளோ நேரமா?” என்று சத்தம் போடவும் வசந்தி வேகமாக வேலையைச் செய்ய ஆரம்பித்தார்.

“ப்ரீத்தி எங்கே பிருந்தா?” என்று அவர் கேட்க, அவள் பதில் சொல்வதற்கு முன் முந்திக் கொண்டு வசந்தி,”இப்போ தான் அவள் ரூம்க்கு போனாங்க முகத்தைக் கழுவிட்டு வரேன்னு சொன்னா.” என்று கூறவும் சரியென்று அவர் அங்கிருந்து சென்றார்.

என்ன தான் வசந்திக்கு சைதன்யாவையும் அவளைத் திருமணம் செய்ததால் பிரதீஷையும் பிடிக்காமல் போனாலும் விருந்து உபசாரத்தில் அவர் எந்தக் குறையும் வைக்கவில்லை. அதை எல்லாம் சரியாகத் தான் செய்தார். இல்லையென்றால் தியாகராஜன் அவரை உண்டு இல்லையென்று செய்துவிடுவார். அந்தப் பயத்தில் அவர் அனைத்தும் நன்றாகச் செய்திருந்தார் அதுவும் வித விதமாக கவுச்சியில் அமர்க்களப் படுத்தி விட்டார். ப்ரீத்தி தான் சைதன்யாவை முறைத்துக் கொண்டே இருந்தாள். ஆனால் அதை மற்றவர்கள் கவனத்திற்கு அவள் கொண்டுவரவில்லை. காரணமும் தியாகராஜன் தான். பெண் பிள்ளை என்று பாராமல் அவரிற்குத் தப்பாகத் தெரிந்தால் உண்டு இல்லையென்று செய்துவிடுவார். அதனால் அமைதியாகத் தான் சென்றது. சாப்பிட்டு முடித்து விட்டு நால்வரும் கிளம்ப தியாகராஜனும் வசந்தியிடம்,”இன்னைக்கு விருந்து பிரமாதம் வசந்தி. அதுவும் மட்டன் பிரியாணியும் சிக்கன் சுக்கா சூப்பரா இருந்துச்சு.” என்று கூற, அகமகிழ்ந்து போனார் வசந்தி.

error: Content is protected !!