சைதன்யா அன்று அலுவலகத்தில் நடந்த விஷயத்தை பிரதீஷிடம் கூற ஆரம்பித்தாள். அன்று எப்போதும் போல் அலுவலகம் சென்றாள் சைதன்யா. முதலில் அனைவரும் அவளது திருமணத்திற்கு வாழ்த்துத் தெரிவிக்க அவளும் சந்தோஷமாக அவர்களிற்குப் பதில் கூறிவிட்டு அவளது வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.
சரியாக டீ ப்ரேக் அப்போது எப்போதும் போல டீ குடிக்க அங்கு உள்ள கேண்டீன் போன்ற அமைப்பிற்குச் சென்றாள். அவள் சென்ற நேரம் அங்கு சங்கர் உடன் வேலை செய்யும் இன்னொருவருடன் பேசிக் கொண்டிருந்தான். சைதன்யா வருவதைப் பார்த்த சங்கர் வேண்டுமென்றே பக்கத்தில் இருப்பவரிடம்,”நமக்கு எல்லாம் கல்யாணம் பண்ண வீட்டுல அத்தனைக் கஷ்டப்படுறாங்க. பொண்ணே கிடைக்க மாட்டீங்குது. ஆனால் இங்கே ஒரு ஆளுக்கு இன்ஸ்டன்ட் கல்யாணம் நடந்துருக்கு. இதுக்கு எல்லாம் மச்சம் வேணும்.” என்று அவன் நக்கலாகப் பேசினான்.
அதற்குப் பக்கத்தில் உள்ளவனோ,”உண்மை தான் சங்கர். நம்ம எல்லாம் இங்கே வேலைக்குச் சேர அத்தனை மெனக்கெட்டோம். ஒரு வேளை பொண்ணா பிறந்தனால எல்லாம் ஈசியா கிடைக்குது போல.” என்றான்.
“ம் ஆமா சார். நம்ம எல்லாம் கஷ்டப்பட்டு படிக்கிறோம். ஆனால் இந்தப் பொண்ணுங்க படிக்கிறேன்னு சும்மா பேர் பண்ணிட்டு கல்யாணம் பண்ணிக்கிறாங்க. அப்புறம் அவங்களுக்கும் சேர்த்து நாம தான் உழைச்சு கொட்டனும்.”
“கரெக்ட்டா சொன்ன. இந்த சைதன்யா மட்டும் என்ன படிச்சு ஆடிட்டர் ஆவானு நினைக்கிற? கண்டிப்பா கிடையாது சங்கர்.”
“கரெக்ட்டா சொன்னீங்க சார். அதுவும் புதுசா கல்யாணம் வேற ஆகிருக்கு. எல்லாம் இன்னைக்கு ராத்திரி புருஷன் நம்மளை எப்படிச் சந்தோஷப்படுத்துவான்னு அந்த நினைப்பு மட்டும் தான் இருக்கும். இவங்க எல்லாம் எதுக்கு வேலைக்கு வராங்கனு தெரியலை. பேசாமல் பிள்ளையைப் பெத்து போட்டு வீட்டுலயே இருக்க வேண்டியது தான. இங்கே வந்து நம்ம உசிர வாங்க வேண்டியது.” என்று வேண்டுமென்றே மெதுவாகப் பேசுவது போல் அவளிற்குக் கேட்க வேண்டுமென்றே பேசினான் சங்கர்.
“ம் கரெக்ட்டா சொன்ன. சரி வா அந்தப் பொண்ணுக்கு சம்பாதிச்சு போட புருஷன் வந்துட்டான். ஆனால் நமக்கு யாரும் அப்படியில்லை. வா போய் நம்ம பிழைப்ப பார்ப்போம்.” என்று கூற, சங்கரும் சிரித்துக் கொண்டே எழுந்து செல்ல அத்தனைக் கோபம் வந்தது சைதன்யாவிற்கு.
டீ குடிக்க வந்தவள் அவர்கள் பேசியதைக் கேட்டதும் அப்படியே எதுவும் குடிக்காமல் அங்கிருந்து மீண்டும் அவளது இடம் நோக்கிச் சென்றாள். அவளால் அதன் பிறகு வேலையைச் செய்ய முடியவில்லை. எப்போது வீட்டிற்குப் போவோம் என்று கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அதையும் பார்த்த சங்கர் வேண்டுமென்றே,”என்ன புருஷனைப் பார்க்க அவ்ளோ ஆர்வமா? க்ளாக்கையே பார்த்துட்டு இருந்தால் நேரம் ஓடிடுமா என்ன? வேலையைப் பாருங்க. இதுக்கு தான் கல்யாணம் பண்ணதும் உடனே வேலைக்கு எல்லாம் வரக் கூடாதுனு சொல்றது.” என்று கூற, அவனிடம் எதுவும் கூறாமல் தன் பையை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள்.
வீட்டிற்கு வந்ததும் அத்தனைக் கோபத்துடன் இதை பிரதீஷிடம் கூற, அவனிற்குப் பயங்கர கோபம் வந்தது.
“இது என்ன இப்படி நான்சென்ஸ்ஸா பேசிருக்காங்க நீயும் பதில் சொல்லாமல் அமைதியா வந்தியா?”
“ப்ச் எனக்குக் கோபம் வந்துச்சு. ஆனால் அங்கே தேவையில்லாமல் பிரச்சனை பண்ண வேண்டாம்னு நினைச்சுட்டேன்.” என்று அவள் உள்ளே சென்ற குரலில் கூற, அவளது நிலையைப் பார்த்து சற்று தணிந்தான் பிரதீஷ்.
“நீ ஏன் கம்ப்ளைன்ட் பண்ணலை?”
“நான் அங்கே ஜாயின் பண்ணி டூ யியர்ஸ் கூட ஆகலை. ஆனால் அந்த சங்கர் அங்கே ரொம்ப வருஷமா வேலைப் பார்க்கிறான். அதே போல எங்கே ஆபிஸ்ல ப்ர்ஸ்ட் அடெம்ப்ட்ல பாஸ் பண்ணதும் அவன் தான். அதனால சார்கும் மேடம்கும் அவன் மேல ஒரு நல்ல எண்ணம் இருக்கு. நான் போய் சொன்னால் நம்புவாங்களானு தெரியலை.” என்று அவள் கூற, கேட்ட பிரதீஷிற்கு அவன் பேசியதற்கானக் காரணம் புரிந்தது.
“இப்போ புரியுது சையு அந்த ராஸ்கல் ஏன் இப்படிப் பேசினான்னு.” என்று கூறி இடைவெளி விட்டவன் மீண்டும் அவனே தொடர்ந்தான்,”அவனுக்கு உன்னைப் பார்த்து பொறாமை ப்ளஸ் பயம்.” என்று கூற,
“என்னைப் பார்த்துப் பொறாமை அண்ட் பயமா? என்ன சொல்றீங்க?”
“ஆமா, இத்தனை நாள் அவன் மட்டும் தான உங்க ஆபிஸ்ல ப்ர்ஸ்ட் டைம்மே பாஸ் பண்ணிருக்கான். அதனால ஒரு கெத்தா சுத்திட்டு இருந்தான். ஆனால் உன்னைப் பார்த்தும் உன்னோட டெடிகேஷன்னையும் பார்த்து எங்கே நீ அவனை விட முன்னாடி வந்துரவன்னு பயம். நீ படிச்சு பாஸ் பண்ணிட்டா நீயும் ப்ர்ஸ்ட் அடெம்ப்ட்ல பாஸ் பண்ணி அதுவும் சின்ன வயசுல பாஸ் பண்ணிட்டா அவனோட மௌசு குறைஞ்சுடும். அதனால தான் உன்னைத் திசை திருப்பத் தான் அவன் இப்படிக் கேவலமா பேசிருக்கான். அவன் பேசியதைக் கேட்டு நீ அழனும் கஷ்டப்படனும் அதுல உன்னோட படிப்பு ஸ்பாயில் ஆகனும். அது தான் அவனோட தாட்.” என்று பிரதீஷ் தெளிவாகக் கூறவும் சைதன்யா அவனை யோசனையுடன் பார்த்தாள்.
“அப்படியா சொல்றீங்க?”
“ம் ஆமா, அவனோட மோடிவ் இது தான். அதனால இனிமேல் அவன் பேசுறதை காதுலயே வாங்காத. அப்படி வாங்கினால் தான் அவன் ஜெயிச்சுட்டதா அர்த்தம். தூசி மேல விழுந்தா என்ன பண்ணுவோம்? தொடச்சுட்டு போயிட்டே இருப்போம்ல. அது மாதிரி அவன் பேச்சை தூசு மாதிரி தட்டிவிட்டு போயிட்டே இரு சரியா.” என்று பிரதீஷ் கூறவும் தான் சைதன்யாவின் மனநிலையே சற்று மாற்றம் பெற்றது.
ஒரு வேளை பிரதீஷ் கூறியது போல் தான் சங்கரும் நினைத்து இருந்தால் அதற்குத் தான் இடம் கொடுக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தால். அவனை இனிமேல் ஒரு பொருட்டாகக் கூட மதிக்கக் கூடாது என்று முடிவெடுத்துத் தெளிந்த முகத்துடன் பிரதீஷைப் பார்த்து,”தாங்க்ஸ் அத்தான்.” என்று முதன்முறையாக உறவு முறை வைத்து அவள் அழைக்க அத்தனை மகிழ்ச்சியுடன் அவளைப் பார்த்தான்.
“சரி வா போய் சாப்பிடலாம்.” என்று கூறி அவள் அழைத்ததைப் பெரிதாகக் காட்டிக் கொள்ளாமல் சாப்பிட அழைத்துச் சென்றான்.
பிரதீஷின் சமையல் அவளிற்கு அத்தனைப் பிடித்துப் போனது. உச் கொட்டி ருசித்துச் சாப்பிட்டாள் சைதன்யா. அவள் சாப்பிடும் அழகைப் பார்த்துக் கொண்டே அவனும் சாப்பிட்டு முடித்தான்.
சாப்பிட்டு முடித்தவுடன் உற்சாகத்துடன் கிளம்பிச் சென்றாள் சைதன்யா. அலுவலகத்தில் அவள் சோக முகத்துடன் வருவாள் அல்லது அவளது வீட்டிலிருந்து யாரையாவது அழைத்து வருவாள் என்று சங்கர் எதிர்பார்க்க, அதற்கு எதிராக அவள் உற்சாகத்துடன் வந்து வேலையைப் பார்க்க அதிர்ச்சியுடனும் அவனது யுக்தி வேலைச் செய்யவில்லையோ என்ற கவலையுடன் பார்த்தான் சங்கர். அவனது முகபாவனையை வைத்தே அவனது எண்ணத்தைப் புரிந்து கொண்ட சைதன்யா, பிரதீஷ் கூறியது உண்மை என்று புரிய அவனை மனதில் மெச்சிக் கொண்டாள். அதன் பிறகு அவள் அவனைக் கண்டுகொள்ளவே இல்லை. வீட்டிற்கு வந்தும் பிரதீஷை கொண்டாடி தீர்த்து விட்டாள் சைதன்யா.
இரண்டு நாட்கள் சென்றிருந்தது. பிரதீஷூம் சைதன்யாவும் அப்போது தான் அலுவலகத்தில் இருந்து வந்திருந்தார்கள். பிரதீஷ் மாலை சிற்றுண்டி தயாரித்துக் கொண்டிருக்க வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. சைதன்யா எழுந்து சென்று கதவைத் திறக்க, வெளியே பிரதீஷின் மாமா தியாகராஜனும் அத்தை வசந்தியும் நின்றிருந்தார்கள்.
“உள்ளே வாங்க.” என்று சைதன்யா அழைக்க, வேண்டா வெறுப்பாகத் தலையசைத்து விட்டு உள்ளே வந்தார் வசந்தி.
அவருக்கு நேர்மாறாகத் தியாகராஜன் சிரிப்புடன்,”நல்லா இருக்கியா மா?” என்று கேட்டார்.
“நல்லா இருக்கேன்.” என்று மட்டும் கூற,
“பெரியவங்களை முறை வைச்சு கூப்பிடனும்னு யாரும் உங்க வீட்டுல சொல்லி கொடுக்கலையா?” என்று நக்கலுடன் கேட்டுக் கொண்டே அங்கிருந்த சாய்விருக்கையில் அமர்ந்தார் வசந்தி.
“ஏய் வசந்தி…” என்று தியாகராஜன் அடத்துவதற்கும்,
“வாங்க மாமா, வாங்க அத்தை.” என்று பிரதீஷ் அழைக்கவும் சரியாக இருந்தது.
“என்ன மருமகனே சமையல் கட்டுல இருந்து வரீங்க?”
“ஸ்னாக்ஸ் பண்ணிட்டு இருந்தேன் அத்தை.”
“ஏன் மா பெரியவங்களை முறை வைச்சு தான் கூப்பிட உனக்கு உங்க வீட்டுல சொல்லி தரலைனு பார்த்தால் சமைக்கவுமா தெரியாது. அதையும் என் மருமகன் தான் பார்க்கனுமா?” என்று வசந்தி கேட்கவும்,
“இப்போ என்னாச்சுனு இப்படிப் பேசுறீங்க? சையு எங்கே பெரியவங்களை முறை வைச்சு கூப்பிடலை?” என்று சற்று கோபத்துடன் கேட்டான் பிரதீஷ்.
“மருமகனே விடுங்க இவளுக்கு கிறுக்குப் பிடிச்சுருச்சு. நீங்க பெருசா எடுத்துக்க வேண்டாம்.”
“மாமா சையு என்னோட பொண்டாட்டி. அவளைத் தப்பா பேசுறதை நான் பார்த்துட்டு இருக்க மாட்டேன். அது யாரா இருந்தாலும் சரி.”என்று முகத்தில் அடித்தது போல் பேச, வசந்திக்கு முகம் விழுந்துவிட்டது.
தியாகராஜன் மனைவியை முறைத்துப் பார்த்து,”கூறு கெட்டவளே வந்த வேலையை மட்டும் பார். தேவையில்லாததை பேசின பல்லு கழன்டுடும்.” என்று கோபமாக அவர் கூற, அப்படியே வாயை மூடிக் கொண்டு அவர் கப்சிப்பென்று அமைதியாகி விட்டார்.
“மாமா இருங்க உங்களுக்குக் குடிக்க டீ எடுத்துட்டு வரேன். அத்தை உங்களுக்கு காப்பி தான?” என்று கேட்க, ஆமாவென்று தலையை மட்டும் அசைத்தார் வசந்தி. உடனே எழுந்து உள்ளே செல்ல சைதன்யாவும் அவன் பின்னாலே சென்றாள்.
அவள் சென்றவுடன்,”ஏய் வந்த வேலையை விட்டுட்டு என்ன பண்ணிட்டு இருக்க நீ? வாயை வைச்சுட்டு சும்மா இருக்கனும் இல்லை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.” என்று அவர் கூற,
“இல்லைங்க இப்போ கூடப் பாருங்க மருமகன் தான் எல்லா வேலைப் பார்க்கிறார். அவள் சும்மா உட்கார்ந்திருக்க அதான் ஒரு ஆதங்கத்துல கேட்டேன்ங்க.” என்று அவர் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கூற,
“சரி விடு, இதுல கருத்துக் கூற நமக்கு உரிமை இல்லை. மருமகன் அவர் பொண்டாட்டிக்கு செய்றார். நம்ம எதுவும் பேசக் கூடாது. ஏன் பெரிய மருமகன் கூட நம்ம பிருந்தாவுக்கு செஞ்சு கொடுப்பார். அப்போ இனிச்சது இப்போ மட்டும் ஆதங்கம் வருதோ.” என்று கேட்க, அவரால் அதற்குப் பதில் பேச முடியவில்லை.
“ம் இப்படி அமைதியா இருந்து வந்த வேலையை மட்டும் பார்த்துட்டு போகனும்.” என்றார்.
உள்ளே சென்ற பிரதீஷ் சைதன்யாவும் தன் பின்னால் வருவதைப் பார்த்து,”என்ன சையு எதுவும் வேணுமா?” என்று கேட்டான்.
“இல்லை. ஐ ஆம் சாரி.” என்றாள்.
அவன் புரியாமல் அவளைப் பார்த்து, “எதுக்கு சாரி?” என்று கேட்டான்.
“இல்லை என்னால தான சண்டை. அதான் சாரி சொன்னேன்.”
“உன்னால சண்டைனு யார் சொன்னா? அதெல்லாம் கிடையாது சையு. அத்தை தான் தேவையில்லாம உன்னைப் பேசினாங்க. சோ நீ எதுக்கு சாரி சொல்ற?” என்று கேட்க,
“இல்லை உங்க அத்தையும் மாமாவும் வரும் போது வாங்கனு மட்டும் சொன்னேன். அதனால அவங்களுக்கு கோபம் வந்துருச்சு போல. எனக்கு அவங்களை எப்படிக் கூப்பிடனு தெரியலை அதனால தான் வாங்கனு மட்டும் சொன்னேன்.” என்று அவள் கூற,
பிரதீஷ் அவள் புறம் திரும்பி அவளது கண்ணத்தைத் தன் கைகளில் ஏந்தி,”சையு உன்கிட்ட இப்படிக் கூப்பிடுமானு அவங்க சொல்லி நீ கூப்பிடாமல் இருந்திருந்தா தான் தப்பு. ஆனால் அவங்க அப்படிச் செய்யாமல் உடனே கோபப்படுறாங்க. அப்போ தப்பு அவங்க மேல தான. அதனால நீ சாரி எல்லாம் சொல்ல வேண்டாம்.” என்று கூறினான்.
“உங்களுக்கு ஏன் என் மேல கோபமே வரலை?”
“உன் மேல நான் எதுக்கு கோபப்படனும் சையு? நீ தான் தப்பே பண்ணலையே!!” என்று கூற,
“அப்போ தப்புப் பண்ணால் கோபம் வருமா?” என்று அவள் தலையைச் சாய்த்து கேட்க,
“ஹா ஹா இப்போவே கேட்டா எனக்குப் பதில் சொல்ல முடியாது. ஆனால் ஒன்னு நீ தப்புப் பண்ண மாட்டானு எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கு. ஒரு வேளை தப்புப் பண்ணாலும் கண்டிப்பா பெரிய தப்பா இருக்காது.” என்று கூற, சைதன்யா எதையும் யோசிக்காமல் அவனை அனைத்துக் கொள்ள, பிரதீஷ் அதிர்ச்சியுடன் பார்த்தாலும் அவளை அனைத்துக் கொண்டான்.
சரியாக பால் அந்நேரம் பொங்க, அவளை விடுவிடுத்து ஸ்டவ்வை ஆஃப் செய்தான் பிரதீஷ். அதில் சைதன்யா சுய உணர்வு பெற்று அவனை விடுத்து ஹாலிற்கு ஓடி வர, வசந்தியும் தியாகராஜனும் அவளைப் பார்க்கவும் அவளது ஓட்டம் நின்று நடந்து வந்து அவர்கள் அருகில் அமர்ந்தாள். அதே சமயம் பிரதீஷ் சிற்றுண்டி, டீ மற்றும் காப்பியுடன் அங்கு வந்து அவர்களிடம் தந்துவிட்டு சைதன்யாவின் பக்கத்தில் அமர்ந்தான்.
“வேற ஒன்னுமில்லை மருமகனே, உங்களுக்குக் கல்யாணமாகிடுச்சு. தாய்மாமாவா உங்களுக்கும் சைதன்யாவுக்கும் நம்ம வீட்டுல விருந்து குடுக்கனும். அதான் உங்களுக்கு எப்போ சௌகரியமா இருக்கும்னு கேட்கத் தான் வந்தோம்.”
“என்ன மாமா நீங்க? ஒரு ஃபோன் பண்ணிருந்தா போதும். இவ்ளோ தூரம் அலைச்சல் இருந்திருக்காதே.”
“அது மரியாதையா இருக்காது மருமகனே.”
“நமக்குள்ள என்ன மாமா?”
“சரி விடுங்க. சொல்லுங்க எந்த நாள் வசதிப்படும்?” என்று கேட்க,
“இப்போ தான் மாமா சையு வேலைக்குப் போயிட்டு இருக்கா. உடனே லீவ் சொன்னா நல்லா இருக்காது. சனி, ஞாயிறு லீவ் தான் மாமா அவளுக்கு.” என்று அவன் கூற,
“ஞாயிறு தான் எல்லாரும் குலதெய்வ கோவிலுக்குப் போறேமே மருமகனே.”
“அப்போ சனிக் கிழமை ஓகே மாமா.” என்று தியாகராஜனிடம் கூறிவிட்டு சைதன்யாவிடம் திரும்பி,”உனக்கு ஓகே வா சையு?” என்று கேட்க,
“ம்.” என்று மட்டும் கூறினாள். அவள் வெள்ளியே தன் வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்று அங்கிருந்து ஞாயிற்றுக் கிழமை அப்படியே கோவிலிற்குச் செல்லலாம் என்று நினைத்தாள். ஆனால் இப்போது அவன் அப்படிக் கேட்கவும் அவளால் தன் எண்ணத்தைக் கூற முடியாமல் போனது. ஆனால் பிரதீஷ் அவளின் முகவாட்டத்திலே அதைப் புரிந்து கொண்டான். இவர்கள் சென்றதும் கேட்டுக் கொள்ளலாம் என்று அமைதியாகி விட்டான்.
பிரதீஷ் அவர்களிடம் கூறியதும் தியாகராஜன் சந்தோஷத்துடன் வசந்தி பொருமியபடியும் அங்கிருந்து சென்றார்கள்.