அத்தியாயம் 16

அனாஹா, பரமசிவம் மற்றும் திலகா மூவரும் சதாசிவம் வீட்டில் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு முன்பு சதாசிவமும் அருணாவும் உட்கார்ந்திருந்தனர். பிரதீஷ் மற்றும் சைதன்யா கிளம்பியதும் அவர்கள் வீட்டிலுள்ள விருந்தினர்களும் கிளம்பிவிட்டார்கள். இப்போது இவர்கள் மட்டும் தான் வீட்டில் உள்ளனர்.

“மாமா என்ன முடிவுப் பண்ணிருக்கீங்க?” என்று அருணா பரமசிவத்திடம் கேட்டார்.

“எதைப் பத்திக் கேட்கிற அருணா?” என்று தெரிந்தும் தெரியாததைப் போல் கேட்டார் திலகா.

அதே நேரம் பரமசிவம்,”பேசனும் அருணா. இப்போ தான தன்யா கல்யாணம் முடிஞ்சுருக்கு. அந்தப் பையன்கிட்ட முதல்ல பேசனும். கொஞ்ச நாள் போகட்டும் அருணா.” என்றார்.

“என்னங்க இப்படிப் பேசுறீங்க? அந்தப் பையன்கிட்ட சொத்துனு எதுவுமில்லை. நம்ம பொண்ணு நாளைக்கு அவனைக் கல்யாணம் பண்ணிகிட்டா எப்படி வாழுவா? இங்கே அவ்ளோ சொகுசா வாழ்ந்துட்டு அங்கே போய் கஷ்டப்படனும்னு என்ன தலையெழுத்து அவளுக்கு? அதுக்கு தான் உங்ககிட்ட விஷயத்தைக் கொண்டு வராமல் எல்லாம் பண்ணேன். ஆனால் இவள் இவளோட திமிரால எல்லாத்தையும் கெடுத்துட்டா.” என்று அத்தனை ஆவேசமாகப் பேசினார் திலகா.

அவர் பேசியதைக் கேட்ட பரமசிவமும் ஆவேசத்துடன் வேகமாக எழுந்தவர்,”அறிவிருக்கா உனக்கு? அவள் தான் கல்யாணமே பண்ணிட்டாளே!! அப்புறம் என்ன பண்ணச் சொல்ற? உன்னோட முட்டாள் தனமும் கண்மூடித்தனமான ஆசையும் தான் இப்போ இந்த இடத்துல நம்மைக் கொண்டு வந்து விட்டுருக்கு. இவ்ளோ நடந்தும் உன்னோட பேராசை குறையல அப்படித் தான?” என்று கோபத்துடன் கேட்க, திலகாவிற்கு அத்தனை வருத்தம்.

“என்ன சொன்னீங்க எனக்குப் பேராசையா? எப்படி உங்களுக்கு மனசு வந்துச்சு இப்படிச் சொல்ல? நான் என்ன எனக்காகவா கேட்டேன். நம்ம பொண்ணு சந்தோஷமா எந்தவித கஷ்டமும் இல்லாம வாழனும்னு நான் நினைக்கிறது பேராசைனா அப்படியே வைச்சுக்கோங்க. ஆமா எனக்குப் பேராசை தான்.” என்று அவரும் அவர் பங்கிற்குக் கத்த, கேட்ட மூவருக்கும் தான் ஒரு மாதிரியாகி விட்டது.

அம்மாவாக அவரது ஆசை தப்பென்று கூற முடியாது. அதே போல் அனாஹாவின் ஆசையையும் தப்பென்று கூற முடியவில்லை. காதலிற்கு அவர்கள் யாரும் எதிரியில்லை. ஆனால் அனாஹா விஷயத்தை பரமசிவத்திடம் முன் கூட்டியே கூறியிருந்தாள் பிரச்சனை இந்த அளவிற்கு வந்திருக்காது. அதே போல் திலகாவும் தானாக முடிவெடுத்தது தான் இங்குப் பிரச்சனையே.

“ப்ச் கத்தாத. அந்தப் பையன்கிட்ட பணம் காசு இல்லைனா என்ன? ஏன் நம்மகிட்ட இல்லை? நீயும் நானும் சாகும் போது எல்லாத்தையும் எடுத்துட்டா போகப் போறோம்? நமக்கு அப்புறம் எல்லாம் அனுவுக்கு தான? அதை யோசிக்க மாட்டியா நீ?” என்று பதிலிற்குப் பரமசிவமும் கேட்க, அப்போது தான் திலகா இப்படி ஒரு வழியிருக்கிறதோ என்று யோசிக்க ஆரம்பித்தார்.

“ஆமா அண்ணி, அண்ணா சொல்றதை போல நம்ம யாருக்காக சொத்து சேர்க்கிறோம்? எல்லாம் நம்ம பிள்ளைகளுக்குத் தான? அந்தப் பையன் நல்ல பையனா தான் இருக்கனும். இல்லாட்டி நம்ம அனு கண்டிப்பா அந்தப் பையன் மேல விருப்பப்பட்டு இருக்க மாட்டா. பணம் தான் பிரச்சனைனா அண்ணா சொல்ற மாதிரி நம்ம கொடுக்கலாம்.” என்று சதாசிவமும் கூற, திலகாவிற்கும் சற்று மனம் சமன்பட்டது.

“நான் இப்படி யோசிச்சு பாக்கலை.” என்று அவர் மெதுவாகக் கூற,

“அதெல்லாம் நீ எதுக்கு யோசிக்கிற? உனக்கு நீ நினைக்கிறது நடக்கனும்!! அதுக்காக என்ன வேணாலும் செய்வ. அம்மானு நீ ஒன்னு செஞ்ச அதுக்குப் பதிலுக்குப் பதில் செய்றேன்னு அனு ஒன்ன செஞ்சா. ஆக மொத்தம் இரண்டு பேரும் ஆம்பளைனு என்னை ஒரு பொருட்டா கூட மதிக்கலை. நான் எதுக்கு வீட்டுல இருக்கனும்னு இருக்கு.” என்று விரக்தியாக அவர் பேச, அனுவிற்கும் திலகாவிற்கும் மிகவும் கஷ்டமாக இருந்தது அவர் பேச்சின் கேட்டு.

“சாரி அப்பா.” என்று அனுவும்,

“என்னை மன்னிச்சுடுங்க.” என்று திலகாவும் கூற, எதுவும் பதில் பேசவில்லை பரமசிவம்.

“அண்ணா விடுங்க. இரண்டு பேரும் உங்களை மதிக்காமல் அப்படி நடக்கலை. அண்ணிக்கு எங்கே நீங்க அனு காதலுக்குச் சம்மதம் சொல்லிடுவீங்களோனு பயம். அதே போல அனுவுக்கு எங்கே அண்ணி பேச்சைக் கேட்டு அவளோட காதலுக்கு நோ சொல்லிடுவீங்கனு பயம். அதனால தான் இரண்டு பேரும் உங்ககிட்ட விஷயத்தைக் கொண்டு வரலை. இதை நீங்க பெருசுபடுத்த வேண்டாம் அண்ணா.” என்று சதாசிவம் கூறவும் சற்று தணிந்தார் பரமசிவம்.

“ஆமா மாமா, மாமா சொல்றது சரிதான். எல்லாத்தையும் மறந்துட்டு பழையபடி இருங்க. இப்படி நீங்க மூனு பேரும் மூனு துருவத்துல இருந்தால் நல்லாவா இருக்கு? நாளைக்கே நம்ம அனு கல்யாணம் நடக்கும் போது அவள் சந்தோஷத்தோட புகுந்த வீட்டுக்குப் போகனும். மனசு கஷ்டத்தோட போகக் கூடாது. யோசிங்க மாமா. அக்கா உங்களுக்கும் தான்.” என்று அருணா கூற, இருவரும் அமைதியாக இருந்தார்கள்.

ஆனால் மனதில் இருவருக்குமே அருணா கூறியது தான் ஓடிக் கொண்டிருந்தது. அவர் கூறியபடி நாளை அனுவிற்குத் திருமணம் முடிந்துவிட்டாள் அவள் தங்களது மகள் மட்டுமில்லை இன்னொருவருடைய மனைவி, மருமகள், அண்ணி என்று அவளிற்கு என்று சொந்தங்கள் வந்துவிடும் போது அப்பா, அம்மாவாகத் தாங்களும் அவளுடன் இருக்க வேண்டுமென்று யோசித்தனர்.

பரமசிவமும் திலகாவும் அமைதியாக இருக்க, அவர்கள் யோசிக்கட்டும் என்று சதாசிவம்,”அனு அந்தப் பையன் பத்திக் கொஞ்சம் சொல்லு மா.” என்று அவர் கூற, அனாஹாவும் கார்த்திக் பற்றி அவரிடம் கூறினாள். கேட்டவருக்குத் திருப்தியாகத் தான் இருந்தது.

“TNPSC GROUP 1 பரீட்சை, அதுவும் முதல் நிலைல பாஸ் பண்ணிட்டு இப்போ இரண்டாம் நிலை எழுதி ரிசல்ட்காக வெயிட் பண்றார்னு கண்டிப்பா சாதாரண விஷயம் இல்லை. பாஸ் பண்ணிட்டா ரொம்ப நல்ல போஸ்டிங் வரும் அண்ணி. அதிலயும் டெபுட்டி கலெக்டராக கூட வர சான்ஸ் இருக்கு அண்ணி.” என்று சதாசிவம் கூறவும் திலகா மனதில் அனுவை அனைவரும் கலெக்டர் மனைவி என்று கூறும் கற்பனைக் காட்சி தோன்ற அவரது கண்களில் மின்னல் தோன்றி மறைந்தது.

“அப்படிச் சொல்றீங்களா தம்பி? அப்போ பெரிய வேலை தானோ?” என்று அவர் கேட்க,

“ஆமாம் அண்ணி, மாசம் கண்டிப்பா லட்சத்துல தான் சம்பளம் வரும். அப்புறம் அவங்களே வீடும் கொடுத்துருவாங்க. நம்ம அனுவுக்கு அங்கே வசதி குறைச்சலாக இருக்க சான்ஸ் இல்லை அண்ணி.” என்று சதாசிவம் கூறவும், திலகா யோசித்தார்.

“சரி எல்லாரும் இவ்ளோ சொல்றீங்க. அதைவிட நான் என்ன நினைச்சாலும் இப்போ எதுவும் செய்ய முடியாது. அதான் அவள் கல்யாணத்தை ரெஜிஸ்டரே பண்ணிட்டாளே!! அப்புறம் இதுல நம்ம என்ன பண்ண முடியும்? சரினு தான் சொல்லனும்.” என்று எதோ வேண்டா வெறுப்பாகக் கூறுவது போலவே கூற, மற்றவர்களுக்கு அவர் பேசினதைக் கேட்டுச் சிரிப்பு வந்தாலும் அமைதியாக இருந்தனர்.

“சரி மா, தன்யா புகுந்த வீட்டுக்காரங்க ஞாயிற்றுக்கிழமை அவங்க குலதெய்வக் கோவிலுக்குப் போகனும்னு சொன்னாங்க. அதை முடிச்சுட்டு நாம அதுக்கு அப்புறம் நல்ல நாள் பார்த்து அந்தப் பையனை வீட்டுக்கு வரச் சொல்லி பேசலாம்.” என்று பரமசிவம் முழுமனதுடன் கூறவும் அனுவிற்கு அத்தனைச் சந்தோஷம். வேகமாக ஓடி வந்து பரமசிவத்தை அணைத்துக் கொண்டாள் கண்ணீர் விட்டாள். அவரும் அவளது தோளில் தட்டிவிட்டு ஆறுதல் கூறினார்.


பிரதீஷ் அவனது அலுவலகத்திற்கு வந்து அன்றைய வேலையைப் பார்க்க ஆரம்பித்தான். சரியாகப் பதினோர் மணிக்குத் தனது கைப்பேசியை எடுத்தவன் அனாஹாவின் காதலன் கார்த்திக்கிற்கு அழைத்தான்.

கார்த்திக் இப்போது TNPSC Group 1 பரீட்சை எழுதிவிட்டு அதன் ரிசல்ட் வரக் காத்திருக்கிறான். அந்த இடைப்பட்ட நேரத்தில் வீட்டில் சும்மா இருக்காமல் அவன் படித்த அதே பயிற்சி மையத்தில் பகுதி நேர ஆசிரியராகப் பணியாற்றி வருகிறான். பதினோர் மணி அவனிற்கு டீ ப்ரேக் நேரம். அதைத் தெரிந்து தான் பிரதீஷ் அந்த நேரம் அழைத்தான்.

கார்த்திக் எடுக்கவும் பிரதீஷ்,”ஹலோ கார்த்திக் பிஸியா?” என்று கேட்டான்.

“இல்லை ப்ரோ, இப்போ டீ ப்ரேக் தான். சொல்லுங்க ப்ரோ.” என்றான்.

“உங்க வீட்டுல சொல்லிட்டீங்களா கார்த்திக்? என்ன சொன்னாங்க? அதைக் கேட்கத் தான் கால் பண்ணேன்.” என்றான் பிரதீஷ்.

“இல்லை ப்ரோ இன்னும் சொல்லலை. அப்பா ஒரு கேஸ் விஷயமா பிஸியா இருக்கார். தம்பிக்கு மட்டும் தெரியும். அந்த கேஸ் முடிஞ்சதும் சொல்லிடுவேன் ப்ரோ.”

“உங்க வீட்டுல ப்ராப்ளம் எதுவும் இருக்காதுல?”

“இருக்காது ப்ரோ. கண்டிப்பா அம்மா எனக்கு சப்போர்ட் பண்ணுவாங்க. அம்மாவுக்கு ஓகேனா அப்பாவும் ஓகே சொல்லிடுவாங்க. வெளில தான் அப்பா போலிஸ் ஆனால் வீட்டுக்குள்ள அம்மா பேச்சுக்கு மறு பேச்சு கிடையாது.”

“ஓகே கார்த்திக். நீங்க இவ்ளோ நம்பிக்கையா பேசுறதே போதும்.”

“ம் எனக்கு எங்கே வீட்டை நினைச்சு எப்போவும் பயம் இல்லை ப்ரோ. அனு வீட்டை நினைச்சு தான் பயமே. நான் வந்து பேசுறேன்னு சொன்னாலும் வேண்டாம்னு சொல்றா.”

“அனு அவங்க வீட்டைச் சமாளிச்சுடுவா. நீங்க கவலைப்படாதீங்க கார்த்திக். நாங்க எதுக்கு இருக்கோம். எனக்குத் தெரிஞ்சு அனுவோட அப்பாவுக்கு ஓகே தான். அவங்க அம்மா கொஞ்சம் வீம்பு பண்ணுறாங்க. ஆனால் சையுவோட அப்பா, அம்மா கூட ஓகே போல. அதனால அவங்களை வழிக்குக் கொண்டு வரது பெரிய விஷயமா இருக்காது.” என்றான் பிரதீஷ்.

சரியாக அதே நேரம் அனாஹா கார்த்திக்கிற்கு அழைக்க, உடனே கார்த்திக் பிரதீஷிடம்,”ப்ரோ அனு தான் கால் பண்றா. நான் பேசிட்டு உங்களுக்குக் கூப்பிடுறேன்.” என்று கூற,

“சரி ப்ரோ நீங்க பாருங்க.” என்று கூறிவிட்டு வைத்துவிட்டான்.

பிரதீஷிற்குத் தன் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது போல் தனக்கு உதவிய அனுவின் திருமணமும் நல்லபடியாக நடக்க வேண்டும். அவனது திருமணம் முடிந்துவிட்டது என அவனால் அப்படியே இருக்க முடியாது. தனக்கு உதவிய அனுவின் வாழ்க்கையைச் சரி செய்வது அவனது பொறுப்பு என்று அத்தனை திண்ணமாக நம்பினான். அதனால் தான் கார்த்திக்கிற்கு அழைத்து விசாரித்ததும்.

பிரதீஷின் அழைப்பை வைத்தவுடன், கார்த்திக் அனுவின் அழைப்பை ஏற்றவன்,”சொல்லு அனு. ப்ரோகிட்ட தான் பேசிட்டு இருந்தேன்.” என்றான்.

“ஓ!! என்ன சொன்னாங்க?”

“எல்லாம் நம்ம மேரேஜ் விஷயம் தான் அனு. நம்மளை விட ப்ரோ தான் நமக்காக ரொம்ப யோசிக்கிறார்.”

“ம் ஆமா, சித்தப்பா சொன்னாங்க. நமக்காக அவர்கிட்ட பேசிருக்கிறார் பிரதீஷ். அதனால தான் சித்தப்பாவும் கொஞ்சம் இறங்கி வந்து அப்பாவையும் அம்மாவையும் கன்வின்ஸ் பண்ணார்.”

“ஏய் என்ன சொல்ற? அப்போ என் மாமனாரும் மாமியாரும் க்ரீன் சிக்னல் காட்டிட்டாங்களா?” என்று அத்தனைச் சந்தோஷத்துடன் கேட்டான்.

“ம் ஆமா கார்க்கி. நானும் ரொம்ப ஹாப்பியா தான் இருக்கேன். அதான் உடனே உனக்குக் கூப்பிட்டேன். உன்னை அப்பா பார்க்கனும்னு சொன்னாங்க.” என்று அனு கூற,

“ஓ எஸ் தாராளமா பார்க்கலாம். அதுக்கு முன்னாடி நானும் வீட்டுல சொல்லிடுறேன்.”

“ம் அடுத்த வாரம் தான் பார்க்க வரச் சொன்னாங்க. வர சண்டே தன்யா வீட்டுல குலதெய்வ கோவிலுக்குப் போகனும்னு சொன்னாங்க. அதனால அது முடிஞ்சு தான் நம்ம மேரேஜ் பத்திப் பேசுவாங்க.” என்று அனு கூற, கார்த்திக்கும் சரியென்று கூறிவிட்டு வேற சில விஷயங்கள் பேசிவிட்டு கைப்பேசியை வைத்தனர்.

கைப்பேசி வைத்த கையோடு கார்த்திக் பிரதீஷிற்கு அழைத்து விஷயத்தைக் கூற, அத்தனைச் சந்தோஷம் அவனிற்கும். அதே சந்தோஷத்துடன் அவன் வேலையை முடித்துக் கொண்டு வீட்டிற்குக் கிளம்பினான்.

வீட்டிற்கு வந்த பிரதீஷ் உடையை மாற்றிக் கொண்டு மதியச் சாப்பாடு செய்ய ஆரம்பித்தான். சைதன்யா காலையில் கூறியது போல் முன்பே அவளிடம் தான் செய்யும் உணவு அவளிற்குப் பிடிக்குமா என்று கேட்டுக் கொண்டே அவன் செய்ய ஆரம்பித்தான். முட்டைக் குழம்பும், கோஸ் பொரியலும் செய்து முடித்து அப்பளமும் சுட்டு வைத்தவன் அனைத்தையும் மேஜை மேல் வைத்து முடிக்க படாரென்று கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த சைதன்யா அங்கிருந்து சாய்விருக்கையில் அவளது பையை டொம் என்று போட்டு விட்டு அதன் பக்கத்திலே அமர, அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் பார்த்தான் பிரதீஷ்.

அவளிடம் வந்த பிரதீஷ்,”என்னாச்சு சையு? ஏன் இவ்ளோ கோபம் உனக்கு? முதல்ல உனக்குக் கோபம் வருமா?” என்று கேட்க, சீற்றத்துடன் திரும்பினாள் சைதன்யா.

“ஹப்பா, என்னாச்சு சையு?”

“என்னைக் கோபப்படுத்தாமல் அமைதியாக இருங்க ப்ளீஸ்.”

“டேய் நான் என்ன செஞ்சேன்? ஏன் என்கிட்ட கோபப்படுற?”

“ப்ச் நீங்க ஒன்னும் பண்ணலை. ஆனால் என்னை இப்போ கிண்டல் பண்ணீங்கள!! ஏன் நானும் மனுஷி தான எனக்குக் கோபம் எல்லாம் வரக் கூடாதா? இல்லை கல்யாணமாகிடுச்சு அதனால நீங்க சொல்றதை மட்டும் கேட்டுட்டு தான் இருக்கனுமா? நான் சுயமா எதுவும் முடிவெடுக்கக் கூடாதா?” என்று ஏதோ ஏதோ பேச பிரதீஷிற்கு ஒரு மாதிரியாகி விட்டது.

வேகமாக அவள் அருகில் வந்து அவளது தோளைச் சுற்றி கை போட்டு அவளைத் தன் அருகில் இழுக்க, அவளோ அவனது கையை எடுத்து விட்டுத் தள்ளி அமர, மீண்டும் அவளை நெருங்கி தன் பக்கம் இழுத்தவன்,”சாரி டா சையு, நான் அந்த அர்தத்துல சொல்லலை!! உன்னை சாப்ட் நேட்சர் க்ரள்னு அந்த அர்த்ததுல தான் சொன்னேன். ஆனால் நீ இவ்ளோ கோபப்படுவனு நான் நினைக்கலை. ஐ ஆம் ரியலி சாரி டா.” என்று கூறவும் தான் சற்று தணிந்தாள் சைதன்யா.

“சரி சொல்லு என்ன ப்ராப்ளம். யார் என்ன சொன்னாங்க உன்னை?” என்று கேட்டான். ஆனால் சைதன்யா அமைதியாக இருக்க, பிரதீஷூம் அவளே கூறட்டும் என்று அமைதியாக இருந்தான். ஆனால் அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க, அதற்கு மேல் சைதன்யாவால் அமைதியாக இருக்க முடியவில்லை.

“சாரி.” என்றாள்.

“டேய் நமக்குள்ள சாரியெல்லாம் வேண்டாம். நீ விஷயத்தை மட்டும் சொல்லு.” என்றான்.

“எல்லாம் அந்த சங்கர்னால தான்.” என்று கூற,

யாரைக் கூறுகிறாள் என்று எதுவும் புரியாமல்,”யார் அந்த சங்கர்?” என்று கேட்டான்.

“என்னோட ஆபிஸ்ல அசோசியேட்டா வொர்க் பண்றவன். என்னோட டைரக்ட் சீனியர். அவனுக்குக் கீழே தான் நான் வொர்க் பண்றேன்.”

“ஓ என்ன சொன்னான்?”

“நான் எப்போவும் போல ஹாப்பியா தான் ஆபிஸ் போனேன். எனக்கு மேரேஜ் ஆகிடுச்சுன்னு எல்லாரும் வந்து எனக்கு விஷ் பண்ணாங்க. ஆனால் இந்த சங்கர் வந்து என் முகத்துக்கு முன்னாடி விஷ் பண்ணிட்டு பின்னாடி இன்னொரு அசோசியேட்கிட்ட ஒரு மாதிரி பேசிட்டான். எனக்கு ரொம்ப கோபம் வந்துருச்சு. நான் கிளம்பி வந்துட்டேன்.” என்று அவள் கூற,

“அப்படி என்ன சொன்னான்?” என்று கேட்டான் பிரதீஷ்.

“ப்ச் இடியட் எப்படிப் பேசிட்டான் தெரியுமா? எனக்கு மேரேஜ் ஆகிடுச்சு, இனிமே என்னால வேலைல கான்சன்ட்டேர்ட் பண்ண முடியாதாம். நான்…” என்று ஆரம்பித்தவள் பேச முடியாமல் அமைதியாகி விட, அவளது தோளில் போட்டிருந்த கையைச் சற்று இறக்கித் தேய்த்து விட்டு அவளை ஆறுதல் படுத்த, அடுத்து அவள் பேசியதைக் கேட்டு அவனது நரம்பு புடைக்கக் கோபம் தலைக்கு ஏறியது.

error: Content is protected !!