நெஞ்சில் உறைந்த தேடல் – 9 (3)

“ஆஷா…”  இருமுறை அவளை சமாதானம் செய்யும் விதமாக அழைக்க அதில் மேலும் அவளது சத்தம் கூடியதே தவிர குறையவில்லை. இப்போது,

“இப்போ அழுகையை நிறுத்தபோறயா இல்லையா?…” சற்றே குரலுயர்த்தி அதட்ட சட்டென்று அழுகையை நிறுத்தியவள் மெல்லிய விசும்பலோடு அவனை பார்க்க,

“அழுததெல்லாம் போதும். இதுவரைக்கும் நீயும் நானும் பட்ட கஷ்டமும் போதும். திரும்பவும் பழைய பல்லவியையே பாடின நான் மனுஷனா இருக்கமாட்டேன்…” என முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்று அவளை அதட்ட,

அய்யனார் சிலை போல மிரட்டிக்கொண்டு நின்ற அவனை பார்த்தவள்,

“இப்போ மட்டும் மனுஷனை போலவா இருக்கீங்க?…” மூக்கை உறிஞ்சிக்கொண்டே அவனிடம் வாதாட,

“ஹ்ம் இதுதான் என்னோட ஆஷா. எப்போவுமே என்னோட ப்ரேவ் கேர்ள் ஆஷா தான் எனக்கு பிடிக்கும். அழுமூஞ்சி ஆஷா ம்ஹூம். வேண்டவே வேண்டாம்…” என கூறி சிரிக்க தானும் அவனுடன் கலந்துகொண்டாள் சிரிப்பில்.

இந்த சிலநாட்கள் அலைச்சலும் இதுவரை மனதில் சுமந்துகொண்டிருந்த வேதனையும் இன்று ஒரு முடிவிற்கு வந்துவிட்ட நிலையில் மனம் லேசாக இதுவரை அவனிற்கு தெரியாத சோர்வும் அசதியும் இன்று அவனிடம் ஓய்விற்கு கெஞ்சியது.

அவன் கண்களில் தெரிந்த அயர்வையும் நிம்மதியையும் உணர்ந்தவள், “அஜூ தூங்குவோமா?…” என்றவளை பார்த்தவன்,

“என் பார்வையை வச்சே எனக்கு என்ன தேவைன்னு சொல்ற நீ எப்படி என்னை விட்டு பிரியனும்னு முடிவெடுத்த ஆஷா? என்னால அதை தான் தாங்க முடியவில்லை…”

“ப்ளீஸ் அஜூ, இனியும் பழசை பேசவேண்டாமே. மனசை அறுக்குது. விட்ருங்க…” என அவனின் பேச்சை நிறுத்தியவள் அவனை உறங்க சொல்லிவிட்டு தன்னையும் அவனது கை வளைவிற்குள் திணித்துகொண்டாள்.

படுத்த நொடி எங்கிருந்துதான் உறக்கமது அர்ஜூனை அடைந்ததோ உடனே தூங்கியும் போனான். பழைய விஷயங்களை பேசவேண்டாம் என்று கூறிய ஸ்டெபியின் கண்களை பொட்டுத்தூக்கமும் அண்டவில்லை.

பழைய நினைவுகள் அனைத்தும் அலைமோதி அவளது நினைவலைகள் கரையேற ஆரம்பித்தது.

————————————–

சிறுவயதிலிருந்தே ஆரவ், ஸ்டெபி, அர்ஜூன் அனைவரும் ஒன்றாக பயின்றாலும் வளர வளர அவர்களது நட்பு இறுகியது.

ஒரு கட்டத்திற்கும் மேல் ஆரவ்விடம் பேசுவது போல இயல்பாக அர்ஜூனிடம் ஸ்டெபியால் பேசவோ பழகவோ முடியவில்லை. தன்னையே ஆராய்ந்தபோது கிடைத்த விடைதான் காதல்.

ஸ்டெபியின் காதலை அர்ஜூன் உணர்ந்தாலும் அவளிடம் அதை பற்றி எதுவும் கேட்டுக்கொள்ள மாட்டான். அதே போல அர்ஜூனும் ஸ்டெபியை விரும்பவும் செய்தான். இருவரது எண்ணமும் ஒரே அலைவரிசையில் எக்கணம் பயணிக்க ஆரம்பித்ததோ?

இருவருமே கண்களை தாண்டி அவர்களது காதலை வார்த்தையில் வடிக்கவில்லை. வார்த்தையால் காதலை கூறாவிடிலும் உள்ளத்தால் நொடிக்கொருதரம் பரிமாறிக்கொண்டனர் விழிகளின் வழி. ஆரவ்க்குமே இந்த விஷயம் தெரியும் என்றாலும் அர்ஜூனின் வார்த்தைக்காக தள்ளிநின்றான்.

ஸ்டெபி தனக்காக அர்ஜூனிடம் ஆரவ்வை பேச சொல்ல அர்ஜூனோ நீ என்ன அவளுக்கு தூதா அவளே வரட்டும் என விரட்ட அதற்கு மேலும் இந்த விஷயத்தில் தலையிடாமல் நாகரீகமாக இருந்துகொண்டான்.

இப்படியே நாட்கள் ஓட படிப்பையும் முடித்து ஹவுஸ்சர்ஜன் முடித்த மூவரும் ஆரவ் ஹாஸ்பிட்டலில் தங்களது பணியை தொடங்கினர். ஸ்டெபி அர்ஜூனிடம் காதலை கூற தயங்க அர்ஜூனோ அவளின் தயக்கத்தை உடைத்து அவளே முன்வரட்டும் என்று காத்திருந்தான்.

தன்னிடமே காதலை கூற தயங்குபவள் எப்படி வீட்டினரிடம் கூறி சம்மதம் வாங்குவாள்? மற்ற விஷயத்தில் இருக்கும் இந்த தைரியம் ஏன் இதில் இல்லை இவளுக்கு? என்ற சிறு கோவம் அர்ஜூனிற்கு.

அதனால் அவன் அமைதி காக்க ஸ்டெபிதான் தவித்துபோனாள். அவளது தயக்கத்தை உடைத்தெறியும் நாளும் ஆண்டனியால் உருவானது.

ஸ்டெபிக்கு மாப்பிள்ளை பார்க்க இருப்பதாக ஆண்டனி கூறவும் ஸ்டெபி அதிர்ந்துபோய் ஆரவ்விடம் முறையிட அவனோ உன் சங்காத்தமே வேண்டாம் என கும்பிடு போட அடித்துப்பிடித்துகொண்டு அர்ஜூனிடம் வந்து நின்றாள்.

வந்து நின்றது முதல் ஒரு வார்த்தை கூட பேசாமல் அர்ஜூனை ஒரு பார்வை பார்ப்பதும் அந்த அறையை அன்றுதான் பார்ப்பது போல கர்மாசிரத்தையாக பார்வையால் வலம் வரவுமாக இருக்க  பொறுமை இழந்த அர்ஜூன் எழுந்துகொண்டான்.

“ஆஷா நீ இந்த ரூமை பொறுமையா சுத்திப்பார்த்து முடி. அதுக்குள்ளே நான் ஓபி பேஷண்ட்ஸ் பார்த்துட்டு வந்திடறேன். அதுக்கப்பறமாவது உனக்கு விஷயத்தை சொல்லனும்னு தோணுச்சுனா சொல்லு…” என அங்கிருந்து கிளம்ப ஸ்டெபியும் எழுந்துகொண்டாள்.

“ப்ளீஸ் அஜூ…” என அவனை நிறுத்த அவளது முகத்தில் தென்பட்ட பதட்டமும் விழிகளில் தெரிந்த வெட்கம் கலந்த பயமும் அர்ஜூனை சுவாரஸியமாக்கியது.

ஸ்டெதஸ்கோப்பையும் தனது வொய்ட் கோட்டையும் மேஜையில் வைத்துவிட்டு அதில் சாய்ந்து கைகட்டி நின்றவன் குறுகுறு வென அவளையே பார்க்க அதில் மேலும் அவஸ்தைக்கு ஆளானாள் ஸ்டெபி. அதை கண்டவனுக்கு மென்மையான முறுவல் ஒன்று தோன்றியது.

“ஹ்ம் சொல்லு. உனக்கு இன்னும் பைவ் மினிட்ஸ் டைம் தரேன்…” என வாட்சை பார்க்க அவனை அறிந்தவள்,

“அஜூ  டாடி என்னை மேரேஜ் பண்ணிக்க சொல்றாங்க. அவங்ககிட்ட நான் என்ன சொல்ல?…” தயங்கி தயங்கி இதை சொல்லும் போதே அவளது கண்கள் கலங்கியது. ஏனோ அது அர்ஜூனின் பிடிவாதத்தை தகர்க்க இனியும் அவளை படுத்த வேண்டாம் என முடிவெடுத்தவன்,

“உன் டாடிக்கிட்ட மேரேஜ் பண்ணிக்க சம்மதம்னு சொல்லவேண்டியது தானே?…” என நிறுத்தியவன் அவள் திகைத்து பார்த்துகொண்டிருக்கும் போதே,

“அர்ஜூனை மேரேஜ் பண்ணிக்க சம்மதம்னு சொல்லிருக்கவேண்டியது ஆஷா?. அதை சொல்ல உனக்கென்ன கஷ்டம்?…” என்று முடிக்கவில்லை,

“அஜூ…” என ஆனந்த பரவசத்தில் அவனது கைகளை பற்ற,

“சொல்லுவ தானே? இதை என்கிட்டே கேட்க இப்படி ஓடி வரனுமாக்கும்?…” அவளது விரல்களுக்கு அழுத்தம் குடுத்தவாறே அவளிடம் கேட்க,

“நீங்க தான் உங்க விருப்பத்தை என்கிட்டே சொல்லவே இல்லையே? பின்ன எந்த நம்பிக்கையில நான் டாடிக்கிட்ட சொல்ல?…”

“நீ என்ன லூஸா ஆஷா? நாம ஒன்னும் டீன் ஏஜ் பசங்க கிடையாது. அதுவும் இல்லாம இந்த ப்ளவர்ஸ் குடுத்து மண்டிபோட்டு லவ் ப்ரப்போஸ் பண்ண எனக்கு தெரியாது. எனக்கு வரவும் வராது. அர்ஜூன் வேற…”

“தென் என்ன சொன்ன? எந்த நம்பிக்கையில சொல்லன்னு கேட்ட தானே? உனக்கு எவ்வளோ தைரியம்? என்னோட பார்வையும் அது சொன்ன பாஷையும், என் மனசை அதிலிருக்கும் காதலை உன்கிட்ட சொன்னதில்லையா?. காதல் இதயத்தால் உணரவேண்டியது. வார்த்தைகளை விட அதற்குத்தான் சக்தி அதிகம்னு நான் நம்பறேன்….”

“உனக்கு என் மேல இருக்கும் காதலை நான் உணர்ந்தது போல நீயும் தானே உணர்ந்த? ஊரெல்லாம் நாங்க காதலிக்கிறோம்னு படம் போட்டு காட்டி அடுத்தவங்க பார்வைக்கும் விமர்சனத்துக்கும் நம்ம ஆளாகனுமா? என் ஆஷா வித்யாசமானவன்னு நான் நினச்சேன். நீயும் சராசரியா யோசிக்கலாமா?…”

அவனது பேச்சின் தாக்கத்தில் அதில் வெளிப்பட்ட பரிமாணத்தில் அசந்துவிட்டாள் ஆஷா.

“இப்போ சொல்லு, நானும் உனக்கு எல்லோரையும் போல காதலை சொல்லனும்னு நீ எதிர்பார்க்கிறாயா?…” நான் அதற்கும் தயார் என்பது போன்ற அவனது பார்வையில் அவனின் தோள் சாய்ந்தவள்,

“என் அஜூ இப்படியே இருக்கிறது தான் எனக்கு பிடிக்கும். நம் காதலை உணர உன்னோட பார்வையே போதும் அஜூ எனக்கு. வார்த்தைகள் தேவையில்லை…” என்றவளின் தலையில் தானும் நிறைவோடு தலைசாய்ந்து கொண்டான் அர்ஜூன்.

error: Content is protected !!