நெஞ்சில் உறைந்த தேடல் – 10 (3)

“என்ன ஆரவ் சர்ஜரி நல்லபடியா முடிஞ்சதா?…” என்ற ராகவ்விடம்,

“சக்சஸ் டாடி. இப்போதான் முடிஞ்சது. பேஷன்ட் நல்ல கண்டிஷன்ல இருக்கார். நோ ப்ராப்ளம். உடனே அங்க வர டைம் இருக்குமான்னு தெரியலை. அதான் இப்படி…” என கூறி புன்னகைத்தவன் பார்வை அங்கே கல்பனா கொண்டுவந்திருந்த தட்டில் விழ கல்பனாவை பார்த்தான்.

அதை உணர்ந்தது போல அவர் அவன் புறம் திரும்பவே இல்லை. பின் ஆரவ் அர்ஜூனை பார்க்க அவன் முகத்திலிருந்து  அதில் ஒன்றும் கண்டுபிடிக்கமுடியவில்லை. அதற்குள் ஸ்டெபியை தர்ஷினி அழைத்துவர அனைவரது பார்வையும் அங்கே சென்றது.

மகளின் உருவமே மாறிப்போய் வேறாக வந்து நின்றவளை பார்த்த ஆண்டனிக்கு மகிழ்வதா இல்லை வருந்துவதா என்றே தெரியவில்லை. விருப்பமில்லாமல் காதலுக்காக இந்த வேஷமோ? என எண்ணினார்.

ஆனால் மலர்ந்து இருந்த ஸ்டெபியின் முகம் அவருக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. கல்பனாவிற்கு தான் எரிகின்ற தீயில் எண்ணெய் வார்த்தது போல ஆனது.

எந்த ஒப்பனையும் இல்லாமலே அழகாக இருந்தவள் இப்போது இந்த அலங்காரத்திலும்  நெற்றியில் மின்னும் குங்குமத்திலும் பேரழகியாக ஒளிர்விட தவறு செய்துவிட்டோமோ என காலதாமதமாக வருந்தினார்.

சும்மாவே அர்ஜூன் ஆஷா ஆஷா என சுற்றுவான். இனி இப்படி இவளை தினமும் கண்டால் அவன் சுத்தமாக தங்களை மறந்துவிடுவானோ என மகனை பார்க்க அவன் இவரை தான் பார்த்துகொண்டிருந்தான். உடன் ஆரவ்வும்.

அதில் சுதாரித்த கல்பனா லேசாக சிரித்து வைக்க ஸ்டெபியை பார்த்ததும் கல்பனாவின் முகத்தில் தெரிந்த பாவனைகளை அவதானித்துகொண்டிருந்த ஆரவ்வும், அர்ஜூனும் அவரை முறைத்தனர்.

ஆஷாவை பார்த்த ஆரவ், “ஹேய் பேப் நீ இவ்வளோ ப்யூட்டியா? முதல்லயே தெரியாம போச்சே?…” என போலியாக வருந்த அதில் கடுகடுத்த கல்பனா கிருஷ்ணனை முடுக்கிவிட,

“மேற்கொண்டு பேசலாம். நாங்க சொல்லவேண்டியதை சொல்லியாச்சு. இப்போ உங்க முடிவை சொன்னா எங்களுக்கு வசதியா இருக்கும்…” என கூறிய கிருஷ்ணன் ஆரவ்வை திரும்பியும் பார்க்கவில்லை.

அவனோ அர்ஜூனை பார்த்து கேள்வியாக பார்க்க தனக்கு தெரியவில்லை என்று தோள் குலுக்கினான். கார்த்திக் அமைதியாக இருப்பதில் இருந்தே ஏதோ ஏடாகூடமாக நடந்திருக்கிறது என்பதை அறிந்த ஆரவ் நடப்பதை கவனிக்க ஆரம்பித்தான்.

ஆண்டனி செய்வதறியாமல் ஸ்டெபியை பார்த்தபடி இருக்க அவரின் தவிப்பு தப்பாமல் அர்ஜூனுக்கு தெரிந்தது.

“அங்கிள் என்ன விஷயம்னு சொல்றீங்களா? நான் மேலே போன போது என்ன பேசினாங்க என்னோட பேரன்ட்ஸ்?…” பேரன்ட்ஸ் என்றதில் சிறு அழுத்தம் குடுத்து கேட்க ஆண்டனி வாயே திறக்கவில்லை.

“அர்ஜூன், உன்னோட பேரன்ட்ஸ்க்கு அவங்க முறைப்படி தான் உங்க கல்யாணம் நடக்கனுமாம். அதுவும் உங்க குலதெய்வம் கோவில்ல வச்சு. எந்த ஒரு சம்பிரதாயமும் விட்டுப்போய்ட கூடாதாம். முக்கியமா ஸ்டெபி மதம் மாறனும்னு சொன்னாங்க. அதுக்குத்தான் முடிவை பத்தி பேசறாங்க…”

பட்டென்று தேங்காய் உடைத்தது போல ராகவன் அப்படியே கூறிவிட அர்ஜூன் அதிர்ந்துவிட்டான். ஸ்டெபி இதை ஓரளவிற்கு எதிர்பார்த்துதான் இருந்தாள். அதனால் முகத்தில் எந்தவிதமான ஏமாற்றத்தையும் அதிர்வையும் அவள் வெளிக்காட்டவில்லை.

“அதுமட்டுமில்லாம  இவங்க சொல்றதுக்கு சம்மதிக்கலைனா…” என்று இழுத்த ராகவ்வை பார்த்தவன்,

“சொல்லுங்கப்பா என்ன சொன்னாங்கன்னு?…” என தூண்ட ஆரவ் அதை கிரகித்துவிட்டான். அதில் அவ்வளவு கோவம் அவனுக்கு.

“சம்மதிக்கலைனா அவங்க வேற பொண்ணை தான் பார்க்கனும்னு சொன்னாங்க. ஏற்கனவே இந்த சம்பந்ததுல விருப்பம் இல்லை போல அவங்களுக்கு…”

வந்ததிலிருந்து கல்பனாவும், கிருஷ்ணனும் செய்த உதாசினத்திலும் அலும்பிலும் கொதித்துபோய் இருந்த ராகவ் சொல்லியேவிட்டார்.

ஆரவ் கோவத்தை அடக்கியபடி அமைதியாக அங்கிருந்து பார்த்துக்கொண்டே இருந்தான். ஆனாலும் எதுவும் பேச முயலவில்லை. அவனுக்கு அர்ஜூனின் மேல் அப்படி  நம்பிக்கை இருந்தது.

இது அவர்கள் இருவரும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டிய விஷயம். இப்போதைக்கு தலையிட வேண்டாம். அர்ஜூனே சமாளிப்பான் என்று பொறுமையானான்.

தாயையும் தந்தையையும் பார்த்த அர்ஜூன் ஒரு முடிவோடு அவர்களை கூர்மையாக பார்த்துக்கொண்டே,

“முடிவு என்னன்னு நான் சொல்றேன் அங்கிள்…” என்றவனை கல்பனாவும், கிருஷ்ணனும் உதறலோடு பார்க்க, மற்றவர்கள் ஆர்வமாக பார்த்தனர்.

“எங்க கல்யாணம் ரிஜிஸ்டர் ஆபிஸ்ல சிம்பிளா நம்மோட  பேமிலி மெம்பர்ஸ் மட்டும் இருந்து தான் நடக்கும். மேரேஜ் ரிஷப்ஷன் ஒரு ஹோட்டல்ல வச்சுக்கலாம். அதுக்கு எல்லோரையும் இன்வைட் பண்ணிடலாம்…”

“இதுதான் என்னோட இறுதியான முடிவு. யாருக்கும் பாதகமோ சாதகமோ இல்லாத பதில்னு நினைக்கிறேன்…” என்றவனை அணைத்துகொண்டார் ராகவ். ஆண்டனி எழுந்து கைகுலுக்க,

“ஆஷா தான் அங்கிள் இந்த யோசனையை சொன்னா. நான் கூட சர்ச்ல மேரேஜ் வச்சுக்கலாம்னு சொன்னேன். அவ தான் வேண்டாம்னு சொல்லிட்டா…” என்றவனை பெருமையாக பார்த்தார் ஆண்டனி.

சந்தோஷத்தில் கண்ணீரே வந்துவிட்டது அவருக்கு. “தேங்க்ஸ் அர்ஜூன்…” என அவனை தழுவிக்கொள்ள ஸ்டெபியின் காதல் பார்வை அவனை ஆக்கிரமித்தது. ஆரவ் தன் நண்பனை அத்தனை பெருமை பொங்க பார்த்திருந்தான்.

“அதெப்படி அர்ஜூன் நமக்குன்னு ஒரு பழக்கவழக்கம் இருக்கே? நம்ம முறைகளை விட்டுகொடுக்க நினைக்கிறது கொஞ்சமும் நல்லா இல்லை. நீ  வேணும்னா உன்னோட காதலுக்காக இதை கூட செய்யமாட்டாளா இவ?…” என வெடித்த தாயிடம்,

“ஓ தாராளமா நீங்க சொல்றது போல பண்ணிடலாம்மா…” எனவும் கண்கள் ஜொலிக்க பார்த்த கல்பனாவிடம்,

“நீங்க சொல்றது போல ஆஷா பக்கத்திலையும் சில பழக்கவழக்கம் இருக்காம். வேணும்னா அவளுக்காக நானும் அவங்க மதத்துக்கு மாறிடட்டுமா?. என் மேல வச்சிருக்கிற காதலுக்கு அவ அப்படி செய்தா அவளோட காதலுக்காக நானும் இதை செய்வேன்…”

“என்னோட காதலும் குறைந்ததில்லை. சொல்லுங்க செய்யட்டுமா?…” அடக்கப்பட்ட ஆத்திரத்தில் அழுத்தமான குரலில் கெட்டவனை திகிலுடன் பார்த்தார் கல்பனா.

அதற்கு மேலும் பேசினால் எங்கே தாங்கள் வேண்டாம் என்று சொல்லி இங்கேயே இருந்து விடுவானோ என பயந்துவிட்டார்.

அவனது நெத்தியடி பதிலில் அனைவரும் தங்களுக்குள் சில்லாகித்துகொண்டனர். ஆரவ் மட்டும் அர்ஜூனின் பெற்றோர் மீதான தீர்க்கப்படவேண்டிய கணக்குகளை சரிபார்த்துகொண்டிருந்தான்.

அடுத்த இரண்டு மாதத்தில் அர்ஜூன் கூறியபடி ரிஜிஸ்டர் ஆபீஸில் திருமணம் எளிமையாக நடக்க ஸ்டெபியின் விருப்பபடி திருமாங்கல்யத்தை அவளுக்கு கட்டியவன் அவள் வழக்கப்படி தன் விருப்பபடி திருமண வைர மோதிரத்தை அவளுக்கு அணிவித்தான்.

அதை பார்த்த கல்பனா, “இதுவரை சம்பாதிச்ச மொத்த பணத்தையும் இந்த ரெண்டே மோதிரத்துல கரைச்சுட்டானே?…” என புலம்பித்தள்ளினார் கிருஷ்ணனிடம். அதுவும் சத்தமே இல்லாமல்.

திருமணம் முடிந்து ரிஷப்ஷன் ஆண்டனி ஆசைப்படி வெகு விமரிசையாக பெரியளவில் பகட்டாக கொண்டாடப்பட்டது. அந்த ஆடம்பரம் கூட அர்ஜூனின் பெற்றோரை குளிர்விக்கவில்லை.

“பணத்தை காட்டி மயக்க நினைக்கிறாளோ” என்றுதான் தவறாக நினைத்தனர். எத்தனை முயன்றும் இத்திருமணத்தை நிறுத்த முடியவில்லையே என்று தான் மாய்ந்துபோயினர்.

அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஸ்டெபியும் அர்ஜூனும் தங்களது காதல் உலகத்தில் மெய்மறந்து வாழ்க்கையை வாழ்க்கையாக ரசித்து வாழ ஆரம்பித்தனர்.

error: Content is protected !!