அதுவரை உர்ரென்று இருந்த கல்பனாவின் முகம் திடீரென பளிச்சிட அர்ஜூன் சுதாரித்தான். என்ன சொல்ல இருக்கிறாரோ என பார்த்திருக்க கல்பனா ஆரம்பித்தார்.
“இங்க வாம்மா…” அன்பொழுக ஸ்டெபியை அழைத்தாலும் அந்த வார்த்தைகளிலோ முகத்திலோ சிறிதும் அன்பில்லை.
அவரின் அருகில் சென்று அமரவும் வேகமாக குங்கும சிமிழில் இருந்த திலகத்தை எடுத்து ஸ்டெபியின் நெற்றியில் வைக்க திடுக்கிட்டு போனாள் அவள். அனைவரும் பதறிப்போய் பார்க்க அர்ஜூனோ கல்பனாவை கோவமாக பேச போக அவனை பார்வையிலேயே அடக்கினாள்.
பின் கல்பனாவின் முகத்தை பார்க்க அவரது விழிகளில் தெரிந்த எதிர்பார்ப்பில் சுதாரித்தவள் சிறு புன்னகையோடு,
“தேங்க்ஸ் அத்தை…” என கூறி அவர் பாதம் பணிய கிருஷ்ணனுக்கும் கல்பனாவிற்கும் சப்பென்று ஆனது. ஆனாலும் விடாமல்,
“இருக்கட்டும்மா…” என்றவர் புடவையை வைத்திருந்த தட்டை எடுத்துகொடுக்க அதை பார்த்து ஸ்டெபியின் முகத்தில் சிறு அதிர்ச்சி தோன்றி மறையவும்,
“இந்த புடவையை கட்டிட்டு அப்டியே இதையெல்லாம் போட்டுட்டு வாம்மா. மேற்கொண்டு கல்யாணத்தை பத்தி பேசனுமில்ல…” என கொஞ்சம் நக்கலாக கூறினார்.
ஸ்டெபி அர்ஜூனை பார்க்க அவனோ வேண்டாம் என்பது போல தலையசைக்க அவனது இந்த புரிதலில் சற்று முன்பு ஏற்பட்ட கலக்கம் மறைய அவனுக்கு ஒரு புன்னகையை சிந்திவிட்டு ஆண்டனியை அழுத்தமாக பார்த்துவிட்டே சென்றாள்.
ஆண்டனியால் ஒன்றும் பேசமுடியாமல் இறுக்கமாக அமர்ந்திருக்க அவர் மனமோ, “தன் பெண்ணிற்கு ஆரம்பமே இவ்வளவு சோதனையாக இருக்கிறதே? இதெல்லாம் நல்லதிற்கு தானா?…” என சிந்தித்தவாறு இருக்க ராகவனோ கிருஷ்ணனை முறைத்துக்கொண்டே அமர்ந்திருந்தார்.
இன்றைக்கு என்று பார்த்து இந்த ஆரவ் வராமல் போய்விட்டானே என கவலையானார். அவரிடம் கார்த்திக் பேச்சுக்கொடுக்க அர்ஜூன் அதற்கு மேலும் பொறுக்கமுடியாமல் எழுந்தவன் ஆண்டனியை பார்க்க அவர் சம்மதமென தலையசைத்தார்.
நொடியும் தாமதிக்காமல் வேக எட்டுக்களுடன் மாடியை கடந்தவன் ஸ்டெபியின் அறைக்கதவை மெல்ல தட்டினான். கதவை திறந்த தர்ஷினி,
“வா அர்ஜூன், நீ ஸ்டெபிகிட்ட பேசிட்டு இரு. நான் ஒரு பை மினிட்ஸ்ல வந்திடறேன்…” என கூறிவிட்டு வெளியேறிவிட்டார்.
உள்ளே ஸ்டெபி கல்பனா குடுத்த புடவையை கட்டிமுடித்திருக்க தலைக்கு பூவை எப்படி வைக்கவென தெரியாமல் முழித்துகொண்டிருந்தாள். அர்ஜூனை பார்த்ததும்,
“அஜூ இதை எப்படி வைக்கனும்? எனக்கு தெரியலை. தலையை எப்படி சீவினாலும் என்னோட ஹேர்க்கு செட் ஆகலை.சுருண்டு சுருண்டு வந்து நிக்குது…”
பாவம் போல கூறியவளது பாவனை அவனை சுண்டி இழுக்க அவள் அருகில் சென்றவன் அங்கிருந்த பெரிய க்ளிப்பில் மொத்த முடியையும் அடக்கியவன் பின் பூச்சரத்தை எடுத்து இரு புறமும் வழியுமாறு வைத்து பின் செய்ய ஸ்டெபிக்கே தனது பிம்பம் புதிதாக தெரிந்தது.
“நான் சூப்பர்ல அஜூ. எனக்கு இதெல்லாம் மேட்சா இருக்கு தானே?…” என அவனிடமே வினா எழுப்பிவிட்டு வளையல்களை அணிய அவளை தடுத்தவன்,
“வேண்டாம் ஆஷா. இது உனக்கு பழக்கம் இல்லை. விட்டுட்டு போதும். ப்ளீஸ்…”
தனக்காக அவளுடைய அடையாளங்களையும் இதுவரை நேசித்த மத நெறிமுறைகளையும் விடுத்து வெளிவருவதில் கொஞ்சமும் உடன்பாடில்லை அனுக்கு. அவள் எப்படி இருந்தாலும் அவனுக்கு அவள் பிடித்தமானவளே. நேசமிக்கவளே.
அனைத்து வளையல்களையும் நிதானமாக இரு கைகள் நிறைய அணிந்துகொண்டவள் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு பாத்ரூம் சென்று முகம் கழுவி வந்தவள்,
“இந்த குங்குமத்தை எனக்கு நீங்க வைங்க அஜூ. ப்ளீஸ்…” என கெஞ்சல் குரலில் கூற அவளை அணைத்தவன்,
“ஏன்டா இப்படிலாம் பன்ற?. அம்மா இப்படி செய்வாங்கன்னு நான் எதிர்பார்க்கலை. வெறும் பழமும் புடவையும்னு சொல்லவும் நானும் விட்டுட்டேன். இதெல்லாம் வேண்டாம் ஆஷா…”
மீண்டும் மீண்டும் அவளிடம் கூறியும் அவள் கேட்பதாக இல்லை. அவனின் கைகளினால் குங்குமத்தை வாங்கிவிட்டே அவனை விட்டாள்.
கண்ணாடியில் தன்னை பார்த்துக்கொண்டே,
“அஜூ பொட்டு கரெக்டா வச்சிருக்க தெரியுமா? உங்களோட அம்மா வச்சது அவ்வளோ பெருசா இருந்துச்சு. எனக்கே பயங்கரமா பயமா போச்சு…” என கூறி கலகலத்தவள் அவனின் முகம் இன்னமும் தெளியாமல் இருக்கவும் அவனை நெருங்கி,
“ஒரு விஷயம் நல்லா புரிஞ்சுக்கோங்க அஜூ. எந்த ஒரு சின்ன விஷயத்துக்காகவும் உங்களை நான் இழக்க விரும்பலை. எனக்கு நீங்க வேணும். அதுக்காக உங்க ஆஷா எதுவும் செய்வேன்…”
அவனின் விழிகளை நேருக்கு நேர் பார்த்தபடி அவள் காதல் தீவிரத்தோடு கூற அதில் நெகிழ்ந்தவன்,
“ஆஷா எப்படி இருந்தாலும் நம்ம கல்யாணம் நிச்சயம் நடக்கும். நீ இப்படியெல்லாம் உன்னை மாத்திக்கனும்னு அவசியம் இல்லைன்னு தான் நான் சொல்றேன்…”
“ஓகே அஜூ. நீங்களே சொல்லுங்க. உங்களுக்கு இந்த ஆஷாவை பிடிக்கலையா? உண்மையை மட்டும் சொல்லுங்க…”
அவனை விட்டு இரண்டடி பின் நகர்ந்து நின்று தன்னை காட்டவும் அவனது பார்வைகள் அவளது மேனியில் வலம் வர எப்படி சொல்லுவான் அவனை கட்டி இழுக்கும் அவளது இந்த தோற்றத்தை பிடிக்கவில்லை என்று?
அவனின் விழிகளில் வழிந்த காதலையும் தாண்டிய வேறொரு உணர்வில் இப்போது ஸ்டெபி கட்டுண்டு நின்றாள். ஆனாலும் அவனும் சரி அவளும் சரி நின்ற இடத்தை விட்டு ஒரு அடி கூட நகரவில்லை.
அர்ஜூன் தனது பார்வையால் அவளை அலைகழிக்க அவளோ அசையாமல் அவனது விழிகள் வெளிப்படுத்திய உணர்வை தாங்கி நின்றாள்.
அதற்குள் தர்ஷினி வந்துவிட அர்ஜூன் அப்போதும் நகராமல் அங்கேயே ஒரு சேரில் அமர்ந்துவிட்டான்.
“என்ன அர்ஜூன் கீழே போகலையா?. ஐ மீன் போக மனசில்லையா?…” என ஹிந்தியின் கேலி செய்ய,
“மெதுவா போகலாம் தர்ஷிம்மா…” என கூறி மென்னகை புரிந்தவனை பார்த்து சிரித்துவிட்டு கையிலிருந்த சிறு நகைபெட்டியில் இருந்த நகைகளை எடுத்து அணிவிக்க போக,
“ஏன் தர்ஷிமா இதெல்லாம் எப்போ கொண்டுவந்தீங்க?…” என்ற ஆஷாவிடம்,
“நீ போட்டுக்கமாட்டன்னு தெரியும். ஆனாலும் உனக்கு எடுத்துக்கனும்னு தோனுச்சு. எதுக்கும் இருக்கட்டும்னு தான் எடுத்துவச்சேன். இப்போ யூஸ் ஆகுது தானே?…”
அர்ஜூனும் ஸ்டெபியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள,
“சில விஷயங்களை ஓரளவுக்கு கணிக்கத்தான் முடியுது இல்லையா அர்ஜூன்…” அவர் எதை சொல்கிறார் என்று புரியாமல் இல்லை அவனுக்கு. அமைதியாக தலையாட்ட,
“வருத்தபடாத அர்ஜூன். போக போக ஸ்டெபியை கண்டிப்பா ஏத்துப்பாங்க…”
அவரை ஏறிட்டு பார்த்த அர்ஜூனின் பார்வை, “அப்படித்தான் உங்களை ஏற்றுகொண்டார்களா?” என்ற செய்தியை தாங்கிவந்தது.
அதை புரிந்தவர், “எல்லோருமே ஒரே மாதிரி மனநிலையில் இருக்கனும்னு அவசியம் இல்லை அர்ஜூன். அவங்களுக்கும் அவங்க பிள்ளைங்க மேல ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் இல்லையா? அந்த எண்ணம் உடையும் போது கோவமும் வெறுப்பும் வரத்து சகஜம் தான்…”
“என்னோட மாமனார் மாமியார் கூட நான் ஒண்ணா இருந்திருந்தா அதற்கு சாத்தியம் இருந்திருக்குமோ இல்லையோ. எப்போவாவது போய் சிலநாள் தங்கிட்டு வர என்னை பத்தி அவங்களுக்கும் புரிஞ்சுக்க வாய்ப்பு இல்லாமலே போய்டுச்சு. அதான் இந்த இடைவெளி…”
முடிந்தளவிற்கு தர்ஷினி அர்ஜூனிற்கும் ஸ்டெபிக்கும் கூற கார்த்திக் மொபைலில் அர்ஜூனை அழைத்துவிட்டான்.
“கீழே ஏதோ பிரச்சனைன்னு நினைக்கேன். கார்த்திக் கூப்பிடறான். போகலாம் தர்ஷிமா…” என எழுந்துகொண்டே சொல்லவும்,
“நீ முன்னால போய் என்னனு பாரு அர்ஜூன். நான் ஸ்டெபிக்கு இந்த ஜ்வெல்ஸ் போட்டுட்டு கூட்டிட்டு வரேன்…”
அவனை செல்லுமாறு கண்ணை காட்டி ஸ்டெபியையும் காட்ட, அவள் முகமோ கொஞ்சம் கவலையோடு இருந்தது. அவளை நெருங்கியவன்,
“ஆஷா எதுவா இருந்தாலும் சந்திச்சுதான் ஆகனும். எந்த காரணத்தை கொண்டும் நான் உன்னை விடமாட்டேன்…” அவளது கைகளை அழுத்திவிட்டு அறையை விட்டு வெளியேறி கீழே சென்றான்.
அங்கே ஆண்டனி, ராகவ் இருவரது முகமும் கலவரமாக இருக்க கல்பனா கிருஷ்ணன் இருவரது முகமும் எதையே சாதித்தது போல இருந்தது. கார்த்திக் அவஸ்தையாக அமர்ந்திருந்தான்.
என்னவென கேட்கும் முன்பே கார்த்திக்கின் மொபைலில் கால் வர அதை ஏற்றவன்,
“ஓகே அண்ணா. இதோ பண்ணிடறேன். நீங்க வாங்க…” என கூறிவிட்டு வைத்தவன் ஆண்டனியின் காதுகளில் எதுவோ கூற அவர் உள்ளே சென்று ஒரு பேக்கை எடுத்துவந்து கார்த்திக்கிடம் கொடுக்க அதில் இருந்த லேப்டாப்பை எடுத்தான் கார்த்திக்.
அதை ஒரு டீப்பாயை இழுத்துப்போட்டு வைத்து ஆன் செய்ய அடுத்த நிமிடம் வெப்கேமராவில் ஆரவ் தெரிந்தான். அனைவரும் தெரியும்படி கார்த்திக் அதை சரியாக வைத்துவிட்டு தன் இடத்தில் வந்து அமர்ந்துகொண்டான்.