தேடல் – 10
அர்ஜூன் ஸ்டெபியின் காதல் விஷயத்தை கேட்ட ஆண்டனி முதலில் அதிர்ந்தாலும் பின் தனது மகளின் மகிழ்ச்சி தான் தனக்கு முக்கியம் என்று ஒரு தகப்பனாக மிக சரியாக யோசித்தார்.
தானே ஒரு மாப்பிள்ளையை பார்த்திருந்தாலும் தனது அந்தஸ்திற்கு தான் பார்த்திருப்பார் என்றாலும் ஸ்டெபியின் பிடித்தமானதாக இல்லாவிட்டால் மகளின் விருப்பத்திற்கு மாறாக எதுவும் செய்திருக்கமாட்டார் தான்.
தனது மனதிற்கும் நிறைவான ஒருவனை ஸ்டெபி விரும்பியது ஆண்டனிக்குமே சந்தோஷம் தான். காதலை எதிர்க்கும் சராசரி தகப்பனில்லை ஆண்டனி. அதுவும் அர்ஜூனை பற்றி ஆதிமுதல் அந்தம் வரை அறிந்திருப்பவர்.
அர்ஜூனை இதுவரை தனது மாப்பிள்ளையாக ஒரு நொடியும் நினைத்து பார்த்திராதவர் இப்போது மகளுக்கு பொருத்தமாக அர்ஜூனை தவிர வேறு யாரும் இருக்கமுடியாது என்று நினைக்க ஆரம்பித்துவிட்டார்.
ஆனால் இதே போல அர்ஜூனின் இல்லத்தில் நினைக்கவில்லை. பெரும் போரையே வீட்டினுள் நிகழ்த்திவிட்டார் கல்பனா. அதிலும் தனக்கு மருமகளாக வேறு மதப்பெண்ணா? என கொந்தளித்து ஆட்டமாக ஆடித்தீர்க்க கிருஷ்ணனோ அதற்கு ஒரு படி மேலே சென்று மிரட்டவே ஆரம்பித்துவிட்டார்.
தன் தந்தை வெறும்வாய்ச்சொல் வீரன் என்று அறிந்திருந்த அர்ஜூன் தனது முடிவிலிருந்து சற்றும் பின்வாங்காமல் காதலில் உறுதியாக இருக்க கார்த்திக் மட்டுமே தன் அண்ணனுக்கு ஆதரவாக நின்றான்.
என்ன முயன்றும் மகனின் உறுதியை தகர்க்க முடியாமல் வெற்றிகரமாக தோல்வியை தழுவிய கல்பனாவும் கிருஷ்ணனும் வேறு வழியின்றி அர்ஜூனின் விருப்பத்திற்கு சம்மதிக்க ஸ்டெபியை பெண்பார்க்க சென்றனர்.
திருமணம் நடக்கும் நிமிடம் வரை கிடைக்கும் இடைப்பட்ட நாட்களை தங்களுக்கு சாதகமாக எண்ணி ஒவ்வொரு வாய்ப்பையும் தேட ஆரம்பித்தனர். ஒரு சிறு விஷயம் கிடைத்தாலும் உடனடியாக இந்த கல்யாணத்தை நிறுத்திவிட முனைப்பாக இருந்தனர்.
அதன் முதல்படியாக ஸ்டெபியை பெண் பார்க்க செல்ல வேண்டும் என அர்ஜூனிடம் சொல்ல அதில் அவன் சந்தோஷம் கொள்ளாமல் அவர்கள் மேல் சந்தேகம் கொண்டான். எந்த சூழ்நிலையிலும் அவர்களின் மேல் ஒரு கண் வைத்திருக்கவேண்டும் என்றும் முடிவெடுத்துகொண்டான்.
பெற்றோர்மேல் நம்பிக்கையும் பாசமும் இல்லாமல் இல்லை. கிருஷ்ணன் எப்போதுமே தனக்கு யாரும் சமதை இல்லை என்பது போன்ற ஒரு மிதப்பில் அடுத்தவர்களை மட்டம் தட்டுவதும் முகத்திலடித்தது போல பேசுவதும் என்றைக்குமே அர்ஜூனிற்கு ஒவ்வாதது.
அதிலும் ஆரவ், ஸ்டெபியின் குடும்பத்தை ஆரம்பத்திலிருந்தே காரணமின்றி குறை கூறியபடியே இருப்பார். அதிலும் ராகவ், தர்ஷினி என்றால் ஒரு இளப்பம் தான் கல்பனாவிற்கு.
வேறு மாநிலத்தவரான தர்ஷினியை காதலித்து திருமணம் புரிந்த ராகவ் ஏதோ கொலைகுற்றம் புரிந்தவர் போலவும் அதனால் அவர்கள் தீண்டத்தகாதவர்கள் போலவும் இவர்கள் ஒதுங்க ஆரவ் அவர்களை வெறுப்பேற்ற என்றே அங்கே அடிக்கடி செல்வான்.
முதலில் கல்பனாவின் குத்தலான பேச்சுக்களை புரியாமல் ஒதுக்கிய ஆரவ் புரிந்தபோது அவர்களுக்கும் சளைக்காமல் அறியாக பதிலடி கொடுக்கவும் தயங்கமாட்டான். அர்ஜூனின் பெற்றோர்களுக்காக அர்ஜூனின் நட்பை இழக்கவோ அவன் வீட்டிற்கு செல்வதை தவிர்க்கவோ சிறிதும் எண்ணவில்லை ஆரவ்.
வேண்டுமென்றே அர்ஜூனின் வீட்டிற்கு சென்று கிருஷ்ணன் கல்பனாவின் பிபியை ஏற்றிவிட்டே திரும்புவான். அதற்கு பயந்தே கூட சில நேரம் ஆரவ்வின் விஷயத்தில் அவர்கள் தலையிடாமல் இருந்துவிட்டனர்.
தனது மகனே தங்களின் சொல்பேச்சை கேட்காத போது இவனை என்ன நாம் சொல்வது என்று நினைத்துகொண்டாலும் ஸ்டெபியிடம் அப்படி இருக்க முடியவில்லை. கல்லூரி சேர்ந்த பின் ஸ்டெபி அதிகமாக அர்ஜூனின் வீட்டிற்கு வரவில்லை என்றாலும் சில நேரங்களில் ஆரவ் இழுத்து வந்துவிடுவான்.
அப்படி ஒருமுறை அர்ஜூன் வீட்டிற்கு வரும் போது அவனையும் அழைத்துக்கொண்டு மூவரும் வெளியில் கிளம்ப அவர்கள் வீட்டின் பூஜையறையில் ஏற்றிவைத்திருந்த விளக்கு அணையவிருக்க அதை கண்ட ஸ்டெபி விரைந்து சென்று திரியை தூண்டிவிட கொதித்துபோனார் கல்பனா.
ஆரவ்வும், அர்ஜூனும் வாசலை தாண்டி இருக்க ஸ்டெபியை தனியாக இழுத்துக்கொண்டு ஒரு அறைக்குள் சென்றவர் பிடி பிடியென பிடித்துகொண்டார்.
வகையாக மாட்டிய ஸ்டெபியை கடுமையான வார்த்தைகளாலும் அவள் வேறு மதத்தை சேர்ந்தவள் என்றும் அவளுக்கு தங்களது சாஸ்திரம் சம்பிரதாயம் பற்றி என்ன தெரியும் என்றும் பூஜையறைக்குள் நுழைய உனக்கு என்ன தகுதி இருக்கிறது என்றும் வார்த்தைகளால் குதறிவிட அழுதுகொண்டே வெளியேறியவள் தான், அதன்பின் அர்ஜூனின் வீட்டிற்கே வரவில்லை.
விஷயமறிந்த அர்ஜூன் கல்பனாவை எச்சரிக்க ஆரவ்வோ வார்த்தையாக பேசாமல் தனது கோவத்தை ஒவ்வொரு செயலிலும் காண்பித்தான். அதில் கல்பனாவிற்கு தான் பீதி கிளம்பியது.
இவன் நம் வீட்டிற்கே வந்து நம்மையே ஆட்டிவைக்கிறானே என்ற எண்ணம் கூட அவருக்கு தோன்றாவண்ணம் இருந்தது ஆரவ்வின் செயல்கள்.
இப்போது என்னவென்றால் அவளையே மகன் திருமணம் செய்துகொள்வேன் என்று பிடிவாதமாக இருக்கிறானே என்ற கோவம் இருந்த போதிலும் அதை விடுத்து வழியின்றி ஸ்டெபியை பெண் கேட்க சென்றனர்.
அவர்கள் வந்ததுமே வரவேற்று சோபாவில் அமரவைத்தவர் தானும் அமர கல்பனா அகையோடு கொண்டுவந்திருந்த பையில் இருந்து பொருட்களை எடுத்து அடுக்க தொடங்க அதை பார்த்து ஆடிப்போனார் ஆண்டனி.
பெரிய தாம்பாளத்தட்டில் தேங்காய், பழம், மஞ்சள், குங்குமம், பூ புடவை வளையல் என இன்னும் சில பொருட்களும் நிறைந்திருக்க இதெல்லாம் தன் பக்க பழக்கம் இல்லையே என எண்ணி கலங்கினார்.
“ஏசப்பா, இந்த விசேஷத்தை நல்லவிதமாக நடத்திவையுங்கள் பரமபிதாவே…” என வேண்டிக்கொண்டே அமர்ந்திருந்தார். தாங்கள் கொண்டுவந்திருந்ததை பார்த்த ஆண்டனியின் முகத்தையும் அதில் தெரிந்த கவலை ரேகைகளையும் வைத்தே கல்பனாவிற்கு பரம திருப்தியாகிற்று.
ஸ்டெபி காதில் சிறு கம்மல் தவிர்த்து எந்தவித ஆபரணங்களும் அணிந்ததில்லை. அது அவர்களுக்கு பழக்கமும் இல்லை. காதில் அணிந்த தோடு கூட தர்ஷினி வற்புறுத்தியதால் ஸ்டெபி அணிந்துகொண்டாள்.
கல்பனா கொண்டுவந்திருப்பவைகள் அனைத்தும் தர்ஷினியை யோசிக்கவைத்தது. அவர் அர்ஜூனை பார்க்க அவனும் அதே எண்ணத்தில் தான் தன் தாயை பார்த்துவிட்டு கார்த்திக்கை பார்த்தான்.
“இதெல்லாம் எப்போ எடுத்துவச்சாங்கன்னு எனக்கு ஒன்னும் தெரியாது அண்ணா…” எனவும் தனனியே கடிந்துகொண்டான். கையில் புடவையும் பழமும் என்று தாய் கூறியதை நம்பியிருக்க கூடாதோ என்று எண்ணியவன் இப்போது ஒன்றும் சொல்லமுடியாமல் கோவத்தை கட்டுப்படுத்திக்கொண்டு அமைதியாக இருந்தான்.
ஸ்டெபி வீட்டில் ஆரவ் குடும்பத்தினர் ஏற்கனவே அங்கிருக்க ஆரவ் மட்டும் இல்லை. அதில் அப்படி ஒரு நிம்மதி கல்பனாவிற்கும், கிருஷ்ணனுக்கும்.
இருவரது பார்வை வலம் வந்ததை வைத்து அவர்கள் ஆரவ்வை தேடுவதாக நினைத்த ராகவன்,
“இன்னைக்கு ஒரு சர்ஜரி இருக்கு கிருஷ்ணன் சார். அதனால தான் ஆரவ் வரலை…” தகவல் சொல்ல கிருஷ்ணன் ஒரு தலையசைப்போடு நிறுத்திகொண்டார். மேலும் பேச்சை அவர் வளர்க்கவில்லை.
தர்ஷினி வரவேற்பாக சிரித்ததற்கு கூட கல்பனா அளந்தே புன்னகைத்தார். இல்லையில்லை வெறுமனே சிரிப்பது போல உதடுகளை இழுத்துப்பிடித்தார். அதை புரிந்தாலும் இப்போது அவர்களை சகித்துத்தான் ஆகவேண்டும். பெண் கேட்க அல்லவா வந்திருக்கின்றனர்.
ராகவ்விற்கும், தர்ஷினிக்கும் இந்த சம்பந்தத்தில் மட்டட்ட மகிழ்ச்சி. அர்ஜூனிற்கு ஸ்டெபியை பிடித்ததில் இவர்களுக்கும் இன்னும் பிடித்தமானவன் ஆனான் அர்ஜூன்.
சிறிது நேர பேச்சுக்களுக்கு பின் ஸ்டெபியை அழைத்துக்கொண்டு வந்தார் தர்ஷினி. அவளை பார்த்ததுமே கல்பனாவின் முகம் விளக்கெண்ணெய் குடித்தது போல ஆனது.
அவரோ எப்படியும் ஸ்டெபி சுடிதாரோ இல்லை வேறு ஏதாவது ஒரு உடுப்பிலோ இருப்பாள், அதை வைத்தே பிரச்சனையை கிளப்பலாம் என்று நினைத்து வந்தால் ஸ்டெபி அழகாக புடவை கட்டி அம்சமாக வந்து நின்று அவரது எண்ணத்தில் மண்ணை போட்டாள்.
அதுவும் இல்லாமல் வந்தவர்களுக்கு அழகாக இரு கைகளையும் கூப்பி வணக்கத்தையும் தெரிவித்து புன்னகைக்க அர்ஜூனின் இதழ்களில் புன்னகை விரிந்தது.
“இவளுக்கு இதெல்லாம் கூட தெரியுமா?…” என்று போல பார்த்திருந்தான்.
அவளது இந்த பரிமாணம் அர்ஜூனை அடியோடு வீழ்த்தியது. முதல் முறையாக ஸ்டெபியை புடவையில் பார்க்கிறான். கச்சிதமாக கட்டியிருந்த புடவையில் அவளது நளினமும் அதில் தெரிந்த வளைவு நெளிவுகளும் அர்ஜூனை வேறு உலகிற்குள் இழுத்தது.
அவனோ தலையை உலுக்கி தன்னை மீட்டவன் இப்போது தன்னை மறந்து இருந்தால் இதையே சாக்காக வைத்து தாயும் தந்தையும் ஏதாவது பிரச்சனையை கிளப்ப முயலக்கூடும் என்று கணித்தவன் ஸ்டெபியை விடுத்து கல்பனாவை பார்த்தான்.
அவரோ வரவிருக்கும் வேண்டா மருமகளை ஆராய்ச்சியோடு பார்க்க கிருஷ்ணனோ வந்தபோது ஸ்டெபியை பார்த்தவர் அதன்பின் பார்வையை வேறு புறம் திருப்பிகொண்டார்.
இருவரது நடவடிக்கை ஆண்டனிக்கு சஞ்சலத்தை கொடுக்க ராகவன் தான் அர்ஜூனை காட்டி சமாதானம் செய்தார். அவருக்குமே கிருஷ்ணனின் நடவடிக்கையில் கொஞ்சமும் விருப்பமில்லை. பெண் கேட்டு வந்திருக்கிறவர்கள் போலவா இருக்கிறார்கள்? என நினைத்து வருந்தினார்.