நெஞ்சில் உறைந்த தேடல் – 8 (3)

“இந்த மனுஷனுக்கு இருக்கிற மிதப்பு இருக்கே? கீழே விழுந்தாலும் மீசையில மண்ணே ஒட்டலைன்னு சொல்லுவாரு…” என முணங்க,

“இங்க தான் மண்ணே இல்லையே வடிவு…” அப்பாவியாக பதில் கூறி மனைவியின் முறைப்பை வாங்கிகொண்டாலும்  தன் தோரணையை சிறிதும் மாற்றவில்லை அவர்.

“அப்பா, நீங்களும் அம்மாவும் எழுந்து வாங்க. பிள்ளைங்களை ஆசிர்வாதம் செய்யுங்க…” அப்போதும் தர்ஷினி மரியாதையாக பார்த்துகொண்டு இருந்தாலும் அமைதியாக தான் நின்றார்.

“ஏன், உன் சம்சாரத்துக்கு வாயில்லையா? இல்லை பேசத்தெரியாதா?…” எனவும் ராகவ் தர்ஷினியை பார்க்க அவரோ அவசரமாக,

“வாங்க மாமா, வாங்க அத்தை…” எனவும் “அது” என்பது போல எச்சரிக்கை பார்வையொன்றை வீசிவிட்டு மேடை நோக்கி வடிவாம்பாளுடன் சென்றார்.

இருவரது காலில் விழுந்து எழும்ப அவர்கள் மீது பூக்களை தூவப்போனவர் அப்போதுதான் கவனித்தார் நிலாவின் உடையை. உடனே மீசை துடிக்க, தாடை இறுக,

“வடிவு, என்ன உடுப்பு இது? பாவாடை தாவணி மாதிரி? என்கிட்டே சொல்லிருந்தா லட்சத்துல ஒரு பட்டுசேலையை என் பேத்திக்கு கொண்டாந்திருப்பேனே?…” என சீற நிலா ஆரவ்வின் பின்னால் ஒண்டினாள்.

பெரிய மீசையோடு ஆஜானுபாகுவான தோற்றத்தில்  மிரட்டல் போல இருந்த அவரது பேச்சில் அமிழ்ந்திருந்த அவளது தாழ்வுணர்ச்சி மேலெழும்ப ஆரம்பித்தது.

“தாத்தா இதுக்கு பேரு லெஹெங்கா. நம்ம ஊர்ப்பக்கம் பட்டுச்சேலை போல இந்த பக்கம் இந்த ட்ரெஸ் தான் கல்யாணத்துக்கு. இதுக்குன்னே பெரிய  டிஸைனர பார்த்து ஸ்பெஷலா ஆடர்குடுத்து வாங்கினது…” என அர்ஜூன் தன்மையாக எடுத்துரைக்க,

“இருக்கட்டுமே, இருந்தாலும் பட்டுச்சேலைய விட ஒசத்தியா இது?…” அப்போதும் விடாமல் பேச,

“ஒசத்திதான் தாத்தா…” அர்ஜூனும் சளைக்காமல் கூற ஆரவ்வின் முகத்தில் கோவச்சிவப்பு கூடியது. அதைக்கண்ட வடிவு,

“செத்த வாயமூடிட்டு வரீங்களா?…” என நாராயணனிடம் பேரனை கண்ணைக்காட்ட அவன் பார்வையாலே அவரை சுட்டெரிக்க கம்மென்று ஆனார்.

நிலாவின் கன்னம் தழுவி சிகையை வருடி தலையசைத்துவிட்டு மேடையை விட்டு இறங்கினார் வடிவு. இருக்கைக்கு செல்லும் போது திரும்பி பார்த்தால் நாராயணன் அவரோடு வந்திருக்கவில்லை. அவர் இன்னமும் மேடையிலேயே தான் நிலாவோடு பேசிக்கொண்டிருந்தார்.

அதிசயத்திலும் அதிசயமாக ஆரவ்வின் முகத்தில் குறும்பும் புன்னகையும் கூத்தாடியது. என்னவாக இருக்கும் என யோசிக்கையில் அவரே வந்து சொல்லட்டும் என அமர்ந்துகொண்டார்.

வடிவு இறங்கியதுமே நாராயணன் நிலாவின் அருகில் வந்து,

“என் பேரன் சக்கரவர்த்தியை உனக்கு புடிச்சிருக்கா?…” அவர் முகத்தில் அப்படி ஒரு கனிவும் பரவசமும் நிறைந்திருந்தது. சற்று நேரத்திற்கு முன் கோவம் கொண்டவரா இவர் என சந்தேகிக்கும் அளவிற்கு.

அவர் கேட்டதில் ஆரவ்விற்கு தான் அனல் கூடியது. ஏற்கனவே அர்ஜூன் நிலாவிடம் இந்த பெயரை சொல்லியிருப்பதால் நிலாவிற்கு ஏற்கனவே தெரிந்தது தான். ஆனாலும் இப்பொது தாத்தா இதை கூறவும் ஒரு நொடி எரிச்சலானான்.

இத்தனைபேரின் முன்னாலும் சொல்ல வெட்கப்பட்ட நிலா தலையை மட்டும் அசைக்க, “எல்லோரும் விலகி நில்லுங்க. நான் என் பேத்திட்ட பேசனும்…” என்றவர் ஆரவ்வை விலகவிடாமல் தன் கைபிடிக்குள் இருத்திகொண்டார்.

“இப்போ சொல்லும்மா…” என மெல்லிய குரலில் கேட்க,

“ஹ்ம் பிடிச்சிருக்கு தாத்தா…” என்றாள்.

தாத்தாவால் ஏற்பட்ட எரிச்சல் மறைந்து நிலாவின் பதிலால் காதல் பெருகியது ஆரவ்விற்கு. அதனால் அவனும் நாராயணனை இலகுவாகவே பார்த்தான்.

“இது காதல் கல்யாணம்னு என் மவன் சொன்னான். முதல்ல எனக்கு கூட வருத்தம் தான். ஆனாலும் என்னோட பேரன் ஆசைக்கு மறுப்பு சொல்ல இந்த கிழவனால முடியாதும்மா. அவன் தான் என்னோட உசுரே. அவன் என்ன ஆசைப்பட்டாலும் அவனுக்கு கிடைக்கனும்னு தான் நான் நினைப்பேன்…”

“அவனோட நீ நூறாயுசுக்கு குழந்தகுட்டியோட நல்லா இருக்கனும் அம்மா. முக்கியமா என் பேரனோட முகத்துல இருக்குற இந்த சந்தோஷத்தையும் சிரிப்பையும் ஆயுசுக்கும் நீ வாடவிடகூடாது. அவனை நீ நூறுமடங்கு சந்தோஷமா பார்த்துக்கிட்டா அவன் உன்னை கோடிமடங்கு சந்தோஷமா வச்சுப்பான்…”

“நீயாச்சும் இந்த கிழவனையும் கிழவியையும் பார்க்க தஞ்சாவூர் பக்கம் வரனும் தாயி. பிள்ளைங்க கால்படாம அந்த வீடு வீடுமாதிரியே இல்ல. நானும் கிழவியும் ஏதோ மூச்சை பிடிச்சு வாழ்ந்துட்டு இருக்கோம். எங்களுக்கும் வேற ஆரும்மா இருக்கா?. நானு கிளம்பறேன்…”

வயதின் முதிர்மையில் தளுதளுத்தபடி பேசிய அவரது பேச்சில் ஆரவ்வின் கண்கள் கலங்கிவிட்டன. ஆனாலும் அதை காட்டிக்கொள்ளாமல் அப்படியே நின்றான்.

“தாத்தா…” என நிலா அவரின் கைபிடித்து நிறுத்த அவள் ஆரவ்வை இழுத்துகொண்டு மீண்டும் அவர் பாதம் பணிந்து எழ இருவரையும் நெஞ்சோடு அணைத்துகொண்டார் நாராயணன்.

அவரது அணைப்பில் நெகிழ்ந்த ஆரவ்வின் இறுக்கமான அணைப்பிலேயே அவனது உள்ளம் தெளிவாக மீண்டும் பழைய உற்சாகத்தோடு வடிவின் அருகில் சென்று அமர்ந்துகொண்டார். வடிவிடம் இதை பகிரவும்,

“மகனோட காதல்னா கசக்குது. பேரனோட காதல்னா இனிக்குதாக்கும்?…” வடிவின் நக்கலில்,

“அப்போ நான் தகப்பன். மகனோட வாழ்க்கை நல்லா இருக்கனும்னு நினைக்கிற ஒரு சராசரி அப்பா. இப்போ நான் பேரனுக்காக வானவில்லையும் வளைச்சுகுடுக்கனும்னு நினைக்கிற தாத்தா…”

“அப்போ பேரனோட வாழ்க்கை பத்தின அக்கறை இல்லையோ?…” வடிவு விடாமல் கேட்க,

“அதுக்குத்தான் என் மகன் இருக்கானே. அவனுக்கு தெரியாதா அவனோட புள்ளைக்கு நல்லது எது கெட்டது எதுன்னு. அதுவும் இல்லாம என் பேரனும் சளைச்சவனா? அவன் ஒரு முடிவெடுத்தா அது சரியாத்தான வடிவு இருக்கும்…” பெருமையில் முகம் பூரிக்க பேசினார்.

“இதுல இன்னொரு விஷயம் என்னானா பொண்ணு ராகவன் சம்சாரம் மாதிரி வடநாட்டு புள்ளை கிடையாது. நம்ம தமிழ் பொண்ணாக்கும்…” என்று மீசையை முறுக்க,

“ஏன் இந்த பொண்ணு வடநாட்டு பொண்ணா இருந்தா வேண்டாம்னு சொல்லிடுவீங்களாக்கும்?…” என கிடுக்கிப்பிடி போட நாராயணன் திகைத்தார்.

நிச்சயம் சொல்லியிருக்க மாட்டார் என அவருக்கும் தெரியுமே. தன் பேரன் தானே அவருக்கு முக்கியம். இதை கண்டுகொண்ட வடிவிடம் அசட்டு சிரிப்பொன்றை சிந்த வடிவும் அவரோடு சிரிப்பில் இணைந்துகொண்டார்.

பஃபே முறையில் அனைத்துவகையான உணவு பதார்த்தங்கள் வரிசைகட்டி இருக்க திகைத்து நின்ற தாத்தாவிற்கும் பாட்டிக்கும் ஸ்டெபி தான் உதவிக்கு வந்தாள்.

அவர்களுக்கு தேவையானதை தர்ஷினி ஏற்கனவே ஸ்டெபியிடம் தெரிவித்து இருக்க அதன்படி ஸ்டெபி எடுத்து கொடுத்து அவர்கள் உண்டு முடிக்கும் வரை அவர்களோடே இருந்தாள்.

என்னதான் ஆரவ், கார்த்திக் என கல்பனாவை கண்காணித்தாலும் ஸ்டெபியின் விதியோ அவரை சந்திக்கவைத்தது.

ரெஸ்ட்ரூம் சென்று வெளியே வர கல்பனா அவளை பார்த்தபடி வந்து முன்னால் நின்றார். திகைத்துபோனாள் ஸ்டெபி.

அதுவரை ஸ்டெபியின் முகத்தில் தெரிந்த தேஜஸும், இதழ்களில் தவழ்ந்துகொண்டிருந்த புன்னகையும், கணவனோடு இணைந்து நிற்கும் போது இருந்த நிமிர்வும், கர்வமும்  துடைத்துவிட்டது போல காணாமல் போனது கல்பனாவின் விரோதபார்வையால்.

error: Content is protected !!