நெஞ்சில் உறைந்த தேடல் – 8 (2)

ஆண்டனி கூறி சிரிக்கவும் அதில் தானும் புன்னகை சிந்தியவள் மெல்ல நகர்ந்து மேடைக்கு சென்றவள் அர்ஜூனின் அருகில் சென்று ஜோடியாக நின்றுகொண்டாள்.

அர்ஜூனுக்கு முதலில் ஒன்றுபுரியவில்லை. அவளை பார்த்து கேள்வியாக புருவத்தை உயர்த்த ஒன்றுமில்லை என்று ஸ்டெபி தலையசைக்கவும் அதில் சிறு புன்னகையோடு ஆரவ்வின் புறம் திரும்பினான் அர்ஜூன்.

 “ஏற்பாடு அலங்காரம் எல்லாமே நல்லாத்தான் பண்ணிருக்கு…” நாராயணன் ஆண்டனியிடம்,

“வித் ப்ளஷர்…” ஒரு புன்னகையோடு தெரிவித்த ஆண்டனியை பார்த்தவர்,

“பிளசருலாம் வேண்டாம் தம்பி, எங்ககிட்ட ஓண்டா காரே இருக்கு. என் பேரனுக்காவ ஒசத்தியான கார வாங்கி நான் வீட்ல நிறுத்திருக்கேனாக்கும்…”

பெருமையடித்துக்கொண்ட நாராயணனை பார்த்து  ஆண்டனிக்கு சிரிப்பு பொறுக்கவில்லை. இருக்கிறதுலையே ஒசத்தி ஓண்டாவா? அட ஹோண்டாவை சொல்றாரு போல. இதை மட்டும் அந்த வாலுப்பையன் கேட்ருக்கனும். என எண்ணி சிரிப்பை விழுங்கினார்.

முடியவில்லை. ஆனாலும் மீறி சிரித்தால் அவரை கேலியாக நினைத்து அவமதித்தது போலாகிவிடும் என நினைத்து புன்னகையோடு வேறுபுறம் திரும்பிக்கொண்டார். நாராயணனின் பேச்சை மிகவும் ரசித்தார் ஆண்டனி.

நாராயணனோ வடிவாம்பாளிடம் திரும்பி,

“பார்த்தியா வடிவு, நான் அப்பவே சொன்னேன்ல கார்ல போவோம்னு, கேட்டியா நீ. கால் நோவுமுன்னு சொல்லி மவன் கேட்டான்னு பறக்க ஆசைப்பட்டுட்ட. இப்போ இந்த பேச்சு நமக்கு தேவையா?…” என அங்கலாய்க்க வடிவு தான் தலையில் அடித்துகொள்ளாத குறையாக இந்த மனுஷன் போற இடமெல்லாம் அலப்பரையை கூட்டுறாரே என நொந்துகொண்டார்.

மீண்டும் அவர்களது கவனம் மணமக்களின் மேல் திரும்ப அங்கே மங்களசூத்ராவை ஆரவ் நிலாவின் கழுத்தில் அணிவிக்கும் வைபவம் நடைபெற்றது.

கைகளில் மாங்கல்யத்தை வாங்கியவன் நிலாவை பார்த்தவண்ணம் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தான். அந்த வடநாட்டு உடையில் நிலவென அழகில் மிளிர்ந்தவளை காண காண அவனுள் இதுவரை தோன்றாத ஒரு புது உணர்வு தோன்றியது.

அவ்வுணர்வை என்னவென வரையறுக்க இயலாமல் அது கொடுத்த தாக்கத்தில் விடுபட விரும்பாமல் நிலாவையே பார்த்தபடி சுகமாக அமிழ்ந்திருந்தான்.

நிலாவிற்கு அவனது அமைதி உறுத்த அவனை நிமிர்ந்து பார்த்தவளை கண்களால் சிறையெடுத்தவன்,

“நிலா நான் உன்னை காதலிக்கிறேன். உன்னோடு இணையும் இந்த நாள் என் வாழ்நாளில் மறக்கமுடியாத நாள். இந்த ஜென்மம் மட்டுமில்லை. இனி வரும் ஜென்மங்களிலும் உனது துணையாக நானும் எனது இணையாக நீயும். ஐ லவ் யூ நிலா…”

அவளின் விழிகளை பார்த்துக்கொண்டே மங்களசூத்ராவை அவளது மணிகழுத்தில் அணிவித்தவன் அவளது நெற்றியில் குங்குமத்தை வைக்கும் முன் தனது முத்தத்தை அதில் அடித்தளமாக்கிய பின் அங்கே குங்குமத்தை இட்டான்.

“இவனை அடைய என்ன தவம் செய்தேன் நான்” அவனது பேச்சிலும் செயலிலும் தன்னை மறந்து சந்தோஷகடலில் மிதந்தாள் ஆரவ்விற்கென்றே ஜென்மம் படைத்து வந்த ஆரவ்வின் நிலவானவள்.

மகனது காதலில் அதுவரை இருந்த சிறு சஞ்சலமும் அகன்றது தர்ஷினிக்கு. நிலாவை எந்தவிதமான சங்கடமும் இல்லாமல் முழுமனதாக ஏற்றார்.

ஆனால் நாராயணனோ  நிலாவின் கழுத்தில் இருந்த தாலியை பார்த்து மீண்டும் பொங்க ஆரம்பித்துவிட்டார் நாராயணன்.

“வடிவு என்ன கருமம் இது? மங்களகரமா மஞ்சள் கயிறுல கோர்த்த நம்ம பரம்பரை தாலி எங்க? கருப்பு பாசி கோர்த்த இவங்க தாலி எங்க? இதென்ன நல்லகாரியங்களுக்கு நம்ம வகையில கருப்பு ஆகாதுன்னு சொல்லுவாங்க. இதையெல்லாம் நான் ஒத்துக்கவே மாட்டேன்…” என குதிக்க,

“அட ஆண்டவனே செத்த நேரம் சும்மா இருங்களேன். இன்னைக்குத்தான் நம்ம பேரன் வாழ்க்கையை ஆரம்பிக்க போறான். இப்போ போய் அபசகுனம் புடிச்சது போல பேசிவைக்காதீங்க…”

“அதுமட்டுமில்ல நம்ம ராகவன் சம்சாரம் வகையில இதைத்தான் தாலின்னு சொல்லுவாங்க. பாருங்க அவளும் அதைத்தான் போட்ருக்கா…” என்று தர்ஷினியை கண்பிக்க ஆண்டனி வியந்துபோனார்.

தவறி கூட தர்ஷினியை இருவரும் மருமகள் என்று வாய்வார்த்தையாக சொல்லாமல் ராகவனின் மனைவி என்னும் விதத்தில் அவர்கள் பேசிவைத்தது ஆண்டனிக்கு கொஞ்சம் கோவத்தையும் வருத்தத்தையும் கொடுத்தது.

அதே நேரத்தில் தனது மகளது திருமணம் நடந்த விதத்தையும் இதையும் ஒப்பிட்டுப்பார்க்க அது சுருக்கென்ற வலியை தரத்தான் செய்தது.

எத்தனை தான் ஒன்றாக பழகினாலும் அவர்களது சம்பிரதாயம் பாரம்பரியம் என வரும் போது தங்களை போன்றவர்களை ஒதுக்கி வைத்து தான் பார்க்கின்றனர் என்ற உண்மை அவருக்கு இன்று மிக நன்றாகவே தெரிந்தது.

தன் மகளும் இதே நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது தான் அவர் அறிந்த ஒன்றாகிற்றே. ஏனோ மனம் கனத்தது ஆண்டனிக்கு. அங்கிருந்து எழுந்து செல்லவும் அவரால் முடியவில்லை.

அமர்ந்த இடத்திலிருந்தே மகளை பார்க்க அர்ஜூனோடு சேர்ந்து நின்றுகொண்டிருந்த ஸ்டெபியின் முகத்தில் என்றைக்கும் இல்லாத ஒரு அழகும், வெட்கமும் குடிகொண்டிருப்பதை கவலையை விடுத்து கண்ணார ரசித்தார்.

என் மகளது வாழ்வை நேர்படுத்திக்கொடு ஏசுவே என மனமார வேண்டியவர், ஜீசஸ் என மனதிற்குள் ஜபிக்கத்தொடங்கினார். இந்த சந்தோஷம் ஸ்டெபியின் வாழ்நாள் முழுவதும் நிறைந்திருக்க அருள் புரியும்மைய்யா என்ற வேண்டுதல் ஏனோ இறைவனுக்கு கேட்கவில்லை போல.

அர்ஜூனின் தாயும் தந்தையும் அவனது தம்பியோடு உள்ளே நுழைந்தனர். வரும் போதே அவர்களது பார்வையில் ஸ்டெபியும் அவளருகில் புன்னகை முகமாக நின்றுகொண்டிருக்கும் அர்ஜூனும் தான் பட்டனர்.

அதில் கொந்தளித்த அர்ஜூனின் தாய் கல்பனா அவர்களை நோக்கி செல்ல இரண்டடி முன்னால் எடுத்துவைக்க ஆரவ்வின் பார்வையில் உடனடியாக பின்வாங்கினார். அவர்கள் உள்ளே நுழையும் போதே கண்டுவிட்ட ஆரவ் விழியகற்றாமல் அவர்களைத்தான் கண்காணித்தான்.

அர்ஜூனின் தம்பி கார்த்திக்கிடம் கண்களால் சைகை செய்ய அவன் புரிந்துகொண்டது போல தனது பெற்றோர்களை அழைத்துசென்று அமரவைத்தவன் அவர்கள் ஸ்டெபியை நெருங்கா வண்ணம் காவலாக இருந்தான். இது ஆரவ்வின் கட்டளை.

கார்த்திக்கிற்கு அர்ஜூனிடம் எதிர்த்து பேசமுடியாதென்றால் ஆரவ்விடம் எதிரே நின்றுகூட பேச இயலாது. அதிலும் அர்ஜூனின் தந்தை கிருஷ்ணன் அவனிடம் எவ்வளவு குதித்தாலும் ஆரவ் வந்துவிட்டால் அங்கே ஒரு வார்த்தை வெளிவராது.

இதுதான் ஆரவ் வெளிஉலக ஆட்களிடம் பெற்றிருக்கும் பெயர். யாரும் இலகுவாக தன்னை நெருங்கிவிட முடியாதவண்ணம் தன்னை தானே செதுக்கியவன். தனக்கு நெருங்கிய சிலரை தவிர்த்து மற்ற அனைவரிடமும் காண்பிக்கும் ஆரவ்வின் முகமே வேறு.

திருமண வைபோகம் முன்றிலும் நிறைவுபெற அங்கிருந்து நகர இருந்த ஸ்டெபியை கைபிடித்து தடுத்து நிறுத்திய அர்ஜூன்,

“எங்கே போற? இன்னைக்கு முழுவதும் நீ என்னோடதான் இருக்கனும். தட்ஸ் இட்…” என முடிக்கவும்,

“இவனுக்கு இருக்கிற வீம்பு இருக்கே. இருன்னா இருக்கபோறேன். எப்போ பாரு மிரட்டறது” மனதினுள் செல்லமாக சலித்துகொண்டாள் ஸ்டெபி.

அர்ஜூனிற்கு தெரியும் தன் வீட்டார் வந்திருப்பது. ஆனால் அவன் அவர்களை கண்டுகொள்ளவே இல்லை. அதிலும் தன் தாயிடம் என்றைக்கு ஸ்டெபியிடம் அந்த வார்த்தையை கூறியதாக தெரிந்ததோ அப்போதே அன்றிலிருந்தே  பேச்சை நிறுத்தியிருந்தான்.

எப்போதும் விலகுவதிலே குறியாக இருக்கும் ஸ்டெபி இப்போது தானாக அர்ஜூனோடு நெருங்கி நிற்க தானும் அவளை விட்டு அகலாமல் நின்றிருந்தான். அவர்களது நெருக்கத்தில் தர்ஷினியின் மனம் நிறைந்து போனது. ராகவ்விடம் அவர்களை காண்பித்து மகிழவும் அவர் மறக்கவில்லை.

அதே நிறைவோடு வந்திருந்தவர்களை கவனிக்கவும் மறக்கவில்லை. பெரிய இடங்களில் இருந்தும், பெரிய மனிதர்கள் என அனைவரும் நிறைந்திருக்க அதனோடு தங்களுடைய ஹாஸ்பிட்டல் வேலை செய்பவர்கள் முதற்கொண்டு அனைவரும் வந்திருக்க எந்த பாகுபாடும் இன்றி அனைவரையும் உபசரித்தே அனுப்பினர்.

இவர்கள் மனநிலை இப்படி இருக்க அர்ஜூனின் பெற்றோரோ உள்ளத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அமர்ந்திருந்தனர். ஆரவ் மட்டும் அங்கே இல்லை என்றால் ஸ்டெபியை வார்த்தையால் குத்தி கிழித்திருப்பார்கள்.

தாய் தந்தையரின் துவேஷமான பார்வையை கண்ட கார்த்திக் இன்றைக்கு எப்பாடுபட்டாவது தன் அண்ணியை கல்பனாவும், கிருஷ்ணாவும் ஒரு வார்த்தை பேசவிடாமல் காத்துவிடவேண்டும் என தீர்மானித்துகொண்டான். ஸ்டெபி மேல் அப்படி ஒரு மரியாதை கலந்த பாசம் அவனுக்கு.

சடங்கு சம்பிரதாயங்கள் நிறைவுற்று ராகவன் ஆண்டனியை நோக்கி கண்ணை காண்பிக்க,

“அப்பா, என்ன இது? நீங்க போய் கூட்டிட்டு வாங்க தாத்தாவையும் பாட்டியையும்…” மற்றவர்கள் கேட்காமல் அவரை கடிந்தான்.

இவன் கண்களில் இருந்து எதுவுமே தப்பாதோ? எப்படி கண்டுகொண்டான் என்னும் விதமாக அவனை பார்க்க அவன் தர்ஷினியிடமும் அதையே கூறி இருவரையும் அனுப்பிவைத்தான்.

மகன், மருமகள் மீது குறை கூறி எதையாவது உளறிக்கொண்டு இருந்தாலும் நாராயணனின் பார்வை முழுவதும் பேரன் பேத்தியின் மணக்கோலத்தில் தான் திளைத்திருந்தது.

ராகவன் தம்பதியர் வரவும் உடனே முகத்தை கெத்தாக வைத்துக்கொண்டு விறைப்பாக நிமிர்ந்து அமர்ந்தார் நாராயணன்.

error: Content is protected !!