தேடல் – 8
திருமணத்திற்கு வீட்டினரது சம்மதம் பெற்றதும் ஆரவ்வின் மனம் சிறகில்லாமல் பறந்தது. நிலாவின் துன்பம் களைந்து இன்பத்தை தர உறுதி எடுத்தவனது மனதில் இன்னுமொரு குழப்பம் குடிகொண்டது.
அதை பின் தள்ளியவன் கல்யாணவேலைகளை கவனிக்க ஆரம்பித்தான். அடுத்த ஐந்துநாட்களும் இறக்கைகட்டிகொண்டு அழைப்பிதல் கொடுப்பதில் பறக்க ஆறாம் நாள் ஆண்டனி ஹாஸ்பிட்டலில் இருந்து நிலாவை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துசென்றார்.
ராகவனிடமும் தர்ஷினியிடமும் `நிலாவை தன் மகளாக அழைத்துசெல்வதாகவும் அவளுக்கு திருமணத்திற்கான செய்முறை, சீர்வரிசைகளை தானே செய்யவிருப்பதாக கூறிவிட்டார். ராகவன் மறுக்க நினைத்தபோது,
“நிலாவிற்கு பெத்தவங்க இல்லைன்ற ஏக்கம் வந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்றும், தர்ஷினியின் வருத்தத்தை போக்கவேண்டும் என்றும் நிலாவை தன்னுடைய இன்னொரு மகளாக பாவித்துதான் இத்தனையும் செய்கிறேன்…” என காரணம் கூற அவரால் மறுப்பேதும் சொல்லமுடியாது போனது.
“ஒருவகையில் இதுவும் நல்லதுதான்…” என அர்ஜூன் கூறிவிட ராகவன் அதன்பின்னும் மறுக்க அங்கே வழியில்லாமல் போனது.
விநாயகர் பூஜை செய்து ஆரம்பித்த திருமண சடங்குகள் அனைத்தும் தர்ஷினியின் குடும்ப வழக்கப்படி நடக்க அதில் ராகவனுக்கு மனவருத்தம் இல்லை என்றாலும் ஒருவித அச்சத்தோடே கண்கள் அலைபாய்ந்தவண்ணம் இருந்தது.
தர்ஷினியை சேர்ந்தவர்கள் ஏதோ பெயருக்கு வந்து கலந்துகொள்ள இருந்தனர். என்னதான் தங்கள் குடும்ப வழக்கப்படி அத்திருமணம் நடந்தாலும் அவர்களால் ஆரவ்வையும், ராகவ்வையும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அதனாலே அவர்கள் ஒட்டாமல் சபைக்கு வரவேண்டுமே என்று வந்து நின்றனர்.
ஐந்துநாட்களும் கோலாகலமாக திருவிழாவென நடைபெற்று ஐந்தாம்நாள் திருமணத்தன்று ராகவனை தவிர அனைவருமே அதில் உற்சாகமாக இருந்தனர். தர்ஷினிக்கு தெரியும் ராகவனது சங்கடம் என்னவென்று.
ராகவன் பயந்தவண்ணம் வந்தேவிட்டனர் தஞ்சாவூரை சேர்ந்த ராகவனது பெற்றோர்கள். வரும்போதே அவர்கள் முகத்தில் தெரிந்தது இறுக்கத்தோடு கூடிய அடக்கப்பட்ட கோவமும், தங்களது உரிமையை நிலைநாட்டமுடியாத வருத்தமும் ராகவனின் பெற்றோர்களான நாராயணனுக்கும் வடிவாம்பாளுக்கு. அதை கண்டு,
செய்வதறியாமல் தர்ஷினி திகைக்க,
குற்றவுணர்ச்சியில் ராகவன் தலைகுனிய,
வெற்றிக்களிப்பில் கர்வத்தோடு மின்னும் கண்களோடு ஆரவ் பார்க்க,
சங்கடத்தோடு ஆண்டனி நெளிய,
ஆரவ்வின் பார்வையில் இவனை என்ன செய்தால் தகும் என்பது போல அர்ஜூன் கடுகடுக்க,
இப்படி ஒவ்வொருவரும் அவரவர் நிலையில் நிற்க ஸ்டெபி தான் அர்ஜூனையும் இழுத்துகொண்டு சென்று அவர்களை வரவேற்றாள்.
அதைக்கண்டு இன்னமும் கொதித்துபோனார் நாராயணன். அர்ஜூனிடம் சப்தமாக,
“அர்ஜூனா உன்னோட ராகவப்பனுக்கு பெத்தவங்களை மதிக்காம எல்லாம் அவனோட இஷ்டப்படி செஞ்சவனுக்கு விசேஷத்துக்கு வந்தவங்களுக்கு எப்படி மரியாதை செய்யனும்னு கூடவா மறந்துபோச்சு?. நம்ம வளசல் பொண்ணுன்னா இந்நேரம் மாமனார் மாமியார்னு கொஞ்சம் பதவிசா நடந்து மதிக்க தோணிருக்கும். எல்லாம் கலிகாலம்…”
வந்தவர்களை வாங்க என்று அழைக்காமல் ராகவனே தயங்கி நிற்க இதில் தான் என்ன செய்யமுடியும் என ஒதுங்கி நின்ற தர்ஷினியின் செயல் அவரை கோபம் கொள்ள வைத்தது.
அதனால் இன்னும் சில வார்த்தைகளை அவர் முணுமுணுக்கிறேன் பெயரில் தர்ஷினி, ராகவ்வை சீண்ட அதில் வெகுண்டெழுந்தது ஆரவ் தான். கோவமாக பேச வாயை திறந்தவனை நிலாவின் மிரண்ட பார்வை கொஞ்சம் அடக்கிவைக்க துணைபுரிந்தது.
அருகில் நின்ற ஆண்டனியிடம், “ஆண்ட் இந்த நாரை சைலன்ட்டா இருக்க சொல்லுங்க. நான் பேச ஆரம்பிச்சேன் ஓல்ட் நாரை நார் நாரா கிழிச்சுடுவேன்…” என அவரின் காதை கடிக்க அப்போதும் புன்னகைமன்னனாக சாந்தமான முறுவல் ஒன்றை ஆரவ்விடம் சிந்தி அவனை ஆறுதல் படுத்த முயன்றார் ஆண்டனி.
அதில் இன்னமும் கொதிநிலைக்கு சென்ற ஆரவ்,
“இந்த மனுஷன் வேற என் உசுரை வாங்கன்னே எப்போ பார்த்தாலும் சிரிச்சே கொல்றாரு. எவ்வளோ கோவமா நான் பேசிட்டு இருக்கேன். என்னை பார்த்தா காமெடி பீசாவா தெரியுது…” என புலம்பிதள்ளினான்.
ராகவ்வை அர்ஜூன் பார்த்த கண்டனப்பார்வையில் தர்ஷினியையும் இழுத்துக்கொண்டு பெற்றோர்களின் பக்கத்தில் சென்ற ராகவ்,
“மன்னிச்சுடுங்கப்பா, எங்களை மன்னிச்சு உங்க பேரனையும் பேத்தியையும் ஆசிர்வாதம் செய்ங்க…” என மன்னிப்பை வேண்டவும் கொஞ்சம் இறங்கியவர் தர்ஷினியை பார்க்க அவரும் கைகளை கூப்பி வணக்கம் தெரிவித்தார்.
ராகவ் திருமணம் ஆனதிலிருந்து தர்ஷினியின் மேல் ஏற்பட்ட வருத்தம் இன்றளவும் கொஞ்சமும் குறையாமல் இருந்தது நாராயணனின் மனதில்.
வடிவாம்பாள் சூழ்நிலையினை புரிந்துகொண்டு தர்ஷினியை ஏற்றுகொண்டாலும் ஏனோ அவரால் அந்யோன்யமாக தர்ஷினியிடம் ஒன்றமுடிந்ததில்லை.
அதை உணர்ந்தே இருந்த தர்ஷினி அனைத்தையும் இலகுவாக ஏற்றுகொண்டார். இதை எல்லாம் அவர் எதிர்பார்த்ததுதானே. காதல் திருமணத்தில் இது சகஜம் என்று மனதை தேற்றிகொண்டார்.
ஆனால் இதை அப்படி ஆரவ்வால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விவரம் தெரிய ஆரம்பிக்கும் போது தர்ஷினியை நாராயணன் உதாசீனப்படுத்துவதை பொறுக்கமுடியாமல் வடிவாம்பாளிடம் முறையிடுவான்.
அதிலிருந்து ஒவ்வொரு விஷயத்திலும் அவரோடு மல்லுக்கு நின்றான் பேரன். நாராயணன் தனது தந்தையின் பெயரான சக்கரவர்த்தியை ஆசையாக பேரனுக்கு சூட்ட ராகவன் தான் மனைவிக்கும் தந்தைக்கும் பேதமில்லாமல் இரு பெயரையும் ஒன்றாக்கி வைத்தார்.
ஆனால் அதிலும் ஆட்சேபித்தான் ஆரவ். தனது பெயரை வெறும் ஆரவ் என்று மட்டும் மாற்ற சொல்லி வேறு ஆட்டமாக ஆடித்தீர்த்தான். அப்போதும் தர்ஷினிதான் சமாதானம் செய்தார்.
தன்னை சக்கரவர்த்தி என யாராகினும் அழைத்தால் பெரும் கோவத்திற்கு ஆளாகிவிடுவான் ஆரவ்.
ஆரவ் என்ற பெயரை தர்ஷினி தேர்ந்தெடுத்தார் என அறிந்ததில் இருந்து மருமகளது மேல் இருந்த கோவம் இன்னும் அதிகமாகத்தான் செய்தது. வேண்டுமென்றே தர்ஷினி செய்தது போல நினைத்தவர், மகனும் தன் தந்தையின் பெயரை அவமதித்தான். பேரனும் அதை மதிக்கவில்லை என்ற எண்ணத்தில் சிறுபிள்ளைதனமாக கோவம் கொண்டார்.
ஆனாலும் நாராயணனின் ஆட்டம் குறைந்தபாடில்லை. மகன் வேண்டும், வேண்டா மருமகளின் மூலம் வந்த பேரன் வேண்டும். ஆனால் மருமகள் மட்டும் அவர்களை விட்டு விலகியே இருக்கவேண்டும். இதுதான் அவரது எண்ணம்.
ராகவனால் ஓரளவிற்கு மேல் தந்தையிடம் கடிந்து பேசமுடியாமல் தவித்து தடுமாறும் நேரம் தர்ஷினி தான் அவரை தேற்றுவார். வருடத்திற்கு ஒருமுறை தஞ்சாவூர் சென்று அங்கே இருக்கும் நேரமெல்லாம் பஞ்சாயத்திலேயே கழிக்கமுடியுமா? இதுதான் தர்ஷினியின் கேள்வி.
“அதனால் எதையும் கண்டுகொள்ளாமல் பொறுமையாக இருந்துகொள்வோம்” என ராகவனை ஆசுவாசப்படுத்த முயன்ற அவரால் ஆரவ்வை சமாளிக்கமுடியவில்லை.
ஆனாலும் அப்போதும் பாட்டியிடம் ஓரளவிற்கு பேசும் ஆரவ் தாத்தாவிடம் பாராமுகமாகவே நடந்துகொள்வான். என்றைக்கு தன் தாயை மருமகளாக முழுமனதாக ஏற்றுகொள்கின்றனறோ அன்றைக்கு தான் தானும் சமாதானமாக முடியும் என்றுவிட்டான் வடிவிடம்.
மீசை அரும்பும் வயதில் தாயை ஏற்றுக்கொள்ளாத ஊரும் உறவும் தனக்கு தேவையில்லை என தூக்கி எறிந்துவிட்டு வந்தவன் இன்றளவும் அங்கே செல்வதில்லை என்று உறுதியோடு இருக்கிறான். ஊருக்கு வராத பேரனை இவர்கள் இருவரும் அவ்வப்போது வந்து பார்த்து செல்லத்தான் செய்தனர்.
இப்போது தாத்தா நாராயணனை வெறுப்பேற்றவும் தனது தாய் உரிமையை நிலைநாட்டவும், திருமணம் தாயின் குடும்ப வழக்கப்படி நடக்கவேண்டும் என்றும் பிடிவாதமாக இருந்து தன் தாய் தனக்கு எந்தளவிற்கு முக்கியம் என நாராயணனுக்கு காண்பித்து தர்ஷினிக்கு மரியாதை செய்யும் விதமாக அதை நடத்தியும் காட்டிவிட்டான்.
பேரன் இப்படி செய்வதில் நாராயணனுக்கு சுத்தமாக பிடித்தமில்லை. வடிவாம்பாள் தான் இதில் மிகுந்த வருத்தத்திற்கு ஆளானார். ஆனாலும் காட்டிகொள்ளாமல் மருமகளை இன்முகமாகவே பார்த்து முறுவலித்தார்.
ஆரவ்விற்கு திருமணம் என அறிந்ததும் முதலில் மகிழ்ந்தவர்கள் பின் தஞ்சாவூரில் திருமணத்தை தம் வழக்கப்படி நடத்த சொல்லி ராகவை வற்புறுத்த ஆரவ்வின் பிடிவாதத்தை ராகவ் கூற சுத்தமாக உடைந்துபோயினர்.
என்னதான் வருத்தமும் கோபமும் மனதை ஆட்கொண்டாலும் தங்கள் பேரன் மீதிருக்கும் எல்லையற்ற அன்பும் பாசமும் தான் அவர்களை திருமணத்திற்கு வரவைத்தது. அப்போதும் நாராயணன் அடங்காமல் அர்ஜூனிடம் சொல்லி ஹோட்டலில் ரூம் புக் செய்ய சொல்லிவிட ராகவ் மனம் குமைந்தார்.
எப்போதாவது வரும் தாய் தந்தை இரண்டு நாட்களாவது தங்களது வீட்டில் தான் தங்குவார்கள். அதுவும் உரிமை எடுக்காமல் ஏதோ ஒரு விருந்தாளி போல நடந்துகொள்ளும் அவர்களது நடத்தை ராகவ்வை பெருத்த வேதனைக்குள்ளாக்கும்.
இப்போதும் முதல்நாள் வந்தவர்கள் எத்தனை சமாதானம் கூறியும் கேட்காமல் ரூமிற்கு சென்று தங்கிவிட்டனர். தர்ஷினி கூட ராகவோடு அவர்களை வீட்டிற்கு அழைக்க செல்ல நாராயணனின் அக்கினி பார்வையில் கப்சிப் என ஆகிவிட்டார்.
அதுவும் இல்லாமல் பேரன் என்று தஞ்சை வருகிறானோ அன்று அங்கே திருமண வரவேற்பை ஏற்பாடு செய்தபின் தான் ஊர், உறவிற்கு திருமண விஷயத்தை தெரியப்படுத்தவேண்டும். மீறி யாரையேனும் அழைத்தால் நடப்பதே வேறு என்று மிரட்டியும் இருந்தார்.
இல்லை என்றால் ராகவனுக்கு இருக்கும் ஜனக்கட்டில் டெல்லியே அல்லோலகபட்டிருக்கும். தாத்தாவின் பிடிவாதம் அப்படியே பேரனுக்கும் என அவ்வப்போது வடிவாம்பாள் பெருமையாக கூறியது இன்று கவலையாக மாறியது.
முறுக்கிக்கொண்டு நின்றிருந்தவரை அர்ஜூன் அழைத்துகொண்டு முன்வரிசையில் அமரவைத்துவிட்டு ஸ்டெபியை அருகில் அமர்த்திவிட்டு மேடையில் சென்று நின்றுகொண்டான்.
தன்னை கடந்து செல்லும் அர்ஜூனையே ஏக்கமாக பார்த்தவள் அவன் பேச்சை மீறினால் இன்னமும் அவனுக்கு கோவம் வரும் என அமைதியாக உட்கார்ந்து வடிவாம்பாளோடு பேச ஆரம்பித்தாள்.
ஏனோ இன்று அவளால் அவனது பேச்சை அலட்சியபடுத்த நினைத்த மூளையை அலட்சியப்படுத்தி இதயத்தின் அறிவுரையின்படி நடந்தாள். அதுவும் அவளது இதயத்தில் குடியிருக்கும் அர்ஜூனின் விழிவழி.
அதுவரை ஆண்டனி ஸ்டெபி முகத்தையே பார்த்துகொண்டிருந்தவர் மகளின் சிறு பார்வையிலேயே அவளது எண்ணம் வெளிப்பட ஆனந்தக்கூத்தாடிய மனதை அடக்கியபடி,
“ஸ்டெபி, நீ போய் மேடையில நில்லு. நிலாவுக்கு துணையா இருக்கும்…” எனவும்,
“இல்லை டாடி….. அஜூ……….. தாத்தா…… பாட்டி….” என திணற வெகுநாட்களுக்கு பின் மகளின் வாயிலிருந்து கேட்ட அஜூ என்னும் அழைப்பில் மகிழ்ந்தவர்,
“நான் இருக்கேன்மா நீ போய் அங்க நில்லு. நீ இங்க உட்கார்ந்திருக்கிறதை உன்னோட தர்ஷிமா பார்த்தா நீ தான் நல்லா டோஸ் வாங்குவ…” என்றவர் ஸ்டெபி ஆரவ்வை பார்த்ததும்,
“அவனை இன்னைக்கு லிஸ்ட்லயே சேர்க்காத. உன் ப்ரெண்ட் உன்னை இன்னைக்கு கண்டுக்கவேமாட்டான். கூப்பிடவும் மாட்டான். ஏன்டா என் செல்லமகளை நீ கூப்பிடலைன்னு நான் கேட்டா பேப் வந்தாளான்னு கேட்டு எனக்கே ரிவிட் குடுத்துடுவான்…”