“என் தங்கச்சியை இவங்க என்னத்தை பார்த்து கிழிச்சாங்க?…” என ஏகவசனத்தில் பொரிய இப்போது ராகவ் மயூரியை யோசனையோடு பார்த்தார்.
மகனின் முகத்தை பார்த்தவருக்கு அவன் அமர்ந்திருந்த நிலை தாங்கமுடியவில்லை. ஏன் இப்படி அமர்ந்திருக்கிறான்? நிலாவை பற்றிய உண்மை தெரிந்தபோது கூட திடமாக இருந்தானே? என்ன நடந்திருக்கும் என அவரது உள்ளம் தவித்தது.
மேலும் அவரை தவிக்கவைக்காமல் நளினி கூறியதை எல்லாம் சொல்ல உறைந்துவிட்டார் ராகவ். இலவசத்திற்காக ஹாஸ்பிட்டல் ஆரம்பிக்கவில்லை என்றாலும் வருகிறவர்களுக்கு உண்மையாக சிறந்த சிகிச்சை அளிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
இருக்கிறவர்களிடம் கறாராக பணத்தை வாங்குபவர் இல்லாதவர்களிடம் அவர்களை பற்றி விசாரித்துவிட்டு அவர்களால் முடிந்த தொகையை மட்டும் வாங்கி சிகிச்சை கொடுத்து இதுநாள் வரை நல்லபெயரை சேர்த்துவைத்திருந்தவர்.
வரும் நோயாளிகளிடம் எந்த பாகுபாடும் பார்க்காமல் அவர்களை கண்ணும் கருத்துமாக கவனிக்கவேண்டும் என்பதில் கண்டிப்புமிக்கவர்.
இப்படி ஒரு அலட்சியமனப்பான்மையை மயூரியிடம் அவர் எதிர்பார்க்கவில்லை என்பதை அவரது பார்வையே சொல்லியது. தான் இந்தளவிற்கு கவனிக்காமல் விட்டிருக்கிறோமே என தன்னை நினைத்தே வெட்கிபோனார்.
“அர்ஜூன் மெடிக்கல் கவுன்சில்ல மயூரி மேல கம்ப்ளைன்ட் பண்ணு. இந்த துரோகியை ஹாஸ்பிட்டலை விட்டு வெளில போகசொல்லு. இன்னும் ஒரு நிமிஷம் என் கண்முன்னாடி நின்னா என்ன செய்வேன்னு எனக்கு தெரியாது…” என இருக்கியா குரலில் உரைக்க அதிர்ந்தார் மயூரி.
“ராகவ் ப்ளீஸ் அப்டிலாம் சொல்லிடாதீங்க. இனிமே இந்த தப்பெல்லாம் செய்யமாட்டேன். நீங்க மெடிக்கல் கவுன்சில்ல கம்ப்ளைன்ட் செய்தா நம்ம ஹாஸ்பிட்டல் பேரும் தான் கெட்டுபோகும். ப்ளீஸ்…” என மன்றாட,
“என்ன டாக்டர் மயூரி, மறைமுகமான மிரட்டலா? நீங்க கிளம்பலாம். ஹாஸ்பிட்டல் பேரை காப்பாத்த எங்களுக்கு தெரியும். இன்னொரு முறை இது நம்ம ஹாஸ்பிட்டல் அப்டின்னு சொன்னீங்க நான் மனுஷனா இருக்கமாட்டேன். முதல்ல வெளில போங்க. உங்களுக்கு சேரவேண்டிய அமொண்ட் உங்க அக்கவுண்ட்ல சேர்ந்திடும்…”
“எங்க வீட்டு பொண்ணுன்னு தெரிஞ்சும் இப்படி நடந்திருக்கிற உங்களை இன்னமும் நாங்க ஹாஸ்பிட்டல்ல விட்டுவச்சிருந்தா அடுத்து வர பாவப்பட்ட மக்களோட உயிரோட உங்க விளையாட்டை நடத்துவீங்க. நீங்களா சத்தமில்லாம கிளம்பினா நல்லது. இல்லைனா எல்லார் முன்னாலையும் செக்யூரிட்டியை வச்சு வெளில தள்ளிடுவோம்…”
ராகவ்வுடன் ஆண்டனியும் சேர்ந்து வருவார் என்று எண்ணவில்லை மயூரி. ராகவ்விடம் கூட கெஞ்சி சமாளிக்கலாம், ஆனால் ஆண்டனி சிறு தவறை கூட பொறுத்துகொள்ளமாட்டார். அர்ஜூனின் இன்னொரு பிம்பம் அவர்.
சத்தமில்லாமல் வெளியேறிய மயூரியால் நளினியை எண்ணி சபிக்கத்தான் முடிந்தது. இப்படி அனைத்தையும் ஒப்பித்துவிட்டாளே என்று.
இன்னுமிந்த ஹாஸ்பிட்டலில் தனது பார்வைக்கு வராமல் என்னென்ன தவறுகள் நடக்கின்றனவோ? என்னும் ஆயாசத்தோடு சேரில் அமர்ந்த ராகவ் உடனடியாக அதையெல்லாம் களைந்தே ஆகவேண்டும் என முடிவெடுத்துகொண்டார்.
பின் ஆரவ்விடம் பேச விழைய அவனோ வீட்டிற்கு சென்று பேசிக்கொள்ளலாம் என முடித்துக்கொண்டு அர்ஜூனை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றான்.
மீண்டும் நிலாவை பரிசோதித்துவிட்டு டாக்டர் மேத்தாவிடம் அர்ஜூனை பேசவைத்த ராகவ் நிலாவிடம் மானசீகமாக மன்னிப்பையும் யாசித்தார். மயூரியால் இப்படி ஒரு நிலை நிலாவிற்கு வரும் என அவர் எதிர்பார்க்கவே இல்லை.
சிறிது நேரம் அங்கே இருந்தவர் ஆண்டனி அழைக்க வரவும் தான் அங்கிருந்து எழுந்து வீட்டிற்கு சென்றார்.
இரவு ஆரவ்வின் வீட்டில் அனைவரும் அவனுக்காக காத்திருக்க அவன் கொஞ்சம் தாமதமாக தான் வந்து சேர்ந்தான். வரும் போதே மேரேஜ் இன்விடேஷன் மாடல் கார்ட்ஸ் கையோடு கொண்டுவந்திருந்தான்.
இதை பார்த்த தர்ஷினிக்கு கிலி பிடித்துக்கொண்டது. இப்படி தீவிரமாக இருப்பவனை என்ன சொல்லி சமாளிக்க என பயந்துபோனார். ஏற்கனவே ஹாஸ்பிட்டலில் நடந்ததை ஸ்டெபி மூலம் அறிந்தவர் இப்போது இன்னும் மனவுளைச்சலுக்கு ஆளானார்.
“டாடி இந்த கார்ட்ஸ் நான் என்னோட ப்ரெண்ட்ஸ் சர்க்கிள்க்கு குடுக்க செலெக்ட் செய்துட்டேன். ரிலேஷன்ஸ், உங்களோட ப்ரெண்ட்ஸ் சர்க்கிள்க்கு குடுக்க நீங்க எந்த மாடல் வேணுமோ செலெக்ட் பண்ணிடுங்க…”
“தென் ப்ரோகிதர் ஒருத்தரை பார்த்துட்டேன். இன்னையில இருந்து பன்னிரெண்டாம் நாள் நல்லா இருக்குன்னு சொல்லிருக்கார். அன்னைக்கே மேரேஜ் வச்சுக்கலாம்னு சொல்லிட்டார். மத்த பார்மாலிட்டீஸ் நீங்களே பார்த்துக்கோங்க…” என உற்சாகமாக கூறியவனை அர்ஜூனை தவிர்த்து மிரண்டுபோய் பார்த்தனர் அனைவரும்.
“மாம் டின்னர் எடுத்துவைங்க. பேப் வா சாப்பிடலாம். டேய் டக்கு நீயும் தான்…” என்றவன் சுவாதீனமாக சென்று டைனிங்டேபிளில் அமர மற்றவர்கள் யாரும் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை.
ஒரு பெருமூச்சோடு மீண்டும் தானும் சென்று அவர்களுடன் அமர்ந்தவன், “எதுக்காக இப்படி உட்கார்ந்திருக்கீங்க? கல்யாணவீடு போலவா இருக்கு?…” என கேலி செய்ய,
“எனஃப் ஆரவ். விளையாடாதே. இது உன்னோட லைஃப். நீ எடுத்திருக்கிற டிசிஷன் எனக்கு சுத்தமா பிடிக்கலை…”
ராகவ்வோடு தனியாக இருக்கும் போதும் அதிகபட்ச கோவம் வரும் போதும் மட்டுமே தன் தாய்மொழியான ஹிந்தியில் பேசுவார் தர்ஷினி. இப்போது அவர் உட்சபட்ச கோவத்தில் உள்ளார் என்று அவரது குரலிலேயே தெரிந்தது.
ஆனால் ஆரவ்வும் சளைத்தவன் அல்லவே. அவனின் பிடிவாதம் தான் நன்கு தெரிந்த ஒன்றே.
“நான் எடுக்கிற முடிவுகள் எப்போதும் சரியாகத்தான் இருக்கும்னு என்னோட அம்மாவான உங்களுக்கே நல்லா தெரியும் மாம்…”
அவனுமே கோவத்தை அடக்கிய குரலில் தான் கூறினான். தன்னை பற்றி தெரிந்தும் மீண்டும் மீண்டும் வாக்குவாதம் செய்யும் பொது அவனும் தான் என்ன செய்வான்?
தர்ஷினி அவனது வழிக்கே வந்தார். “ஓகே ஆரவ், முடிவை கொஞ்ச நாள் தள்ளிபோடு. அவசரப்படவேண்டாம். நிலாவுக்கு ஆப்பரேஷன் நடக்கட்டும். அதுக்கப்பறமா பார்த்துக்கலாம்…”
அப்போதும் பார்த்துக்கொள்ளலாம் என்று தான் கூறினார் தர்ஷினி. அவரை பற்றி அறியாதவனா அவர் மகன்?
“ப்ளீஸ் மாம். இந்த ஆர்க்யூமென்ட்ட இதோட ஸ்டாப் பண்ணிக்கோங்க. எனக்கு திரும்ப திரும்ப சொன்னதையே சொல்ல விருப்பம் இல்லை. புரிஞ்சுக்கோங்க…” என்றவனை அனைவரும் பரிதாபமாக பார்க்க,
“என்ன என்னை பார்த்தா பைத்தியக்காரன் மாதிரி தெரியுதா? என்ன பார்வை இது? எனக்கு பிடிக்கலை. நான் கல்யாணம் தானே பண்ணிக்க போறேன்?…” என்று வெடிக்க,
“ஆரவ் ஆன்ட்டி சொல்றதை கொஞ்சம் ரியலைஸ் பண்ணேன். அவங்களையும் கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுடா. அவங்களுக்காக உன் முடிவை கொஞ்ச நாள் தள்ளிப்போடேன்…” ஸ்டெபி அவனின் ஆவேசத்தை தணிக்கத்தான் இதை கூறினாள்.
“ஏன் உன் ஆன்ட்டி சொல்றதை கேட்கனும்? அவங்க என்ன சொல்லவறாங்கன்னு உனக்கு புரியலையா? ஆப்பரேஷன்ல நிலாவுக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா நான் வேற பொண்ணை கல்யாணம் செய்துப்பேன்னு நினைச்சுதான் இப்படி சொல்றாங்க…”
“அப்போதானே நான் மேரேஜ்க்கு எலிஜிபிலா இருப்பேன். இல்லைனா செகணன்ட் மாப்பிள்ளை ஆகிடுவேன்ல. அதை நினைச்சுத்தான் இப்படி என்கிட்ட ஆர்க்யூமென்ட் செய்யறாங்க…”
“என்ன நினைச்சுட்டாங்க என்னை பத்தி? நிலா குணமாகி வந்தா அவ, இல்லையா அவ போய்ட்டா வேற பொண்ணு. நினைக்கவே அசிங்கமா இல்ல. அந்தளவுக்கா என்னோட காதல் அவங்களுக்கு சீப்பா போச்சு. அந்தளவுக்கு அவங்க வளர்ப்பு மேல நம்பிக்கை இல்லை போல…” அவனை ஆற்றாமையோடு பார்த்த ஸ்டெபியிடம்,
“என்ன ஆப்பரேஷன்ல நிலா என்னை விட்டுட்டு போய்டுவான்னு நினைக்கிறயோ? உனக்கே நம்பிக்கை இல்லை அப்படித்தானே? ஆனா எனக்கு நம்பிக்கை இருக்கு. என் காதல் மேல நம்பிக்கை இருக்கு. நிச்சயம் நிலாவுக்கு எதுவுமே ஆகாது…”
அவள் அப்படியே நிற்கவும் அவளை நோக்கி ஒரு இகழ்ச்சி புன்னகையை சிந்தியவன்,
“காதலை பத்தி உன்கிட்ட போய் சொல்றேன் பாரேன். ஒருத்தரை உருகி உருகி காதலிக்கனுமாம். கல்யாணமாகி அந்த காதலை நல்லா அனுபவிச்சுட்டு ஒத்துவரலைனா உடனே காதலை சாகடிச்சிட்டு வேற ஒருத்தரை பார்த்து போய்டனுமாம். இதுக்கு பேரா காதல்?…”
“ஆரவ்…” என ஸ்டெபி உச்சஸ்தானியில் சப்தமிட அதை கண்டுகொள்ளாதவன்,
“என்ன சத்தம் பலமா இருக்கு? உனக்கு ஏன் வலிக்குது? காதலிக்கும் போது சந்தோஷமா இருந்துட்டு பிரச்சனைன்னு வரும் போது அதை போராடி ஜெயிக்காம அதை கண்டு ஓடி ஒளிஞ்ச நீ அஜூவையும் சேர்த்து ஒளிஞ்சுபோக சொல்ற உன்கிட்ட காதலைபத்தி நான் பேசினது என்னோட தப்புதான்…”
“எப்போ பார்த்தாலும் அஜூவை விட்டு பிரியனும் பிரியனும்னு சொல்ற நீ அதுக்கு எத்தனை வழியை தேடற. சேர்ந்து வாழ உனக்கு ஒரு வழி கூடவா கிடைக்கலை. இதுல அவனை டைவர்ஸ் பண்ண மட்டும் உனக்கு வலிக்குது. அப்படித்தானே இருக்கும் அவனுக்கும்…”
ஆரவ்வின் இந்த பேச்சுக்கள் எதற்கும் அங்கிருந்த ஒருவரிடமும் எதிர்ப்பு என்பதே இல்லை. அர்ஜூனோ அதற்கும் மேலே போய் ஸ்டெபியை துளைக்கும் பார்வை பார்த்துகொண்டிருந்தான்.
“உன்னை போலவே என்னையும் நினைச்சுட்ட பாரு. அதுதான் உன்னோட தப்பு. என்னோட காதலை நான் யாருக்காகவும் விட்டுகொடுக்கமாட்டேன். நிலாவோட பிரச்சனையை அவளுக்கு துணையா கணவனா நின்னு நான் போராடி ஜெயிப்பேன். அவளோட சந்தோஷமா வாழ்வேன். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு…”
“காதல்ல கஷ்டமில்லாம அவ்வளவு ஈஸியா எதுவும் கிடைச்சிடாது. உனக்கு அப்படி கிடச்சதாலதான் காதலோட அருமை தெரியாம போச்சு…” வேண்டுமென்று தான் இதை ஆரவ் கூறினான்.
“உயிருக்குயிரா காதலிச்சு தன்னோட பெத்தவங்க சொந்தம், இனம், மொழின்னு எல்லாத்தையும் கடந்து போராடி காதல்ல ஜெயிச்சு இன்னைக்கு வரைக்கும் சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்கிற என்னோட பேரன்ட்ஸ்க்கு கூட என் காதலும் தவிப்பும் புரியலையேன்னுதான் எனக்கு வருத்தமா இருக்கு பேப்…”
அதற்குமேல் பேசமுடியாமல் தொண்டையடைக்க அமர்ந்திருந்தவனை அர்ஜூன் எழுந்துவந்து அணைத்துகொண்டான்.
“ஒண்ணுமில்லைடா ஆரவ். உனக்கு நான் எப்போவும் துணையா இருப்பேன். நிலாவுக்கு ஒன்னும் ஆகாது. நிச்சயமா…” என்று ஆறுதல்படுத்த,
“இதை இவங்ககிட்ட சொல்லுடா. அவங்க பார்க்கிற பார்வையே என்னை கொல்லுது. எனக்கு துணையா இல்லைனாலும் இப்படி என்னை தளரவைக்க வேண்டாம்னு சொல்லு…” என ஆதங்கத்தோடு குரல் நடுங்க கூறியவனை எழுந்து வந்து அணைத்துகொண்டார் ராகவ்.
“சாரிடா கண்ணா. நீ இப்படி உடைஞ்சு போய் பேசாதே. தாங்கமுடியலைடா. உன்னோட ஆசைப்படி நிலா உன் மனைவியா, இந்த வீட்டு மருமகளா நீ சொன்ன நாள்ல வருவா. ப்ராமிஸ்…” என கண்ணீரோடு கூறியவரை இறுக்கிகொண்டான் ஆரவ்.
அனைவருக்குமே இதில் மகிழ்ச்சி என்றாலும் தர்ஷினிக்கு கொஞ்சம் வருத்தமும் தான். ஆனாலும் மகனிற்காக அவர் தன் வருத்தத்தை மறைத்துகொண்டார்.