நெஞ்சில் உறைந்த தேடல் – 7 (2)

ஆரவ்வை சேரில் அமர்த்திவிட்டு தானும் இன்னொரு சேரில் அவன் அருகே அமர்ந்தவன்,

“ஏன்டா இப்படி கவலைப்பட்டே  நாட்களை ஓட்டிடலாம்னு பார்க்கிற போல? அப்போ நிலாவை கல்யாணம் செய்துக்கற முடிவை மாத்திக்கபோறயா?…” என்றதும் விலுக்கென்று நிமிர்ந்தவன்,

“என்ன ராகவ் ட்ரெய்னிங்கா? என்ன ஆனாலும் சரி என்னோட நிலாவை நான் மிஸ் பண்ணவே மாட்டேன். நான் சொன்னது போல கல்யாணம் நடந்தே தீரும். அவளை இந்த ப்ராப்ளத்துல இருந்து காப்பாத்தியே தீருவேன். நைட் ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்து சேருங்க…” தீர்க்கமாக பேசியவன் அங்கிருந்து எழுந்துசென்றுவிட்டான்.

ஸ்டெபியும் அவனை பின் தொடர்ந்து செல்ல எத்தனிக்க,

“நில்லு ஆஷா. படிச்சவ தானே நீ? ரெண்டு பேரும்  சேர்ந்து எத்தனை சர்ஜரியை சக்சஸ்ஃபுல்லா முடிச்சிருக்கீங்க? அப்போ இருந்த மன தைரியம் இப்போ எங்க போச்சு?…”

“அவன் தான் கட்டிக்க போறவன். உடைஞ்சுபோய் நின்னா ஒரு நல்ல ப்ரெண்டா அவனை நீ தான் தேத்திருக்கனும். நீயும் அழுது அவனையும் அழ வச்சிருப்ப. பாரு அந்த நிமிஷம் அதிர்ந்தாலும் அடுத்த நொடி எப்படி தன்னம்பிக்கையா பேசிட்டு போறான். நீ என்னனா?…”

மீண்டும் அவன் திட்டவும் அதில் அவளுக்கு அழுகை வர அதை பார்த்தவன் இன்னும் கோவமானவன்,

“இவ்வளோ தூரம் சொல்லியும் நீ திரும்ப அழத்தான் செய்யற. இதுக்காகவா உன்னிடம் போனில் எல்லா விஷயத்தையும் சொன்னேன். ஷேம் ஆன் யூ. ஆஷா. கெட் லாஸ்ட்…” என வெடிக்கவும் அதிர்ந்துபோய் அங்கிருந்து சென்றுவிட்டாள்.

ஒரே நாளில் இத்தனை போராட்டம். அதில் இவனுக்கு தலையை வலிக்க நெற்றிபொட்டை அழுத்திவிட்டுக்கொண்டே அடுத்து என்ன செய்வது என யோசிக்க ஆரம்பித்தான்.

சிறிது நேரத்தில் மயூரி கதவை தட்டவும், ஆரவ் வரவும் சரியாக இருந்தது. அவர்கள் இருந்தது அர்ஜூனின் பர்ஸனல் அறையில்.

கைகளில் மெடிக்கல் டீட்டயில்ஸ் அடங்கிய ஃபைல்களை வைத்துகொண்டு கொஞ்சம் பயத்தோடு வந்து அமர்ந்தார் மயூரி. அர்ஜூன் கூட ஆரவ்வை தானே அனைத்தையும் கேட்டு சொல்வதாக கூற ஆரவ் ஒரேடியாக மறுத்துவிட்டான்.

அவனுக்கு அவனது நிலாவை பற்றி அனைத்தும் தெரிந்தே ஆகவேண்டி இருந்தது. கேள்விகள் கேட்கவேண்டியதும் இருந்தது.

அடுத்த இரண்டு மணி நேரமும் மயூரியை கேள்விகளால் மாற்றி மாற்றி துளைத்தெடுத்த ஆரவ்வும் அர்ஜூனும் ஃபைலில் இருந்த தகவல்களை ஒரு வரி விடாமல் படிக்க, அதில் அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு மயூரி விளக்கம் அளித்தே ஓய்ந்துபோனார்.

மேலும் ஒரு மணிநேரம் கடக்க அதன் பின்னே தான் மயூரியை அந்த அறையை விட்டு கிளம்ப அனுமதித்தனர். அதன் பின் நன்கு தமிழ் தெரிந்த இன்னொரு நர்ஸையும் நிலாவை கவனித்துக்கொள்ள நியமித்து விட்டனர்.

பின் புதிதாக நியமித்த  நர்ஸை அழைத்து எந்தெந்த வேளையில் என்னென்ன டேப்லட்ஸ் குடுக்க வேண்டும் என்று அட்டவணை படுத்தியவர்கள் நிலாவை சென்று பார்க்குமாறு கூறிவிட்டு மீண்டும் ஏற்கனவே நிலாவை பார்த்துக்கொள்ளும் பணியில் இருந்தவரை அழைத்து விசாரணையை ஆரம்பித்தனர்.

அதற்கு ஆரவ்விற்கு ஏற்பட்ட சந்தேகம் தான் காரணம். தான் நிலாவை காண வரும் போது நிலா மட்டுமே அறையில் தனித்து இருந்தாள். இதற்கு முன்பும் பெருவாரியான நேரங்களில் நிலா தனித்து இருந்து தான் ஆரவ் பார்த்திருக்கிறான்.

இப்படி ஒரு பாதிப்பு அவளுக்கு இருப்பதை அறியாத போது அதை பற்றி ஒன்றும் பெரிதுபடுத்த வில்லை. ஆனால் இப்போது நினைக்கும் போது நெருடியது அவனுள்.

அதை அர்ஜூனிடம் கூற அவனிற்குமே இந்த சந்தேகம் தோன்றியது தான். நிலாவின் நிலையறிந்த ராகவன் நிச்சயம் மெத்தனமாக இருக்க வாய்ப்பே இல்லை. நிலாவிற்கு துணைக்கு தகுந்த ஏற்பாடுகளை அவர் செய்திருப்பார் என்பதில் அவர்களுக்கு எந்தவித ஐயமும் இல்லை.

ஆனால் எங்கே இந்த தவறு நிகழ்கிறது என்று அவர்களுக்கு தெரியவேண்டியது இருந்தது. மயூரியிடம் கேட்கும் போது அவர் கொஞ்சம் உதறலோடு தான் பேசியதாக தோன்ற சட்டென அவரிடம் துருவாமல் கண்டுகொள்ளாமல் இருப்பது போல விட்டுவிட்டனர்.

அதுவும் இன்றி, நிலாவின் உடல்நிலைபடி பெங்களூரில் கொடுக்கப்பட்ட மருத்துவ சான்றிதழில் இன்னும் இரண்டுமூன்று மாதங்களில் ஆப்பரேஷன் செய்யும் அளவிற்கு அவளது உடல் தேறிவிடும் என அறிக்கையில் இருந்தது.

ஆனால் இங்கு இரண்டுநாட்கள் முன் எடுக்கப்பட்ட டெஸ்ட்களின் ரிசல்ட் அனைத்திலும் ஆப்பரேஷன் செய்யும் அளவிற்கு நிலாவின் உடலில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றே இருந்தது. இது எப்படி சாத்தியம்? என்று யோசிக்க யோசிக்க விஷயம் பூதாகரமாக தோன்றியது.

உடனடியாக அந்த நர்ஸை அழைத்தவர்கள் எப்போதெல்லாம் என்னென்ன மருந்து மாத்திரைகள் நிலாவிற்கு குடுக்கபட்டன? அவளுக்கு போடப்படும் இன்ஜெக்ஷன் கரெக்டான நேரத்தில் போடப்பட்டிருக்கிறதா என இயல்புபோலே விசாரிக்க அந்த நர்ஸ் பதில் கூறுகையில் தடுமாறினாள்.

ஆரவ்வை விட அர்ஜூனின் கோபம் முகம் தான் அவளை அச்சுறுத்தியது. முன்னுக்குப்பின் முரணாக ஏதோதோ உளற ஆரவ் தான் அவளை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தினான்.

“இங்க பாருங்க, நிலா யாருன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். நீங்க உண்மையை சொன்னா தான் எங்களால அடுத்த ஸ்டெப் எடுத்துவைக்க முடியும். தயவு செய்து எங்க பொறுமையை சோதிக்காதீங்க…” என அடக்கப்பட்ட ஆத்திரத்தில் வினவ விதிர்விதிர்த்த நர்ஸ் நளினி,

“சொல்லிடறேன் ஸார். என்னை வேலைவிட்டு மட்டும் எடுத்துடாதீங்க. கொஞ்சம் கஷ்டபட்ட குடும்பம் என்னோடது…” என்றவள் நடந்ததை கூற கூற அதிர்ச்சியின் விளிம்பிற்கே சென்றனர்.

டாக்டர் மயூரி தன்னுடைய அலட்சியபோக்கால் நேரத்திற்கு நிலாவிற்கான சிகிச்சைகள் சரிவர செய்யாமல் இருந்திருக்கிறார். அவளுக்கு டேப்லட்ஸ், இன்ஜெக்ஷன் என குறிப்பிட்ட நேரத்தில் தரப்படாமல் தன்னால் எப்போது முடியுமோ அப்போது மட்டுமே வந்து பார்த்து தந்திருந்திருக்கிறார்.

நளினியிடமும் பொறுப்பை ஒப்படைக்காமல் ஒப்புக்கு அவளை இருத்திவிட்டு தானே பார்த்துகொள்வதாக கூறி நளினியையும் அவ்வளவாக நிலாவுடன் துணைக்கு இருக்கவிடவில்லை. அதை பற்றி நளினி கேட்டதற்கு மிரட்டல் தான் அவளுக்கு பதில்.

நர்ஸ் நளினியிடம் ராகவ் தனது கல்லூரி நண்பன் எனவும் விஷயத்தை யாரிடமும் கூறினால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்றும் கூறிஎதோடு நில்லாமல், ராகவன் தான் சொல்வதை மட்டுமே நம்புவார், அதனால் நளினியை வேலையிலிருந்து நீங்க செய்வதாகவும் வேறு எங்கும் வேலையில் சேரமுடியாத அளவிற்கு செய்துவிடுவதாகவும் மிரட்டியிருக்கிறார்.

குடும்ப சூழ்நிலையால் வேறு வழியில்லாமல் நளினி இதை கண்டுகொள்ளாமல் முடிந்தளவிற்கு நிலாவை நன்றாகவே கவனித்தும் இருக்கிறாள். நளினியை தன் சொந்த உபயோகத்திற்கும் பயன்படுத்தி இம்சித்திருக்கிறார் மயூரி.

ராகவ்விடம் நிலாவை நன்றாக பார்த்துகொள்வதாக கூறி அவரையும் நம்பவைத்த மயூரி ஹாஸ்பிட்டல் வரும் இன்னும் சிலருக்கு இப்படி ஒரு மேம்போக்கான சிகிச்சையை தான் அளிப்பதாகவும் அதை யாரின் கவனத்திற்கும் வராத அளவிற்கு பார்த்துகொண்டிருக்கிறார்.

நிலாவின் உடல்நிலை பற்றி யாருக்கும் தெரியாதது மயூரியின் அலட்சியத்திற்கு மிகவும் வாகாக போனது.

“ரப்பிஷ்…” நளினி கூற கூற கேட்ட ஆரவ் மேஜையை ஓங்கி குத்தினான்.

இதை கேட்க கேட்க அவனது நரம்புகள் விடைத்தன. அர்ஜூனிற்கோ ஆத்திரத்திற்கு அளவே இல்லை எனலாம்.

மயூரி ஒரு நல்ல திறமையான டாக்டர். அவரே இப்படி நடந்துகொண்டிருப்பது மிகவும் கொடுமையான விஷயமாகபட்டது. கடவுளுக்கு அடுத்தபடியான இடத்தில் மக்கள் தங்களை வைத்திருக்க இப்படி அவர்களின் உயிரோடு விளையாடியவரை அப்படியே விடகூடாது என முடிவெடுத்தனர்.

நளினியை எச்சரித்து நிலாவை பார்த்துகொள்ளுமாறு கூறி சிறிதாக தவறினால் கூட வேலையை விட்டும் தூக்கிவிடுவதாக மிரட்டியே அனுப்பிவைத்தான் அர்ஜூன்.

அடுத்த நிமிடமே மயூரியை பணிநீக்கம் செய்தவன் மயூரிக்கு மெயிலில் அனுப்பிவிட்டு அவர் வேறு எங்கும் பணிபுரியாதவாறும் ஏற்பாடுகளை செய்துவிட்டு மெடிக்கல் கவுன்சிலில் அவரை பற்றி புகார் செய்யும் ஏற்பாடுகளில் ஆழ்ந்தான்.

சிறிது நேரத்தில் ராகவ்வோடு ஆண்டனியும் வந்துசேர அவர்கள் பின்னே மயூரியும்  வந்தார். அவரை பார்த்ததுமே ஆரவ்விற்கு கட்டுக்கடங்காத கோபம். ஆனாலும் ராகவ்வின் முன்பும் ஆண்டனியின் முன்பும் அதை கட்டுப்படுத்தினான்.

“என்ன பண்ணிருக்க அர்ஜூன்? எதுக்காக மயூரியை டிஸ்மிஸ் செய்த? என்னிடம் ஏன் ஒரு வார்த்தை கூட கேட்கலை. காரணமும் சொல்லலை?…” என ராகவ் கேட்கவும்,

“இந்த ஹாஸ்பிட்டல்ல யாரை வேணும்னாலும் சேர்க்கவும் அவர்களை தூக்கவும் எனக்கு அதிகாரம் இருக்குது. அதான் செஞ்சேன். இன்னும் அந்த ரைட்ஸ் எனக்கு இருக்குன்னு தான் நினைக்கிறேன்…” இதை கூறும் போது அவனது பார்வை முழுவதும் ஆண்டனியை மொய்த்தன.

ஆண்டனிக்கு தெரியும் காரணம் இல்லாமல் அர்ஜூன் எதையும் செய்யமாட்டான் என்று. ரகவ்விற்கும் கூட.

ஆனாலும் மயூரி தன்னுடன் பயின்ற கல்லூரி தோழி. இத்தனை வருடம் இந்த ஹாஸ்பிட்டலுக்காக உழைத்தவர். அவரை இப்போது இப்படி செய்வது அவமதிப்பதை போல என்று எண்ணினார். எதுவாக இருந்தாலும் தன்னுடைய கண்பார்வைக்கு இதை கொண்டுவந்திருக்க வேண்டும் என நினைத்தார்.

“அர்ஜூன் நான் அந்த அர்த்தத்தில சொல்லலை. நிச்சயம் இது நம்ம ஹாஸ்பிட்டல். இங்க ஆரவ்விற்கு என்ன உரிமையோ அது உனக்கும் இருக்கு. உன்னோட முடிவுகள் நிச்சயம் சரியாகத்தான் இருக்கும். ஆனாலும் மயூரி நிலாவை பார்த்திட்டு இருந்தவங்க. அவங்கதான் ஹேண்டில் பண்ண முடியும் இதை…” பொங்கிவிட்டான் அர்ஜூன்.

error: Content is protected !!