தேடல் – 7
நிலாமுகியிடம் சம்மதம் பெற்றதும் இந்த உலகையே வென்றுவிட்ட கர்வம் தோன்றவில்லை ஆரவ்க்கு. தன் காதலால் அவளை கர்வம் கொள்ள செய்ய நினைத்தான். வாழ்நாள் முழுவதும் தன் அன்பெனும் மடியில் அவளை தாங்கி தாலாட்ட ஆசை கொண்டான்.
அவனது அணைப்பிற்குள் அடங்கி நின்றவளை தன்னிடமிருந்து விலக்க மனமில்லாத போதும் தான் இன்னும் செய்யவேண்டிய வேலைகள் கண்முன் தோன்றி அவனை துரிதப்படுத்தியது.
“நிலா…” அவளை அழைக்கும் போதே அவனிடமிருந்து விலகியவள் கொஞ்சம் கலக்கத்தோடு அவனை ஏறிட்டாள்.
அவளது விழிகளில் தெரிந்த காதலையும் கலக்கத்தையும் ஒரே நேரம் தன் மனப்பெட்டகத்திற்குள் சேகரித்தவன் அதை உடனே களைய முடியாமைக்கு வருந்தினான்.
தன் காதலும், தான் அவளோடு வாழும் வாழ்க்கையும் தான் இந்த கலக்கத்தை சிறிது சிறிதாக அகற்றும் என எண்ணியவன் அவளை பார்த்து புன்னகைத்தான்.
“நிலாவுக்கு என்னாச்சு? என்னிடம் இருந்து விலகினதும் திடீர்னு ப்யூஸ் போன பல்ப் போல முகத்துல ப்ரைட்னஸ் சட்டுன்னு குறைஞ்சிடுச்சு?…” அவளை இலகுவாக்கும் பொருட்டு வழக்கம் போல கேலி இழையோட அவளிடம் பேசினான்.
அதில் தன்னை மீட்டவளாக, “அதெல்லாம் ஒண்ணுமில்லை. ஆனாலும் கொஞ்சம் பயமா இருக்கே டாக்டர்…” எனவும்,
“இன்னும் டாக்டரா? அது சரி. கல்யாணத்துக்கு பின்னாலையும் அப்டித்தான் என்னை கூப்பிடுவியோ?…”
“வேற எப்படி கூப்பிட? நீங்க சொல்லுங்க…” பொறுப்பை அவனிடமே தள்ளிவிட ஏனோ அவனுக்கு அவள் தன்னை பெயர் சொல்லி அழைக்க சொல்ல விருப்பம் வரவில்லை.
“ஹ்ம் திடீர்னு கேட்டா எப்படி? சரி நானே யோசிச்சு சொல்றேன். இப்போ கிளம்பவா? வீட்ல கொஞ்சம் பேசவேண்டியதிருக்கு. நம்ம கல்யாணத்தை பத்தி…” எனவும்
“உங்க வீட்ல ஒத்துப்பாங்களா? என்னை பிடிக்கலைனா?…” எங்கே தன்னை மறுத்துவிடுவார்களோ என்னும் அச்சம் அவளை ஆட்கொள்ள,
“என்னடா நிலா, உன்னையும் யாருக்காவது பிடிக்காம இருக்குமா?…” இப்போது இன்னும் சுணங்கியவள்,
“அப்போ ஏன் என்னை தேடி யாருமே வரலை. என்னோட அப்பாம்மா கூட என்னை வேண்டாம்னு நினைச்சுட்டாங்களோ? இல்லை ஒருவேளை எனக்கு யாருமே இல்லையா?. அப்படி அவங்க இருந்திருந்தா எனக்கு கல்யாணம் பேச அவங்கதானே வந்திருப்பாங்க?…” தனக்கு யாருமில்லையோ என்னும் நினைப்பே அவளை இன்னும் வாட்டியது.
இப்படியும் அப்படியுமாக யோசித்து பேசிக்கொண்டே விசும்பியவாறே அவனது மார்பில் தஞ்சம் புக அவளின் இந்த நிலை பொறுக்காமல் தன்னோடு அணைத்துகொண்டான் ஆரவ். அவனுக்கும் நிலாவின் ஏக்கம் கண்களை கலங்கச்செய்ய,
“இப்படிலாம் பேசவே கூடாதுடா நிலா. இனிமே நான் தான் உனக்கு எல்லாமும். புரியுதா? என்னோட அப்பாதான் உனக்கும் அப்பா. என்னோட சொந்தங்கள் தான் உனக்கும் சொந்தங்கள். இனிமே இப்படி தத்துபித்துன்னு உளறவே கூடாது…”
கொஞ்சம் அதட்டலோடு அவளிடம் மொழிந்தவன் நிலாவின் தலையில் லேசாக முட்ட அப்போதுதான் கவனித்தான்.
நிலாவின் முகம் வியர்த்திருக்க கண்கள் ரத்தமென சிவந்திருக்க வலியில் முகத்தை சுருக்கியவாறே விழிகள் செருக அவனது கைகளில் தொய்ந்து விழுந்தாள்.
“என்னால வலி தாங்கமுடியலை டாக்டர். தலை ரொம்ப வலிக்குது. யாரோ என்னை அடிக்கிறாங்க. வலிக்குது…” தலையை தாங்கியவாறு அவள் வேதனையில் சுருள அதிர்ந்துவிட்டான் ஆரவ்.
தான் ஒரு மருத்துவனாக இருந்தும் அந்த நேரம் நேசமிக்கவளது வலியை எப்படி போக்குவது என்று செய்வதறியாமல் திகைத்து நிலா நிலா என அவளை கட்டிகொண்டு புலம்ப அங்கே அர்ஜூனும் வந்து சேர்ந்தனர்.
ஏற்கனவே ஆரவ் வீட்டிலிருந்து கிளம்பவும் அர்ஜூனும் ராகவனிடம் பேசிவிட்டு ஹாஸ்பிட்டல் தான் வந்தான். அவனுக்கு உடனே நிலாவை பார்க்கவேண்டி இருந்தது. தன்னை பார்த்த நொடியே தன்னை அண்ணனாக எண்ணியவள் நிலா என்னும் பாசம் அவனுக்கு எப்போதுமே உண்டு.
வரும்போதே ஸ்டெபியிடம் மொபைலில் நிலா பற்றிய விவரத்தை கூறியவன் அங்கே வந்துகொண்டிருப்பதாகவும் கூறினான்.
ஸ்டெபியும் தான் கேட்ட தகவலில் அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தாள். தன் தந்தைக்கும் இந்த தகவல் தெரிந்திருக்க இத்தனை நாள் ரகசியமாக வைத்திருக்கின்றனரே? இனி ஆரவ்வை எப்படி சமாளிப்பது என யோசித்துக்கொண்டே அர்ஜூனிற்காக காத்திருந்தாள்.
ஏனோ ஸ்டெபிக்கு நிலாவை தனியாக சந்திக்க தைரியம் வரவில்லை. அதனால் அர்ஜூனோடு செல்ல நினைத்தாள்.
அவனும் வந்ததும் இருவரும் சேர்ந்து நிலாவின் அறைக்குள் வர அங்கே அவர்கள் பார்த்தது இதை தான். ஆரவ்வின் பரிதவிப்பையும், நிலாவின் கதறலையும் தான்.
வலியால் நிலா துடித்துகொண்டிருக்க அவளது ஒவ்வொரு துடிப்பிற்கும் ஆரவ் உள்ளுக்குள் மரித்துகொண்டிருந்தான்.
இருவரது இந்த நிலை காண முடியாமல் ஸ்டெபி தவிக்க அர்ஜூன் தான் விரைந்து செயல்பட்டான். ராகவ் கூறியதை வைத்து நிலாவை கவனித்துகொண்ட டாக்டர் மயூரியை உடனடியாக அழைத்தான்.
மயூரி ராகவனின் கல்லூரியில் அவருடன் ஒன்றாக படித்தவர். ராகவ் ஹாஸ்பிட்டல் ஆரம்பித்து கொஞ்சம் வளர்ச்சியடைந்த பின் நல்ல சம்பளம் என்று இதில் வந்து பணியாற்ற ஆரம்பித்துவிட்டார் மயூரி.
ரூமில் நர்ஸை அழைக்க இருந்த பெல்லை அழுத்திவிட்டு ஆரவ்வை நகர்த்தி நிலாவை அள்ளி கட்டிலில் கிடத்தினான் அர்ஜூன். வெறித்த பார்வையில் இருந்த ஆரவ்வை உலுக்கி,
“ஆரவ்…” என்று அதட்ட அதில் தெளிந்தது ஆரவ் மட்டுமல்லாது ஸ்டெபியும் தான்.
“அஜூ நிலாடா. இப்படி துடிக்கிறாளே? என்னால முடியலை…” என கூறியவன் நிலாவின் அருகில் சென்று அவளை மார்போடு அணைத்துகொண்டான்.
வலி தாளமுடியாமல் அவனோடு ஒண்டியவள் அவனை பிடித்து இருந்த பிடி இறுக அதில் வலியை உணர்ந்தவன் எந்தளவிற்கு வேதனையை அனுபவித்துகொண்டிருக்கிறாள் என அதிர்ந்தான்.
அதற்குள் டாக்டர் மயூரியும் அவருடன் ஒரு நர்ஸ் சேர்ந்து வந்ததும் நிலாவிற்கு ஒரு இன்ஜெக்ஷன் போடப்பட்டது. அதில் கொஞ்சம் கொஞ்சமாக மயக்கத்திற்குள் செல்ல அதற்குள் இரண்டு மாத்திரைகளையும் அவளது வாயில் போட்டு தண்ணீரை புகட்டினார்.
இப்போது முழுதாக மயக்கத்தின் உலகிற்கு செல்ல ஆரவ் மெல்ல அவளை படுக்கவைத்துவிட்டு தள்ளி அமர்ந்தான்.
“நிலாவிற்கு இப்படித்தான் தினமும் தலைவலி வருமா டாக்டர்?…” என அர்ஜூன் வினவ மயூரி ஆரவ்வை ஒரு பார்வை பார்த்துவிட்டு,
“தினமும் வராது அர்ஜூன். எப்போவாவது அவங்க அதிகமா பழைய ஞாபகங்களை வலுக்கட்டாயமா யோசிச்சு வெளிக்கொண்டுவர முயற்சிக்கும் போது இதுபோல் வலி வரும். இதுவரை ஏற்கனவே இரண்டு முறை வந்திருக்கு அவங்களுக்கு. இன்னும் மூன்றுமணி நேரம் நல்ல தூக்கத்தில் இருப்பாங்க…”
அப்போதும் அவர் ஆரவ்வை தான் பார்த்துகொண்டிருந்தார் தயக்கத்தோடு. ஆரவ்வின் விருப்பம் ஓரளவிற்கு அந்த ஹாஸ்பிடல் முழுவதும் தெரிந்தது தான். ராகவன் வேறு நிலாவை தன் ரிலேட்டிவ் என சொல்லிவைக்க யூகத்திற்கு கூட வாய்ப்பில்லாமல் ஆரவ்வின் வருங்கால மனைவி என்னும் அளவிற்கு நிலாவை புரிந்து வைத்திருந்தனர்.
அதனாலேயே ராகவன் நிலாவை பற்றிய இந்த விஷயங்களை ஆண்டனியை தவிர்த்து வேறு யாருக்கும் தெரியாமல் ரகசியமாக பார்த்துகொண்டார்.
நிலாவின் முகத்தையே பார்த்துகொண்டிருந்த ஆரவ்வை பார்த்த மயூரி,
“ஆரவ் நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. ராகவ் சார் எது செய்தாலும் அது உங்க நல்லதுக்குத்தான். உங்க வாழ்க்கை இது. கொஞ்சம் யோசிச்சு முடிவெடுங்க…” என ஹிந்தில் மொழிய கடுப்பாகிவிட்டான் ஆரவ்.
அதை வார்த்தையில் காண்பிக்கும் முன் சுதாரித்த அர்ஜூன்,
“நீங்க கிளம்புங்க டாக்டர். நாங்க நிலாவை பார்த்துக்கறோம். தென் நீங்க நிலவுக்கு குடுக்கிற டிரீட்மென்ட் பத்தின டீட்டெயில்ஸ், ஃபைல்ஸ், ப்ரிஸ்க்ரிப்ஷன் பத்தின லிஸ்ட் எல்லாமே இன்னும் ஒன் ஹவர்ல என்னோட டேபிளுக்கு வரனும். நீங்களும் என்னோட ரூம்ல இருக்கனும்…”
அர்ஜூனின் இந்த அழுத்தமான குரலே மறுக்கமுடியாததாக இருப்பினும் மயூரிக்கு கொஞ்சம் உதறல் தான்.
“இல்லை அர்ஜூன், ராகவ் சார்க்கிட்ட கேட்டு…” அவரை முடிக்க கூட விடவில்லை அர்ஜூன்.
“டூ வாட் ஐ சே டாக்டர் மயூரி…” என கண்கள் சிவக்க சீறியவன்,
“இப்போ நீங்க கிளம்பலாம். இன்னும் ஒருமணி நேரத்தில் நான் உங்களை மீட் பன்றேன்…”
அநாவசியங்களை தவிர்த்து தேவைக்கு மட்டுமே கோபப்படுபவன் அர்ஜூன். அப்படி நேரங்களில் யாராலும் அவனை எதிர்க்கவே முடியாது.
இதற்கு மேலும் நின்றால் அர்ஜூனின் கோவத்தை தாங்கமுடியாது என்றறிந்த மயூரி ஒரு பெருமூச்சோடு நர்ஸிடம் நிலாவை கவனமாக பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறி விட்டார்.
அவர் சென்றதும் ஸ்டெபி இன்னும் அதே இடத்தில் நிலாவையும் ஆரவ்வையும் மாறி மாறி பார்த்துக்கொண்டே நிற்க அர்ஜூன் நர்ஸை வெளியில் நிற்க சொல்லிவிட்டு அந்த அறைக்கதவை அடைத்தான்.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நிலாவின் முகத்தை வேதனையோடு பார்த்துவிட்டு தானும் இப்போது உடைந்துவிட கூடாது என எண்ணிக்கொண்டே ஆரவ்வின் புறம் திரும்பி,
“ஆரவ் என்னை பார்…”
அதுவரை அமைதியாக இருந்தவன் அர்ஜூனின் தோள் சாய்ந்துகொள்ள ஸ்டெபி அவனின் நிலை கண்டு அழவே ஆரம்பித்துவிட்டாள்.
அதில் கடுகடுத்த அர்ஜூன், “வாயை மூடு ஆஷா. நல்லா இருக்கிறவனையும் நீயே கலங்க விட்டுடுவ. நீங்க ரெண்டு பேரும் ஹார்ட் சர்ஜன்னு சொல்லிக்க உங்களுக்கு வெக்கமா இல்ல?…” என்று சீறவும் ஸ்டெபி பதறி தன் அழுகையை அடக்கினாள்.
சில நிமிடங்கள் அமைதியாகவே கழிந்தன. ஆரவ் ஒரு வார்த்தையும் பேசவில்லை. பொருத்து பார்த்த அர்ஜூன் அவனை இழுத்துகொண்டு அறையை விட்டு வெளியேற போக ஸ்டெபி அவர்களை பார்த்தபடியே நிலாவின் அருகில் அமர்ந்தாள்.
“உனக்கு வேற தனியா சொல்லனுமா? இல்லை இவனை போல உன்னையும் இழுத்துட்டு போகனும்னு நினைக்கிறையா? வா என்னோட…” என உறுமிவிட்டு கதவை திறந்தவன் அங்கே நர்ஸ் நிற்பதை பார்த்து,
“இனி நிலாவை பார்க்க யார் வந்தாலும் என்னை கேட்காம அலோவ் பண்ண கூடாது. யாரா இருந்தாலும். அதே போல எப்போவும் நீங்க இந்த ரூம் விட்டு போக கூடாது. இன்னொரு ஷிப்ட் மாத்த நானே ஒரு நர்ஸ் ஏற்பாடு செய்வேன்…”
“நிலாவுக்கு திரும்ப தலைவலியோ வேற ப்ராப்ளம் வந்தா என்கிட்டே தான் முதல்ல இன்ஃபார்ம் செய்யனும். இனி மீறி வேற ஏதாவது செஞ்சா இந்த வேலையில நீங்க இருக்கமாட்டீங்க. தமிழ் புரியுது தானே?. உள்ள போங்க…” என்று தெள்ளதெளிவாக தமிழில் நர்ஸையும் எச்சரித்துவிட்டு தன்னறைக்கு சென்றான் அர்ஜூன்.