மெலிதான காட்டன்புடவையில் மிதமான அழகோடு கண்களை உறுத்தாத அலங்காரத்தோடு தன்னையே பார்த்துக்கொண்டிருப்பவளை இவன் அளவிட்டு பின் அதிர்ந்தான்.
இவள் ஏன் கொஞ்சமும் அசராமல் என்னையே பார்க்கிறாள்? அவனுக்கு வியப்பான வியப்பு. என்ன பெண் இவள்? என திகைத்துத்தான் போனான்.
அவனது யோசனையை கண்டுகொண்டது போல அவளது விழிகள் மின்னின. என்னவென்பது போல அவள் தலையசைக்க இவன் தான் பார்வையை வேறு புறம் திருப்பவேண்டியதாகிற்று.
இவனது பாவனையில் வண்ணமதிக்கு சிரிப்பு பொங்கிவர அதை வாய்க்குள் மென்றாலும் கண்கள் சிரித்தனவே. மீண்டும் அவளை பார்த்த தினகரனும் அதை கண்டுகொண்டான்.
அதில் கொஞ்சம் கடுப்பானவன் இவளை கண்டு தான் ஒதுங்குவதா? என்னிடமேவா? என்று தானும் அவளை தீர்க்கமாக பார்க்க அப்போதும் அவனது பார்வையை அவள் எதிர்க்கொள்ள தயங்கவில்லை.
“மதி உன்கிட்ட முதல்ல நான் கொஞ்சம் பேசனும்…” ஆரம்பித்தாகிற்று.
“நிலாமுகியை பற்றி தானே மாமா?…” சாவாதனமாக கேட்டவளை விழிகள் தெறிக்க வாயடைத்துபோய் பார்த்தான்.
பேச்சிழந்து அமர்ந்திருந்தவனது விழிகளில் தென்பட்ட வலியில் அவனை அமைதியாக பார்த்தவள்,
“நிலாவுக்கு நான் சீனியர். ரெண்டு பேரும் ஒரே காலேஜ் தான் மாமா. அவ பர்ஸ்ட் இயர் ஜாயின் பண்ணும் போது நான் பைனல் இயர். நாங்க ப்ரெண்ட்ஸ் கூட. ரொம்ப நல்ல புள்ளை அவ. நீங்க அவளை பார்க்கிறது இல்லை இல்லை அவளை பார்த்தது எனக்கு தெரியும்…” மேலும் அவனை அதிரவைத்தாள்.
அப்போதுமே அவளை பார்த்தது என்று அவனது கடந்தகாலமென தான் கூறினாளே தவிர இனியும் பார்க்கமாட்டாய் என்பது எனக்கு தெரியும் என்னும் தெளிவே அவளது வார்த்தையில் தென்பட்டது.
“அந்த புள்ளைக்கே தெரியாம நீங்க அவளை பார்க்கிறதும், யாரும் பார்க்காதது போல பார்த்துட்டு யாரும் பார்க்கிறதுக்குள்ள அதை உங்களுக்குள்ள மறைச்சதும் எனக்கு தெரியும். நான் தற்செயலாதான் உங்களை கவனிச்சேன். அதுக்கு பின்னால எனக்கொரு சுவாரஸியம் உங்களை கவனிக்கிறதுல…”
“அப்போவே நான் உங்களை உங்க விருப்பத்தை கண்டுபிடிச்சுட்டேன். எனக்கும் உங்களை பத்தி தெரியும். நானும் பக்கத்து ஊர் தானே? அதுவும் இல்லாம இங்க நான் அடிக்கடி வந்திருக்கேன். என்னோட சொந்தக்காரவங்க நிலாவோட பக்கத்து வீடுதான். இவ்வளவு ஏன் நிலா கூட உங்களை பத்தி பெருமையா சொல்லுவா தெரியுமா?…” என்றவள்,
“தினகரன் மாமா மாதிரி இந்த உலகத்தில அவங்க மட்டும் தான்னு ரொம்ப பெருமையா கர்வமா சொல்லுவா…” எனும் போதே அவனுக்கு ஆச்சர்யமானது.
“நிலா தன்னை மாமா என்றா கூறுவாள்? எனக்கு இது தெரியாதே” என நினைக்கும் போதே அவனது மனசாட்சி,
“நீ என்னைக்கு அவகிட்ட பேசின? இல்லை எப்போ அவளை பேசவிட்டிருக்க?” என்று இடித்துரைக்க அமைதியாக இருந்தான்.
தன் யோசனையில் இருந்தவனை மீட்டது வண்ணமதியின் குரல்.
“எனக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும் மாமா…” இதில் அதிர்ந்துபோய் அவளை பார்த்தான் தினகரன்.
“பிடிக்கும்னா நீங்க நினைக்கிறது போல இல்லை. ஒரு நல்ல கண்ணியமான மனுஷனா உங்களை எனக்கு மட்டுமில்ல எங்க காலேஜ்ல நிறைய பொண்ணுங்களுக்கும் ரொம்பவே பிடிக்கும். அந்த விதத்துல சொன்னேன்…”
“நீங்க கூட எனக்கு தூரத்து உறவுமுறையாம். அம்மா சொல்லுச்சு. முதல்ல உங்களுக்குத்தான் என்னை கேட்கிறாங்கன்னு எனக்கு தெரியாது. தெரிஞ்சதும் சத்தியமா என்னால நம்பவே முடியலை…”
“நிலாவுக்கு கல்யாணம்னு சொல்லுபோதே எனக்கு சுருக்குன்னுச்சு. எப்படி நீங்க இதை ஏத்துப்பீங்கன்னு? ஆனாலும் எதாச்சும் செய்வீங்க, நிலாவை தூக்கிடுவீங்கன்னு நினைச்சேன். ஆனா இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கலை…” என்றவளது முகம் கொஞ்சம் கவலையை பூசியதோ?
“ஏன் மாமா நிலா கிடைச்சிடுவாளா?…” உண்மையான கவலையோடும் வருத்தத்தோடும் கேட்டவளிடம் என்ன சொல்வது என புரியாமல் திகைத்து அமர்ந்திருந்தான்.
“ஏன் மதி இவ்வளோ தெரிஞ்சிருந்தும் எப்படி என்னை கல்யாணம் செய்ய சம்மதிச்ச?…” இதை கேட்காமல் தினகரனால் இருக்கமுடியவில்லை.
“உங்களை விட்டுகொடுக்க யாருக்காவது மனசு வருமா? நான்னு இல்லை என் இடத்துல வேற எந்த பொண்ணு இருந்தாலும் உங்களை நிச்சயம் இழக்க விரும்ப மாட்டாங்க…” நிறுத்தியவள் பின் அவனது விழிகளை நேருக்கு நேர் பார்த்து,
“இப்போவுமே எனக்கு ஒரு கணவனா உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. இது காதலான்னு சொல்லமுடியாது. நீங்க எனக்கு குடுத்திருக்கும் மனைவின்ற உரிமை கொடுத்த பிடித்தம்னு நினைக்கிறேன். ஆனா மாமா…” என அவனை பார்த்து நிறுத்தியவள்,
“இந்த நிமிஷம், இந்த நொடி நீங்க என்னுடைய புருஷன். இதுதான் நிஜம். இதை நான் மனப்பூர்வமா ஏத்துக்கிட்டேன். உங்களோட மனசு முழுக்க இந்த வண்ணமதி நிறைய போற நாள் ரொம்ப தூரமில்லைன்னு மனசு சொல்லுது மாமா. நீங்களும் உடனே என்னை ஏத்துக்கனும், பொண்டாட்டியா கொண்டாடனும்னு நான் எதிர்பார்க்கலை. அதுக்கு கொஞ்சம் நாள் ஆகுமில்லையா?…”
சின்ன கண்சிமிட்டலுடன் கூறியவது பாவனையை பார்த்து அவனுக்கும் கொஞ்சம் மனம் லேசாகி புன்னகை எட்டிப்பார்த்தது.
“எவ்வளவு அழகா புரிதலோட பேசறா” ஏனோ தினகரனது மனம் லேசானதை போன்ற ஒரு உணர்வு.
“நான் பேசனும்னு சொன்னேன் மதி…” என்றவனிடம்,
“நிலாவை பத்தி பேசவும் நீங்க தான் அமைதியாகிட்டீங்க. நான் இதை சொல்லனும்னு நினச்சேன் மாமா. சொல்லிட்டேன்…” இனி நீயே சொல் என்பது போன்ற பாவம் அவளது முகத்தில்.
“நான் ஏன் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்னு தெரியுமா உனக்கு?…” எனவும் இல்லையென தலையசைத்தவளிடம் தனது தாய் பேசியதை கூறினான்.
முத்தழகியின் மேல் இன்னமும் மதிப்பு கூடியது வண்ணமதிக்கு. யாருக்கு கிடைக்கும் இப்பேர்ப்பட்ட அன்பு என எண்ணி சிலிர்த்தாள்.
“என்னோட அம்மாவுக்காக இந்த கல்யாணம் என்றாலும் என் வாழ்க்கை முழுமைக்கும் இது மட்டும் தான் மதி. உனக்கு புரியுதா?…” என்றவன் பேச்சை அவனே தொடர்ந்தான்.
“உண்மையை சொல்லனும்னா உன் கழுத்துல தாலி கட்டுற கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடிவரை நான் நிலாவைத்தான் நினைச்சிட்டு இருந்தேன். உண்மையை உன்கிட்ட மறைக்க நான் விரும்பலை மதி…”
இது மனைவியாக வண்ணமதிக்கு கொஞ்சம் வலியை கொடுத்ததுதான். ஆனாலும் அதை தனக்குள்ளேயே மறைத்தாள்.
“அந்த நொடி நிலா கிடச்சிருந்தாலும் நான் உன்னைத்தான் திருமணம் செய்திருப்பேன். அதுதான் உண்மை. மாங்கல்யத்தை கைல வாங்கின அந்த நொடி என் மனசுக்குள்ள ஒரு சபதம்…”
“அந்த நிமிஷத்துல இருந்து உனக்கு மட்டுமே உண்மையானவனா இருப்பேன்னு எனக்கு நானே ஒரு தீர்மானம் எடுத்துக்கிட்டேன். என்னோட காதலை நிலாவை எல்லாத்தையும் மனசுக்குள்ள போட்டு புதைச்சுட்டேன்…”
உன்னை நான் அறிவேன் என்பது போல அவனையே விழி எடுக்காது பார்த்திருந்தாள் வண்ணமதி. அவனது சுபாவம் ஓரளவு அவள் அறிந்தது தானே.
“நீதான் என் மனைவி, இனி நீ மட்டும் தான் என் வாழ்க்கை, என்னோட சுகதுக்கங்கள் பகிர்ந்துக்கற எல்லா உரிமையும் உனக்கு மட்டும் தான் அப்டின்ற முடிவோட சுத்தமான மனசோடதான் உன்னோட கழுத்துல நான் மூணு முடிச்சு போட்டு என் வாழ்க்கைக்குள்ள கொண்டுவந்தேன்…”
“இந்த நிமிஷம் நிலா என்னோட மாமாவோட பெண். என் கண்முன்னால் வளர்ந்த அன்பிற்குரிய பெண். என் அப்பாவோட நண்பரது மகள் அப்டின்ற நினைப்பு மட்டும் தான் எனக்குள்ள…”
“அவளை தேடி கண்டுபிடிச்சு சேகரன் மாமாக்கிட்ட ஒப்படைக்கிற கடமையும் பொறுப்பும் எனக்கிருக்கு மதி. அவ கிடைச்சாதான் எனக்கு மனசுக்கு நிம்மதி. அந்த உறுத்தலோட என்னால என் வாழ்க்கையை ஆரம்பிக்க முடியாது…”
“வெறும் கடமைக்காக மட்டும் நாம வாழ்க்கையை ஆரம்பிக்கிறது எனக்கு விருப்பமில்லை. நீ சொல்றது போல நீ என் மனசு முழுக்க நிறைஞ்சு நிக்கனும். அந்த நிமிஷம் நம்ம வாழ்க்கையை நாம வாழ ஆரம்பிக்கனும். நானும் எதிர்பார்க்கிறேன் மதி…”
யாரிடமும் மனம் திறந்து பேசாதவன் இன்று மதியிடம் மடைதிறந்த வெள்ளம் போல தன் எண்ணங்களை பகிர்ந்துகொண்டான்.
அவனை அறிந்த மதிக்கு தினகரனது மனதிற்குள் தன் முதல் தடத்தை பதித்துவிட்டோம் என்ற எண்ணமே மனதிற்குள் சந்தோஷ அலையாய் ஆர்ப்பரித்தது.
அவனின் மனதை தான் மட்டுமே ஆளப்போகும் நாள் வெகுதொலைவில் இல்லை என கனவில் மிதந்தவள் அவனிடம் மெல்லிய புன்னகையை சிந்தி தனது ஒப்புதலை தெரிவித்தாள்.
அவனோடான வாழ்க்கை பயணம் சுகமாக வேண்டுமென்றால் அதற்காகவேணும் நிலா சீக்கிரம் கிடைக்கவேண்டும் என பிராத்தானை கொண்டாள் தினகரனின் மதி.