நெஞ்சில் உறைந்த தேடல் – 6 (2)

“என்ன தன் தாய் உண்ணாமல் விரதமிருந்தார்களா?” அதிர்ந்தான் தினகரன். மேலும் அதிரவைக்க,

“அவங்களோட மனசுல ஏதோ ஒரு கவலை. எப்போவும் அதையே நினைச்சுட்டு இருப்பாங்க போல. கொஞ்சம் மைன்ட் ரிலாக்ஸா இருந்தா தானே நல்லது. வெறும் மருந்து மாத்திரை எடுத்துக்கிட்டா மட்டும் எல்லா நோயும் குணமாகிடறது கிடையாது இல்லையா?…”

தாயின் கவலை எதற்கு என்று அறியாத சிறுவனா தினகரன்? அதை டாக்டரிடம் கூறமுடியுமா அவனால்?

தன்னுடைய கவலையே பெரிது என்று இருந்துவிட்டோமே? என்ன சுயநலம் எனக்கு? என்ற  குற்றவுணர்ச்சியோடு மனம் பாரமாக அழுத்த ,

“நான் பார்த்துக்கறேன் டாக்டர்…” உள்ளடங்கிய குரலில் சொல்லிவிட்டு எழுந்துகொள்ள,

“கொஞ்சம் பொறுமை தினகரன். உங்க அம்மாவுக்கு இனியும் இது போல ஆகாம பார்த்துக்கோங்க. அவங்களை கொஞ்சம் கவனிங்க…”

“இன்னொரு முறை இப்படி பிபி அதிகமானா அவங்களுக்கு நல்லதில்லை. அவங்களோட உடல்நிலை அந்தளவிற்கு மோசமா இருக்கு. கோவில் பொது இடம் எல்லோரும் இருந்ததால பார்த்து கூட்டிட்டு வந்துட்டாங்க. இதுவே தனியா யாரும் கவனிக்காம இருந்திருந்தா?…” என நிறுத்தவுமே தினகரனின் முகம் வெளிறியது.

“டாக்டர்…” என்று வார்த்தைகள் திணற,

“பயப்படாதீங்க. அவங்களை கவலை இல்லாம சந்தோஷமா வச்சுக்கோங்க. எதையும் அதிகமா நினச்சு யோசிக்கவிடாதீங்க. இப்டி விரதம், பரிகாரம்னு செய்யவிட்டு அவங்களை பாழாக்கிடாதீங்க. நாளைக்கு ஒருநாள் இங்க அப்சர்வேஷன்ல இருக்கட்டும். நாளை மறுநாள் வீட்டுக்கு அழைச்சிட்டு போங்க…”

டாக்டரிடம் பேசிவிட்டு வெளியேறிய தினகரனது உள்ளம் கனத்துக்கிடந்தது. தாயை கூட கவனியாமல் என்ன மகன் நான்? என்ன மனிதன் நான்? என தன்னையே நிந்தித்துகொண்டிருந்தான்.

முத்தழகியை சேர்த்திருந்த அறையை நெருங்கியதும் தாயிடம் தந்தை பேச்சுக்குரல் கேட்க ஏனோ உடனே உள்ளே செல்லாமல் அவ்விடமே தேங்கி நின்றான்.

“நம்ம புள்ளைக்கு இருக்கிறது நீயும் நானும் தானே அழகு. ஏன் இப்படி பரிகாரம் விரதம்னு உன்னையே வருத்திக்கிற? உனக்கு எதுவும் ஒன்னுனா எங்களால தாங்கமுடியுமா?…” என சிறுபிள்ளை போல அவர் விசும்ப,

“என்ன நீங்க இப்படி பச்சப்புள்ளையாட்டம் கண்ணை கசக்கிக்கிட்டு? இப்போ நான் குத்துக்கல்லு மாதிரி தானே இருக்கேன்? எனக்கொண்ணும் இல்லை. ஆனா என் மகன பாருங்க. மனசு முழுக்க விசனத்தை வச்சிட்டு நிலாவை நினச்சு பைத்தியக்காரனா அலையுறான். அவனுக்காகவும், நிலா கிடைக்கிறதுக்காகவும் தான் நான் விரதம் இருந்தேன். அதைகூட முழுசா நிறைவேத்தமுடியலை…”

“அவனோட இந்த வேதனையை குறைக்கவாவது அவ சீக்கிரம் கிடைக்கனும்னும் என்னோட புள்ளைக்கு வெரசா ஒரு நல்லது பண்ணிப்பாத்துடனும்னு மனசு கிடந்து அடிச்சிக்குது. என்னவோ தெரியலை, எனக்கு எதுவும் ஆகிடுமோ?…” என்றவர்,

“புள்ளையை இப்படியே விட்டுட்டு போய்டுவேனோன்னு பயமா இருக்குதுங்க. என்னோட புள்ளைய சம்சாரியா கல்யாண கோலத்துல மாலையும் கழுத்துமா பார்த்துடனும்னு பரபரக்குது…”

“அவனோட நினைப்பு என்னை அன்னந்தண்ணி அண்டவிடாம நாள் முச்சூடும் உறங்ககூட விடாம வருத்திட்டு இருக்குது. அவனை குடும்பமா பார்த்துட்டா என்னோட நெஞ்சு நிறைஞ்சு போய்டும். அதுக்கப்பறம் எனக்கென்ன வேணும்? நிம்மதியா கண்ணை மூடிடுவேன்…”

பதறிப்போய் முத்தழகியின் வாயை அடைத்த முத்தையா,

“விசுக்குன்னு இப்படி எல்லாம் சொல்லிடாத அழகு. நம்ம குடும்பத்திட ஆணிவேரே நீ தான? அப்படி இருக்கும் போது அபசகுனமா வார்த்தைகளை விடாத அழகு…” என அழமாட்டாத குறையாக பேசினார் முத்தையா.

“அட போற உசுரு எப்படி போனா என்னன்றீக? என்ன ஒன்னு என்னோட புள்ளைய இப்படியே விட்டுட்டு போய்டுவேனோன்ற பயம் தான் நெஞ்சை கவ்விட்டு விடமாட்டிக்கு. நிலாவுக்கு கல்யாணம் ஏற்பாடாகி  காணாம போனதுல இருந்து அவன் கொஞ்சம் கொஞ்சமா உருகுலைஞ்சு போய்ட்டு இருக்கான். என்னோட புள்ளைக்கு என்னைக்குதான் நிம்மதி கிடைக்குமோ?…” எனவும்,

“அழகு நான் சொன்னு சொல்றேன். கோவப்படாம கேளு…” எச்சிலை கூட்டி விழுங்கிக்கொண்டே கேட்டவரை கேள்வியாக பார்த்தார் முத்தழகு.

“அய்யாக்கிட்ட நான் வேணும்னா பேசட்டுமா? உன்னோட இந்த வருத்தத்தை எடுத்து சொன்னா நிச்சயமா புரிஞ்சுப்பாரு. ஒரு நல்ல பொண்ணா பார்த்து…” என்றதுமே கோவம் கரையுடைக்க,

“போதும் நிறுத்துறீங்களா. என்னைய்யா மனுஷன் நீரு? அவனே மனசுடைஞ்சு போய் கிடக்கான். ஏற்கனவே ரணமா கெடக்க அவன் நெஞ்ச கத்தியால இன்னும் கொஞ்சம் கீறிவிட சொல்றீகளா?…”

“என் உசுரே போனாலும் அந்த காரியத்தை மட்டும் நான் செய்யவே மாட்டேனாக்கும். அவனோட மனசுக்கு இதமா இருக்கறதை விட்டுட்டு என்னோட ஆசையை சொல்லி என்ற புள்ளை ஆசைக்கு மொத்தமா தீயை வைக்க சொல்றீங்களா?…” என வெடிக்க,

“நிலா வந்தா மட்டும் நம்ம தம்பியை கட்டிக்கும்னு என்ன நிச்சயம் அழகு?…”

“அவ வந்து என் புள்ளைய கட்டிக்காட்டாலும் பரவாயில்லை. என்னைக்கு எம்மவனுக்கா கல்யாணம் கட்டிக்கனும்னு தோணுதோ அன்னைக்கு அவன் கல்யாணம் கட்டிக்கட்டும்…”

“அதை விட்டுட்டு எனக்கு முடியலை அது இதுன்னு நான் பேசினதை சொல்லி என்ற புள்ளைய வற்புருத்தனும்னு நினச்சீங்க நான் மனுஷியா இருக்கமாட்டேன். என்னோட புள்ள மனசை நான் குளிரவைக்கத்தான் பார்க்கனும். நெருப்பு வைக்க இல்லை. நீங்க சொல்றது அவனோட நெனப்புக்கு நாமலே கொள்ளிபோடறதுக்கு சமம்…”

“நான் செத்தாலும் அப்படி ஒரு செயலை செய்யவே மாட்டேன். என்ற புள்ளையோட மனசுதான் எனக்கு முக்கியம். அவனுக்கு மனசு நிச்சயம் ஒரு நாள் மாறும். என்ன ஒன்னு அதை பார்க்க நான் இருப்பேனான்னு தான் தெரியலை…” என தனது கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தவர்,

“சரி, சரி இந்த பேச்சை இத்தோட நிறுத்திக்கோங்க. அவன் வந்துடபோறான். இப்படி பேசினது காதுல வாங்கினா கூட தாங்கமாட்டான்யா என் மவன்…” என மருகியவர் மீண்டும் கண்களை துடைத்துவிட்டு அமைதியாக அவரது கைகளை வருடி ஆறுதல் படுத்தமுனைந்தார் முத்தைய்யா.

உள்ளே நடந்த சம்பாஷணைகளை கேட்ட தினகரனுக்கு நெஞ்சம் விம்மியது. எத்தனை பிரயத்தனப்பட்டும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தமுடியாமல் இங்கேயே வெடித்து சிதறிவிடுவோமோ என அஞ்சி அங்கிருந்து தனிமை நாடி நகர்ந்தான்.

தனக்காக தங்களது ஆசைகளை மனதினுள் பூட்டிவைத்துவிட்டு தனக்காக மட்டுமே வாழும் அவர்களுக்கு தான் என்ன செய்துவிட்டேன் என சிந்திக்க ஆரம்பித்திருந்தான். இங்குமங்கும் அலைபாய்ந்த மனமானது அலசி ஆராய்ந்து ஒரு தீர்வை சொல்ல அந்த முடிவை எடுத்தான்.

இனி தாய்க்கு பின் தான் எல்லாம் என முடிவெடுத்த பின் கூட நிலாவின் நினைப்பு அவனை நிம்மதியாக இருக்கவிடவில்லை. ஆனாலும் வேறு வழியும் புலப்படவில்லை அவனுக்கு.  கல்லாக இறுகினான்.

நெஞ்சில் வைத்து பூஜித்த நேசத்தை வேரறுக்க நினைத்தாலே உயிரை பிழியும் வலியை உணர்ந்தான். ஆனாலும் முயன்று தன்னை கட்டுக்குள் வைத்துக்கொண்டான்.

உயிரென காதல் கொண்டவளிடம் கூட கண்பார்வையிலும் கட்டுப்பாடோடு கண்ணியம் காத்தவனுக்கு இதுவும் சாத்தியம் தான் ஆனது.

எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தானோ மெல்ல அங்கிருந்து எழுந்து தாயை தேடி சென்றான். அங்கே அமுதாவும் குணசேகரனும் வந்திருக்க முத்தழகியின் உடல்நிலையை பற்றி விசாரித்துவிட்டு சிறுது நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.

முத்தழகி வீட்டிற்கு வந்து இரண்டுநாட்கள் ஆனபின் தனக்கு திருமணத்திற்கு பெண் பார்க்குமாறு தினகரன் கூறவும் இருவருமே அதிர்ந்துபோயினர். அவனது முகத்தில் எந்தவிதமான உணர்வும் அவர்களுக்கு பிடிபடவில்லை.

அவனிடமிருந்து இப்படி ஒரு செயலை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை அவர்கள். தனக்காகவோ என எண்ணி முத்தழகி கேட்ட கேள்விக்கு எந்தவிதமான பதிலும் சொல்லாமல் இருக்க முத்தழகி முடியாதென்க, தன் பிடியிலேயே நிலையாக நின்றான் தினகரன்.

ஒருவழியாக அவனின் வழிக்கே சென்று பெண்ணை பார்ப்பதென முடிவு செய்து ஏற்பாடுகள் நடக்க முதலில் மனசுணக்கத்தோடு ஆரம்பித்த கல்யாணவேலை பின் விருப்பத்தோடும் சந்தோஷத்தோடும் நடைபெற்று இதோ வண்ணமதியும் வந்தாகிவிட்டது.

நடந்தவைகளை நினைக்கும்போதே நெஞ்சடைத்தது தினகரனுக்கு. இதுதான் விதியோ? இப்படி நடக்கவேண்டும் என்பதுதான் இறைவனது கட்டளையோ? என யோசிக்க யோசிக்க விடைதான் கிடைத்தபாடில்லை.

சிறிது நேரத்தில் அறைக்கு செல்லுமாறு கூறிய முத்தழகியை தாண்டி செல்ல அறையில் வண்ணமதி ஏற்கனவே அமர்ந்திருந்தாள்.

ஒரு கணம் நின்று துடித்தது அவன் இதயம். கண்களை இறுக மூடி திறந்தவன் மூச்சை ஆழ இழுத்துவிட்டு அவளருகில் சென்று அமர்ந்தான். அவனின் வருகையை உணர்ந்ததும் வண்ணமதி எழுந்து நிற்க,

“உட்காரம்மா…” முதல் வார்த்தை அவளிடம் அவன் பேசுவது.

“இல்லை நீங்க வரவும் கால்ல விழ சொன்னாங்க அத்தை…” அவளிடம் கொஞ்சமும் தடுமாற்றம் இல்லாத வார்த்தைகள் எந்தவித தங்குதடையும் இன்றி வந்து தினகரனின் செவியை நிறைத்தது.

கொஞ்சமும் மணப்பெண்ணுக்கே உரிய படபடப்போ பதற்றமோ இன்றி இயல்பாக பேசுபவளை விசித்திரமாக பார்த்து,

“அதெல்லாம் பரவாயில்லை. நீ முதல்ல உட்கார்…” கொஞ்சம் அழுத்தத்தோடு வந்ததோ அவனது வார்த்தைகள். மறுபேச்சின்றி சட்டென அமர்ந்தாள்.

“உன் பேர் வண்ணமதி தானே?…” அவனுக்கே ஏனோ இந்த கேள்வி அபத்தமாக பட்டது.

ஆனாலும் அவனுக்கு பேசவேண்டும்? தனது நிலையை தெளிவாக கூறவேண்டும்? அவளை ஆராய்ந்தான்.

error: Content is protected !!