தேடல் – 6
ஊரெங்கும் இரவு கவிழ்ந்து வானமகனது போர்வையிலிருந்து நிலவுமகள் வெளிவருவதும் மீண்டும் மேகத்திரை நிலவவளை சிறையெடுப்பதுமாக இருக்க தினகரனது பார்வை அந்த நிலவையே வட்டமிட்டது.
அதை வெறித்து பார்த்துகொண்டிருந்தவனது பார்வை அப்படியே இங்குமங்கும் அசையாமல் நிலைபெற்றிருந்தது.
“தம்பி…” முத்தழகியின் குரலில் சுதாரித்து திரும்பியவனது கலங்கிய விழிகளை பார்த்து துணுக்குற்றார் முத்தழகி. தான் வரும் போது மகனது பார்வை அந்த வானத்து நிலவையே வட்டமிட்டதை கண்டுவிட்டுத்தான் அவனை அழைக்க வந்தார்.
மகனது மனம் புரியாதவரா?
அன்று காலைதான் தினகரனின் திருமணம் முடிந்திருந்தது. வீட்டிற்குள் மருமகள் இவனது வரவை எதிர்பார்த்து காத்திருக்க மகனோ இன்னும் பழையதை மறக்காமல் இன்னமும் தனது நினைவுகளில் உழன்று கொண்டிருப்பதை எண்ணி வருந்தினார்.
இத்திருமணத்திற்கு யாரும் வற்புறுத்தவும் இல்லை. தினகரனிடம் அதை பற்றி பேசவும் இல்லை. எந்தவித நிர்பந்தமும் இல்லாமல் அவனே திருமணத்திற்கு பெண் பார்க்க சொல்லி இதோ அவனது வாழ்வில் பங்குகொள்ள மனைவி என்று ஒரு பெண்ணும் வந்தாகிற்று.
இப்படி ஒரு நிலை தனது மகனுக்கு வேண்டாம் என்றுதான் முத்தழகி கொஞ்சம் நாள் ஆகட்டும் என பேசிப்பார்த்தார். தினகரனோ அதை கேட்கும் வழி தான் இல்லை.
“என்னம்மா வந்து ஒண்ணுமே பேசாம அப்படியே நின்னுட்டு இருக்கீங்க? எதாச்சும் சொல்லனுமா?…”
தன் நினைவலையில் இருந்து வெளியில் வந்த முத்தழகிக்கு இப்போது மகனது முகம் தெளிவாக இருப்பதாகப்பட்டது. ஆனா அதில் எந்தவிதமான உணர்வுமே இல்லாமல் துடைத்துவைத்தது போல இறுக்கமாக இருந்தது தான் கொஞ்சம் வேதனையை கொடுத்தது முத்தழகிக்கு.
“உங்க ரெண்டு பேரையும் வந்து சாமி கும்பிட சொல்லி பெரியாச்சி கூப்பிட்டுச்சு. மதி புள்ள உனக்காக அங்க காத்திட்டு இருக்கு. ஆச்சி இப்போ கிளம்புதாகளாம். அதான் வெரசா வர சொல்லி சொன்னாக…” சொல்லிவிட்டு அகன்றுவிட்டார் முத்தழகி.
எதற்காக என தெரியாதளவிற்கு தினகரன் என்ன குழந்தையா? முகத்தில் சிறிதளவில் எட்டிப்பார்த்த வேதனையின் சாயலை கூட கவனமாக மறைத்துவிட்டு உள்ளே சென்றான்.
பெரியாச்சி என்பது அவர்களது குடும்பத்தில் மிக மூத்த சுமங்கலி பெண்மணி. நான்கு தலைமுறையை கண்ட ராசியான ஆச்சி. இன்றளவும் அவர்கள் வளசலில் நடக்கும் எந்த திருமணத்திற்கும் சாந்திமுகூர்த்தத்திற்கு முன் அவர்களிடம் மணமக்கள் ஆசி வாங்கினால் விரைவில் வீட்டில் குழந்தை சத்தம் கேட்கும் என்பது அந்த சுற்று வட்டாரத்திலேயே பிரசித்தி.
உள்ளே உறவினர்கள் கூட்டத்தின் நடுவே தாய் தந்தையரின் அருகில் நின்றிருந்த வண்ணமதியின் பக்கத்தில் சென்று நின்றுகொண்டான்.
பெரியாச்சியை பூஜை அறையின் வெளியே ஒரு சேரில் அமரவைக்கபட்டு கைத்தாங்கலாக அந்த உறவுப்பெண் பிடித்திருக்க பெரியாச்சியோ நடுங்கும் கைகளுடன் கற்பூர ஆராத்தி தட்டை சாமிக்கு காண்பித்துவிட்டு தானும் வணங்கிவிட்டு நிமிர்ந்து பார்த்தார்.
“இங்க வாய்யா ராசா, நீயும் வா தாயி..” என தினகரனையும் வண்ணமதியையும் அழைக்க அவர்கள் இருவரும் பெரியவரது பாதம் பணிந்து எழுந்தனர்.
இருவருக்கும் நெற்றியில் விபூதியை பூசியவர் வண்ணமதியை அருகில் அழைத்து,
“சீக்கிரமே முத்தழகை பாட்டியாக்கிடு ஆத்தா. உனக்கு யாருக்கும் கிடைக்காத ஒரு வாழ்க்கை அமைஞ்சிருக்கு. பொக்கிஷமாட்டம் என்னோட பேராண்டி. பத்திரமா வச்சுக்கோ. அவனோட மனசறிஞ்சு ஒத்துமையா செழிப்பா வாழனும். புரியுதா?…” என்றவரிடம் வெட்கத்தோடு தலையை மட்டும் அசைத்தாள் வண்ணமதி.
இதை பார்த்துகொண்டிருந்த தினகரனது மனதில், “இவள் வாயை திறந்து பேசவே மாட்டாளோ? இதுவரை இவளது குரலை கூட கேட்கலையே?” என யோசித்தபடி அவளைத்தான் நோக்கிகொண்டிருந்தான்.
அவனது பார்வையை உணர்ந்தவள் அவனை பார்த்து லேசாக முறுவலிக்க அவனோ திகைத்துவிட்டு வெளியே சென்று முற்றத்தில் அமர்ந்துவிட்டான்.
உள்ளே பெரியாச்சி வண்ணமதியை தான் சொன்ன நேரத்திற்கு தான் அறைக்குள் அனுப்பவேண்டும் என்று உத்தரவிட்டுவிட்டு கிளம்ப அவரை வழியனுப்ப முத்தழகி வெளியே வந்துவிட்டார். தினகரனிடமும் விடைபெற்றுவிட்டு பெரியாச்சி கிளம்பிவிட தினகரன் மீண்டும் அதே இடத்தில் அமர்ந்துவிட்டான்.
இப்படி ஒரு முடிவெடுக்கும் சூழ்நிலைக்கு தான் ஆளான அந்நாட்களை மெல்ல அசைபோட்டான் தினகரன்.
நிலாமுகி காணாமல் போய் ஒரு வாரம் கழித்து ஒருநாள் நடு இரவில் முத்தையா வீட்டிற்குள் போனில் அவரது தலைவரிடம் எகிறிக்கொண்டிருந்தார். சத்தம் கேட்டு வெளியே வந்த தினகரனது காதில் விழுந்தவைகள் இதுதான்.
“எனக்கு எந்த சீட்டும் வேண்டாம் தலைவரே. எனக்கு என்னோட மருமகப்பொண்ணு தான் வேணும். இல்லைனா நடக்கிறதே வேற. என்னை பத்தி நல்லாவே தெரியும் உங்களுக்கு. நான் ஒரு விஷயம் சாதிக்கனும்னு நினச்சா என்ன வேணும்னாலும் செய்வேன்…”
“எனக்கு என்னோட புள்ளை தான் முக்கியம். அதுக்காகத்தான் என்னோட சேர்மன் பதவியையும் தூக்கி எறிஞ்சேன். என் வீட்டு பிள்ளையை கண்டுபிடிக்க துப்பில்லாத எனக்கு அந்த பதவி இருந்தென்ன? வர பதவி தேவையென்ன?…”
“காலுக்கு உதவாததை கழட்டி எறிஞ்சுதானே ஆகனும். என்னோட பதவி எனக்கு அப்படித்தான். உதவாதது எனக்கு தேவையில்லை. பதவில இல்லாட்டிலும் நான் சிங்கம் தானுங்க தலைவரே. தெரியுமில்ல. அந்த சீட்டும் எனக்கு நீங்க சொன்னதால தான் ஆசைப்பட்டேன். இப்போ வேண்டாங்கறேன்…”
“உங்க செல்வாக்கை வச்சு என் மருமகளை கண்டுபிடிச்சு கொண்டாங்க. இல்லையா நானே நடந்ததை போலீஸ்ல போய் சொல்லிப்போட்டு சரண்டர் ஆகிடுவேன். அதுக்கப்பறம் நடக்கற பின் விளைவுக்கு நான் பொறுப்பாக முடியாது தலைவரே…”
போனை வைத்துவிட்டு திரும்ப தினகரன் இவரை பார்த்தவாறு மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிகொண்டு நின்றிருந்தான்.
அவனை பார்த்ததும் தலையை குனிந்தவாறு செல்ல மீண்டும் முத்தையாவின் மொபைல் மீண்டும் அழைப்பை தாங்கிவர இப்போது அவரது கரங்களில் இருந்து அதை பறித்துவிட்டிருந்தான் தினகரன்.
அதை ஏற்று காதில் பொறுத்த மறுபக்கம்,
“முத்தையா கோவத்துல அவசரப்பட்டு எதையும் செஞ்சுடாதீங்க. கண்டிப்பா நான் எப்படியாவது உங்க வீட்டு பொண்ணை கண்டுபிடிச்சு உங்ககிட்ட ஒப்படைச்சிடறேன். பசங்க தேடிட்டு தன இருக்காங்க. கொஞ்சம் டைம் குடுங்களேன்…” கொஞ்சம் பதற்றத்தோடே கேட்ட அக்குரலுக்கு,
“ம்ம்…” என்று மட்டும் தினகரன் கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான். முத்தையாவை கண்டிப்புடன் பார்த்தவன்,
“பாவத்தை நாம பண்ணிட்டு அதிலிருந்து தப்பிக்க பிராயச்சித்தம் செய்வாங்களே. அது போல இருக்கு உங்க நடவடிக்கை. நீங்க சீட் வேண்டாம்னு சொன்னாலும், பதவியை ராஜினாமா செய்தாலும் நிலா உடனே கிடச்சிடுவாளா?…”
“நல்லவேளை அம்மா மாத்திரை போட்டுட்டு தூங்கறாங்க. அவங்க மட்டும் கேட்டிருந்தா?…” என்றவன் மேலும் பேசாமல் மொபைலை அவரது கைகளில் திணித்துவிட்டு தன் அறைக்குள் சென்று மறைந்தான்.
ஏதோ ஒரு வகையில் தந்தையின் பேச்சு தினகரனுக்கு கொஞ்சம் ஆறுதல் அளித்தது. தான் பேசியதற்காக எந்தளவிற்கு சென்றிருக்கிறார் என நினைக்கும் போது கொஞ்சம் இதமாக இருந்தாலும் அவரின் மேல் உள்ள கோபம் துளியும் குறையவில்லை என்பது தான் உண்மை.
என்ன செய்து மகனது கோவத்தை குறைப்பது என புரியாமல் அப்படியே நின்றுவிட்டார் முத்தையா. என்றைக்கு நிலாவை கடத்தியது தான்தான் என தெரிந்ததோ அப்போதிருந்து அப்பாவென்ற அழைப்பை நிறுத்தியிருந்தான் தினகரன்.
இன்றளவு மகனது அந்நியத்தன்மை முத்தையாவை சுட்டெரித்துகொண்டிருந்தது. நிலா கிடைத்தாலும் கூட மகன் தன்னை மன்னிக்கபோவதில்லை என்பது தெள்ளத்தெளிவாகியது அப்பெரியமனிதருக்கு.
அந்த தலைவரை எண்ணி ஒரு பயமும் இல்லை முத்தையாவிற்கு. அவருக்கு தெரியும் தன்னை அவ்வளவு எளிதில் நெருங்கமுடியாது என்பது. தலைவரது முக்கிய பிடிகள் முத்தையாவின் கைகளுக்குள். அதனால் தான் இந்தளவிற்கு இறங்கி வந்து தலைவரே கெஞ்சும் அளவில் தன்னை நிறுத்தியிருக்கிறார்.
மேலும் இரண்டுநாட்கள் கடக்க கோவிலுக்கு சென்ற முத்தழகி மயங்கி விழுந்ததாகவும் மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாகவும் தெரிந்தவர்கள் கூற அடித்துபிடித்துக்கொண்டு அங்கே சென்றார் முத்தையா.
ஏற்கனவே தினகரனுக்கும் தகவல் கூறப்பட்டு அவனுமே அப்போதுதான் வந்து சேர்ந்தான். முத்தழகியின் தலையில் போடப்பட்டிருந்த கட்டை பார்த்ததும் பதறிவிட்டான் தினகரன்.
என்ன ஏதென்று விசாரிக்க மயக்கத்தில் கீழே விழும் போது சுவற்றில் மோதியதால் ஏற்பட்ட காயம் என்று அவர் சமாளித்தாலும் உள்ளம் கலங்கிப்போனது அம்மகனுக்கு. தாயுடன் தந்தையை இருத்திவிட்டு டாக்டரை பார்க்க விரைந்தான்.
அவரிடம் அனுமதி கேட்டுவிட்டு உள்ளே நுழைந்ததும்,
“டாக்டர் நான் முத்தழகியோட மகன். எதனால அவங்களுக்கு மயக்கம் வந்தது? அவங்களுக்கு இப்போ எப்படி இருக்குன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?…” படபடப்போடு கேட்டவனை பார்த்து மெல்ல புன்னகை புரிந்தவர்,
“எனக்கு உங்களை தெரியும் மிஸ்டர் தினகரன். இந்த வட்டாரத்துல உங்களை தெரியாதவங்க உண்டா என்ன?…” என்றுவிட்டு சிறு கண்டன பார்வையோடு,
“உங்கம்மாவுக்கு பிபி ரொம்பவே அளவுக்கதிகமா இருக்கு. அதுவும் இல்லாம காலையில இருந்து சாப்பிடாம விரதம் வேற இருந்திருக்காங்க. இதோட அடிப்ரதட்சனம் வேற கோவில்ல செஞ்சிருக்காங்க…”