“என்னாச்சுப்பா? ஏன் திடீர்னு ஆரவ் இப்டி கோவமா போறான்? இதுல என்னதான் இருக்கு?…” ராகவன் பதில் பேசாமல் அமைதியாக இருக்க அந்த பைலை எடுத்து படிக்க ஆரம்பித்தான் அர்ஜூன்.
இப்படி ஒரு அதிர்ச்சியை அவன் எதிர்பார்க்கவில்லை. இதை மறைத்ததற்கு ஆரவ் கோவப்பட்டதில் தவறும் இல்லை என்றுதான் அர்ஜூனிற்கு தோன்றியது.
இந்த விஷயம் தர்ஷினிக்கும், ஆண்டனிக்கும் ஏற்கனவே தெரிந்திருக்கிறது என்பது இருவரது அமைதியிலே புரிந்துபோனது அர்ஜூனிற்கு. முகத்தில் சினம் ஏற,
“என்னப்பா இதெல்லாம்? எங்கக்கிட்ட இருந்து எதுக்காக இதை மறைச்சீங்க? நிலாவுக்கு இப்படி ஒரு ஆபத்து இருக்குன்னு எதுக்காக சொல்லலை நீங்க?…”
எத்தனை கேட்டும் மௌனமாகவே இருந்தார் ராகவன்.
“அஸ் எ டாக்டர். நான் ஒரு நியூரோ சர்ஜன். என்கிட்டே நீங்க இதை பத்தி நிச்சயமா பேசிருக்க வேண்டாமா?. அப்போ டாக்டர் மேத்தா வந்தது இதுக்காக தானா?…” ஆற்றாமையோடு அவன் கேட்க அப்போது தான் வாயை திறந்தார் ராகவன்.
“உன்கிட்ட சொன்னா நீ ஆரவ்ட்ட சொல்லிடுவே அஜூ. உனக்கும் அவனுக்கும் எந்தவிதமான ஒளிவுமறைவும் இருந்ததில்லையேடா. எப்படி என்னால சொல்ல முடியும்? என் மகன் அந்த பொண்ணை தன்னோட எதிர்காலமா நினச்சு பல கனவுகளோட வாழ்ந்துட்டு இருக்கும் பொது அவனோட சந்தோஷத்தை என்னால எப்படி தகர்க்க முடியும்?…”
“பெங்களூர்லையே எனக்கு இந்த விஷயம் தெரியும். நிலாமுகியோட ஸ்காலப்எமொசரிப்ரைன்ல சின்னதா ஒரு ப்ளட் க்ளாட் இருக்குது. அதை உடனே ஆபரேட் பண்ணமுடியாத சூழ்நிலையிலையும் இருந்தது. அதுவும் இல்லாம அது ரொம்ப காம்ப்ளிகேடட் ஆப்பரேஷன்…”
“ரெண்டு மூணு மாசம் கழிச்சுதான் அதை பண்ண முடியும்னும், இது ரொம்பவே ரிஸ்க்கான ஆப்பரேஷன்னும் எனக்கு புரிஞ்சது. அதுல நிலாவுக்கு நினைவு திரும்பினாலும் திரும்பலாம். இல்லைனா அவளோட உயிர் போனாலும் போகலாம். ஆப்பரேஷன் பண்ணாம விட்டாலும் அது அவளோட உயிருக்கு ஆபத்துதான்…”
ராகவனது பேச்சிலும் வார்த்தைகளிலும் அப்படி ஒரு வலி மிதமிஞ்சி இருந்தது. முகத்தில் வேதனை விரவி வார்த்தைகளில் அப்படி ஒரு கலக்கம்.
“இதை ஆரவ்வின் முகத்தை பார்த்து என்னால சொல்லமுடியுமா? அதனால தான் நான் இப்போதைக்கு யார்க்கிட்டையுமே சொல்லலை. என் மகனோட காதல் எனக்கு அன்னைக்கே புரிஞ்சது. அவனால இதை சத்தியமா தாங்கமுடியாது அஜூ. அதான் மறைச்சேன்…”
“எனக்கும் அந்த பொண்ணுமேல அன்பு இருக்கிறது தான். அதுக்காக என் மகனோட எதிர்காலத்தை பத்தியும் நான் யோசிக்கனுமே? யாருக்குன்னு நான் பார்க்க அஜூ?…”
“இப்போ என்ன செய்யன்னு எனக்கு தெரியலை. ஆரவ் வேற பிடிவாதமா பேசிட்டு போய்ருக்கான். எனக்கு அவனோட சந்தோசம் தான் முக்கியம் அஜூ. இப்போ அவன் சொல்றதை கேட்டு கல்யாணம் செஞ்சுவச்சா நாளைக்கே ஆப்பரேஷன்ல நிலாவுக்கு எதுவும் ஒண்ணுன்னா நிச்சயம் அவன் தாங்கமாட்டான். எனக்கு என்னோட பையன் வேணும் அஜூ. நான் பண்ணினதுல என்னடா தப்பு?…”
ராகவன் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வதென ஒன்றுமே புரியவில்லை அர்ஜூனிற்கு. எப்படி பெற்ற தந்தையாக ராகவன் நினைப்பதில் எந்தவிதமான தவறுமில்லையோ, அதே போல காதலித்தவளை கைவிடாமல் காதலை காப்பாற்றவேண்டும் என போராடும் ஆரவ்வின் புறமும் எந்த தவறுமில்லை என தோன்றியது அர்ஜூனிற்கு.
அங்கே ஹாஸ்பிட்டலில் உடனே தனது காதலை நிலாமுகியிடம் அதிரடியாக தெரிவித்து அவளின் சம்மதத்தை கேட்டிருந்தான் ஆரவ்.
அப்போதுதான் தூங்கி எழுந்து அமர்ந்திருந்த நிலாவின் முன்னால் வியர்க்க விறுவிறுக்க வந்து நின்ற ஆரவ் நிற்கவும் பார்த்து அதிர்ந்துவிட்டாள்.
“டாக்டர், என்னாச்சு?…” என கட்டிலை விட்டு இறங்கியதும் அவளின் கைகளை பிடித்தவன்,
“நிலா எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. உன்னை என் உயிருக்கும் மேல விரும்பறேன். என்னை கல்யாணம் செய்துக்க உனக்கு சம்மதமா?…”
இப்படி திடுதிப்பென்று வந்து கேட்பான் என்பதை அறியாத நிலாவோ அவனுக்கு என்ன பதில் சொல்வதென தடுமாறினாள்.
சமீபமாக அவன் மீது தன் மனம் லயிப்பதை நிலாவும் உணர்ந்துதான் இருந்தாள். அதே நேரம் தான் அவனுக்கு பொருத்தமில்லை என்றும், அவனை ஆசைப்பட தனக்கு எந்தவிதமான தகுதியும் இல்லை என்றும், தன்னையே மறந்திருக்கும் இந்த சூழ்நிலையில் தனக்கு காதலா? வேண்டாம், அவனை விட்டு தள்ளியே இருக்கவேண்டும் எனவும் தனக்குள் ஒரு தீர்மானத்திற்கே வந்திருந்தாள்.
அதனால் இப்போது அவன் கேட்டதும் கொஞ்சம் மகிழ்ந்து பின் தன்னை அடக்கி அந்த உவகையில் இருந்து தன் காதல் மனதை மீட்டு தன்னை கொஞ்சம் நிலைப்படுத்திக்கொண்டு அவனிடம் பேச ஆரம்பித்தாள்.
“நான் உங்களை எப்போவுமே அப்படி நினச்சதில்லையே டாக்டர். நீங்க ஏன் இப்படில்லாம் என்கிட்ட பேசறீங்க? என்னால கேட்க கூட முடியலை…” நிலாமுகி ஆரவ்வின் முகத்தை ஒருவித தவிப்போடு பார்த்து கூறினாள்.
அவனோ அவளது தவிப்புகள் எதையும் கண்டுகொள்ளாமல், “உன்கிட்ட வேற மாதிரி என்னால பேசமுடியாது நிலா. புரிஞ்சுக்கோ. என்னால உன்னை விட்டுட்டு இருக்கிறது இனியும் நடக்காத ஒன்னு. இதுதான் என்னோட நிலைப்பாடு…” பிடிவாதமான அவனது பேச்சில் மனதில் பயம் கவ்வ,
“நான் யார் என்னனு தெரியாம நீங்களா முடிவுக்கு வந்துட்டா எப்படி? மனசாட்சியோட பேசனும் நான். இப்போ உங்க காதலுக்காக நீங்க சொல்றதை கேட்டு கல்யாணம் பண்ணிகிட்டா நாளைக்கே எனக்கு நினைவு திரும்பினா அந்த வாழ்க்கைக்கு திரும்பற நான் இதை மறந்திட்டா அது நம்ம ரெண்டு பேருக்குமே எத்தனை வலியை கொடுக்கும்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க டாக்டர்…”
இங்கு வந்து பேச ஆரம்பித்ததிலிருந்து இத்தனை நாளில் அவள் இவ்வளவு நீளமாக பேசியது இன்றைக்கு தான் என நினைத்தவன் அவளையே விழிவிரித்து பார்த்துக்கொண்டிருந்தான்.
நிலாவிற்கு அவனது பார்வையின் தாக்கங்கள் தன் மன உறுதியை தகர்த்துவிடுமோ என அஞ்சினாள். எவ்வளவு நேரம் அவனை தவிர்க்க முடியும் என தவித்தாள். இன்னும் இங்கேயே நின்றான் என்றால் நிச்சயம் தன்னையும் மீறி அவனிடம் தஞ்சம் புகுந்துவிடுவோம் என பயந்து அவ்விடம் விட்டு தானே நகர எத்தனிக்க அவளை தன்னோடு இழுத்தணைத்தான் ஆரவ்.
“ஐ நோ நிலா. உனக்கும் என்னை பிடிக்கும். என்ன ஆனாலும் சரி நீ தான் என்னோட மனைவி. என்னால உன்னை விட்டுகொடுக்க முடியாது. உனக்கு நினைவுகள் திரும்பினாலும் இல்லைனாலும் என்னை விட்டு உன்னை தள்ளி இருக்க விடமாட்டேன் நான். எந்த நிமிஷம் உன்னை நான் பார்த்தேனோ. அப்போவே முடிவு பண்ணிட்டேன்…”
“என்னோட வாழ்க்கை உன்னோட மட்டும் தான். மறுத்து மட்டும் பேசிடாதே. என்னால தாங்கமுடியாதுடா நிலா. ஐ லவ் யூ சோ மச். கற்பனைல கூட நீ இல்லைனா அப்டின்ற ஒரு நினைப்பை என்னால நினைச்சு பார்க்க கூட முடியலை. நினைக்கவும் மாட்டேன்…” எனவும்,
“இல்லை டாக்டர் இது சரிப்படாது. என்னை விட்டுடுங்க…”
அவனிடம் இருந்து விடுபட்டு விழிகளில் கரகரவென் கண்ணீர் வழிய பரிதவிப்போடு கெஞ்சலுடன் பேசியவளை முறைத்தவன்,
“சரியா வருமா இல்லையான்னு கல்யாணத்துக்கு பின்னால வாழ்ந்து பார்த்து தெரிஞ்சுக்கலாம். சரிவரலைனாலும் எனக்கு பரவாயில்லை. நான் உன்னோடு வாழனும். இந்த ஜென்மம் முழுமைக்கும் நீதான் எனக்கு. நான் தான் உனக்கு. நம்ம கல்யாணம் நடந்தே தீரும். கல்யாணபொண்ணா சமத்தா இருக்கனும். மறுத்து ஒரு வார்த்தை பேசிப்பாரு…” என மிரட்ட,
“நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க டாக்டர். நான் உங்களுக்கு வேண்…”
அதன் பின்னான வார்த்தைகளை அவளால் உச்சரிக்கமுடியா வண்ணம் ஆரவ்வின் வலிமையான இதழ்களின் தாக்குதலால் நிலாவின் இதழ்கள் சிறை எடுக்கப்பட்டிருந்தன.
சில நொடிகளுக்கு பின் அவளை விடுவித்தவன்,
“எப்போவும் மனசுல உள்ளதை சொல்லிடனும். உண்மையை பேசனும். இல்லைனா என்னோட பனிஷ்மென்ட் இப்படி தான் இருக்கும். இனியும் மறுத்து பேசுவ நீ?…” என சீண்டலாக கேட்கவும் வெட்கத்தில் அவனது மார்பில் தன் முகத்தை புதைத்தவளுக்கு கண்களில் சந்தோஷகண்ணீர் பெருக்கெடுத்தது.
ஆரவ் நிலாவின் காதல் ஜெயித்து கல்யாணத்தை எதிர்நோக்கி இருக்க,
பூம்பொழில் கிராமத்தில் தினகரன் தன் மனதை கொன்று காதலை புதைத்து உணர்வற்ற முகத்தோடு பெரியோர்கள் கூடியிருக்கும் அந்த சபையில் அனைவரது ஆசிர்வாதத்தோடும் வண்ணமதியின் கழுத்தில் திருமாங்கல்யத்தை பூட்டி மூன்று முடிச்சிட்டு தன்னில் சரிபாதியாக ஏற்றுகொண்டான்.