நெஞ்சில் உறைந்த தேடல் – 5 (2)

தானாக மறைக்க எதுவும் இல்லாதது போல் இயற்கையாகவே வகிட்டு குங்குமத்தை மறைக்கும் விதமாக அடர்ந்த சுருண்ட கூந்தல் அதை மறைத்துகொண்டிருந்தது.

பிரிந்து வாழும் காரணம் ஏனென்று கேட்க மனம் விழைந்தாலும் தனக்கு தேவையில்லாதது என தனக்கு தானே ஒரு எல்லையை வகுத்துக்கொண்டு ஸ்டெபியை பார்த்தாள் நிலா. அவளோ சாதாரணம் போல முகத்தை வைத்து புன்னகைக்க தானும் தெளிந்தாள்.

 “ரூம் லாக் பண்ணாமலே இருக்குதே டாக்டர்? வேற யாராச்சும் மிஸ்யூஸ் பண்ணிடுவாங்களே?…” ஏதாவது பேசவேண்டும் என்றுதான் கேட்டாள்.

“இல்லை நிலா. இந்த ரூம் நான், அப்பா, ஆரவ், அர்ஜூன் தவிர வேறு யாராலும் ஓபன் பண்ணமுடியாது. எங்களோட ஃபிங்கர் பிரின்ட் மேச்ட் ஆனாதான் ஓபன் ஆகும். என்னோட ரூம் மட்டுமில்ல. அவங்க ரூமும் அப்டிதான்…”

விளக்கம் போதுமா என்பது போல் நிலாவை பார்க்க அவள் இன்னமும் அமைதியாகவே இருந்தாள்.

பின் கொஞ்சம் பேசி கொஞ்சம் சிரித்து ஸ்டெபியின் சிறு வயது நினைவுகளை நிலாவிடம் அவள் பகிர்ந்து நேரம் செல்வது தெரியாமல் உரையாடி மிக அருகில் நெருங்கிவிட்டனர். அதன் பின் நிலாவை தன்னுடன் சாப்பிட வைத்து அவளறைக்கு கொண்டுவிட்டு பின் ஆரவ்வை தேடி சென்றாள் ஸ்டெபி.

அங்கே அர்ஜூன் ஒரு புறம் முறைத்துக்கொண்டிருக்க ஆரவ் சாவாதானமாக அமர்ந்து அவனையே பார்த்துகொண்டிருந்தான்.

“ஏன் ஆரவ் என்ன பண்ணிவச்ச? அவர் கோவமா இருக்காரு…” என்றதும் அர்ஜூன் எழுந்து ஸ்டெபியை முறைத்துக்கொண்டே சென்றுவிட்டான். அவனது முகத்தில் தெரிந்த வெறுமையும் கலக்கமும் ஸ்டெபியை கொல்லாமல் கொன்றது.

“அவனை விடு. என்ன சொல்றா என்னோட ஆளு? தேடினான்னு மெசேஜ் அனுப்பின? உண்மையாவா?…”

“ஹ்ம் ஆமா. மெசேஜ் பார்த்ததும் நீ வருவன்னு பார்த்தேன். நீ என்னடான்னா என்னோட ரூம்ல இருக்க. என்னடா நடந்துச்சு அங்க? அய்யனார் முறுக்கிட்டு போற அளவுக்கு என்ன பண்ணின? அது என்ன பேப்பர்?…”

சகட்டுமேனிக்கு கேள்விகளால் தாக்க அவளை பார்த்து குறும்புன்னகை புரிந்த ஆரவ்,

“எனக்கு ஹெல்ப் பண்ணமாட்டேன்னு சொன்ன உன் வீட்டுக்காரனுக்கு கொஞ்சம் ஷாக் குடுத்தேன். அவ்வளோ தான்…” அப்போதும் ஸ்டெபி புரியாமல்  விழிக்க,

“உன் மெசேஜ் பார்த்ததுமே அப்டியே எனக்கு பறக்கிறது போல ஒரு ஃபீல் பேப். இப்போவே என்னோட லவ்வை நிலாக்கிட்ட சொல்லனும்னு ஒரு ஆசை. அதுக்கு எப்டி சொல்லலாம்னு டிரையல் பார்க்கலாம்னு அவனை கூப்பிட்டேன்…”இதை சொல்லும் போதே ஸ்டெபி அவனை முறைக்க ஆரம்பித்திருந்தாள்.

“அவன் மூஞ்சிக்கு அவனை என்னோட நிலா இடத்துல வச்சு ரொமான்ஸ் லுக் விடறதே அதிகம். இதுல சார்க்கு சீன் வேற. என்னமோ அவனோட கற்பே போய்ட்டா மாதிரி ஓவரா பண்ணினான். ஒருவழியா சரிக்கட்டி மிரட்டி சம்மதிக்க வச்சேன். பாதில நீதான் வந்து கெடுத்துட்டியே?…”

என்னவோ தான் செய்யவிருந்த உத்தம காரியத்தை ஸ்டெபி வந்து பாழாக்கிவிட்டது போன்ற ஒரு பாவனையை ஆரவ் தன் முகத்தில் காண்பிக்க அவளோ,

“என்னனு மிரட்டின?…” அதிலேயே நின்றாள்.

“ஒழுங்கா கோஆபரேட் பண்ணலைனா பேப் வச்சு உன்னை டைவர்ஸ் பண்ணிடுவேன்னு சொன்னேன். சும்மா வெறும் பேப்பர் தான் அது. அதுக்கே சார் டென்ஷன் ஆகிட்டார்…”

ஸ்டெபி சுத்தமாக நொறுங்கியே போனாள். ஆரவ்விடம் இதை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை அவள். உள்ளம் கொந்தளிக்க ஆரவ்வை ஏறிட்டு பார்த்தவள் விழிகளில் கண்ணீர் தானாக வழிந்தது.

“நீயா ஆரவ் இப்படி செஞ்ச? ஏன்டா?…” அதற்கு மேல் பேச முடியாமல் தவிக்க அவளை ஆழமாக பார்த்தவன்,

“இன்னைக்கு இல்லைனாலும் எப்போவாவது இதை பத்தி பேசித்தானே ஆகனும். இதை எத்தனை நாள் தள்ளிப்போடுவ?…”

இப்போது சுத்தமாக விளையாட்டுத்தனம் எல்லாம் ஆரவ்வை விட்டு சென்றிருந்தது. அவனது முகத்தில் அப்படி ஒரு தீவிரம்.

“எனக்கு நீயும் முக்கியம். அர்ஜூனும் முக்கியம். ரெண்டு பேரோட பிடிவாதமும் உங்க எதிர்காலத்தை  தான் பாழாக்கும். அதுதான் சேர்ந்து வாழமுடியாதுன்னு சொல்லிட்டல. அப்புறம் என்ன? உன்னோட வழியை நீ பார்த்துக்கோ. அவனோட வாழ்க்கையாச்சும் நல்லபடியா இருக்கட்டும்…”

இரும்பாக இறுகிய குரலில் கூறியவனை என்ன செய்தால் தகும் என்பது போல முறைத்துக்கொண்டும், யாரையும் எதுவும் செய்ய இயலாமல் நிற்கும் தன் கையாலாகாத்தனத்தை எண்ணி அழுதுகொண்டும் நின்றாள் ஸ்டெபி.

“யாரோட இதயத்தையும் புரிஞ்சுக்காத நீயெல்லாம்  ஹார்ட் சர்ஜன். அப்படி என்ன பிடிவாதம் பேப் உனக்கு? அவனும் பாவமில்லையா?…”

நண்பனுக்காக வாதிடும் ஆரவ்வை பரிதாபமாக பார்த்தவளை இரக்கமில்லாமல் பார்த்தான் ஆரவ். அவனும் சொல்லி புரியவைக்க எத்தனையோ முயன்றும் பலனில்லை எனும் போது கோவம் வரத்தானே செய்யும்.

“அஜூ மேலயும் தப்பு இருக்குதான். அதுக்கு அவனுக்கு நீ குடுக்கிற தண்டனை ரொம்ப அதிகம் பேப். அவனை வாழ்வும்  விடாம விலகவும் விடாம படுத்தி வைக்கிற நீ. இதுதான் அவன் மேல நீ வைச்சிருக்கிற காதலா?…”

“காதல் சுயநலம், பிடிவாதம், வறட்டு கௌரவம் இது எல்லாத்துக்குமே அப்பாற்பட்டது. எந்த சூழ்நிலையிலையும் நம்ம காதலையும், நாம காதலிச்சவங்களையும் எதுக்காகவும் விட்டுகொடுக்க கூடாது. பிரச்சனையா கூடவே இருந்து போராடு. பிடிக்கலையா எவ்வளோ வேணும்னாலும் சண்டை போடு.  ஆனா விலகிட மட்டும் கூடாது பேப்…”

“டைவர்ஸ்னு சும்மா வெத்து பேப்பர்ல கையெழுத்து கேட்டதுக்கே என்னை அடிக்க வந்துட்டான் அஜூ. உனக்கு இவ்வளோ அழுகையும் கோவமும் வருது. பிரிஞ்சு வாழ என்னவெல்லாம் காரணம் சொல்ற நீ அவனோட சேர்ந்து வாழ ஏன் யோசிக்கமாட்டிக்க. உன்னோட இந்த கண்ணீரே உன் மனசை சொல்லுதே பேப்…”

அதற்கு மேல் அவளே யோசிக்கட்டும் என வெளியேறியவன்  வாசலில் அர்ஜூன் கலங்கிய விழிகளுடன் நிற்பதை பார்த்ததும் கொஞ்சம் தயங்கி நின்றவன் அவனது தோளில் ஆறுதலாக தட்டிகொடுத்துவிட்டு சென்றுவிட்டான்.

அர்ஜூனும் தான் வந்த சுவடு தெரியாமல் அறையின் கதவை சாற்றிவிட்டு அங்கிருந்த நகர ஸ்டெபி அங்கேயே நாற்காலியில் அமர்ந்து அழத்தொடங்கினாள். இனியாவது ஒரு தெளிவான நல்ல முடிவை எடுப்பாள் என நம்பினான் அர்ஜூன்.

ஆரவ் தன் மனதை சமன் படுத்த முடியாமல் திணறி பின் நிலாவின் அறைக்கு செல்ல அவளோ மாத்திரையின் உபயத்தில் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள். சிறிது நேரம் அவளது தளிர்கரத்தினை தன் கைகளில் வைத்துகொண்டு அமர்ந்திருந்தவன் மனம் லேசானது போல தோன்றவும் அங்கிருந்து வெளியேறினான்.

அவனது சிந்தை முழுவதும் இனியும் நிலாவை பிரிந்து தன்னால் இருக்கமுடியாது, அவளை எப்படியாவது தனது வீட்டிற்கு அழைத்து செல்வது பற்றி தந்தையிடம் பேசி முடிவெடுத்துவிடுவோம் என எண்ணிக்கொண்டே அவரின் அறைக்குள் நுழைய அங்கே ராகவன் இல்லை.

அவருக்கு மொபைலில் அழைத்து கேட்க இன்னும் பத்து நிமிடத்தில் வந்துவிடுவதாக கூறவும் அங்கேயே காத்திருக்க தொடங்கினான்.

அங்கே இருந்த ஃபைல்கள் ஒவ்வொன்றாக எடுத்து பார்வையை ஓடவிட்டவன் அனைத்தையும் வைத்துவிட்டு அறையை சுற்றி ஒருமுறை பார்த்துவிட்டு மொபைலை எடுக்க அவனது மூளையில் பளிச்சிட்டது.

மீண்டும் யோசனையாக தனக்கு பக்கவாட்டில் இருந்த கப்போர்டை பார்க்க அதன் மேலே லேசாக துறுத்திக்கொண்டு இருந்த நீல நிற ஃபைல் அவனது கவனத்தை ஈர்த்தது.

எப்போதும் ராகவ் எந்த பைலையும் இப்படி தனித்தனியாக போட்டுவைக்க மாட்டாரே? என யோசித்தவன் அதை எடுக்க சொல்லி மனம் உந்த எழுந்து சென்று அதை எடுத்தான்.

அது பெங்களூரில் நிலாவினை அட்மிட் செய்திருந்த ஹாஸ்பிட்டலில் கொடுத்த சில ரிப்போட்ஸ் அடங்கிய பைல். “

இதை எதற்கு தனியாக வைக்க வேண்டும்? அதுவும் அந்த ரிப்போர்ட்ஸ் எல்லாமே என்னிடம் தானே இருந்தது? இப்போது இன்னொன்று?…” என யோசிக்க ஏனோ உடம்பெல்லாம் குப்பென வியர்த்தது.

அதை படிக்க ஆரம்பித்தவனது விழிகள் ரத்தமென சிவந்து கண்கள் கலங்கின. அவனால் நம்பவே முடியவில்லை. மேலும் வேறெதுவும் பில் இருக்கிறதா என தேட ஆரம்பிக்க இருந்தது தங்களது ஹாஸ்பிட்டலில் எடுத்த ஸ்கேன் ரிப்போட்ஸ் எல்லாம் இருந்தது.

அவனால் அதற்கு மேலும் அங்கே நிற்கமுடியாமல் அனைத்தையும் எடுத்துகொண்டு வீட்டிற்கு விரைந்தவன் செல்லும் வழியிலேயே ராகவனுக்கும், ஆண்டனிக்கும், அர்ஜூனிற்கும் அழைத்து உடனடியாக வீட்டிற்கு வந்தே ஆகவேண்டும் என கூறிவிட்டு ஸ்டெபிக்கு நிலாவை பார்த்துக்கொள்ளும் படி ஒரு மெசேஜை அனுப்பிவிட்டு வீட்டை அடைந்தான்.

இந்த நேரத்தில் வந்திருக்கும் ஆரவ்வை பார்த்து திகைத்த தர்ஷினி அவனிடம் என்னவென கேட்டும் ஒரு பதிலும் இல்லை அவனிடத்தில் இருந்து.

என்னவோ ஏதோவென பதறியபடி வீடு வந்து சேர்ந்தார் ராகவன். எப்போதும் இப்படி செய்பவன் அல்ல ஆரவ். அதுவே அவரது பதட்டத்திற்கு காரணம்.

ஆரவ் அமர்ந்திருந்த விதமே எதுவோ சரியில்லை என்பதை உணர்த்தியது ராகவனுக்கு. தர்ஷினியிடம் என்னவென விழிகளால் வினவ அவர் தன் தோள்களை குலுக்கி தனக்கும் தெரியவில்லை என தலையசைத்தார்.

அர்ஜூனோடு ஆண்டனியும் வந்து சேர அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் பின்னால் மறைத்து வைத்திருந்த ஃபைலை எடுத்து ஆவேசமாக டீப்பாயில் எறிந்துவிட்டு ருத்ரரூபனாய்  நின்ற ஆரவ்வின் கோவத்திற்கான காரணம் ராகவனுக்கும், ஆண்டனிக்கும் புரிந்துபோனது.

ராகவன் ஒன்றும் பேசாமல் சோபாவில் அமர்ந்ததும் ஆரவ் அர்ஜூனிடம்,

“அஜூ எனக்கும் நிலாவுக்கும் இன்னும் பத்தே நாள்ல கல்யாணம். மேரேஜ் என்னோட அம்மா வீட்டு முறைப்படி தான் நடக்கும். நடக்கனும். உன்னோட அப்பாக்கிட்ட இதை சொல்லிடு…” என கூறிவிட்டு வெளியேறியவனை தடுக்கமுடியாமலும் நடப்பது புரியாமலும் திகைத்து நின்றான் அர்ஜூன்.

error: Content is protected !!