தேடல் – 5
நிலாமுகி ஆரவ்வின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஒரு மாதம் கடந்தது. இன்னமும் அனைவரது கண்காணிப்பில் தான் இருந்து வருகிறாள் நிலா.
இன்னமும் எதற்கு அவளை ஹாஸ்பிட்டலில் வைத்திருக்க வேண்டும் என்றும் வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்றும் ஆரவ் பிடிவாதம் பிடிக்க அவ்வப்போது நிலாமுகிக்கு வரும் தலைவலியை காரணம் காட்டினார் ராகவ்.
உண்மையும் அதுவே. நிலாமுகி தலையில் ஏற்பட்ட காயம் சிறிது சிறிதாக ஆறினாலும் அவளுக்கு சில சமயம் மின்னல் வெட்டுவது போன்ற வலி தோன்றி மறைந்துகொண்டிருந்தது. அதனால் மருத்துவமனையிலேயே வைத்திருந்து பிரத்தியோகமாக அவளுக்கு சிகிச்சைகள் குடுத்துகொண்டு தான் இருந்தனர்.
விடிந்ததும் அவளை காண ஹாஸ்பிட்டல் வருபவன் தினம் தினம் அவளிடம் வம்பு வளர்த்துகொண்டு அவளை தன்னுடன் இயல்பாக பேசவைக்க முயற்சி செய்தான்.
எப்போதும் எதையோ யோசித்துக்கொண்டும் விழிகளால் துலாவிக்கொண்டும் தனிமையில் இருக்கும் நிலாவிற்கு அவனது பேச்சுக்களும் பார்வைகளும் பெரும் இம்சையை கொடுத்தன.
பேச்சுக்களை விட அவனது பார்வைகள் தாம் அதிகமாக அவளது மனதிற்குள் ஊடுருவ அது கொடுத்த உணர்வை எதிர்நோக்க முடியாமல் தவித்துபோவாள்.
ஒவ்வொரு நொடியும் தன் காதலை கண்களாலேயே நிலாவிற்கு கடத்த முயன்று தோற்பவன் அவளது மிரண்ட விழிகளில் தன்னையே முழுவதும் இழந்துகொண்டிருந்தான். ஆரவ்வின் இந்த தவிப்பு நாளுக்கு நாள் கூடியதே தவிர குறையவே இல்லை.
ஆரம்பத்தில் அவனின் பேச்சுக்களை, குறும்பான சேட்டைகளை கண்டு மிரண்டு ஒதுங்கியவள் மெல்ல மெல்ல மெல்ல அவனை தன்னையறியாமல் ரசிக்கவும், அவன் வரும் நேரம் எதிர்பார்க்கவும் ஆரம்பித்தாள்.
ஆனாலும் அவளுக்குள் ஒரு தயக்கம். அதுவே ஆரவ்விடம் இயல்பாக நெருங்கவிடாமல் அவளை தடுத்தது.
ஓரளவிற்கு ஸ்டெபிக்கு பின் அவள் பேசுவது ஆரவ்விடம் தான். அதில் அவனுக்குதான் பெருமை பிடிபடவில்லை. அவளது தேடலை உணர்ந்தவன் எதற்காகவும் அவளை தவிக்கவிடாமல் கண்ணுக்குள் வைத்து கவனித்தான்.
நிலாவினால் பேசவும் படிக்கவும் ஓரளவிற்கு முடிந்தது. இது எப்படி என ஸ்டெபியிடம் தான் கேட்டு கேட்டு ஓய்ந்துபோவாள். எத்தனை முயன்றும் அவளது ஞாபகங்கள் சிறிதளவிற்கும் அவளை எட்டவில்லை.
“ஹாய் நிலா, ப்ரேக்ஃபாஸ்ட் முடிஞ்சதா?…” என கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்த ஸ்டெபியை பார்த்து முகமலர்ந்தவள் அவளின் பின்னால் எப்போதும் வரும் ஆரவ்வை காணாமல் கொஞ்சம் மனம் வாடினாள்.
அதை கண்டும் காணாமல் பார்த்த ஸ்டெபி,
“இவ சீக்கிரம் ஆரவ்வை புரிஞ்சுப்பா. என் நண்பனது காதல் நிச்சயம் வென்றுவிடும்…” மனதில் அப்படி ஒரு மகிழ்ச்சி ஸ்டெபிக்கு.
“நான் அப்போவே சாப்பிட்டேன் டாக்டர். எங்க உங்களோட இன்னொரு டாக்டர் வருவாங்களே? இன்னைக்கு அவங்க வரலையா?…” கேட்டேவிட்டாள் நிலா.
“ஏன்? அவன்கிட்ட ஏதாவது கேட்கனுமா?…” ஒன்றும் அறியாதவளை போல கேட்ட ஸ்டெபியை பார்த்து திருதிருவென முழித்தாள் நிலா.
உடனே சுதாரித்துகொண்டு, “இன்னைக்கு சண்டே தானே? நீங்க சர்ச்க்கு போகலையா டாக்டர்?…”
பேச்சை மாற்றியவளை பார்த்து புன்னகைத்த ஸ்டெபி உடனடியாக தனது மொபைலில் வாட்ஸ்ஆப்பில் ஆரவ்விற்கு நிலா தேடுவதாக மெசேஜ் ஒன்றை தட்டிவிட்டு,
“போய்ட்டு வந்தாச்சு. இன்னொரு நாள் உன்னையும் கூட்டிட்டு போறேன். என்னோட வருவியா?…” என மெல்ல தூண்டிலை போடவும் குதூகலத்துடன்,
“போகலாமே டாக்டர்…” உடனடியாக சம்மதித்தவள் பின்,
“எனக்கு தான் யாருமில்லையே? நீங்க கூட்டிட்டு போக இங்க சம்மதிப்பாங்களா?…” சற்றே கவலையோடு கூறியவளை பார்த்து ஸ்டெபியின் மனம் கசிய,
“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். இந்த ரூம்ல இருந்தே நீ வெளில வர பயப்படற? நீ தைரியமா இருந்தா தானே நானும் உனக்காக ரெக்கமன்ட் பண்ணி வெளியே கூட்டிட்டு போகமுடியும்…”
நிலாவும் யோசித்தாள். ஏனோ அவளுக்கு அந்த அறையை விட பாதுகாப்பு வேறெங்கும் இல்லை என்பது போன்ற ஒரு பிரம்மை. யாரை பார்த்தாலும் ஒருவித பயம். யாரோ தன்னை தாக்க வருவது போன்ற ஒரு உணர்வு. அதனாலேயே அந்த அறையை விட்டு எங்கும் அவள் செல்வதில்லை.
தனக்குள் சிந்தனைவயப்பட்டிருந்தவளை,
“என்ன நிலா? யோசனை பலமா இருக்கு? முதல்ல என்னோட என் ரூம்க்கு வா. நாம ஃப்ரீயா இருக்கும் போது இந்த ஹாஸ்பிட்டல சுத்தி சும்மா ஒரு வாக் போகலாம்…” இன்னமும் தயக்கம் குறையாமல் தான் பார்த்தாள் நிலா.
அதில் பெருமூச்சொன்றை இழுத்து விட்ட ஸ்டெபி, “நிலா, முதல்ல உன்னை நீயே தைரியப்படுத்திக்க. எல்லா சூழ்நிலையையும் பழக்கப்படுத்திக்க. எத்தனை நாள் உள்ளயே அடைஞ்சு கிடக்கலாம்னு பார்க்கிற?…”
ஸ்டெபி சொல்வதும் சரிதானே. இன்று அவளோடு சென்றுதான் பார்ப்போமே என நினைத்தவள் அரைமனதாக தலையாட்டியதும் ஸ்டெபி உடனடியாக அவளது கைகளை பிடித்து அழைத்துக்கொண்டு வெளியே வந்தாள்.
அறையை தாண்டவுமே நிலாவின் கைகள் நடுங்க, கால்கள் வெடவெடக்க ஸ்டெபியின் கைகளை இறுக பற்றிகொண்டாள். அதிலேயே நிலாவின் மனநிலையை உணர்ந்த ஸ்டெபி அவளை ஆறுதலாக தன்னோடு அணைத்தவாறே நடக்க ஆரம்பித்தாள்.
“நாம ரூம்க்கு போய்டலாமா டாக்டர். என்னை யாரோ பார்க்கறாங்க. எனக்கு பயமா இருக்கு. என்னை அடிச்சுடுவாங்களோ?..”
நிலா சில நேரங்களில் இப்படித்தான் அவ்வப்போது கூறுவதால் ஸ்டெபிக்கு அவள் கூறுவதொன்றும் புதிதல்ல. அந்த சம்பவம் எந்தளவிற்கு அவள் மனதில் வேரோடி இருக்கிறது என்பதை உணர்ந்தவளது மனம் கனத்துப்போனது.
தன்னை யாரோ அடித்த சம்பவம் மட்டுமே அவளது நியாபாகத்தில் நிலைத்திருக்கிறது என்பது தெரிந்த ஆரவ் அவர்கள் யாராக இருக்கும் என வெறித்தனமாக தேடிக்கொண்டிருக்கிறான்.
நிலாவின் ஞாபகங்கள் என்றைக்கு திரும்புகிறதோ அன்றைக்குத்தான் இந்த பயமும் அவளை விட்டு போகுமோ? அதனால் அவளது மனநிலை பாதிக்குமோ? என அஞ்சி அதிலிருந்து அவளை வெளிக்கொணர முயன்றுகொண்டிருக்கின்றனர் அனைவரும்.
வழியில் வரும் அனைவரும் ஸ்டெபிக்கு வணக்கத்தை வைத்துவிட்டு நிலாவையும் ஆராயும் பார்வை பார்த்துக்கொண்டே கடக்க எப்போதடா ஸ்டெபியின் அறை வரும் என ஆயாசம் ஆனது நிலாவிற்கு.
ஒருவழியாக லிப்டில் ஏறி இரண்டாம் தளத்தில் இறங்கி ஸ்டெபியின் அறைக்குள் நுழைய அங்கே ஆரவ் அர்ஜூனின் கன்னத்தை இரு கைகளாலும் பற்றிக்கொண்டே முத்தமிடுவது போல நின்றான்.
அதிர்ந்த நிலா ஸ்டெபியை திரும்பி பார்க்க அவளுக்கோ தாங்கள் வரும் அரவத்தை உணர்ந்தும் திரும்பாமல் நின்ற ஆரவ்வை பார்த்து கடுகடுத்துக்கொண்டே,
“ஆரவ்…” என பற்களுக்கிடையே அவனது பெயரை கடித்து துப்பினாள். அவனோ திரும்பியும் பாராமல் அர்ஜுனையும் பார்க்கவிடாமல்,
“பேப், நீ கொஞ்சம் நேரம் கழிச்சு வா. ட்ரையல் பார்க்கும் போது டிஸ்ர்டப் பண்ணாதே…” என கூறிவிட்டு,
அர்ஜூனிடம், “டேய் டக்கு அசையாத அசையாத…” என அர்ஜூனை அழுத்தி பிடித்துகொண்டிருந்தான்.
“இவனை…” என தலையில் அடித்துக்கொண்டே அவர்களை நெருங்கி ஆரவ்வின் முதுகில் ஒரு போடு போட்டாள்.
“கொஞ்சமாச்சும் பொறுப்பிருக்கா பேப்? உன்னை யார் இந்நேரம் வர சொன்னது? கரடி மாதிரி..” பேசிக்கொண்டே திரும்பியவனது விழிகளில் நிலாவின் பிம்பம் விழ அவளை பார்த்து அசடு வழிந்தான் ஆரவ்.
அவளோ, “அவனா நீ…” என்னும் எண்ணத்தில் இவனை நோக்க அதை புரிந்தது போல அவ்விடம் விட்டு அர்ஜூனையும் இழுத்துகொண்டு நகர்ந்தவன் மீண்டும் ஸ்டெபியிடம் திரும்பி அவளது கைகளில் ஒரு பேப்பரினை திணித்து,
“பேப் இந்த பேப்பர்ல சைன் பண்ணிடு…” என்றதும் பொங்கிவிட்டான் அர்ஜூன்.
“மண்ணாங்கட்டி. ஒன்னும் பண்ணவேண்டாம். ஆஷா அந்த பேப்பரை குடு…” என அதை பிடுங்கி சுக்கு நூறாக கிழித்தெறிந்துவிட்டு ஆரவ்வையும் இழுத்துகொண்டு சென்றுவிட்டான் அர்ஜூன்.
“நீ உள்ள வா நிலா. நீ தப்பா எடுத்துக்காதே. அவன் எப்போவும் அப்படித்தான். விளையாட்டுத்தனம் கொஞ்சம். நாங்க எல்லோருமே ப்ரெண்ட்ஸ். சின்ன பிள்ளையில இருந்து ஒண்ணா படிச்சவங்க. அதான்…”
சமாதானம் சொல்லிகொண்டே அவளை தன் எதிர் இருக்கையில் அமரவைத்துவிட்டு குடிக்க தண்ணீர் குடுக்க அதை வாங்காமல் நிலாவோ தன் முன் டேபிளில் இருந்த நேம் போர்டை வெறித்தாள்.
அதை புரிந்த ஸ்டெபி, “நிலா…” என அழுத்தமான குரலில் அழைக்க,
“மிசஸ். ஸ்டெபிக்ஷா அர்ஜூன்…” கண்களில் கேள்வியோடு ஸ்டெபியை நோக்கி அதை விட அழுத்தமாக வாசித்தாள் நிலா.
“ஹ்ம், ஆமா நானும் அர்ஜூனும் ஹஸ்பன்ட் அன்ட் வொய்ப். இப்போ பிரிந்து வாழ்கிறோம்…” இதை சத்தியமாக நிலா எதிர்பார்க்கவே இல்லை.
பெயரை பார்த்ததும் முதலில் அதிர்ந்த நிலா அர்ஜூன் என்று இவர் ஒருவர் தான் இருப்பாரா? இது வேறு ஒருவராக இருக்கலாம் என நினைக்க ஸ்டெபி அதை உடைத்துப்போட்டாள்.
அப்போது தான் ஏற்கனவே நிலாவின் கண்களில் விழுந்தது இப்போது கருத்திலும் பதிந்தது. அது ஸ்டெபியின் நெற்றியில் உள்ள சிறு பொட்டு. இன்னும் ஆழ்ந்து பார்க்க வகிட்டிலும் சிறிதளவு குங்குமம் இருக்க ஸ்டெபியின் சுருண்ட முடி அதை மறைத்துக்கொண்டு படிந்து பரவி இருந்தது.